Monday, May 26, 2008

உரிமைக்குரல் - மக்கள் சக்தி


உரிமைக்குரல்
எது உண்மை .... எது உரிமை ? அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கம்தான் காரணமா ? இல்லை உண்மையான போராட்டமா..... இதுவரை நாம் சாதித்தது என்ன ... இனியும் சாதிக்கபோவதுதான் என்ன? இதில் அப்பாவி தமிழர்களின் நிலைதான் என்ன...

Friday, May 16, 2008

கைக்கெட்டும் தூரத்தில் உன் கவிதைகைக்கெட்டும் தூரத்தில் உன் கவிதை இருக்கிறதே
நீ வாசிக்க வழியில்லையா?
சுவாசிக்கும் தூரத்தில் உன் சுவாசம் இருக்கிறதே
நீ சுவாசிக்க முடியலையா?

நான் ஒரு அனாதை என்றான் ஒருவன்
நானும்தான் அனாதை என்றது நிலா
இருவரின் புலம்பலைக் கேட்டு சுடச் சுடச் சிரித்த சூரியன்
நானும்தான் அனாதை என்றான்
மூவரும் அனாதை என்று முடிவெடுத்தப்போது
எனக்கும் ஓர் இடம் உண்டா என்றார் கடவுள்
அம்மா அப்பா இல்லாத அனாதைதான் நானும்
ஆனால் அழுததில்லை ஒரு நாளும்
அம்மை அப்பன் கொண்டது மனித ஜாதி
அனாதைகள் எல்லாம் கடவுள் ஜாதி
அடுத்த மனிதன் இருக்கும் வரையில்
யாரும் இங்கே அனாதையில்லை
கடவுளின் கருத்துக்குக் கைத் தட்டினர் மூவர்
நிலா சிரித்தது பனித்துளியாய்
சூரியன் சிரித்தான் சுடரொளியாய்
அனாதை சிரித்தான் அலை அலையாய்சென்னையைச் சேர்ந்த சத்யமூர்த்தியையும் குற்றாலத்தைச் சேர்ந்த செண்பகவள்ளியையும் இந்த கவிதைதான் இணைக்கிறது. குங்குமம் இதழ் போட்டிக்காக அனாதை என்ற பெயரில் இருவரும் ஒரே மாதிரி எழுதிகிறார்கள். ஆனால் சத்யமூர்த்தி கவிதையை சரியான நேரத்தில் அனுப்பாததால் செண்பகவள்ளியின் கவிதை மட்டும் குங்குமம் இதழில் பிரசூரமாகிறது. தன் கவிதையை போல் அக்கவிதையும் ஒத்திருக்க அந்தக் கவிதையை எழுதிய செண்பகவள்ளிக்கு கடிதம் எழுதுகிறான் சத்யமூர்த்தி. ஆரம்பத்தில் நட்பில் தொடங்கும் அந்தக் கடிதங்களே பின்னாளில் அவர்களின் காதலுக்கும் விசிறிகளாகின்றன. இதுவரை கண்ணும் கண்ணும் காணாத காதலியைத் தேடி குற்றாலம் செல்கிறான் சத்யமூர்த்தி. அங்கே தன்னுடைய நண்பனின் வீட்டில் தங்கும்போது நண்பனுடைய தங்கைகளை தன் தங்கைகளாக எண்ணிப் பழகுகிறான். இங்கேத்தான் விதி வில்லனாய் சதி செய்கிறது. ஒரு விபத்தில் அந்த நண்பன் இறந்துவிட அவன் வீட்டின் குடும்பப் பொறுப்பை மகனாகவும் அண்ணனாகவும் ஏற்க வேண்டிய சூழ்நிலை. சத்யமூர்த்தியின் காதல் விவகாரம் இறந்த நண்பனுக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் கல்லூரியில் இந்தியா முழுவதும் சுற்றுலாச் சென்றுத் திரும்பும் நண்பனின் கடைசித் தங்கை தன் அண்ணனுடைய திடீர் மறைவுக்கு சத்யமூர்த்திதான் காரணமென்று அவனிடம் வெறுப்பை உமிழ்கிறாள். நண்பனின் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அவனை அவ்வீட்டை வெளியேற முடியாமல் கட்டிப்போடுகிறது. இந்நிலையில் அவன் காதலி யாரென்று விதி வில்லனாய் காட்டிக்கொடுத்து எள்ளி நகையாடுகிறது. செண்பகவல்லி என்ற புனைப் பெயரில் கவிதை எழுதியது ஆனந்திதான் என்று அவளின் கல்லூரி ஆண்டு விழாவில் அறிகிறான் சத்யமூர்த்தி. சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அவனுடைய காதலியின் குடும்பத்திற்கே அண்ணனாகியதை எண்ணித் தவிக்கிறான். இத்தனை நாள் யாரை தன் அண்ணனின் மறைவுக்குக் காரணம் என்றெண்ணி ஆனந்தி வெறுத்து வந்தாளோ அவன்தான் அவளுடைய காதலன் என்று தோழியின் மூலம் அறிகிறாள். காதலனே தன் வீட்டில் அண்ணனாகிப் போனதை நினைத்து மறுகுகிறாள். கடைசி வரைக்கும் தன் காதலுக்காக சத்யமூர்த்தியிடம் போராடுகிறாள் ஆனந்தி.


எப்பொழுதுமே சுபமான முடிவையே எதிர்பார்க்கும் நமக்கு இவர்களின் முடிவு வேதனையைக் கொடுத்தாலும், படம் முடிந்தும் அவர்களின் காதல் நெஞ்சில் நிற்கிறது. நடக்கூடிய கதை என்று படம் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தாலும் இதுப்போல் நடக்காமல் இருக்கவே மனம் ஏங்குகிறது.

