Wednesday, January 30, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 2

“என்கிட்ட மறைக்காம சொல்லு அருணா… யாரது?”

“யாரதுன்னா…?”


“நிஜமாகவே உனக்குத் தெரியலயா…இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா” என்று சீறினாள் அனு.


“முதலில் புரியர மாதிரி சொல்லு”


“சரி, புரியர மாதிரியே கேட்கிறேன்… இன்னிக்கு வேலை முடிஞ்சு வரும்போது யாரோட காரில் வந்து இறங்கின”


“ஓ அதுவா கூட வேலை செய்யுற”


“பொய் சொல்லாதே அருணா…. கேட்கவே பிடிக்கல…உன்ன அந்த ஆளோட பல தடவை வெளியில பார்த்ததா என்கூட படிக்கிற கவிதாகூட சொல்லியிருக்கா… இன்னிக்கு என் கண்ணாலேயே பார்த்துட்டேன், இதுக்கு மேலேயும் பொய் சொல்லாதே”


“சரி என்னோட ஃப்ரண்டு போதுமா?”


“ஃப்ரண்டுன்னா என்ன அர்த்தம்”


“உனக்கு இப்ப என்ன பிரச்சினை? எதுக்கு இந்த குறுக்கு விசாரணை?"


“ஃபிரண்டா… லவரா?”


“ஏய் என்ன திமிரா? நான் உனக்கு அக்காவா…நீ எனக்கு அக்காவா?"


“இது இப்ப பிரச்சினை கிடையாது… உனக்கு என்ன அந்த ஆளோட பேச்சு, இரு அம்மாகிட்ட...”அனு எதிர்பாராத பொழுது சட்டென்று கன்னத்தில் அறைந்துவிட்டாள் அருணா.


இதை சற்றும் எதிர்பார்த்திராத அனு தடுமாறிவிட்டாள்.


“பாரு அனு…இது என்னோட சொந்த விசயம்…இதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது..புரிஞ்சதா…உன் வேலை என்னவோ அதை மட்டும் நீ பாரு”என்று கோபமாய் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் அருணா.


அருணா கொடுத்த அறையைவிட அவளுடைய வார்த்தைகள் அனுவை வெகுவாய் காயப்படுத்திவிட்டது. தன்னிடம் எப்பொழுதும் தோழியைப் போல் பழகும் தன் தமக்கை இப்பொழுது அடித்தது மட்டுமில்லாமல் தன்னை வேறுப்படுத்தி பார்த்தது மிகவும் வலிக்கவே இனி இவள் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.


“என்னாச்சு ரெண்டு பேருக்கும்” என்ற வளர்மதியின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாய் கிடைக்க பொறுமையிழந்து அனுவிடம் கேட்க அருணாவை காட்டிக் கொடுக்க மனமில்லாமல்


"ஒன்னுமில்லம்மா" என்று சாதித்தாள் அனு.


"ரெண்டு பேருக்கும் இதே வேலையாகிவிட்டது" என்று அப்போதைக்கு விட்டுவிட்டார் வளர்மதி. ஆனால் அருணாவின் காதல் விவகாரம் அனு சொல்லாமலேயே வளர்மதியின் காதுக்கெட்ட, வீட்டில் பூகம்பம் ஆரம்பமானது.


முதலில் அருணாவின் காதல் விவகாரம் அனுவிற்கு பிடிக்கவில்லையென்றாலும், அன்றாட நடைமுறையை கருத்தில் கொண்டு அவளுக்காக வளர்மதியிடம் பேசிப் பார்த்தாள் அனு,


“ஏன் நீ அவளுக்காக பரிந்துப் பேசுற... அவள போல நீயும் எவன் பின்னாலயாவது சுத்துறீயா”


“ஐயோ அம்மா, நான் சத்தியமா அப்படியேதும் செய்யல நம்புங்க, ஆனா அருணாவுக்கும் வயசாகுதில்லையா?”


“அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு எனக்குத் தெரியும், நீ உன் படிப்பை மட்டும் பார்த்தால் போதும். தேவையில்லாம இந்த விஷயத்தில் தலையிடாத”


“அம்மா, நான்..!”


“போதும், பரிட்சைன்னுத்தானே சொன்ன...போய் படி” என்று வளர்மதி அனுவிடம் எரிந்து விழ, இப்போதைக்கு இது பற்றி பேசி எந்தவித பயனுமில்லையென்று விட்டு விட்டாள்.


(தொடரும்)

Monday, January 28, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 1

"முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே உருகி நின்றேன்"
“அனு… அனு” பல தடவை அழைத்தும் பதில் வராது போக, மகளின் அறைக்குள் நுழைந்த வளர்மதிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டது காரணம் இன்னமும் அனு தூங்கிக் கொண்டிருந்தாள். பொழுது புலர்ந்து எவ்வளவு நேரமாகிவிட்டது, ஏற்கனவே அனுவுடன் பள்ளியில் ஒன்றாகப் பணிபுரியும் ஜான்சியின் திருமணத்திற்கு செல்ல தாமதமாகிவிட்டது. இவள் என்னவென்றால் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாள். மெல்ல மகளின் அருகே சென்று தொட்டு எழுப்பினார். சில்லென்று ஏதோ கன்னத்தில் பட்டதும் சிலிர்த்தப்படி கண்ணைத் திறந்தாள் அனு.


