Monday, December 28, 2009

ப்ரியமுடன்.......

இன்று வரையிலும் வாழ்த்துகளின் அர்ச்சனையில் குளிர்விக்கும் அனைத்து பதிவுலக அன்பர்களுக்கு மனம் கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!!

Wednesday, November 18, 2009

நான் என்ன செய்ய
உன் நம்பிக்கையின் நிறம்
நீர்த்துப் போனதற்கு...???
முகத்திலறைந்து துரோகத்தை
பறைச்சாற்றுவதைவிட
என் எழுதுகோலின் முனை
உடைத்துவிடு அது சுலபம்!!!

Sunday, September 20, 2009

கவிதையைப் போல்!!!!

முற்றுப் பெறும்
எல்லா கணங்களையும்
அவனுக்காய் சேர்த்து வாழும் அவள்,
அவன் கவிதைகளில் கூடு கட்டி
மேகம் வரைந்திருந்தாள்....

மேகங்கள் கரையும்
ஒரு மழைக்காலத்தில்
அவளுக்காய் அவன்
விதைத்துச் சென்ற
கவிதைப் பூக்கள்
காய்ந்துப் போயிருந்தன...

மேகங்களை அவன் தேடிச்
சேர்க்கும் முன்பே
அவள் தொலைந்துப் போயிருந்தாள்
கரைந்துப் போன
அவனுடைய கவிதையைப் போல்!!!!

Saturday, September 19, 2009

அக்னி பிரவேசம் & பிறந்தநாள் வாழ்த்துகள்

உனக்கும் எனக்குமான
நெருக்கங்களால் இதயம்
ததும்புகின்ற வேளையில்...
முன்னொரு நாள்
மேகங்களில் உரசி
சிறகொடிந்தப் போது
கட்டுப் போட்ட வேடனின்
ஸ்பரிசம் அடைமழையாய்
சிலிர்த்தெழுகிறது...
மழையில் நனைந்துக் கொண்டே
தீக்குள் விரலை விடும்
இலையுதிராக் காலத்தில்
அவனைச் சேர்வதாய்ச் சொல்லிச்
சென்ற வார்த்தைகள்...
இன்று மழையில்
நனையாதுதீக்குளித்தாலும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்துக் கொல்கிறது!!!
பின் குறிப்பு : ஸ்ரீ உனக்கு புரியுமில்லையா???
Image Hosted by ImageShack.us

[இன்று பிறந்தநாள் காணும் அன்புத் தோழி சுபாவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...]

இந்தப் பாசம்...
இந்த நேசம்...
இந்த நட்பு...
வாழ்வின் எல்லை வரை வேண்டும்!!!

ப்ரியமுடன்...புனிதா!!!

Thursday, June 25, 2009

விடுபடுதலும்....விடைப்பெறுதலும்!!!

good bye Pictures, Images and Photos
எப்பொழுது முடியுமென சோம்பித் திரிந்த தருணங்களும்...
எப்பொழுது இது நீளுமென ஏங்கித் தவித்த நாட்களும்... எல்லாமுமாய் சேர்ந்து இதுவரையிலும் கிறுக்கிய படிமங்களை மீள்பார்வையிட... எதுவுமேயில்லை என்ற சுயத் தேடல் அவசிய விடுபடுதலுக்கு தயாராக்கிக் கொண்டது மனதை!!!

விடுபடுதலோ விடைப்பெறுதலோ ஏதாவது புது பரிமாணத்தின் சாத்திய கூறுகள்தான். விடுபடுவதைவிட விடைபெறுதலின் வலி அதிகமென்று யாரும் சொல்லாமலே அறிந்துக் கொண்ட தருணங்கள் பல... சொல்லி மீள்வதல்ல வாழ்க்கை!!!

இந்த மாதத்துக்கான பதிவுகளை அவசரமாய் பதிவிட்டாலும் நிரம்பவில்லை மனது....!! ஆக கோடிட்ட இடத்தை நிரப்புவதைப்போல நாள்காட்டியின் நாட்களை வட்டமிட்டபடி அடுத்த பிரிவுக்கு தயாராகிக் கொள்கிறேன். பிரிவுகள் வலியல்ல அதுவொரு தேடல்...!!!

தேர்வு...விடுமுறை...பயணம்.... இன்னும் பிற சுயத் தேவைக்காக இந்த விடைபெறுதல் அவசியமென தோன்றுகிறது. நற்செய்தியோடு அனைவரையும் மீண்டும் சந்திக்கும் வரை...

பிரியமுடன் ...!!!

Wednesday, June 24, 2009

ஏதோ ஒன்று!!


தொடுவாள் சிவந்த
அதிகாலை நேரம்
ஓடிக் களைத்த கருமேகமொன்று
இடைவழித் திரும்பி
மழை முகிழ்த்துச் செல்கிறது
முளைத் துளிர்க்கத் துடிக்கும்
அல்லிப் பதியனுக்காய்!!!

Tuesday, June 23, 2009

காதல்...சில குறிப்புகள் III

நீயெழுதிய நினைவுகளின் நிழல்...
நான் தொலைத்த கனவுகளின் நிஜம்...
நம் பிரிவின் நீளத்தை
வானில் வடித்து செல்வதேன்...!!!
நொடிக்கொருமுறை உருவம் மாறும்
மேகங்கள் மழையாய் கரைந்து
நம் நினைவுகளை
ஈரமாக்கி
செல்லத்தானோ??

Monday, June 22, 2009

மீண்டும் அப்பா!


உங்கள் குரல் எட்டாத தூரத்தில்
உங்கள் முகம் காணாத தேசத்தில்
தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய்
என்னுள் வாழ்கிறீர்கள்
இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!!

Friday, June 19, 2009

நான் ஏன் மாறணும்???