கவிப்பேரரசின் கவிதையும் பாடல்களும் குற்றாலத்தின் அழகும்தான் இப்படத்தின் உயிர்நாடியாய் விளங்குகின்றன. நான் பதினெட்டு வயது பட்டாம் பூச்சி, அன்பே அன்பேதான் வாழ்க்கையே பாடலில் வரும் பால் கொண்ட காப்பியிலே இப்போது பாசத்தை கலந்தது யார் வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தாலும் இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே தீனாவின் இசையில் பரவாயில்லை ரகம். கேள்விக்குறியாய் இருந்த காதல் ஆச்சரியகுறியாய் ஆனதடா குட்டிப்பாடல்கூட கேட்பதற்கு பரவாவில்லையாய் இருக்கிறது. வைரமுத்துவின் அழகான கவிதையை தீனா வீண் செய்துவிட்டாரோ என்று தோன்றும் அளவிற்கு அவருடைய இசை உள்ளது. ஆனந்தி @ செண்பகவள்ளியாக அறிமுகமாகும் உதயதாரா அந்த கதாபாத்திரமாய் வாழ்ந்திருக்கிறார். அடிக்கடி கோபிகாவை நினைவுபடுத்தும் முக சாயல். குடும்ப பாங்கான கதாநாயக பாத்திரமென்றால் பிரசன்னா என்று துணிந்து சொல்லும் அளவிற்கு அவருடைய அமைதியான நடிப்பு உள்ளது. வடிவேலுவின் நகைச்சுவை கவர்ந்தாலும் ஏனோ இந்தக் கதையோடு கொஞ்சமும் ஒட்டாததைப் போல் தோன்றுகிறது. ஆனாலும் அவசியம் அனைவரும் காண வேண்டிய திரைப்படம். அழகான இந்த கவிதையை இவ்வளவு தாமதமாய் வாசித்து விட்டோமே என்ற வருத்தம் எனக்கு....

Friday, May 09, 2008

எனக்குப் பிடித்த பாடல் - மண்வாசனை

திரைப்பாடல்களையே கேட்டு அலுத்துவிட்டவர்களுக்காக மட்டுமென்று இல்லாமல் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
தமிழ் திரைப்பாடல்களில் மட்டுமே லயித்திருக்கும் மனதை உள்நாட்டு பாடல்களையும் கேட்டு இரசிக்க வைப்பது கொஞ்சம் கடினமான வேலைத்தான்...முயற்சி செய்யலாமே என்று தோன்றியவுடனே குறிப்பாக எனக்குப் பிடித்த பாடல்களை, இங்கு பதிவு செய்துவிட்டேன். எங்கள் மண்வாசனையையும் கொஞ்சம் நுகர்ந்து செல்லுங்களேன்.
90ம் ஆண்டு இறுதிகளில் வெளிவந்த செல்வாவின் 'The Gift' இசைத்தொகுப்பு நம் நாட்டில் பெரும் பரபரப்பையும் உள்நாட்டு பாடல்களின் மீது புதுவித எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அதிலும் "உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன், அன்பே ஏன் தயங்குகிறாய்...உன் காதலை சொல்லிவிடு" என்ற பாடல் அப்போதைய வானோலி 6-ல் ஒலியேறாத நாட்களே இல்லையென்று கூறலாம். அந்தப் பாடலை "Rogkwave" குழுவைச் சேர்ந்த சசி பாடியிருப்பார். இந்த இசைத் தொகுப்பின் மற்றுமொரு சிறப்பு செல்வாவின் சாக்ஸசாபோன் இசை. மிகவும் சிறப்பாக வாசித்திருப்பார் செல்வா.

அதையடுத்து பல இசைத்தொகுப்புகள் வந்த வண்ணமே இருந்தாலும் 'என் மனசே' ஆண்டாள் உள்நாட்டு திரைப்பட பாடல் அனைத்து இளம் உள்ளங்களையும் கவர்ந்தது என்றே கூறவேண்டும்.


"நவம்பர் 24" டெலிமூவியில் இடம்பெற்றுள்ள 'நீ பார்த்திடல் அழகு' இன்று வரையிலும் உள்நாட்டு இரசிகர்களையடுத்து வெளிநாட்டு இரசிகர்களையும் தன் வசம் கவர்ந்துள்ளது மலேசிய நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு கிடைத்த மிக பெரிய அங்கிகாரம் என்று சொல்லவேண்டும். 'நவம்பர் 24' திரைக்கதையில் இயக்குனர் பாணி கோட்டை விட்டிருந்தாலும் அழகான கவிதையை பாடலாக தந்தமைக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இன்னும் இது போன்ற பாடல்களை வரவேற்கிறோம் இயக்குனர் திரு.பாணி அவர்களே.அப்போதைய மலேசிய வானொலியான 'வானொலி 6'ல் நடைப்பெற்ற பாடல் திறன் போட்டியின் வெற்றியாளர் திலிப் வர்மனின் வரவு உள்நாட்டு இசை வரலாற்றின் மகோன்னத உற்சவம் என்று கூறலாம். அதிலும் பிண்ணனி பாடகர் உன்னி கிருஷ்ணனை ஒத்திருக்கும் இவருடைய குரல் இவருக்கு பலம் எனலாம். "காதல் வேண்டும்" டெலிமூவியின் "உயிரைத் தொலைத்தேன்' பாடலைக் கேட்டு உயிரைத் தொலைக்காதவர்களே இல்லை. இன்று வரையிலும் இந்த பாடலுக்கென்றே பெரிய இரசிகர் பட்டாளமே உண்டு. இந்த பாடலில் மற்றுமொரு சிறப்பு அதன் இசை. Jay-ன் வித்தியாசமான இசை உள்நாட்டு இசையமைப்பாளர்களுக்கு என்றிருந்த பாணியை உடைத்து புது சாதனை படைத்தது.
அடுத்து அண்மையில் திலிப் வர்மனின் குரலில் வந்துள்ள "கனவெல்லாம் நீதானே" பாடல் நம் நாட்டு இசை வரலாற்றில் உச்சம் என்றே கூறவேண்டும். சிறந்த பாடல்களை தந்தால் எந்த நாட்டு இரசிகர்களும் கேட்டு இரசிப்பார்கள் என்பதற்கு இந்த பாடல் ஒரு முன்னுதாரணம். இவ்வளவு ஏன் இன்றைய இளையோர்களில் பலர் தங்கள் கைப்பேசியின் 'ரிங்டோன்'னாக இந்த பாடலை தேர்வு செய்திருப்பதே (நான் உள்பட) இப்பாடலுக்குக் கிடைத்த மிக பெரிய வெற்றி.

