Sunday, November 30, 2008

துளிர்க்கவில்லை


தொலைதூரம் தொலைந்துப்
போனேன் மேகமாய்
நீயும் வந்து
நெஞ்சில் சாரலடித்தாய்

உன்னருகே நெருங்கும்
நேரம் தீக்கங்காய்
மாறியேனோ உயிர்
எரித்தாய்

மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே

சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!

Tuesday, November 25, 2008

அன்புள்ள அப்பாவிற்கு


அன்புள்ள அப்பாவிற்கு...

வெகு சில காலமாய் உங்களுக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது போல் உணர்கிறேன். ஏதோ இரும்புத் திரைக்கொண்டு உங்கள் அன்பை பூட்டி வைத்துக் கொண்டது போல் தோன்றுகிறது... காரணம் உங்களுடைய வயதின் முதிர்ச்சியா...அல்லது நான் பெரியவளாய் வளர்ந்து விட்டதாய் தோன்றும் எண்ணமா...தெரியவில்லை ஆனால் மனதளவில் இன்னமும் நான் முதிர்ச்சியடையவில்லையோ?

அப்பா... நீங்கள் எங்களோடு சிரித்துப் பேசி நீண்ட நாளாகிறது... இப்போதெல்லாம் கோபம் மட்டுமே உங்களுக்கு உறவாகிவிட்டது... என்ன காரணமென்று புரிந்துக் கொள்ள நானும் முயன்றதில்லை... நீங்களும் சொல்லியதில்லை. அப்பா... ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்திருந்தப் பொழுது எப்போழுதோ நான் தெரியாமல் செய்த சின்னத் தவறுக்காக நீங்கள் திட்டியது இன்னமும் மறக்கவில்லை. அந்த கோபத்தில் வீட்டிலிருந்த அந்த இரண்டு நாட்களும் பிடிவாதமாய் சாப்பிட மறுத்தது... இப்போது நினைத்தால் இன்னும் நான் சிறுப்பிள்ளையாகவே இருப்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் கோபத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்கள் கோபத்தில் காணாமல் போய் விடுகிறது.

உங்களிடம் கோபப்பட எனக்கு உரிமையிருக்கிறதா என்று யோசிக்கையில் எல்லா கோபங்களும் இருந்த இடம் தெரியாமலே ஓடி விடுகிறது. உங்களுக்கும் எனக்கும் நிச்சயமாய் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்கு. நம் உறவு ரொம்பவும் வித்தியாசமானது புரியாதவர்களுக்கு... புரிந்தவர்களுக்கு மிகவும் புனிதமானது...

எனக்கு அப்படித்தான் அப்பா தோன்றுகிறது. அப்பா நீங்கள்தான் எவ்வளவு புனிதர். எவ்வித இரத்த உறவுமில்லாத என்னை இவ்வளவு காலமும் எந்த வித பிரதி பலனும் பாராமல் மகளாய் வளர்த்து ஆளாக்கிவிட்டிருக்கிறீர்கள். என் வரையில் நீங்கள் one in a million. ம்ம்ம் இப்போது கூட நினைவு வருகிறது 19.03.2008 என்னுடைய பெயரில் பின் பாதியை உரிமையாய் கொண்டவர் இவ்வுலகத்தை விட்டு நிரந்தரமாய் விடைப்பெற்ற நாள். ஆனாலும் எனக்கு அழத் தோன்றவில்லை.... காரணம் நான் மனசாட்சியற்றவள் என்பதால் அல்ல மனது முழுவதுமே வெறுப்பு மட்டுமே மண்டிவிட்டதால். ஆனால் உயிரோடு இல்லாத ஒருவர் மீது வெறுப்பு பாராட்டுவது மூடத்தனமாய்தான் தோன்றுகிறது.