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
தெரியல யாரு வச்சதுன்னு.....பிடிக்கும் :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை Kabhi Kushi Kabhi Gham படம் பார்த்து. இனிமேல் இந்தப் படம் பார்க்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணிட்டேன்...:-(

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும் ஆனா இந்தக் கையெழுத்துக்காகவே அடிக்கடி திட்டு வாங்குவதுண்டு இன்று வரையிலும்...மிகவும் சிறியதாக இருப்பதால் ;-)

4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மாவின் சமையல்...பெரும்பாலும் சாம்பார்..சாதம்..வெண்டைக்காய் பொரியல்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

ரொம்ப கஷ்டம். நானாக யாரிடமும் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன். என் அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இந்தியர்கள் நான் ரொம்ப பந்தா பேர்வழின்னு கிண்டல் பண்ணுவாங்க... 1 வருடத்துக்கும் மேலாகி அவர்களே வந்து வலியப் பேசிய பொழுதுதான் அவர்களோடு பேசினேன்..ஆனா என்னோட கூச்சசுபாவம்தான் காரணமுன்னு அவங்களுக்கு தெரிய ரொம்ப நாளாச்சு... சாட்ல்ல மொக்கை போடுறத வச்சு தப்புக்கணக்கு போடாதீங்க :-)

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பார்த்து இரசிக்கத்தான் பிடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்...!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விஷயம் - என்னை எனக்குப் பிடிக்கும்

பிடிக்காத விஷயம் - கோபம்... கூச்சசுபாவம், தொட்டாச்சிணுங்கியாய் இருப்பது...!!

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
இப்ப பிடிச்ச நிறைய விஷயம் க.பி பிடிக்காமலும் போகலாம் இல்லையா..அதனால் எதிர்ப்பார்ப்பில்லாமல் இருக்கவே பிடிச்சிருக்கு :-)

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாருமே இல்லாத தனிமைத்தான் எப்போதுமே பிடிக்கும்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பு & மரூண்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு :-)

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு

14. பிடித்த மணம்?
செண்பகப்பூவின் மணம்(காலையில் அலுவலகத்துக்கு வந்ததும் செண்பக மரத்தில் பூப்பூத்திருக்கான்னு பார்த்திட்டுத்தான் உள்ளேயே நுழைவேன்) குழந்தையின் பால் மணம், பெட்ரோல் அப்புறம் மார்க்கர் பேனாவின் மணம் ரொம்பப் பிடிக்கும்!

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
யாருமில்லைங்க...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
1. கவிதா அக்கா - வெகு அண்மையில் கெளரி ஏன் கோபப்படலை?!!

2. சுபாஷினி - கடல் கன்னிகள் - ஓர் ஆராய்ச்சி (முதல் முறையாக என்னிடம் கோபப்பட காரணமான பதிவு அதனால் ரொம்பவே பிடிக்கும்)

17. பிடித்த விளையாட்டு?

டென்னிஸ்..பூப்பந்து..பள்ளி நாட்களில் வலைப்பந்து

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
Fantasy and Love

20. கடைசியாகப் பார்த்தப் படம்?
முழுமையாக பார்த்த படமென்றால் கன்னத்தில் முத்தமிட்டால் & Kabhi Kushi Kabhi Gham... புதுப்படம் பார்க்க இப்போதைக்குப் பொறுமையில்லை

21. பிடித்த பருவ காலம் எது?

கோடைத்தவிர எல்லா காலமும் பிடிக்கும்.. மார்கழி குளிர் ஸ்பெஷல்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ம்ம்ம் The Kite Runner (57 வது பக்கத்திலேயே - சாரி அண்ணா ) The Da Vinci Code ( 76வது பக்கத்தில்)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

போரடித்தாலோ வேறு ஏதாவது புதிதாக கவர்ந்தாலோ!!!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அ) காலையில் அலுவலக வளாகத்தையொட்டிய காட்டில் கேட்கும் பட்சிகளின் சத்தம் பிடிக்கும்..அப்புறம் ஏதாவதொரு சமயத்தில் மட்டுமே கேட்க முடிந்த தேவாலய மணியோசை (அரிதாக கேட்பதால் ரொம்ப பிடிக்கும்)

ஆ) கார் ஹாரன் சத்தம் பிடிக்காது...வானொலியோ தொலைக்காட்சியோ அலறினால் பிடிக்காது!!

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ம்ம்ம் சரியாக தெரியல... மொத்த தீபகற்ப மலேசியாவை சுற்றியாச்சு.. வெளிநாட்டுக்கு இதுவரையில் சென்றதில்லை

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

வயலின் வாசிப்பது ...(கனவில் மட்டுமே)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

Nagging & நம்பிக்கைத் துரோகம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கேரளா...நேப்பாளம்..... இனிமேல்தான் போகணும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
தொட்டதுக்கெல்லாம் சிணுங்காமல் :-)

31.கணவர்(மனைவி) இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

Pass

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நாம் வாழ்வதற்கு மட்டுமல்ல பிறரை வாழ்விக்கவும்தான் வாழ்க்கை

Monday, June 15, 2009

நினைவு...சில குறிப்புகள் 2


மின்மடல்களும் தொலைப்பேசிகளும்
உறவின் வட்டத்தை
குறுக்கிக் கொண்ட
தனிமைப் பொழுதில்
அஞ்சல் பெட்டியில்
பரிச்சயமில்லாக் கையெழுத்தில்
திருமண அழைப்பிதழொன்று
இதுவரை காணாது
நனைந்துக் கிடக்கிறது
தொலைந்துப் போன
நட்பினைத் தேடி!!!

காதல்...சில குறிப்புகள் II


நீயில்லா நாட்களை
புகைப்படங்களும்
குறுஞ்செய்திகளும்
நிரப்புகின்றன...
நானில்லா உன் நாட்களை
எவை நிரப்புகின்றன?

நினைவு...சில குறிப்புகள் 1


மூடாத சன்னலில் நுழைந்த
கரப்பான் பூச்சியைக்
கண்டு அலறியடித்தவள்
வழித்தவறி வீட்டில்
நுழைந்த பட்டாம்பூச்சிக்காக கதவு திறக்கிறாள்
அதன் சிறகுகள் விரிய!!!
அவனோடு பேசப் பிடிக்காமல்
ஊடலில் தாய் வீடு சென்றவள்
கோடை முடிந்தும் முடியாமலே
வீடு திரும்புகிறாள் அவன்
வாசமில்லா நாட்களின்
வெறுமையோடு!!!
வீட்டு மாமர கிளையில்
ஏறிய மகளை துரத்தி
உள்ளே அனுப்பியவள்
அவள் யாருடனோ
கொஞ்சுவதை கவனித்து நெருங்குகிறாள்
பால்கனியை நெருக்கி வளைத்து குழைந்திருந்த
மரக்கிளையில் அணிலொன்று
ஓடிப்பதுங்குகிறது அவளைக் கண்டு!!!