“என்னடி இது உடம்பு இப்படி நெருப்பா சுடுது” என்று பதற்றத்தோடு மகளை நோக்கினார் வளர்மதி.“ஒன்னுமில்லம்மா லேசான தலைவலித்தான்” என்று புன்னகை செய்ய முயன்று தோற்றவளாய் கண் கலங்கினாள் அனு.“என்னாச்சுமா, கீதாவை கூப்பிடட்டுமா? என்று மகளின் தோளை ஆதரவாய் தொட்டவர், “இரு, கூப்பிடுறேன்” என்றபடி வளர்மதி அவசரமாக கீதாவின் அறைக்கு விரைந்தார். அங்கு, சேலையோடு போராடிக்கொண்டிருந்தவள், வளர்மதியை கண்டதும் சிறிய நாணத்துடன்…“அம்மா கொசுவம் சரியாவே வரமாட்டேங்குது” என்று சிணுங்கியபடி நிமிர்ந்தாள்,“அனு கிளம்பலையா?”“என்னாச்சுன்னு தெரியல கீதா, அனுவுக்கு உடம்பு அனலா சுடுது” என்றார் கவலையோடு.“காய்ச்சலா? இராத்திரியே தலை வலிக்குதுன்னு சொல்லிகிட்டுருந்தா…ம்ம்.. வாங்க பார்க்கலாம்”கீதாவுடன் அனுவின் அறைக்குத் திரும்பியவர், படுக்கையில் அவளை காணாது இருவரும் திகைத்தனர். அதற்குள் குளியலறையில் அரவம் கேட்க அங்கு விரைந்தனர். அனு குளியலறையில் துவண்ட கொடியாய் கிடக்க, பெண்களிருவருமாய் அவளை தாங்கியபடி வந்து படுக்கையில் கிடத்தினர். குளிர்ந்த நீரை முகத்தில் அடித்தும் அவள் காய்ச்சலின் வீரியத்தால் சுயநினைவற்று கிடந்தாள்.“என்ன கீதா இது! எனக்கு ரொம்ப பயமா” அவர் சொல்லி முடிப்பதற்குள்“அம்மா ப்ளிஸ்.. அனுவிற்கு ஒன்னுமில்லை லேசான காய்ச்சல்தான். அவளை முதல்ல நாம கிளினிக்குக் முதலில் கூட்டிப் போவோம்” என்றாள் கீதா தன் கவலையை மறைத்தவாறு.“கல்யாணத்திற்குக் போகலைன்னா பரவாயில்ல இரவு விருந்துக்குப் போய் கொள்ளலாம்”“என்ன கீதா நீ? நான் சமாளிச்சுக்கிறேன்… நீ மட்டுமாவது கல்யாணத்திற்கு கிளம்பு” அனுவை நான் பார்த்து கூட்டிப்போறேன்”“வேண்டாம்மா.. நீங்க இந்த வயசான காலத்துல எதுக்கு கஷ்டப்பனும்… முதலில் அனுவை கிளினிக்கிற்கு அழைச்சுட்டுப் போறேன்” என்று கூறியதோடு நில்லாமல் வீட்டிற்கு அருகில் இருந்த கிளினிக்கிற்கு விரைந்தாள்.பயிற்சி என்று ஒரு வாரமாய் பினாங்கிற்கு அனு சென்று வந்ததிலிருந்தே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறாள். எந்நேரமும் ஏதாவது யோசனையோடு இருக்கிறாள். கண்களில் முன்பிருந்த குழந்தைத்தனத்தை அடியோடு காண முடியவில்லை. இப்பொழுதெல்லாம் ஏதாவது கேட்டால்கூட அளந்துத்தான் பேசுகிறாள். இதுவே முன்பானால் ஒரு அரட்டையரங்கமே நடத்தியிருப்பாள்.“நீ பேசாமல் டீச்சிங்க்குப் பதிலா வக்கிலுக்கு படித்திருக்கலாம்” என்று கீதா கிண்டலடிக்கும் போதெல்லாம் வளர்மதி உதவிக்கு வருவார். ஆனால் இப்போதெல்லாம் ஏதாவது கேட்பதற்கு முன்பே தன் அறையில் முடங்கி விடுபவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் தவித்த நேரத்தில்… இந்த திடீர் காய்ச்சலோடு…அவள் கூறிய செய்தி வளர்மதியை மேலும் உலுக்கியது.“எத்தனை நாளா உள்ளுக்குள்ளேயே புளுங்கியிருப்பா…நான் மட்டும் அன்னிக்கு ஊரிலிருந்து வந்தததும் வராதுமாய் இந்த விஷயத்தைச் சொல்ல வந்தவளை… நான் பாவி… கடவுளே… நான் செஞ்ச பாவம்தான் என் பொண்ணோட” முடிக்காமல் கதறி அழ ஆரம்பித்துவிட்டார் வளர்மதி.கீதாவுக்கு வளர்மதியை தேற்றுவதா…இல்லை காய்ச்சாலால் வாடித் துடிக்கும் தன் உயிர்த்தோழி அனுவை தேற்றுவதா என்று புரியாத தவிப்பு.(தொடரும்)

Sunday, January 27, 2008

'கால்' மேல 'கால்' போட்டு பேசுற காலமிது....