மூன்று மாதம் கூட நிரம்பியிராத கைக்குழந்தையை உங்களிடமும் அம்மாவிடமும் கொடுத்து விட்டுச் சென்றவர் மீது எப்படி பாசம் வரும்.? அவருக்காக பரிந்து பேசும் அம்மாவிடமும் எத்தனை முறை சண்டையிட்டு இருக்கிறேன்... காரணம் உங்களைத் தவிர வேறு யாரையும் இந்தப் பிறவியில் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே. அப்பா இதற்காக நான் எப்போதுமே வருத்தப்பட்டதே கிடையாது... காரணம் நான் எப்போதுமே உங்கள் மகள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனாலும் கடவுளுக்கு சின்னதாய் வேண்டுகோள் அடுத்தப் பிறவியிலாவது உங்கள் மகளாய் பிறக்க வேண்டும் என்று.

சின்ன வயதிலிருந்தே மற்றவர்களைவிட எனக்கு அதிகமான சுதந்திரம் தந்தே வளர்த்துவிட்டீர்கள்... அதுவே இப்போது உங்களுக்கு தொல்லையாகவும் மாறிவிட்டது.. அப்பா உங்கள் வீட்டுப் பறவைக்கு சிறகு முளைத்து விட்டது... அது இப்போது தனியே பறக்கத் துடிக்குது...

அன்றைக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்போது அம்மாவிடம் இனி வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று உங்கள் மீதுள்ள கோபத்தில் அம்மாவை காயப்படுத்தி வந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அப்பா இன்று ஒரு படம் பார்த்தேன்.. வாரணம் ஆயிரம்.. அப்பா மகன் பாச உணர்வை மிகவும் அழகாய் வெளிப்படுத்தியிருந்த படம். அந்தப் படம் முடிவடையும் வரை உங்கள் நினைவிலேயே நிறைந்திருந்தேன். உண்மையில் உங்கள் அன்பும் அந்த ஆயிரம் யானைகளைப் போல வலிமையானதுதான். இப்போது உங்கள் மீது இருந்த எல்லா கோபமும் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சாரிப்பா எனக்குள் இருக்கும் மன உளைச்சலில் உங்களிடம் அந்த இரண்டு நாளாய் பாராமுகமாய் இருந்ததை நினைத்தால் வலிக்கிறது. என்னையும் காயப்படுத்திக்கொண்டு உங்களையும் காயப்படுத்தியதை நினைத்தால் என் மீதே கோபம் வருகிறது. அப்பா நாம் இதுவரை மனம் விட்டு பேசியதில்லையென்றாலும் உங்களை புரிந்துக் கொண்டதாய்தான் இது வரை நினைத்திருந்தேன் ஆனால் இல்லையென்று இப்போது நிச்சயமாய் தெரிகிறது. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க சுய மரியாதை தடைப்போட்டாலும் மானசீகமா இந்த திறந்த மடல் வழி தங்களின் மன்னிப்பைக் கோருகிறேன். அப்பா தூரம் நம்மை பிரித்தாலும் உங்கள் இருவரின் ஆயுளுக்காக எப்போதும் பிராத்தித்துக் கொண்டிருப்பேன்...

அப்பா எவ்வளவோ சொல்ல நினைத்தாலும் எதுவுமே சொல்ல முடியாமல் உணர்வுகள் தடுமாறினாலும் நான் எப்போதுமே உங்கள் மகளாய் வாழவே விரும்புகிறேன்...

கடவுள் பூமிக்கு வருவதில்லை
ஏன் தெரியுமா?
அவருக்குப் பதில்தான்
உங்களை அனுப்பியுள்ளாரே
அப்பா நீங்கள் அந்தக்

கடவுளுக்கும் அப்பாற்பட்டவர் :-)

Thursday, November 20, 2008

நியூட்டனும் நீயும் - முதலாம் விதி


துயரத்தை விழுங்கும்
உன் இறுதிப் பார்வையில்
கசிந்து உருகி
தடமாறுகிறது
ஓர் இதயம்!!!