Thanks:Carla Sonheim

Saturday, June 06, 2009

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா!

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா...
இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும்!
உடலும் மனமும் உனையேத் தொடர...
உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!

காற்றுவெளி மின்மினியாய் கண்கள் வழி நீ வந்தாய்!
நான் எழுதும் மேஜையிலே எரியும் விளக்காய் ஒளிருகிறாய்!
ம்ம்...எனது விரல் நீ பிடித்து உயிரெழுத்தை எழுதுகிறாய்!
துணையெழுத்து நீயாக உறவின் வயதை உயர்த்துகிறாய்!

உன் வெள்ளி மனம் பொன் மஞ்சள் நிறம்
நான் என்னை வரைந்தேன்!
நான் செய்த தவம் நீ தந்த வரம்
நான் உன்னை அடைந்தேன்!
அந்த சங்கீத சந்திப்பில் சந்தோஷ தித்திப்பில்
ஒரு துளி மழையென மடியினில் விழுந்தேன்!
உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!

தேய்ந்து வரும் வான்மதியாய் நேற்று வரை
வாழ்ந்திருந்தேன் இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளருகிறேன்
பூவில் விழும் பனித்துளியாய்
மனதில் உனை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாங்குகிறேன்

உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவிதழில் உன் புன்னைகையில்
நான் இடறி விழுந்தேன்
இங்கு உன் வாசம் என்னோடு
என் வாசம் உன்னோடு தொலைந்திட
சிறகென காற்றினில் மிதந்தேன்

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா...
இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையேத் தொடர
உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!

நீண்ட நாட்களாக போட நினைத்த பதிவு....கொஞ்சம் பழைய ஆனால் இனிமையான பாடல்... ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் பனிக்கூழில் நனையும் சுகம்..இப்போதைக்கு ஐஸ்கிரிம் சாப்பிட முடியாவிட்டாலும்...காய்ச்சல்தான் இன்னமும் சரியாகலையே :-( பாடலையாவது கேட்டு இரசிக்கிறேன்... :-)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Monday, June 01, 2009

காதல்...சில குறிப்புகள் I


தவறுகள் நீ
தண்டனைகள் நான்?
அட...
இந்தக் காதல் பிடிச்சிருக்கு!!!

01.06.2009

Friday, May 29, 2009

மீண்டும் வாய்க்குமா?


தோளில் சாய்ந்துச் சண்டைப் போடவும்
கைகள் கோர்த்துச் சாலை நடக்கவும்
தலைமுடி கலைத்து வாரி விடவும்
நீ அருந்திய தேநீர் திருடிப் பருகவும்
நெற்றி...கன்னம்...மீசை உறுத்தவும்
புஜத்தில் சரிந்து உறங்கிக் கொள்ளவும்
மீண்டும் வாய்க்குமா
உன் மூச்சுக் காற்று உரசிய
அதே ஞாயிறு??


29.05.2009

Sunday, May 24, 2009

மாற்றங்கள்!!!


கைப்பேசியின் எண்கள் மாற்றம்!
புகைப்படங்களும்...பொம்மைகளும்
ஏதோவொரு முடுக்கில்
சிறையெடுக்கப்படுதல்...!
பிடிக்காத நிகழ்வுகளையும் விரும்பியேற்றல்!
ஒற்றுமைகள் சில வேற்றுமையாதல்!
கனவுகளும் உறக்கங்களும் கலைந்துபோதல்!
தலையணையும் கண்ணீரில் கரைந்துப்போதல்!
எல்லாமே முதல் காதல் தோல்வியின்
அறிவிப்புகளோ???

24.05.2009

Thursday, May 21, 2009

முதல் முறை உன்னைப் பார்த்த...முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன்னருகே நான் இருந்தால சிலிர்கிறதே

நீ விளையாட்டுப் பிள்ளை – உனக்கு நான்
தலையாட்டும் பொம்மை
எனைத் தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே


நீ அருகில் தோன்றும் நேரமே
வானிலையும் மாறிப் போகுதே
நீயும் நினைத்தால்
வானவில் வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால்
வாழ்விலே என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழும்
வரமது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

நீ நடந்துப் போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குதே
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னைத் தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையேத் தாங்குவேன்
நெஞ்சில் நினைத்தே

சூரியன் உதிப்பதே ஒரு முறை காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே

அந்த மழை மேகம் யாவும்
இறங்கியே உனைத் தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போக மாட்டேன்
தெய்வமும் நீ!!!

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

(முதல் முறை கேட்ட விநாடியிலேயே மிகவும் பிடித்துப் போன பாடலிது..இப்போதைக்கு இந்த பாடல் மட்டும்தான் பிடிச்சிருக்கு)

Tuesday, May 12, 2009

வேண்டுதல்...வேண்டாமை!!!

உன் இதயம்
சுமந்து உயிர் வதை
கொள்வதைவிட
அதை இறக்கி
இளைபாறுதலே
மரண சுகம்!!!

..............................

முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!!!


12.05.2009

Monday, May 11, 2009

காதல்...வேண்டாம்


தனிமை...அவஸ்தை
மரணம்...தோல்வி
கண்ணீர்...பிரிவு...தேடல்
நட்பு...காதல்...
இந்த வார்த்தைகளைப் போல்
உனக்கான என்
காத்திருப்புகளும் அர்த்தமற்றதுதான்!!!