இன்னும் இதுப்போன்ற பல பாடல்கள் நம் நாட்டு இசைக் கலைஞர்களாலும் தமிழ்திரைப்பாடலுக்கு நிகராக கொடுக்க முடியும் என்பதை நிருப்பித்த வண்ணமே உள்ளன. ஆக உள்நாட்டு தயாரிப்பு என்று இவைகளை ஒதுக்கி விடாமல் நம் மண்ணின் மைந்தர்களுக்கும் ஆதரவு தருவோம்.

Make a Difference


மே 16ஆம் தேதி தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்த பதிவை வெளியிடுகிறேன். "மாணவர்கள் தூண்டிவிடும் தீபம் போன்றவர்கள்" என்றார் மாமேதை லெனின். ஆனால் ஆசிரியர்களோ மெழுகைப் போன்றவர்கள், தன்னையே உருக்கி உலகுக்குக்கே வெளிச்சம் தருகிறார்கள். ஆக தன்னலமற்ற அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....

இங்கே சொடுக்கவும் http://www.teachermovie.com/
P.S: This is really worth watching .Please turn up your speakers too. By the way, you might want to grab a box of tissues....!!!

Thursday, May 08, 2008

யார் அந்த நிலவு?

இன்றைக்கு வந்ததையும் சேர்த்து இது மூன்றாவது வாழ்த்து அட்டை. இதை அனுப்பிய அந்த மாதவி யார் என்று புரியாத புதிராகவே உள்ளது. என்னுடைய பள்ளியிலும் இந்தப் பெயரில் ஆசிரியையோ மாணவியோ கிடையாது. இது நான் வேலை செய்யும் மூன்றாவது பள்ளி. ஆனால் இந்த மூன்று பள்ளியிலும் எனக்குத் தெரிந்து இந்த பெயரில் யாரும் இருந்ததாக நினைவில்லையே...அப்படி இருக்கும் போது, எனக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. காலையில் பள்ளிக்குக் கிளம்பும் போதே கவிதாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்கவே பெரும்பாடுபட வேண்டியிருந்தது. எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. தாமதமாய் திருமணம் செய்ததால்தான் இன்னும் எங்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை என்று அவள் மருகுவது புரியாமல் இல்லை ஆனால் அது பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமாய் தோன்றியது.
அதிலும் "நீங்க பேசாம வேற யாரையாவது கல்யாணம் செய்திருக்கலாம்" என்று ஓரிரு முறை ஆரம்பிக்கும்போது அலட்சியப் படுத்தியது தவறாய் போய்விட்டது. அவளுக்கு என்ன வயதாகி விட்டது முப்பது இரண்டுதான் என்னை விட இரு வயதுதான் இளையவள். ஆனால் இதுவே அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறது. ஆக இந்த வாழ்த்து அட்டை பற்றி சொல்லி அவளை மேலும் வருத்தாமல் விட்டது மேலும் தவறாகி விட்டது.
என்னுடன் வேலை செய்யும் செல்வி கல்லூரியில் கவிதாவின் ஜூனியர் என்பதால் அவ்வப்போது செல்வி வீட்டீற்கு வருவதும் இயல்பானதுதான். அப்படி ஒரு சமயம் வந்திருந்தவள் "அக்கா சாருக்கு நிறைய இரசிகைகள் இருக்கிறது போல் தெரியுது" என்று கிண்டலாய் ஆரம்பித்து இந்த வாழ்த்து அட்டையை பற்றி போட்டு உடைத்து விட்டாள். வழக்கமாய் பள்ளியில் இது மாதிரி கிண்டல் செய்வதுதான் ஆனால் அது பற்றி நான் அலட்சியமாய் இருக்கவே கேலியும் கிண்டலும் குறைந்துவிட்டது. ஆனால் செல்வி வந்து சென்றதிலிருந்து கவிதாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றம். அவள் என்னை விட்டு தூரமாய் விலகிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அவளிடம் இது பற்றி பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது. இந்த நிலையில் இந்த மாதவி பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பது பெரும் தலைவலியாகிவிட்டது.
நான் வேலை செய்யும் பள்ளியில் இன்று ஆசிரியர் தினம் என்பதால் அதன் கொண்டாட்டங்களில் முடிந்து ஸ்டாஃப் ரூமிற்குச் சென்றால் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்றலந்த மலராய் அழகிய பூங்கொத்து என் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் செருக்கப் பட்டிருந்த அட்டையில் மீண்டும் அதே மாதவியின் பெயர் கூடவே ஒரு கவிதை,
"குயவனின் பச்சைமண் பானையாகுகிறது" *