அது என்ன 'கால்' மேல 'கால்'ன்னு கேட்கத் தோணும்..அது வேறொன்னுமில்லங்க அழைப்புக்கு மேல அழைப்பு செய்றததான் அப்படி சொன்னேன். சரி இது பத்தி விளக்கமா சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் ப்ளாஷ் பேக்....

நான் ரொம்பவும் பாவம்...சொந்த வீட்ட விட்டு, ஊர விட்டு, இங்கு தலைநகருல்ல கல்வியமைச்சுல வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை...ஆக என்னையும் என் குடும்பத்தையும் இணைக்கிற பாலம் இந்த கைப்பேசித்தான். ஆனாலும் ஒரு தடவை கூப்பிட்டு பேசினாலே கிரெடிட்டெல்லாம் முடிஞ்சிடும்... அதுக்கும் வழி கண்டுப்பிடிச்சு வச்சிருக்கோம்ல..வேற என்ன வீட்டுக்கு போன் பண்ணி "அம்மா எனக்கு போன் பண்ணுங்க"ன்னு அவங்க தலையில கட்டிட வேண்டியதுதான். அவ்வளவு பாசம்....;) அப்புறமா அம்மா திட்டிக்கிட்டே போன் பண்ணுவாங்க. அப்படி அவங்க திட்டும் போது, "ஆமா தம்பிக்கு போன் பண்ணுவீங்க...எனக்கு பண்ண முடியாதான்னு' வம்பு வேற...

நிலைமை இப்படி இருகிறப்ப என் அண்ணன் பொண்ணு புதுசா ஒரு 'பிரிபேட்' வந்திருக்குன்னு சொன்னா, "புதுசா வேற நம்பரா போதுமே அம்மாகிட்ட திட்டு வாங்க முடியாது''ன்னு முதல்ல தயங்குனே...நான் இந்த விஷயத்துல கொஞ்சம் ஓவர்தான்...போன வருஷதுல்ல மட்டும் நாலு தடவ நம்பர மாத்திட்டேன்...

ஆனா அவ சொன்னா ''இந்த 'happy:) prepaid'ல்ல 45 நிமிஷம் வரைக்கும் பேசினா 99 காசு மட்டும்தான்...எந்த 'land line', 'fixed line', 'network'க்கா இருந்தாலும் வெறும் 99 காசு மட்டும்தான்"னு சொன்னதால்ல நாமும் வாங்கிப் பார்ப்போமேன்னு வாங்கிட்டேன். இன்னிக்கு காலையிலதான் பரிசோதிச்சு பார்த்தேன்...

முதல்ல அம்மாவுக்கு ரொம்ப ஆச்சர்யம்...எப்பவும் கூப்பிட்டா ராத்திரி மட்டும்தான் கூப்பிடுவேன்...அவசரம் இல்லன்னா...இன்னிக்கு அதுவும் பகல் நேரத்துல்ல இவ்வளவு நேரம் பேசுறேனேன்னு சந்தேகம் வந்திடுச்சு... அப்புறம் என்ன நம்ம சிதம்பர இரகசியம் உடைஞ்சிடுச்சு. ஆனாலும் அம்மாகிட்ட அவ்வளவு நேரம் போன்ல அரட்டையடிச்சது... மனசுக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுத்துச்சு...

ஆக நான் சொல்ல வர்றது இதுதான், வீட்ட விட்டு தூரமா வந்து வேலை செய்யுற...படிக்கிற பிள்ளைங்க இந்த புதிய தொடர்பு சேவையை வாங்கி பயன்படுத்தலாம்...விலை வெறும் RM5 மட்டும்தான்... இனி புலம்பல் இருக்காது .. பணத்தையும் மிச்சப் படுத்தலாம்.

இந்த சேவையில ஒரு குறையும் இருக்கத்தான் செய்யுது..நாம்ம அழைக்கும் ஒவ்வொரு அழைப்பும் 45நிமிடத்துக்கு குறைவா இருந்தாலும் அதே 99காசுதான் கட்டணமா விதிக்கப்படுது. 1 நிமிடம் பேசினாலும் 99 காசுதான் 45 நிமிடம் பேசினாலும் 99 காசுதான் கட்டணம். ஆக நிறைய பேசுவோம் காசையும் மிச்சப்படுத்துவோம்....

நான் பெற்ற இன்பம் பெறுக இம்மலேசிய மக்கள்.

மேல் விபரங்களுக்கு www.happy.com.my

Monday, January 21, 2008

உனக்காககனவுகள் சுமந்த கண்களை கலங்காமல் காக்கின்றேன்...

நினைவுகள் சுமந்த நெஞ்சினை நலுங்காமல் காக்கின்றேன்...

துயரங்கள் சுமந்த விழிகளை இமைக்காமல் காக்கின்றேன்...

வலிகள் சுமந்த இதயத்தை உடையாமல் காக்கின்றேன்...

உனக்காக...