மாலை நேர தேநீர்
பிடித்தப் பாடல்
மழைக்கால மேகம்
பக்கத்து வீட்டு ரோஜா
வாசித்து முடிக்காத நாவல்
கைப்பேசியின் அழைப்புப் பாடல்
உன் நிழற்படம்
இலக்கற்ற பார்வை என்று
உன்னை நினைவுப் படுத்திக்
கொல்வதுப் போல்
இந்த கவிதையும்
உன்னை நினைவுப்
படுத்திக் கொல்லத்தான்!!!

காதல் வேண்டாம்
கண்ணீர் போதும்
உன்னை நினைவுப்
படுத்திக் கொள்ள
மட்டும்!!!

Sunday, April 12, 2009

சிறகுகள், சிலுவைகள்!!!


விரல் தீண்டி
விளையாட்டு காட்ட
வேண்டாம்!
இதழ் கடித்து
மௌனம் பேச வேண்டாம்!
சிறகுகள் தந்து சிலுவைகள்
முறித்து விடு போதும்
உயிர்த்தெழுந்துவிடும்
உனக்கான என் காதல்!!!

Happy Easter!!!

Saturday, March 28, 2009

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!!


நமது முதல் பரிச்சயம்கூட விசித்திரமான அனுபவம்தான் இல்லையா? அந்த விசித்திரம்தான் உன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி எனக்கு காட்டிக் கொடுத்தது...!!

ம்ம்ம்!!! நமக்கான நாட்களில் எவ்வளவு வருடங்களை தவறியிருக்கேன் என்பதை உணருவதே எனக்குள் ஓர் அவமான குன்றல்தான்..!!! வெரி சாரிடா... நீ நெருங்கி வந்த போதெல்லாம் உன்னையும் உன் அன்பையும் புரிந்துக் கொள்ளத் தவறியிருப்பதே இன்றைய பிரிவுக்கான காரணமாய் இருக்குமோ? அதனால் என்ன தூரம் நம்மை பிரித்தாலும் நீ என்றைக்குமே எனக்கு இனிய தோழன்தான்!!

இந்த உணர்வுகளைச் வெளிப்படுத்த நிச்சயமாய் எனக்கு கவிதை தேவையில்லை :-)

Thanks da....for being there for me whenever I need you to be there..!!!

அன்பான தம்பிக்கு பிரியமான அக்காவின் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!! Miss u Bro!!!

Thursday, March 19, 2009

சொல்லாமலே..............


ஒவ்வொரு முறையும்
உடைந்துப் போகிறேன்
உன் நினைவுகளை
சுமக்க முடியாத
வறண்ட நிலமாய்!!!

உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!

வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!

உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!

Sunday, March 15, 2009

மீட்டெடுத்தல்!!!


வரம்பு மீறிய ஓர் இரவில்
வார்த்தைகளை மீட்டெடுக்கும்
முன்பே திரும்பிப் பாராமல்
விலகிச் சென்றாய்!!
மறுபடியும் நீ வருவாயென
தெரியாமல் மனவாசலடைத்தேன்
ஓசையின்றி வந்து
மீண்டும் திரும்பிச்
செல்லத் துடிக்கும்
உன்னிடம்...
இன்றும் என் இதயம் துடிப்பது
உனக்காகவென்று எப்படி
உணர வைப்பேன்!!

Tuesday, March 03, 2009

இந்தப் பயணத்தில்...........

சாலைகளும் அதன் மீது பயணிக்கும் தருணங்களும்  நமக்கு எவ்வித தொடர்பில்லாமலேயே கரைந்துப் போகின்றன. பரபரப்பும் இயந்திரத்தனமான வாழ்வியல் சூழலும் சாலையை வெறும் போக்குவரத்து தடமாக மட்டுமே யோசிக்க வைக்கின்றன. அதிலும் நம்மில் பெரும்பான்மையோர் சாலையை வெறுக்கவும் செய்கின்றனர் காரணம் அது ஏற்படுத்தும் நெரிசல். சாலைகள் எப்போதுமே நெரிசலை ஏற்படுத்தியதில்லை அதில் பயணிக்கும் நாம்தான் நெரிசலை உண்டாக்குகிறோம் என்பதை அறிவோமா?

கடந்த மாதம் முழுவதும் காலை நேரத்தை சாலைக்கு இரையாக்கி வந்துள்ளேன். சமிக்ஞை விளக்கிலும் போக்குவரத்து நெரிசலிலும் மாட்டிக் கொண்ட அவஸ்தைகள் இனி மீளாதா என்று ஏங்கிய தருணங்கள்தான் எத்தனை...எத்தனை? ஆனாலும் வெறுக்கத் தோன்றியதில்லை. காலையில் எரிச்சலூட்டும் அதே சாலை மாலை வேளையில் சுவாரசியத்திற்கு உரியதாய் மாறிவிடும் விந்தை இதுவரையிலும் விளங்கவில்லை. மாலை வேளையில் நெரிசலில் சிக்கிக் கொண்டாலும், இசையிலும்....கையில் கொண்டு வந்த புத்தகத்தின் ஏதாவது பக்கத்திலும் நிலைத்து விடுவதால் அன்றைய மாலைப் பயணம் இலகுவாகி விடுகிறது. அதுவும் சுவைக்காத நாட்களில் சாலையின் இருபுறமுள்ள வாகனங்களிலும்....சுற்றுப்புறத்திலும் பார்வை அலைபாயத் தொடங்கிவிடுகிறது.

இதுவரை கண்ணில் படாத பதாகைகளோ... வாசகங்களோ... வீடுகளோ... அலுவலகங்களோ அப்போதுதான் கண்ணில் படுகின்றன. அதில் சிலது என்னையும் மீறிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. சாலையென்றும் பாராமல் காரில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் இளம் ஜோடிகள்.....காரின் பின்புற சீட்டில் பள்ளிச் சீருடையில் இருக்கும் சிறுமி அவளுக்குப் பின்னால் வந்துக் கொண்டிருக்கும் காரோட்டியிடம் அழகுக் காட்டுவது... இன்னும் நிறைய சுவையான சம்பவங்கள் உண்டு....!!!!

பொதுவாகவே விரைவுச் சாலையில் பயணிப்பதைவிட சாதாரண சாலையில் பயணிக்கவே மனது ஏங்குகிறது.விரைவுச்சாலையில் வாகனங்களைத் தவிர காண வேறொன்றும் கிடைப்பதில்லை. பசுமை போர்த்திய மலைகள்கூட காரோட்டியாய் சாதாரண நாட்களில் காண இரசிப்பதில்லை.