பக்கத்தில் இருந்த கிளார்க்கை கேட்டால் ஏதோ ப்ஃளோரிஸ்ட் கொண்டு வந்து கொடுத்ததாக கூறினாள். இனிமேல் இந்த மாதிரி யாராவது கொண்டு வந்து கொடுத்தால் திருப்பி அனுப்பும்படி எச்சரித்துவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தால் இன்னமும் அந்த பூங்கொத்து என் மேஜையில், ஆத்திரத்தில் தூக்கியெறிய எடுத்ததும், என் எண்ணம் புரிந்த செல்வி வந்து "சார் உங்களுக்கு வேண்டாமென்பதற்காக பூங்கொத்தை தூக்கியெறிவதா...இங்கு ஏதாவது ஓரத்தில் அழகாய் இருந்து விட்டு போகட்டுமே...ப்ளிஸ்" என்று எடுத்துச் சென்று விட்டாள். ஆனால் எனக்கு ஆத்திரமடங்க மட்டும் வெகுநேரம் பிடித்தது.
காலையிலேயே ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு கணிதம். நேரியல் இயற்கணிதம் (Linear Algebra) பற்றி பாடம் நடத்திவிட்டு அறைக்குத் திரும்பும் வழியில் புதிய முகமொன்று. பார்த்தும் பாராததை போல் வந்து அமர்ந்ததும், பக்கத்தில் இருந்த மோகன் "இன்னிக்கு புதுசா ஒரு லேடி டீச்சர் வந்திருக்காங்க கவனிச்சிங்களா" என்று ஆவலாய் கேட்கவும் இல்லையென்று தலையாட்டிவிட்டு ரெக்கார்டு புக்கை பிரித்து எழுத ஆரம்பித்துவிட்டேன். பாவம் மோகன், இந்த பள்ளிக்கு வந்து ஒரு வருடமாகப் போகிறது, ஆனால் இன்னமும் திருமணமாகவில்லை. "வீட்ல பார்க்குறாங்க சார், ஆனா எதுவும் சரியா வரமாட்டேங்குது, உங்களுக்கு யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.
மோகனை பற்றிய எண்ணத்தை உதறிவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தபோது "வணக்கம் சார்" என்று அருகில் இளம்பெண்ணின் குரல். புத்தகத்திலிருந்து பார்வையை அகற்றி நேரே நோக்கினால், சற்று முன் பார்த்த அதே புதுமுகம். ஒரு வேளை மோகனை கூப்பிட்டுருக்கலாம் என்று நினைத்தால் அவள், அந்த பெண்ணின் முகம் என்னை நோக்கியிருந்தது. பக்கத்தில் அவளையே ஏக்கமாய் பார்த்தபடி மோகன். 'யாரிவள்?" என்ற கேள்விக்கு அவளே விடைத்தந்தாள்.
"நான் மாதவி?"
ஒருவேளை எனக்கு வந்த பூங்கொத்து...வாழ்த்து அட்டைகள் இவள் அனுப்பியிருப்பாளோ? ச்சேசே... பார்த்தா குத்துவிளக்கு மாதிரி இவ்வளவு ஹொம்லியா இருக்காளே" என்று எண்ணமிடும்போதே
"என்னுடைய கார்ட்ஸ்...பூ எல்லாம் பிடிச்சிருந்ததா"என்று அவள் கிள்ளையாய் கொஞ்சவும், எனக்கு ஆத்திரம் தலைக்கேறிவிட்டது.
"ஹலோ மிஸ்...உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க...நீங்க யாரு எனக்கு இதெல்லாம் அனுப்ப? இதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க..எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு...பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது...ஏம்மா உனக்கு இந்த வேலை?"
ஆத்திரத்தில் பொறிந்து தள்ளிவிட்டு அவள் முகத்தை ஏறிட்டால், அவள் முகம் செக்கர் வானமாய் சிவந்திருந்தது. விட்டால் அழுதிடுவாள் போன்ற முகத்தோற்றம்.
"சார் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல! நான் நான் உங்களோட பழைய ஸ்டுடண்ட். இதுக்கு முன்னால நீங்க எம்.ஜி.எஸ்ஸில் வேலை பார்த்திருக்கீங்களா இல்லையா?'அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு அவள் வேகமாய் பேசினாள்.
"எம்.ஜி.எஸ்ஸ்ஸ்.." நான் யோசிக்கும் போதே
"நீங்க அப்போ தற்காலிகமா..."
"ஓ யெஸ்...இது எப்படி மறந்துப் போனது" யோசிப்பதாய் நினைத்து சத்தமாய் சொல்லிவிட
"நீங்க மறந்திருப்பீங்கன்னு தெரியும்" என்று ஆரம்பித்து எல்லாம் சொன்னாள் அந்த மாதவி. அவளுடைய அப்பா சின்ன வயதிலேயே அவர்களை விட்டுச் சென்றதால், அவளுடைய தாய்தான் வேலைக்குப் போய் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழல். நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க இரவு பகல் போராடியும் பணம் போதவில்லை. இடையில் நோயென்று அவர் மருத்துவமனையில் படுத்துக் கொள்ள வீட்டின் மூத்தப்பெண்ணான மாதவிதான் தம்பி தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் இரண்டு வாரமாக பள்ளிக்கு வரவில்லை.