Sunday, January 20, 2008

தோழியானவள்


உன் விரல் பிடித்து நடந்தேன்...

உன் முகம் பார்த்து சிரித்தேன்...

உன் குறும்புத்தனத்தை இரசித்தேன்...

உன் கோபங்களையும் பொறுத்தேன்...

உன் பொய்களையும் சகித்தேன்...

இருந்தும் உன் பிரிவை மட்டும் ஏன் வெறுத்தேன்?

வல்லமை தாராயோ


முதன் முதலாய் ஏதோவொரு இதழில் உன் முகம் பார்த்த ஞாபகம்...

மீண்டும் உன் குரல் கேட்டதில் ஏதோ சுவாரசியம்...

நாளெல்லாம் தேடி மீண்டும் உன் முகம் பார்க்கிறேன் பழையது என்று எறிந்துவிட்ட இதழை...

அம்மாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்க

முகம் மூடுகிறேன் உன் நிழல் தாங்கி வந்த இதழில்...

அடுத்த கணம் ஏதோ தவிப்பு... உன் முகம் காண்பது எப்போது?

என்னை நானே கிள்ளிக் கொள்கிறேன்...

பலமுறை உன் எண்களை அழுத்துவதாய் எண்ணி அழுத்தாமலே என்னில் தேய்கிறேன்...

கடைசியாய் உன்னை அழைக்கிறேன்...

மறுமுனையில் உன் குரல்...

ஆங்கிலம் கலவாத வணக்கத்தில் உறைந்துப் போகிறேன் நான்...என்னையுமறியாமல்
துவண்டுப் போய் தொலைப்பேசியும் நழுவுகிறது...

நழுவிய பேசியை... பேசாமலே வைத்து விட்டு வந்து வெறுமையாய் வெறிக்கிறேன்
வானவெளியை...

தொலைவில் தொலைப்பேசியின் அலறல்...ஓடி வந்து எடுத்து 'ஹலோ' என்கிறேன்
மென்மையாய்...

மறுமுனையில் உன் குரல் இனிமையாய்...

சாதாரண வணக்கத்தில் கூடவா இத்தனை இனிமை...

வியக்கிறேன் என்னில் ஆழ்ந்தப்படி...

உன் குரல் என்னை நிஜவுலகிற்கு கட்டி இழுக்கிறது...

'மன்னிக்கவும் தவறாக அழைத்துவிட்டேன் 'தன்நெஞ்சறிந்த பொய் சொல்கிறேன் உன் குரலை
என்னுள் ஒளித்தவாறு...

மீண்டும் உன் குரல் கேட்கும் ஆர்வத்தை பிடிவாதமாய் இழுத்துப் பிடித்துக் கொண்டே கட்டிலில் சாய்கிறேன்...

தூக்கம் என்னிடம் காயானது...

நாட்களை உன் நினைவில் தொலைத்தவாறு உயிர் வாழ்கிறேன்...

காலம் என்னிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது...

உன் வீட்டு திருமண அழைப்பிதழை என் கையில் திணித்தவாறு...

உலகம் சிறியது என்று உன்னால் உணர்த்தப்படுகிறேன்...

உன் சொந்தம் என் உயிர் நட்பானது எப்போது?

வியக்க வழியின்றி கைநழுவுகிறது அழைப்பிதழ்...

என் கனவை போல...

நழுவிய இதழை நடுக்கத்தோடு கையில் எடுக்கிறேன்...

என் கனவை காலில் மிதித்தவாறு...

அப்போதே உடைந்துப் போக மனமின்றி...

பிறகு பார்ப்பதாய் கூறி எடுத்து வைத்துக் கொள்கிறேன்...

இரயிலுக்கு காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் பாறையாய் கணக்கிறது…என்னை நானே
தேற்றிக் கொண்டே...

அழைப்பிதழை கையில் எடுக்கிறேன்…

அதற்குள் இரயிலும் விரைவாய் வந்துவிட...

மீண்டும் என் கைப்பையில் தஞ்சம் புகுகிறது உன் வீட்டு அழைப்பிதழ்...

விரைவு இரயிலைவிட விரைவாய் தடதடக்கும் இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டே
திறக்கிறேன் அழைப்பிதழை...

நெஞ்சுக்குழிக்குள் ஏனோ இனிய கலவரம்...

கன்னத்தில் வழியும் கண்ணீரை யாருமறியாமல் மறைக்கிறேன்...

அருகில் பிஞ்சு விரலொன்று என் கன்னம் தடவுகிறது விளையாட்டாய்...

அந்த பிஞ்சு மழையின் விளையாட்டில் நனைந்துருகி என் நெஞ்சம்
நெகிழ்கிறேன்...இதைவிடவா ஒரு ஆறுதல் வேண்டும்?

கடவுள் மீது நம்பிக்கை கூடிப்போகிறது...

நிம்மதியாய் மூச்சுவிடுகிறேன் உன் வீட்டு அழைப்பிதழை நெஞ்சில் அணைத்தவாறு...

ஆனாலும் ஆண்டவனுக்கு அன்பாய் ஒரு வேண்டுக்கோள்...

உன் பெயரில் என் பெயரையன்றி வேறொரு பெயரை எழுதாதே!