வழக்கமாக நான் மலாயாப் பல்கலைக்கழக சாலையில் பயணிப்பதால், வேலை முடிந்து வரும் நேரங்களில் கல்லூரி முடிந்து பேருந்துக்காகக் காத்திருக்கும் மாணவிகளைக் காண நேரிடும். அருகிலேயே தனியார் மருத்துவக் கல்லூரி. களைத்துப் போய்த் திரும்பும் அவர்களை தன் நிழலில் தாங்கிக் கொள்ள சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள். களைப்பையும் மீறி மகிழ்ச்சியின் இரேகைகள் இந்த மாணவர்களின் கண்களில் பளிச்சிடுவதைப் பார்க்கச் சுவாரசியமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் எப்பொழுதுமே என் நேசத்துக்குரியவர்கள்தான். நான் கடந்து வந்த இனிய ராகத்தின் ஆதார சுருதிகள் இவர்கள் அல்லவா?

தனியார் கல்லூரியை அடுத்து வரும் 750 ஏக்கரை தனதாக்கிக் கொண்டு நிற்கிறது மலாயாப் பல்கலைக்கழகம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, சிங்கப்பூரில் ஏப்ரல் 1949-இல் இப்பல்கலைக்கழகம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் 1962-இல் ஜனவரி முதலாம் நாள் அன்றைய மலாயாவில் தேசியப் பல்கலைக்கழகமாக அமைக்கப்பட்டதாக வரலாறுகள் பகர்கின்றன.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்பது அநேக மாணவர்களில் கனவாகும். மலாயப் பல்கலைக்கழகம் என்னிலும் இன்னமும் கனவாய்தான் உள்ளது. இந்திய ஆய்வியல் துறையைக் கொண்டுள்ள ஒரே மலேசிய பல்கலைக்கழகமும் இதுவேயாகும். முதன் முறையாக நான் காலடி வைத்ததும் இந்திய ஆய்வியல் துறையில்தான். கனவுகளில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருந்ததை நேரில் கண்டப் போது மனதிற்கும் நெருங்கிய சினேகமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்தச் சாலையில் செல்கையில் என்னையுமறியாமல் முகத்தில் மென்முறுவல் மலர்ந்து மறைகின்றது. பிரமாண்டங்கள் எதுவுமில்லாது பழமையை மட்டும் மௌனமாய் போர்த்திக் கொண்டுள்ளது இப்பல்கலைக்கழகம். நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும், கல்விமான்களையும் செதுக்கிய சிற்பியென்ற கர்வம் சிறிதுமின்றி எளிமையாய் தோற்றமளிக்கிறது மலாயாப் பல்கலைக்கழகம்.

என்னுடன் படித்த சில நண்பர்கள் எங்களின் பல்கலைக்கழகத்தோடு மலாயா பல்கலைக்கழகத்தை ஒப்பிட்டு நம் பல்கலைக்கழகம்போல் வராது என்று பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. உண்மைத்தான்...அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வது 100 ஆண்டுகளைக்கூட தாண்டாத கட்டிடங்களை மட்டும்தான். புதுமையை பாராட்டிப் பெருமைக் கொள்ளும் நாம் பழமையையும் அது சுமந்துக் கொண்டிருக்கும் வரலாற்றின் சுவடுகளையும் ஏனோ அறிய மறந்துவிடுகின்றோம். அதை விட இப்பொழுதெல்லாம் பல்கலைக்கழகமும் கல்வியும் வெறும் வணிகமாக மாறி வருவது வருத்தமளிக்கும் விசயமாகும்.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. பொதுவாகவே மலேசிய கார்கள் அனைத்தும் நான்கு இலக்க எண்களைக் கொண்டிருப்பதால் சாலையில் காணும் கார்களின் எண்களை மனதுக்குள்ளேயே கூட்டிக் கொள்ளும் பழக்கம். எவ்வளவோ முயன்றும் இது வரையிலும் இந்தப் பழக்கம் மாறவேயில்லை. உதாரணத்திற்கு 2910 = 2+9+1+0(1+2)=3. எல்லாம் இந்த நியுமராலஜியில் ஏற்பட்ட ஈர்ப்பாகக்கூட இருக்குமோ?

நான் சாலையில் கண்ட முதல் சாலை மரணம் இன்னமும் நினைவில் உள்ளது. பல நாட்கள் அந்தச் சாலை வழியே செல்லும் போது அந்தச் சம்பவம் மனதுக்குள் குளிர் பரப்பி திகிலூட்டியிருக்கிறது. மறுநாள் அவ்வழியே வரும்போது சிலர் ஏதோ காகிதத்தை எரித்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது. மரணமுற்றவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறார் என்பது அப்போது புரிந்தது. சாலை சில சமயம் உயிரைக் குடிக்கும் அரக்கனாய் மாறிவிடுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.