Monday, November 17, 2008

சீக்கிரம் வருவாயா?


எங்கேடா போய் தொலைந்தாய்
இவ்வளவு நாளாய்....
உன்னைத் தொலைத்து தேடி
தவித்தது போதும்
சீக்கிரம் வா...
உன்னிடம் சொல்ல இரண்டாயிரமிருக்கு
உனக்கு பிடிக்குமென்று
மருதாணி கையில் இட்டது
உன்னுடைய நினைவில்
காரை சுவற்றில் இடித்தது
உனக்குப் பிடித்தப் பாடல்
தினமும் சுப்ரபாதமானது
இப்போதெல்லாம் அம்மாவிடம்
சண்டை போடாதது
மழையில் நனைய
ஏங்கிக் கொண்டே
குடையும் பிடிப்பது
கையைச் சுடாமலே
சமையல் செய்வது
இன்னும் ஓராயிரம் காரணமிருக்கு
உன்னிடம் சொல்ல :-)
இதற்காகவேனும் சீக்கிரம் வருவாயா?

Sunday, November 16, 2008

இந்தக் கவிதையும் முற்றுப்பெறவில்லை!!!!


என்றாவது எப்போதாவது
உன்னைப் பற்றிய
நினைவுகள் பேராழியாய்
அலைக்கழித்துச் சென்றாலும்
அள்ளித் தெளித்த
அவசர கோலமாய்
உன் மௌனத்தையும்
மிஞ்சி நிற்கிறது
சில செல்லக் கோபங்கள்

கைவிரல் நடுங்க கைக்கோர்த்த
அந்த மழை நாட்களை
மறக்கத் துடித்தும்
ஒவ்வொரு இரவும்
தலையணையை
ஈரமாக்கிச் செல்கிறது
உந்தனின் நினைவலைகள்

வாழவும் விடாமலும்
சாகவும் விடாமலும்
உயிரினுள்ளே களைத்துப் போய்
உதடு கடிக்கின்றன
சில அற்ப காரணங்கள்

கையை மீறிச் சென்ற
கணங்களைப் போலவும்
முகவரியில்லாத தேடலைப் போலவும்
இந்தக் கவிதையும் முற்றுப்பெறவில்லை!!!!

Saturday, November 15, 2008

உனக்காய் ஓர் இதயம்


சந்திப்பின் சந்தர்ப்பம் தேடி
முதல் சம்மதம் தந்தேன்
சம்மதத்தின் முதல் சந்திப்பிலேயே
நீ பிரிவைத் தந்தாய்

பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தும்
ஏனோ காதல் மணக்கவில்லை

சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யும்

தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லும்

உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!

Friday, November 14, 2008

தவிர்ப்பின் தவிப்பு


உடைந்து போன
உன் மௌனங்களை
என்னில் தேடி
மாய்ந்து போகிறேன்

செல்லரித்துப் போன
தடயங்களாய்
தொலைந்து மறைகின்றன
உனது வார்த்தைகள்

மறுமொழி கூற
தருணம் தேடி
உன் அன்பை
தொலைத்து விழியிழந்து
தவிக்கிறேன்

விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கிறது
உன் சமீப பிரிவு

பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன

கண்கள் ஏங்கித்
தவித்தும்கூட
தவிப்பு தவிர்ப்பாய்
போனதேனோ?

Thursday, November 13, 2008

துடிக்கின்ற காதலும் தும்மலைப் போன்றது


நீயென்ன அதிர்ஷ்ட
தேவதையா?
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
இதயங்கூட தும்முகிறதே!!!
என்னவளை
காட்டிக் கொடுக்கும்
தும்மல் கூட
காதலின்
பரிபாஷைதான்!!!
உனக்காக இதயம்
துடிப்பதை
நாசியில்
மொழிப்பெயர்க்கிறேன்
தும்மலாய்!