அப்போது ஆறாம் படிவம் முடித்து பல்கலைக்கழக நுழைவுக்காக காத்திருக்கும் சமயத்தில், தற்காலிக வகுப்பாசிரியராய் அப்பள்ளியில் நான் இருந்ததால் தலைமையாசிரியருக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவள் வீட்டில் தொலைப்பேசி வசதியுமில்லை. கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. நேரில் சென்று கண்டு வரும்படி தலைமையாசிரியை உத்தரவிட அவள் வீட்டிற்குச் செல்லும்படியானது. அங்கு சென்ற பின்புதான் எல்லா விபரமும் தெரிந்தது. அந்த கணமே அவளுக்கு எப்படியாவது உதவ வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. அப்போது மாநில உறுப்பினராக இருந்த என் தந்தையிடம் ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டு, அவர் முயற்சியில் அவளுடைய தாயின் மருத்துவ செலவையும் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் மாநில அரசாங்கமே ஏற்றுக் கொண்டது நினைவு வந்தது. அதற்கு பிறகு எனக்கு பல்கலைகழகத்தில் இடம் கிடைக்க, படித்துவிட்டு இங்கேயே தங்கிவிட்டதால் இச்சம்பவமோ நபர்களோ முழுவதும் மறந்து விட்டுருந்தது.
இப்பொழுது நினைவு வந்ததும், மகிழ்ச்சி கரைப்புரண்டோட "சாரிம்மா...நீ யாரோன்னு...நீதான் புதுசா வந்த டீச்சரா? அடயாளமே தெரியல..அம்மா எப்படியிருக்காங்க?தம்பி தங்கைகள் எல்லாம்..." ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.
"தங்கை உக்ரேன்ல மெடிசின் பண்ணுறா சார்...சின்னவன் யு.எம்ல்ல படிக்கிறான், பெரியவன் பேங்கல்ல வேலை செய்யுறான்..." என்றவள் மேலும் தொடர்ந்தாள் "அம்மா எப்பவும் உங்களையும் உங்க அப்பாவை பத்தியும்தான் பேசுவாங்க...உங்க அம்மாதான் நீங்க இங்க வேலை செய்யுறதா சொன்னாங்க"
"இந்த அம்மா எங்கிட்ட எதுவும் சொல்லலயே"
"சார் ரொம்பவும் சாரி முட்டாள்தனமாய் இந்த பூ..கார்ட்ஸ் எல்லாம்" அவள் குற்ற உணர்ச்சியோடு கூறவும்
"இல்லம்மா நான்தான் யோசிக்காம்ம வெரி சாரி...ரொம்பவும் ஹர்ட் பண்ணிடேன்னா" வருத்தத்தோடு நான் கூறவும்,
"இல்ல சார் பரவாயில்ல உங்க நிலையில் யார் இருந்தாலும் இப்படித்தான் கோபப்பட்டிருப்பாங்க" மாதவி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பேசியது மனதிற்கு இதமாய் இருந்தது. அவளை உற்சாகப்படுத்த வேண்டுமென்று உடனிருந்த எல்லா ஆசிரியரிடமும் என் மாணவியென்று பெருமையாய் அறிமுகப்படுத்தவும், அவள் முகம் உற்சாகத்தில் பிரகாசிப்பதைக் காணமுடிந்தது. எனக்கும் நிம்மதியாய் இருந்தது கவிதாவிடம் இனி எவ்வித தடையில்லாமல் பேச முடியுமே.
அன்று வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது அவள் அந்த மாதவியும் என் வீட்டிற்கு வர விரும்புவதாய் கூறவும் மறுக்காமல் சரியென்று விட்டேன். நிச்சயம் கவிதா சந்தோசப்படுவாள். ஆனால் இத்தனை நாள் என்னை ஏங்க வைத்ததற்கு தண்டனைக் கொடுத்தாக வேண்டுமே என்று தோன்றியவுடனே "மாதவியுடன் வருகிறேன் சமைத்து வை" என்று அவள் பேச வாய்ப்புக் கொடுக்காமல் கைப்பேசியை வைத்துவிட்டேன். மனக்கண்ணில் கவிதாவின் கோபமான முகத்தை இரசித்தவாறே வீட்டிற்கு சென்றால், எதிர்ப்பார்த்ததைவிட அதிக கோபமாய் கவிதாவின் முகம். ஆனால் இப்போது ஏதும் அவளிடம் சொல்லக் கூடாது. பொறுமையாய் சாப்பிட்டுவிட்டுக் சிறிது நேரம் பொதுவான விசயங்களை இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். கவிதா பட்டும்படாமல் இந்த உரையாடலில் கலந்துக் கொண்டாள்.
இதற்கு மேலும் கவிதாவை சோதிக்கக் கூடாதென்று உண்மையை நான் சொல்ல முனைந்தப்போது "ஒரு நிமிடம் சார்" என்று அவளுடைய காருக்குச் சென்று ஏதோ பையை எடுத்து வந்தாள் மாதவி. இருவருமே கேள்வியாய் அவளை நோக்க, பையை திறந்து வெற்றிலைப் பாக்கு, வாழையோடு திருமண பத்திரிக்கையை எடுத்து வைத்து இருவரின் கையில் கொடுத்து காலில் விழவும் அதிர்ச்சியில் நான் ஓர் எட்டு பின்னடைந்தேன். கவிதா என்னை புரியாமல் நோக்கவும்,
"சார்தான் மேடம் நான் இந்த நிலையில் இருக்க காரணம்...காலில் விழ வயச விட நல்ல மனசு முக்கியம்..எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு...ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு டாக்டர் மாப்பிள்ளை...ம்ம் இந்த ஆசிரியர் தொழிலையே நானும் தேர்ந்தெடுக்க சார்தான் காரணம்... மனிதனை மனிதனாய் உருவாக்கும் சிற்பி இந்த ஆசிரியர்கள் இல்லையா..இந்த மாதவி மாதிரி எத்தனை மாதவி இருப்பாங்க, அவங்களுக்கு நான் உதவுதான் சாருக்கு நான் செய்யும் நன்றிக்கடன்" கண்கள் கலங்கியப்படி மாதவி கூற
கண்களில் மலர்ச்சியுடன் என் கன்னத்தில் எம்பி முத்தமிட்டு சிரிக்கும் என் மனைவியையும் அதை கண்டு வெட்கமாய் சிரிக்கும் மாதவியையும் பார்க்கிறேன். "காலத்தினால் செய்த நன்றி''யை நினைத்து எனக்குள் பெருமிதம் கொள்கிறேன்.