பொதுவாகவே மலேசியர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும் ஆவிகள், அமானுட சக்திகள், மாந்ரீகம் மீது அதீத நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கின்றனர். வட மலேசியப் பல்கலைக்கழகம் கட்டமைக்கும்போது காடுகளையும் மலைகளையும் அழிக்க வேண்டிய நிலையென்பதால் அங்கு பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த அமானுடவாசிகளை இடம்பெயர்க்க வேண்டியிருந்தது. அவர்களையெல்லாம் பேருந்தில் ஏற்றி வந்து காராக் காட்டில் விட்டதாக இன்று வரை வதந்தியுள்ளது. அதனால் காராக் நெடுஞ்சாலையில் பின்னிரவில் பயணிக்கும்போது இந்த அமானுட சக்திகளின் சேட்டைகள் அதிகமாயிருப்பதாக கூறுகின்றனர். அதிலும் சுவாரசியமானது இந்த அமானுட சக்திகளை பிடிக்க தாய்லாந்திலிருந்து போமோக்களும் மாந்ரீகர்களும் வரவழைக்கப்பட்டதாக சொல்கின்றனர். இதில் நகைச்சுவையான விசயம்..கண்ணுக்கு புலப்படாதவர்களை பேருந்தில் கூட்டி வந்தது :-))) இதுப் பற்றி மேலும் விபரங்களை அங்குப் படித்த மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் மறுபதற்கில்லை....புதிதாகக் கட்டப்பட்ட எங்களுடைய மொழிப்புலத்திலும் இதே கதையுண்டு. பக்கத்திலேயே சீனர்களின் இடுகாடு இருப்பதால் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்தப் பக்கம் தனியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. என்னுடைய பேராசிரியர்கூட அந்தப் பக்கம் வாண்டுகள் அலைந்துக் கொண்டிருக்கும் என்று கூறுவார். அவருடைய அறை இடுகாட்டுக்குப் பக்கத்திலேயே இருப்பதால் அடிக்கடி இந்த அமானுட சேட்டையைப் பற்றி கூறுவதுண்டு. அடுக்கி வைத்த புத்தகங்களைக் கலைத்துப் போடுவதும்..பூகம்பமே வந்ததுப்போல் அறை நடுக்கம் காண்பதும்...!! ஒரு சமயம் அவர் கண் முன்பே அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் வீசியெறியப் பட்டதைப் பார்த்து அரண்டுவிட்டதாக கூறியிருக்கிறார். சில சமயம் இரவு வகுப்பு முடிந்து நாங்கள் வேப்பமரத்தின் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்திருப்போம்.வேப்பம் பூவின் நறுமணம் நாசியைத் துளைத்தெடுக்கும் ஆனாலும் எந்த ஆவியையும் இது வரைக் கண்டதில்லை. மாணவர் தங்கும் விடுதியில் இந்த ஆவிக் கதைகள் நிறைய உண்டு. ஹிஸ்டீரியா மலாய் மாணவிகளிடேயே வெகு சகஜமான விசயம்.

தற்போது நான் பணிபுரியும் அலுவலகம் புக்கிட் கியாரா என்ற மலையில்தான் உள்ளது. இங்கே அலுவலகம் கட்டியிருப்பது வேற்று உலகத்தில் அத்துமீறி நாம் நுழைந்து விட்டதாக என்னுடன் வேலைப் பார்க்கும் மலாய்க்காரர்கள் கருதுகின்றனர். ஓரிருவர் இளம்பெண்ணை கண்டதாக கூறுகின்றனர். யாருமில்லாத நேரத்தில் பக்கத்து அறையில் நாற்காலி சுழலும் சத்தம் கேட்டு அந்த அறையையே காலிச் செய்தவர்களும் உண்டு. நான் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக குறிப்பிட்ட அந்த அறைக்குப் பக்கத்திலேயே இருந்துள்ளேன். அதிகாலையிலும் இரவிலும்கூட சில சமயம் பணி நிமித்தமாக தனியாக இருக்க வேண்டியிருந்திருக்கிறது ஆனால் எந்தவித சத்தமும் கேட்டதேயில்லை. அதிலும் எங்கள் அலுவலகத்தில் பலர் ஆடிட்டேரியம் பக்கம் தனியே செல்லப் பயப்படுவர். ஆனால் நான் பலமுறை தனியாக போய் வந்துள்ளேன். பயமில்லையென்று சொல்ல முடியாது...நாங்கத்தான் நடக்க மாட்டோமே ஓடிடுவோமே :-))அம்மாவிடம் இதுப்பற்றிக் கூறினால் "நீயே பெரிய பிசாசு உன்னைக் கண்டு அதுதானே பயப்படனுமுன்னு கிண்டல் செய்வார்". :-(( . ஆனால் ஏதோ அமானுட சக்தி இங்கு இருப்பது மட்டும் உண்மையென்று புரிகிறது.


தீபகற்ப மலேசியாவில் வடக்கிலிருந்து தெற்கு வரையிலுமுள்ள மாநிலங்களை இணைக்கும் பாலமாக வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை விளங்குகின்றது. மலேசியாவின் சிறந்த சாலை நிர்மாணிப்புக்கு இந்த நெடுஞ்சாலை சிகரமாய் விளங்குகிறது. மலைகளை குடைந்து எப்படிதான் நிர்மாணித்திருப்பார்களோ..!!! எனக்கு இதில் மிக விருப்பமான இடம் தாப்பா-செண்டிரியாங் நெடுஞ்சாலை. லத்தா கிஞ்சாங் அருவியை நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே காணலாம். இந்த நெடுஞ்சாலை சொல்லும் கதைகள் ஆயிரம். அதில் சுவையான கதையொன்று நினைவுக்கு வருகின்றது. ஈப்போவிலிருந்து தைப்பிங் வரை பெரிய வளைவுகளையும் பள்ளங்களையும் மலைகளையும் இந்த நெடுஞ்சாலை கொண்டுள்ளது. அதிலும் ஈப்போ-ஜெலப்பாங் டோல் சாவடி மரண வாசலாக கருதப்பட்ட காலமும் உண்டு. தற்போது டோல் சாவடியை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

பின்னிரவில் இந்த நெடுஞ்சாலையில் தனியாக பயணம் செய்யும் கார்களை ஒரு மஞ்சள் நிற சொகுசு கார் தொடர்ந்து வருவதாகவும்..அந்த காரை முந்திச் செல்லும் ஆவலில் கட்டுப்பாட்டை இழந்து கார்கள் விபத்துக்குள்ளாவதாக கூறுகின்றனர். இது எந்தளவு உண்மையென்று தெரியாவிட்டாலும் பின்னிரவில் தனியே பிரயாணம் செய்வது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு சமமாகும்.