அதிஷ்டம் என் வாசல் பக்கம் வந்து கண் சிமிட்டுகிறது...

உன் முகம் காண...உன் குரல் கேட்க...

கேட்டதில் பிடித்தது

காற்று வெளியில் எப்படித் தேடுவேன் நீ சொல்லி வைத்த வார்த்தைகளை....

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தலைப்புகள் 133 இல்லை. குறிப்பறிதலுக்கு 2 தலைப்புகள், நட்புக்கு 6 தலைப்புகள், செயல்திறனுக்கு 12 தலைப்புகள், ஆழ்வினை உடமை, இடுக்கண் அழியாமை, ஊக்கம் உடமை, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், வழியறிந்து செய்தல், காலமறிந்து செய்தல், இடமறிந்து செய்தல், வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை.

ஆக 12 தலைப்புகள் இந்த செயல்திறனுக்கு. திருக்குறளில் எந்த பொருளுக்கும் இத்தனை தலைப்புகள் இல்லை. இதிலிருந்து மக்களாய் பிறந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாய் இளையோருக்கு பெரிதும் வேண்டுவது இந்த செயல்திறனே என்று தெரிகின்றது.இன்றைய இளையோர் அறிந்துக் கொள்ள வேண்டிய திருக்குறள் கூறும் செயல்திறன் பற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

செயல்திறனுக்கு நல்லதை எண்ணு, பெரியதை எண்ணு, அழுத்தமாக எண்ணு, ஆழமாக எண்ணு... அப்படியே ஆவாய். முனைந்து செய், வெற்றியா தோல்வியா என்று பாராதே, வாழ்த்தா வசையா என்று கருதாதே துணிந்து செய், முயன்று செய்.

வேட்டைக்குச் செல்வதானால் முயல் வேட்டைக்குச் செல்வதைவிட யானை வேட்டைக்குப் போவது நல்லது என்று கூறுகின்றார் திருவள்ளுவர். முயலை வென்று வெற்றி பெருவதைவிட, யானை வேட்டைக்குப் போய் தோல்வி அடைந்தாலும் சிறப்பே என்று வள்ளுவர் கருதுகின்றார். ஒருவன் யானை வேட்டைக்குப் போய், குறிப்பார்த்து வேலையும் வீசி எரிந்து, குறித்தவறி யானையும் பிழைத்தோடி போய், வேலையும் இழந்துவி்ட்டு வெறுங்கையோடு திரும்பி வருகின்றவனை பார்த்து வீரன் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

(772) கானமுயலெய்தஅம்பினையானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது - (78) படைச்செருக்கு

இந்த குறள் வழி நமக்குத் தெரிய வருவது என்னவென்று கேட்டால், சிறு செயல்களில் முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய செயல்களில் முயன்று தோல்வி அடைவது சிறப்பு என்ற புது கருத்தை விளக்குகின்றார் வள்ளுவர். எனவே, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது போல், இளையோர் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தோடு பெரிய இலட்சியங்களை கொண்டிருக்க வேண்டும். அந்த இலட்சியங்களில் முதலில் தோல்வி அடைந்தாலும் சரி அல்லது சிறு சிறு தடைகற்கள் தோன்றினாலும், காலப்போக்கில் அவை அவர்களுக்கு படிகற்களாக மாறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும்.

(இளமையில் இனிமை - இராஜேஸ்வரி இராஜமாணிக்கம் - 2004)

" நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தே தீர வேண்டும் என்றாலும்கூட நெஞ்சத்தில் சுருக்கங்கள் விழுந்து விடக்கூடாது. உள்ளமும் உணர்வும் மூப்பு எய்தவே கூடாது "