*- இந்தக் கவிதை இணையத்தில் சுட்டது ;-)


(16.05.2008 தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி வெளியிடும் சிறப்பு கதையிது. இதில் மாதவியின் கதாபாத்திரம் நிஜம். பெயரைக் கூட மாற்றாமல் இணைத்துள்ளேன்.)


"அனைத்து ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்"


Wednesday, May 07, 2008

யாதுமாகி நின்றாய் - பகுதி 10

நேரே பேருந்து நிலையத்திற்கு செல்லாமல்…அருகிலிருந்த திடீர் உணவகத்திற்குள் நுழைந்தாள் அனு. குளிர்பானத்தை பெற்றுக் கொண்டு வந்து அமர்ந்தவள் வேக வேகமாக அந்தப் பெட்டியிலிருந்த அனைத்து கடிதங்களையும் அலசி ஆராய்ந்தாள். பெரும்பாலும் தீபாவளி வாழ்த்து அட்டைகள், வங்கி…காப்புறுதி நிறுவனங்களிலிருந்து வந்த கடிதங்களாகவே இருந்தன. அதில் ஒன்று அவளுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட கையெழுத்திலிருந்த கடிதம்...வேகமாய் அதனை பிரித்தாள். அனுவின் இருபதாம் வயது பிறந்தநாளுக்காக அவளுடைய தமக்கையிடமிருந்து வந்திருந்த வாழ்த்து அட்டை அது. கண்களில் நீர்த்துளிர்க்க அவசரமாய் யாருமறியாமல் துடைத்துக்கொண்டாள். அந்த வாழ்த்து அட்டையனுப்பியே ஐந்து வருடமாகிவிட்டது.
“அருணா இப்போ நீ எங்கிருக்க” என்று தனக்குள் கேட்டவாறு அந்த அட்டையிலிருந்த முகவரியை தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டாள். இன்னும் அதிக நேரமிருக்க அந்த முகவரியில் உள்ள தன் அக்காவை இன்று எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்ற வேட்கையில் வாடகைக் காரில் அந்த முகவரிக்குக் கிளம்பினாள் அனு. ஆனால் அங்கு அந்த முகவரியிலுள்ள வீடு பூட்டிக்கிடக்கவே, வேறு வழியில்லாமல் சோர்வுடன் திரும்பியவள், அந்த வீட்டின் உள்புறத்தில் ஒட்டியிருந்த விளம்பரத்தைக் கண்டதும் அதிலிருந்த தொலைப்பேசி எண்ணுக்குத் தன் கைப்பேசியில் தொடர்புக் கொண்டாள். நீண்ட அழைப்புக்குப் பிறகு தொடர்பு கிடைக்க அந்த வீட்டின் உரிமையாளரோடு பேசினாள். அந்த வீட்டின் உரிமையாளர் சீனர் என்றுத் தெரிந்ததும் அனுவிற்கு வெறுத்துவிட்டது. ஆனாலும் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு வகையில் அனுவிற்கு உதவினார். அருணாவைப் பற்றியோ அவளுடைய கணவனைப் பற்றியோ அவருக்குத் தெரியவில்லையென்றாலும் மருத்துவர் ஒருவரின் கைப்பேசி எண்களை கொடுத்துதவினார்.

முதலில் அந்த எண்களைத் தொடர்புக் கொள்ள வேண்டாமென்று நினைத்து நேராக பேருந்து நிலையத்திற்கு வந்தும்விட்டாள் அனு. ஆனால் அவளையுமறியாமல் அவள் கைகள் அந்த எண்களை அழுத்திவிட வேறுவழியில்லாமல் பேசினாள்.

“ஹலோ’’ மறுமுனையில் குரல் கேட்க,

“வணக்கம், டாக்டர் இளங்கோ?” என்று இழுத்தாள் அனு

“வணக்கம்…நான் டாக்டர் இளங்கோத்தான்…நீங்க?”

“நான் அனு உங்கள பார்க்க முடியுமா?”

“அப்போயின்மென்ட் வச்சிருக்கீங்களா?”

“டாக்டர் நான் நோயாளியில்ல…ஆசிரியை…வந்து அருணா விஷயமா!”

“அருணா?”“எந்த அருணா?”

“அருணா என்னோட அக்கா..” சட்டென்று வாழ்த்து அட்டையில் ‘அருணா கௌதமன்’ என்று படித்தது ஞாபகம் வர“அருணா கௌதமன்”என்றாள்.

“நீங்க யாருன்னு”

“நான் அனுராதா அருணாவோட தங்கை…அவள பார்க்க முடியுமா டாக்டர்?”

“நீங்க இப்போ எங்கேயிருந்து பேசுறீங்க அனுராதா?"