சாலைப் பயணத்தில் மிகவும் கொடூரமானதாக நான் கருதுவது பூனையும் நாய்களும் சாலையில் அடிப்பட்டு இறப்பது. பெரும்பாலும் கண்களைக் மூடிக் கொள்வேன். இன்று காலையில்கூட ஒரு பூனை சாலையின் நடுவே அடிப்பட்டு இறந்துக் கிடந்தது. மனிதர்களைக் கூட கண்டுக் கொள்ளாமல் காரில் பறக்கும் இந்த வாகனமோட்டிகள் வாயில்லா பிராணிகளைப் பற்றியா கவலைப் படப் போகிறார்கள். குறைந்தப் பட்சமாய் சாலையில் ஆதரவின்றித் திரியும் பிராணிகளை எஸ்.பி.சி.ஏவில் கொண்டு விடலாம். அல்லது ஆம்புலன்சுக்கு கூப்பிட்டால் அவர்கள் வந்துக் கொண்டுப் போகப் போகிறார்கள். ஒரு முறை நானும் தம்பியும் காரில் வந்துக் கொண்டிருந்தப் போது ஒரு நாய்க்குட்டி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது. உடனே தம்பி நாய்க்குட்டியைப் பிடித்துக் வர தெரிந்தவர் வீட்டில் கொண்டுப் போய் விட்டோம். நாம் வளர்க்காவிட்டாலும் அதற்கென்று உள்ள மையத்திலோ நண்பர்களிடத்திலோ கொண்டுப் போய்ச் சேர்க்கலாமே. :-)

சாலைகள் எனக்கு பல சமயங்களில் ஞானம் தருகின்ற போதி மரங்களாய்த்தான் தெரிகிறது.

Wednesday, February 25, 2009

பார்வையென்னை....EVIL HAS A DESTINY
வித்தியாசமான இசைக் கோர்ப்பு...வசீகரிக்க வைக்கும் குரல்கள் குறிப்பாக சுகன்யாவின் குரல்...

இப்பாடலின் வழி, அட! போட வைக்கிறார்கள் மலேசிய இசைக் கலைஞர்கள். இசை சொன்னதையும் சொல்லும் சொல்லாததையும் சொல்லுமென்பதற்கேற்ப இனிமையான பாடலிசை. அவசியம் நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள்.


உருவம் மலேசிய டெலிமூவி

பாடகர்கள் : சுகன்யா & கே.கே கண்ணாபதிவிறக்கம் செய்ய

Saturday, February 14, 2009

சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!!!


ஜாதியில்லை மதமுமில்லையென்று
யார் சொன்னது?
உன் காதலுக்கு
ஜாதியுமுண்டு மதமுமுண்டு
இதயம் மட்டுமில்லை!!
காரணம் நீ
கண்களைத் தந்து
இதயத்தை
வாங்கிக் கொண்டவன்...!!!


-->>@@@இராஜேஸ் அக்காவுக்காக@@@>>--


என் உளறலையெல்லாம் கவிதையென்று நம்பும் பதிவுலக நண்பர்களுக்கு இனிய அன்பர் தின வாழ்த்துகள் :-)

மௌனமும் காதல்தான்


உன்னைவிட உன் மௌனம்
எனக்குப் பிடிக்கும்...
உன் மௌனங்களில்
உறைந்து வழிவது
என் காதல் அல்லவா?
மௌனங்கூட
காதல்தான்
உன்னில் அறிந்துக் கொண்டேன்
இப்போது!!!

நன்றி: சாகித்யா

Sunday, February 08, 2009

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!!!

தை மாதம் பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருவிழா இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மலேசிய நாட்டின் புகழ்பெற்ற முருகனின் புண்ணிய தலங்களில் மூன்றாவதாக வருவது ஈப்போ கல்லுமலை, அருள்மிகு சுப்ரமணியர் ஆலயம். மலைகளிலையே வாசம் செய்யும் கந்தன் பக்தர்களின் அன்புக்கு மனமிறங்கி மலையடிவாரத்திலே அருள் பாலிக்கிறான். குனோங் செரோ மலை அடிவாரத்தில் இந்த கல்லுமலை அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே பழைய குகைக் கோவில் அமைந்துள்ளது. 1970களில் ஏற்பட்ட மலைச் சரிவுக்குப் பிறகு மலையடிவாரத்தில் புதிய கோவில் கட்டமைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மலேசியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்லுமலை முருகனை தரிசிக்க பக்த கோடிகள் வருடா வருடம் வருகைப் புரிகின்றனர்.

இவ்வருடமும் குடும்பத்தினருடன் கல்லுமலை முருகனை தரிசிக்க சென்றிருந்தேன். முற்பகல் பதினொன்றை நெருங்கி விட்டது கோவிலை அடையும் போது. கார் நிறுத்த இடம் கிடைக்க சிரமமாயிருப்பினும் ஒரு வழியாய் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம். வழக்கமாய் அர்ச்சனை தட்டின் விலை 4 வெள்ளியாகும். இவ்வாண்டு ஆறு வெள்ளி. அர்ச்சனை சீட்டின் விலை மூன்று வெள்ளி. மற்ற மாநில கோவிலோடு ஒப்பிடும் போது இது மலிவாகும்.

கடந்த ஞாயிறு இக்கோவிலுக்கு சஷ்டிக்காக சென்றிருந்தப் போது சிட்டுக் குருவிகளின் சரணாலயமாய் இருந்தது. இன்று ஏனோ காணவில்லை. விரட்டி விட்டார்களோ என்னவோ? பிள்ளையார் மற்றும் அம்மன் பிரகாரத்தைப் புதுபித்துள்ளனர்.

கோவிலில் இவ்வாண்டும் மக்கள் நெரிசல் அதிகமாய் இருந்தது. உடல்நிலை சரியில்லாததால் மயங்கிவிடுவேனோ என்று கோவிலுக்குள் நுழைய கொஞ்சம் அச்சமாய் இருந்தது. ஆனாலும் அவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டோடு வரிசையில் கிட்டதட்ட 1 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவ்வளவு நெரிசலிலும் மயக்கம் வரவில்லை. :-) கால் கடுக்க காத்திருந்தாலும் முருகனை நிம்மதியாய் நீண்ட நேரம் தரிசிக்க முடிந்தது. அர்ச்சனையும் தரிசனமும் முடிந்து கோவிலை சுற்றிக் கொண்டு ஒரு வழியாய் வெளியேறினோம்.