திரையிசை கடந்தவர்

என் வானம் தூசு தொட முடியாத தூரத்தில்...
இசை படைத்தவன் சொன்னதையும் சொல்லும்... சொல்லாதையும் சொல்லும். எந்த மொழியாயினும் இசையின் இனிமை ஒன்றுதான். உலகம் தாண்டி வானவெளி போனாலும் ஒன்றுமில்லாத சூன்யநிலையின் இயற்பியலையும் மாற்றிவிடும் தன்மை இந்த இசைக்கு உண்டு என்று தாராளமாக கூறலாம்.
இந்த இசை தமிழ்த்திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. ஜி.இராமநாதன், பாபநாசம் சிவன், சி.ஆர். சுப்பராமன், எஸ்.வி வெங்கட்ராமன், எஸ். எம் சுப்பையா நாயுடு, கே.வி மகாதேவன், விஸ்வநாதன் இராமமூர்த்தி... தொடங்கி... இன்றைய ஏ.ஆர் ரஹ்மான், தேவா, பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.
அந்த வகையில், 'காற்று வெளியிடை கண்ணம்மா' ... தொடங்கி 'சுட்டும் விழி சுடரே' வரை இரசித்துக் கேட்கும் இந்த தமிழ்த்திரைப்பாடல்களின் 'பிதாமகன்' யாரென்று தெரியுமா? அவர் வேறு யாருமல்ல 'என்ன தவம் செய்தனை யசோதா' என்று காபி இராகத்தில் அமைந்த கீர்த்தனைக்கு சொந்தக்காரர் பாபநாசம் சிவன். இவருடைய இசையமைப்பில் மலர்ந்த பெரும்பாலான பாடல்கள் கர்நாடக சங்கீத கீர்த்ததனையை அடிப்படையாக கொண்டதாகும். அது ஒன்றும் தவறேயில்லை என்று கூறும் பாபநாசம் சிவன், 'இசை என்பது இறைக்கொடை, அதனை இறைவன்பால் செலுத்துவதில் எவ்வித குற்றமுமில்லை என்று கூறுகின்றார். அவருடைய இந்த வாதம் ... அவருடைய இசையின் உச்சத்தில் திளைக்கும்போது நமக்கும் புரிகின்றது.
அது 1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கம்... தமிழ் கூறும் நல்லுலகை இந்தித்திரையிசை ஆக்கிரமிப்பு செய்திருந்த காலக்கட்டம். தமிழ்திரையிசையின் மோகம் சற்று தொய்வுக் கண்டு இந்தித்திரையிசையில் திளைத்திருந்த காலக்கட்டம். அதே காலக்கட்டத்தில் 1976-ஆம் ஆண்டு பண்ணையபுர பட்டிக்காட்டு இராசையா 'அன்னக்கிளி' திரைப்படம் வழி தமிழ்த்திரையிசையின் வரலாற்றை மாற்றியமைத்தார்.
அவர் இசைஞானி இளையராஜா.... 'அன்னக்கிளி தொடங்கி அண்மைய 'ஒரு நாள் ஒரு கனவு' வரை தன்னுடைய இசையின் வழி அனைத்து உள்ளங்களிலும் நீக்கமற நிலைத்துவிட்டவர். தமிழ்த்திரையிசையின் சுவடுகளை நாம் கொஞ்சம் பின் நோக்கினால், இவருடைய காலக்கட்டத்திற்கு முன்பு வந்த எந்த இசையமைப்பாளரும் ஒரு படத்தின் இசையின் மூலம் வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர்கள் கிடையாது. அது பல வருட தவம். அந்த வகையில் இளையராஜாவிற்குப் பிறகு அதே அந்தஸ்த்தைப் பெற்றவர் ஏ.ஆர் ரஹ்மான் என்று நிச்சயமாக கூறலாம்.
இளையராஜாவின் வரவிற்குப் பிறகு இந்தித் திரைப்பாடல்கள் கேட்பது நிறுத்தப்பட்டது என்று இசை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாது அவருடைய வரவுக்குப் பிறகு புதிய பாடல்கள் என்றும் பழைய பாடல்கள் என்றும் திரைப்பாடல்கள் தரம் பிரிக்கப்பட்டது.
இளையராஜாவின் இந்த அசாதாரண வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவருடைய நேர்த்தியான இசைக்கோர்ப்பு பாணி. நாட்டுப்புறம், ஹிந்துஸ்தானி என்று கலவையாக குழைத்து திரைப்பாடல்களாக வழங்கும் யுக்தி. மேற்கத்திய மரபு இசையை இந்திய பாதிப்புடன் தரக்கூடிய அவருடைய திறன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பழமை வாய்நத நாட்டுப்புற இசையை எளிமையாகவும் இனிமையாகவும் தன்னுடைய இசையின் வழி உயிர்ப்பித்திருக்கிறார் இளையராஜா என்றால் மிகையில்லை. அதிலும் நாட்டுப்புற இசையில் மிகவும் பிரபலமானது கும்மியடித்து ஆடி பாடுவது. பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் இந்த கலையை தன்னுடைய பாடல்களில் அதிகம் புகுததியுள்ளார் இளையராஜா. இதையடுத்து வில்லுப்பாட்டு, கரகாட்டம் என்று நாட்டுப்புற கலையின் வர்ண மெட்டுகளை அதன் தன்மை குன்றாது தன் இசையில் புகுத்தியுள்ளார் இளையராஜா.அதிலும் குறிப்பாக '16 வயதினிலே' திரையில் ஒலித்த 'செந்தூரப் பூவே' என்றுத் தொடங்கும் பாடலை சான்றாக கூறலாம்.
கிராமிய மண் வாசனையை இழைத்து அந்தப் பாடலில் கொடுத்திருந்தார். அந்த மண்ணில் முளைத்தவருக்கு அந்த வாசனையை குழைத்து கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும் பொழுதும் நாமும் அந்தப் பாடலோடு இணைந்து வயல், வரப்பு, ஓடை, அருவி என்று சுற்றித் திரிந்துவிட்டு வந்த திருப்தி தோன்றுகிறது.
பிரபல எழுத்தாளர் சுஜாதா, 'பொன் மாலை பொழுது' என்ற 'நிழல்கள்' திரைப்பாடல் 'சிம்பனி' இசைக்கு நிகரானது என்று விமர்சிக்கிறார். அதே திரைக்கொண்டு வந்த மற்றுமொரு பாடல் 'பூங்கதவே தாழ் திறவாய்' மேற்கத்திய வாத்தியங்களால் 'Orchestration' என்று இசைமொழியில் அழைக்கப்படும் பல வாத்தியங்களின் சீரான ஒருங்கிணைப்பு வழி நமக்கு வழங்கியுள்ளார். இப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தெய்வீக தன்மை நம்மை வந்து ஒட்டிக் கொள்வதை உணரலாம்.
வாத்திய இசையில் வார்த்தைகள் களவு போகும் இக்காலக்கட்டத்தில், தரமான ஆனால் வரிகள் இசையில் மூழ்காத வண்ணம் இருந்தது இளையராஜாவின் பாடல்கள்.
இளையராஜா தன் திறமையை வெறும் சினிமா பாடல்களுக்கு என்று வரையறுத்துக் கொள்ளாமல் திரையிசை கடந்து பக்தி பாடல்கள், இசைத்தொகுப்பு என்று இமயம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.
அவருடைய திரையிசை அல்லாத இசைத்தொகுப்பு 'Nothing But Wind' மற்றும் 'How To Name It'. அவருடைய அண்மைய சாதனையான 'சிம்பனியில் திருவாசகம்', இவருடைய இசை வரலாற்றின் உச்சம் என்றால் மிகையில்லை.ஒலியை இசையாகப் பார்ப்பதால் என்னவோ, அவரால் ஒவ்வொரு முறையும் புதிய புதிய யுக்திகளை தன் பாடல்களில் வழங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக திரைவானில் அதே புகழுடன் உலா வர முடிகிறது. அவருக்கு வயதானாலும் அவரின் இசையின் இளமை குன்றாது என்று தாராளமாக கூறலாம். தமிழ்திரையிசையின் பரிணாமத்திற்கு பெரும் பங்காற்றிய இளையராஜா... தமிழ்த்திரையிசையில் பதித்திருக்கின்ற சுவடு காலம் கடந்தும் சொல்லும்.