பேருந்து நிலையத்தில்…பயிற்சிக்காக வந்தேன் இப்போ பயிற்சி முடிந்து கே.எல்லுக்கு போகனும் அதுக்குள்ள அருணாவை எப்படியாவது”

“எந்த பேருந்து நிலையம்?” அனு விபரத்தைக் கூற…

“நீங்க அங்கேயே இருங்க அரை மணி நேரத்துல்ல வந்துடுவேன்” என்ற அந்த டாக்டர் இளங்கோ அரை மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்டான். இருவருமே மிக எளிதாகவே அடையாளம் கண்டுக் கொண்டனர்.

“அருணாவைப் பார்க்க முடியுமா?” வந்ததும் வராதுமாய் அவனிடம் அனு கேட்க,

“உங்களுக்கு நிஜமாகவே அருணாவைப் பற்றித் தெரியாதா?” என்றான் ஒரு மாதிரி பார்வையுடன். அவள் இல்லையென்று அப்பாவியாய் தலையாட்டவும்,

“அருணா இப்போ இங்கில்லை, பொறுங்க மத்த விபரத்தெல்லாம் இங்கு வைத்து சொல்ல முடியாது..பக்கத்துல்ல உள்ள உணவகத்தில் வைத்துப் பேசிக் கொள்ளலாம் வாங்க” என்று அழைத்தான் அந்த டாக்டர் இளங்கோ.

முதலில் தயங்கினாலும் அருணாவைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் அவனை பின் தொடர்ந்தாள் அனு.அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன், இரண்டு கப் தேநீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவளைப் பற்றியும் அவளுடைய வேலையைப் பற்றியும் விசாரித்தான். அவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அனு பொறுமையாகவே பதிலளித்தாள். ஆர்டர் கொடுத்த தேநீரை அவளை அருந்த சொல்லிவிட்டு அவனும் அருந்தத் தொடங்கினான். இரண்டு மிடறு அருந்தியவள்,

“அருணா இப்போ எங்கேயிருக்கா?” என்று ஆர்வமாய் வினவினாள் அனு.

“அருணா இப்போ உயிரோட இல்ல” மொட்டையாக அவன் கூறவும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள் அனு.

கண்களில் மட்டும் நீர் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுடைய காதுகளையே நம்ப முடியவில்லை. ஆனால் அவள் கேட்டது உண்மை.

“அனுராதா ப்ளீஸ், எல்லோரும் நம்மள பார்க்குறாங்க கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்க”அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டாள் அனு. அவளுக்கு அருணாவைப் பற்றி மேலும் தெரிய வேண்டியிருந்தது.

“எப்படி, ஏதாவது விபத்தா?”

“இதுவும் விபத்து மாதிரிதான்...பிரசவத்துல இறந்துட்டாங்க”

“நம்ப முடியல!”

“எங்களுக்கும்தான் ஆனா விதி ‘ஹைப்பர் டென்ஷன்’... அதிகமாகி மாடிப்படியிலிருந்து விழுந்ததில் வலிப்பு வந்துட்டது. எவ்வளவோ போராடியும் காப்பாத்த முடியல”

“கு..குழந்தை...”

“ம்ம்...சிசரியன் பண்ணி குழந்தையை எடுத்துட்டோம்...குழந்தை பிழைச்சிடுச்சு...அருணா குழந்தைக்கு தன் உயிரைக் கொடுத்துட்டு போயிட்டாங்க”

“ பெண் குழந்தையா?”

“ஆண் குழந்தை...இப்போ அவனுக்கு ஐந்து வயசிருக்கும்”அருணாவைத்தான் பார்க்க முடியவில்லை அவள் குழந்தையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அருணாவின் குழந்தையைப் பற்றி விசாரித்தாள் அனு.

“குழந்தைய நான் பார்க்கலாமா”

“அது இப்போதைக்கு சாத்தியமில்ல”

“ஏன் சாத்தியமில்ல அது என் அக்காவோட குழந்தை, எனக்கும் பார்க்கும் உரிமையிருக்கு”

“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க அனுராதா..நான் இப்போ பார்க்க முடியாதுன்னுத்தான் சொன்னேன்...ஆனா நீங்க நினைச்சா எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம்”

“புரியல”

“அவங்க யாரும் இப்ப பினாங்கில் இல்ல, உங்க அதிர்ஷடமோ என்னவோ அவங்க இப்ப கே.எல்லத்தான் இருக்காங்க...ஒரு நிமிஷம்” என்று அவனுடைய சட்டைப்பையிலிருந்து பணப்பையை எடுத்து கௌதமனின் தலைநகர் முகவரியை தேடி அவளிடம் கொடுத்தான்.

“குழந்தையை இப்போ கௌதமனுடைய அம்மாத்தான் பார்த்துக் கொள்கிறார். கௌதமன் சென்னையிலேயே செட்டிலாகிட்டான் மாசத்துக்கு ஒரு தடவை அம்மாவையும் பிள்ளையையும் பார்க்க மலேசியா வருவான். அவனோட அம்மாவுக்கு வயசாயிடுச்சு..இவனும் வேறு கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேங்கிறான்..பாவம் அந்த குழந்தைதான்...நீங்கத்தான் அந்தக் குழந்தையை பார்த்துக்கனும்” என்று முடித்தான் அந்த டாக்டர் இளங்கோ.அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு அனு தலைநகருக்கு வந்து பல நாட்கள் ஆகியிருந்தும் அனு அருணாவின் குழந்தையைச் சென்றுக் காண மட்டும் தயங்கினாள்.