ஈப்போ கல்லுமலை தைப்பூசத் திருவிழா நேற்றுத் தொடங்கி நாளை வரை தொடரும். புந்தோங் மாரியம்மன் கோவிலில் இருந்துப் புறப்பட்ட முருகனின் இரதம் கல்லுமலையை அடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குத் தொடங்கிய பாலாபிஷேகம் காலையில் முடிவுற்றது. சில சமயம் முருகனுக்கு அதிகாலையில் இப்படி பால் அபிஷேகம் செய்யும் போது பாவம் அவனுக்கு குளிராதா என்று நினைத்துக் கொள்வேன். குளிர வைக்கத்தானே இந்த அபிஷேகமே :-) இவ்வருடம் நான் பால் குடம் எடுக்கவில்லை. அது நிறைய வருத்தம்தான் ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற முடியவில்லை. அடுத்த வருடம் அவசியம் எடுக்க வேண்டும். கல்லுமலை தைப்பூசத்தின் சிறப்பே பால் குடம் எடுப்பதுதான். கிட்டதட்ட 1இல் இருந்து 2 கிலோ மீட்டர் வரையிலும் பக்தர்கள் வரிசைப் பிடித்து அமைதியாய் காத்திருப்பது பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாய் பால்குடம் எடுக்கின்றனர். முக்கியமாய் பள்ளி மாணவர்கள்.

கோவிலுக்கு வெளியே காவடிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது பயங்கரமான தோற்றத்தோடு நான்கைந்து இளைஞர்கள் சாட்டையோடும் சூலத்தோடும் மருள் வந்து ஆடிக் கொண்டிருந்தனர். தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ள முருகன் இம்மாதிரி கேட்கவில்லையே. ஏன் சமயம் என்ற போர்வையில் இப்படி நடந்துக் கொள்கின்றனரோ புரியவில்லை. அதிலும் கோவில் அருகில் அவர்கள் ஆடிய ஆட்டம். உண்மையில் மருள் வந்து ஆடுகின்றனரா இல்லை சும்மாவே ஆடுகின்றனரா தெரியவில்லை. கோவில் நிர்வாகம் எவ்வளவோ அறிவுறுத்தியும் இப்படி நடந்துக் கொள்கின்றனர்?

நேற்றைய தனியார் தொலைக்காட்சியின் மலாய்ச்செய்தி அறிக்கையில் தற்போதைய தைப்பூசத் திருவிழா அதீதமாய் கொண்டாடப்படுவதாய் குறிப்பிட்டிருந்தது. உண்மைத்தான்... உலக மக்களை அதிகமாய் ஈர்க்கும் இந்தச் சமயப் பெருவிழா மற்ற இனத்தினருக்கு கேலிக் கூத்தாகிவிடக் கூடாதே என்ற ஐயம் எழுகிறது. இனி வரும் காலங்களிலாவது நம்மவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்களா?

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!

Saturday, February 07, 2009

சொல்ல மறந்தவை...

காலம் நமக்குப் பணவியலை அறிவுறுத்தி வாழ்வியலை வசப்படுத்தினாலும் நிமிர்ந்து நின்று திணவுடன் சிரிக்கிறது தாய்மொழி. செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் நமக்கு பழக்கப்பட்டுப் பரிச்சயமானத் தமிழ்ச் சொற்கள் இன்றைய கால ஓட்டத்தில் களவுப் போய் விட்டதோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தில் கவிதாவின் பார்வை நினைவெல்லாம் பக்கம் திரும்பி இருப்பது தாய் வீட்டு ஊஞ்சலில் சுகித்திருப்பதைப் போன்றப் பிரம்மையை ஏற்படுத்திச் செல்கிறது. ஊரோடு ஒன்றி வாழ்வதாய் எண்ணிக் கொண்டு தாய்மொழியை இழந்து வாழ்வியல் கட்டாயத்தை வசப்படுத்தி அதன் முன் கைக்கட்டிச் சேவகதனத்தில் ஆழ்ந்து கிடக்கும் போதெல்லாம்...
அடையாளம் காட்டப் பெற்றோர்களுக்குப் போதாமல் போனது ஞானம்...

தேம்பி அழுது தெய்வங்களைச் சாட்சிக்கு அழைத்தால் சபித்து விடும்போல் தெரிகிறது சமகாலத்து உறவுகள்........

(நன்றி : அக்கினி சுகுமார்)


வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் :-

சுழியம் - பூஜ்யம் (வடச்சொல்)
அகில்மணத்தி - அகர்பத்தி (வடச்சொல்)
கூற்றம் - எமன்
சலம் - தண்ணீர்
புரவி - குதிரை
சவுக்காரம் - Soap
புட்டாமாவு - Talcum Powder
திருநீறு - விபூதி

இந்தப் பதிவைத் தொடர அழைப்பது :-
என் உலகம் சுபாஷினி
அரங்கேற்றம் வேலன்
சென்ஷி - பதிவு போட மறுத்தாலோ மறந்தாலோ தண்டனை உண்டு.

Thursday, January 01, 2009

அர்த்தமிழந்த வார்த்தைகள்


உன்னைப் பார்த்த
வெட்கங்களோடு
உதடு கடிக்கின்றன
என்னில் விழிக்காத
சில செல்ல கனவுகள்!!!

கண்கள் ஏங்கித் தவித்து
தூவானமாய் விடைபெற்ற
கண்ணீர் கோடுகளில்
முற்றுப்பெற்ற மௌனங்களாய்
தடுமாறுகிறது ஓர் இதயம்!!!

தொலைத்தும் தொலையாமல்
அமிழ்ந்து போன
சில நினைவலைகள்
செல்லரித்த
கல்லறை பூக்களாய்
இன்று!!!


(இதுவரையிலும் கிறுக்கிய எழுத்து படிமங்களின் மீள்பார்வையிது. அர்த்தமிழந்த வார்த்தைகளாய் என்னில் புதைந்து ஓலமிடும் வார்த்தைகளின் அணிவகுப்பு இது. புதைந்துப் போன வார்த்தைகள் நீர்த்துப் போகாமல் பொறுக்கி இங்கு வரிசை மட்டுமே படுத்தியுள்ளேன்.)


மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!