அழகு சிரிக்கின்றது

கண்ணன் குழலிசையில் உள்ளம் உருகுதடி...
உனது குரலோசையில் நெஞ்சம் மருகுதடி...
ஆதவன் வருகையில் தாமரை மலருதடி...
உனது விழியில் உலகம் விழிக்குதடி...
வானமழையில் வானவில் சிரிக்குதடி...
உனது குறும்பில் ஜீவன் கரையுதடி....

காதலித்துப் பார்த்தேன்...


காதலித்துப் பார்த்தேன்...

காலை பனியின் குளிரில் உன் வாசம்...

மாலை பொழுதின் மயக்கத்தில் உன் நேசம்...

ஈர இரவுகளின் தனிமையில் உன் சுவாசம்...

காதலித்துப் பார்த்தேன்...

பாவமாய் ஒரு காதல்


கவிதைக் கேட்டால் என் உலகைத் தருவேன்...

உலகைக் கேட்டால் என் உறவைத் தருவேன்...

உறவைக் கேட்டால் என் உயிரைத் தருவேன்...

உயிரைக் கேட்டால் என் கவிதைத் தருவேன்...

எல்லாம் தருவேன் என்றும் ஏன் பிரிந்தாய்?

நான் கேட்ட எதை நீ தந்தாய்?

பரிகாசமாய் உன் பதில்...

பாவமாய் நானும் என் காதலும்!!!

தலையெழுத்து

காதலித்துப் பார் கையெழுத்து

அழகாகும் என்றான் ஒரு கவிஞன்...

நானும் காதலித்தேன்...

தலையெழுத்தே மாறிப் போனது!!!

பகிர்தல்

100PLUS- ஸை நீயும் நானும்

பகிர்ந்துக் கொண்டதில் கண்டேன்,

உன்னுடைய 100 மடங்கு நேசத்தை...!

அடடா உன்னுடைய நேசத்தில்தான்

எத்தனை சிக்கனம்?

இரயில் பயணங்களில்


கார் பயணத்தைவிட...

இரயில் பயணமே இனிமை என்றாய்!

ஏன் என்று கேள்வியாய் நோக்க... ?

வா காட்டுகிறேன் உனக்கும் என்றாய் ஆர்வமாய்..

கூட்ட நெரிசலில் என்னை இறுக்கிக் கொண்டு

இதற்காகத்தான் என்றாய் கண்ணில் குறும்பாய்!

கோயிலுக்குப் போகலாமா?

இப்போதெல்லாம் உன்னோடு

கோயிலுக்குப் போகவே

பயமாயிருக்குதுடா...

நவகிரகத்தைச் சுற்றச் சொன்னால்

நீ என்னை அல்லவா சுற்றி வருகிறாய்?

தொட தொட


தொட்டுக் கொண்டு பேசாதே...

தோழியிடம் சொல்லியிருந்தேன்...

தொட்டுக் கொண்டே பேசு...

உன்னிடம் கெஞ்சுகிறேன்!!!

உனக்காக அழுகிறேன்...

என்னை ஆறுதல்
படுத்தவாவது
கொஞ்சம் அழுது காட்டேன்...

நீ வந்தால்...

சோகம் சுகமானது

நீ வந்து

ஆறுதல் படுத்துவதால்...!!!

நீ உள்ளவரை...


எத்தனையோ அலுவலில் நசுங்கினாலும்...

தொலைப்பேசியில் உன் குரல் கேட்டதும் உற்சாகம்...

எத்தனையோ தோல்வியிலும் ஓய்ந்தாலும்...