(தொடரும்)

Monday, May 05, 2008

வெளிப்புறப்படப்பிடிப்பு

கடந்த மாதம் இறுதியில்...வெளிப்புறப்படப்பிடிப்புகாக பகாங் செல்ல வேண்டியிருந்தது. வெளிப்புறப்படப்பிடிப்பு என்றாலே கொஞ்சம் குஷித்தான். வருட முழுவதும் ஸ்டுடியோவில் குளிரில் நடுங்கிக்கொண்டேயிருப்பதைவிட இந்த மாதிரி வெளியூருக்குச் சென்று படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதிலும் சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் காமிரா மற்றும் இத்யாதிகளுடன் ஒரு படையோடு போய் இறங்கும்போது ஒரு தனி வரவேற்பே காத்திருக்கும். அது மேலும் உற்சாகத்தை கூட்டிவிடும். கல்வியமைச்சின் PIPPக்கு ஏற்ப மலாய் பள்ளிகளை வலுப்படுத்தும் ஒரு திட்டமாகவே எங்களுடைய நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும்.

அந்த வகையில் முவாட்சாம் ஷா (Muadzam Shah) என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காட்டுக்குள் கண்ணைக் கட்டி விட்டது போல் தோன்றவே செய்தது. பரப்பான நகர வாழ்வுக்கு பழகிவிட்டவர்களுக்கு நிச்சயம் இந்த இடம் கொஞ்சம் அலுப்பூட்டவே செய்யும். அதிலும் ஓர் இந்திய முகத்தைக்கூட காணாததில் கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு. கைப்பேசி தொடர்பு அடிக்கடி கிடைக்காமல் போனது கொஞ்சம் கஷ்டமான விஷமாகவே தோன்றியது. தொழில்தொடர்பாக யாரையும் அவசரத்தில் தொடர்புக் கொள்ள முடியாதது எரிச்சலோடு கூடிய வருத்தம்தான். ஆனால் விடுமுறை...சுற்றுலா என்று செல்லுவோருக்கு மட்டும் இது பொருந்தும்.

நாங்கள் சென்ற பள்ளியில் மலாய் மாணவர்களையடுத்து ஒரு சில பூர்வக்குடி மாணவர்களும் பயின்று வந்தது சற்று ஆரோக்கியமான விஷயமாகவே தோன்றியது. நம் நாட்டின் அசூர வளர்ச்சியில் இந்த பூர்வக்குடியினரும் பின் தங்கிவிடக்கூடாதே என்ற ஆதங்கம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. கல்வியொன்றினால் மட்டுமே தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதை இவர்களில் ஒரு சிலர் புரிந்துக் கொண்டு, அதற்காக தங்களையும் தயார்படுத்தி வருவது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். அவர்களில் 'செமெலாய்' இனத்து மாணவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஒரு சில மாணவர்களோடு உரையாட வாய்ப்புக் கிட்டிய போது...அவர்களில் ஒரு மாணவியிடம் உன் எதிர்கால ஆசை என்னவென்று வினவியபோது விண்வெளிக்குச் செல்ல வேண்டுமென்றாள். முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூறியதுபோல் அவளும் கனவு காண்கிறாள். அவளின் கனவும் ஒரு நாள் நிஜமாக வேண்டும்.

கிட்டதட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக பயிற்சிக்கு சென்றிருந்து விட்டு தூக்கம் போதாமல் அப்படியே படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதால் காய்ச்சலே வந்துவிட்டது. ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தங்கும் விடுதியில் குளித்துவிட்டு படுத்ததுதான் மறுநாள் காலையில்தான் எழ முடிந்தது. ஆனாலும் இதுவரையில் இல்லாத மகிழ்ச்சி இந்த படப்பிடிப்பில் கிடைத்தது என்றால் மிகையில்லை. சற்று யோசித்துப் பார்க்கையில், வேலையில் ஆழ்ந்திருந்த சமயம் ஒரு சில மாணவிகள் தயங்கி தயங்கி எங்களை அணுகியதை கண்டும் காணாததை போல் இருந்துவிட்டேன். நேரடியாக படப்பிடிப்பை காணும் ஆவல் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர்களில் ஒரு மலாய் மாணவி தயங்கியபடி என்னை அணுகினாள். என்னவென்று கேள்வியோடு நோக்கியபோது "அக்கா நாங்கள் உங்களை 'சலாம்' செய்யலாமா (வாழ்த்தலாமா)" என்றாள் தயக்கத்தோடு. சரியென்று சிரித்தப்படி தலையாட்டாவும், அவர்கள் அனைவரும் என் கையை பிடித்து அவர்கள் கலாச்சாரத்தின் படி முத்தமிட்டு சென்றனர். ஆஹா மலர்கொத்தே என்னை வருடியது போன்ற சிலிர்ப்பை தவிர்க்க முடியவில்லைதான். புறநகர் பகுதியில் வாழும் மனிதர்களுக்கு இருக்கும் சினேக மனப்பான்மைகூட, நாகரிகமாய் வாழ்வதாய் காட்டிக் கொள்ளும் இந்த நகர்புறத்து மக்களுக்கு இல்லாமல் போய்விட்டதே. குறைந்தபட்சமாய் சின்னதாய் சிரிப்பைக்கூட காண்பது அரிதாகிவிட்டது. அவ்வளவு ஏன் நம் பக்கத்துவீட்டுக்காரரைகூட நாம் தெரிந்து வைத்திருப்பதில்லையே.

தலைநகருக்கு கிளம்பி வரும் வழியில் பெரா ஏரிக்குச் Tasik Bera (Bera Lake) சென்று வந்தது மனதிற்கு இதமாகவே இருந்தது.