உன் தோளில் முகம் சாய்த்ததும் சந்தோஷம்...

எத்தனையோ துரோகங்களில் உடைந்தாலும்...

உன் மடியில் தலை சாய்த்ததும் அமைதி...

எத்தனையோ பிரிவுகளில் தேய்ந்தாலும்...

உன் அணைப்பில் உள்ளவரை நிம்மதி...!!!

உன்னை நான் அறியவில்லை...


உன் பெயரை வாசிக்கும் வரை அறியவில்லை...

இனி நான் சுவாசிக்கும் வேதம் உன் பெயரைன்று...

உன் முகம் காணும் வரை அறியவில்லை...

இனி நான் காண விரும்புவது உன் முகம் மட்டுமென்று...

உன் குரல் கேட்கும் வரை அறியவில்லை...

இனி நான் இசைக்கும் கீதம் உன் குரலென்று...

உன் ஸ்பரிசம் உணரும் வரை அறியவில்லை...

இனி நான் உயிர்ப்பது உன் தொடுகையிலென்று...

உன் பார்வை புரியும் வரை அறியவில்லை...

இனி என் உலகம் உன் பார்வையிலென்று...

உன் இதயத்துடிப்பை உணரும் வரை அறியவில்லை...

இனி நான் வாழ்வது உன் உயிர்த்துடிப்பிலென்று...

உன் தோள்களில் என் முகம் சாயும்வரை அறியவில்லை...

இனி நான் வாழ்வது உனக்காகவென்று....!

காதலின் உயில்


என்று உன் இதயம் விழித்துக் கொள்ளுமோ

அன்று உயிர்த்திடு உயிர்த்துடிப்பே

என்று உன் கண்கள் உண்மை சொல்லுமோ

அன்று மலருக கனவுகளை

என்று உன் இதழ்கள் கொஞ்சிப் பேசுமோ

அன்று இனித்திடு தாய்மொழியே

என்று உன் கால்கள் என்னைத் தேடுமோ

அன்று வழிவிடு சாலைகளே

என்று உன் உயிரினில் ஜீவன் கசியுமோ

அன்று விழித்திடு கல்லறைகளே

என்று உன் ஆவி என்னைச் சேருமோ

அன்று மரித்திடு உன் நினைவுகளை...


காதலிக்கிறேன்....!

கொட்டும் மழைத்துளி...
பசும்புல்லின் வியர்வைத் துளி...
ஆர்ப்பரிக்கும் கடல் அலை...
மெய்த்தீண்டும் தென்றல்...
காட்டு மூங்கிலின் சிருங்காரம்...
வண்ணத்துப்பூச்சியின் வர்ணஜாலம்...
வானவில்லின் மாயாஜாலம்...
தொலைப்பேசியின் சிணுங்கல்...
சின்னக்குழந்தையின் முத்தம்...
உறக்கம் விழித்தும் விழிக்காத கனவுகள்...
இவையனைத்திற்கும் நான் இரசிகையாகிவிட்டேன் ....
காரணம் நான்கூட காதலிக்கிறேன்....!!!

தவம் பண்ணிடவில்லை

தவம் பண்ணிடவில்லையம்மா...
உன் மகளாய் வந்து பிறந்திட...
பத்து திங்கள் உன் மடி சுமக்காது...
இருபது ஆண்டுகள் உன் நெஞ்சில் சுமந்தாயே...
நீ என் நிழலாய்... நான் உன் நினைவாய் வாழ்ந்திட...
இனியொரு ஜென்மம் வாயத்திட வேண்டும்!!!

முதன் முதலாய் பிறந்தேன்

பின்னிரவு நேரம் வந்துகதவைத் தட்டினாய் ஒரு நாள்...
கதவைத் கோபமாய் திறந்ததும்,
பசிக்குதுமா என்றாய் களைப்பாய்...
சமைக்கவில்லையென்று மீண்டும் படுக்கையில் விழ...
ஏன் என்று கேளாமல் நீயும் என் அருகில் வந்த படுத்துக் கொண்டாய்...
அதிகாலை நேரம் என் நெற்றியில் முத்தமிட்டெழுப்பி
அருகில் அழகாய் நீ சிரித்தாய்...
கோபமாய் நான் கண்ணை இறுக்கிக் கொள்ள
"பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா" என்று நீ என் கன்னத்தில் முத்தமிட்டபோது
முதன் முதலாய் பிறந்தேன் உன் மகளாய்...

பிடிக்கும் என்றதால்மழை பிடிக்கும் என்றதால்...

நீ மழையோடு கைக்கோர்க்கும் போதும்,

ரோஜா பிடிக்கும் என்றதால்...

நீ முட்களோடு சண்டையிடும் போதும்,

புத்தகம் பிடிக்கும் என்றவுடன்...

நூலகம் உன் புகுந்த வீடான போதும்,

கனவு பிடிக்கும் என்றதால்...

நீ எனக்காக உறங்கும் போதும்,

உன் இயல்பையெல்லாம் எனக்காக விட்டுக் கொடுக்கும் போதும்...

ஏனோ எனக்குள் எஞ்சியவை...

வெறுமை மட்டுமே... வெறுமை மட்டுமே...!