Thursday, June 25, 2009

விடுபடுதலும்....விடைப்பெறுதலும்!!!

good bye Pictures, Images and Photos
எப்பொழுது முடியுமென சோம்பித் திரிந்த தருணங்களும்...
எப்பொழுது இது நீளுமென ஏங்கித் தவித்த நாட்களும்... எல்லாமுமாய் சேர்ந்து இதுவரையிலும் கிறுக்கிய படிமங்களை மீள்பார்வையிட... எதுவுமேயில்லை என்ற சுயத் தேடல் அவசிய விடுபடுதலுக்கு தயாராக்கிக் கொண்டது மனதை!!!

விடுபடுதலோ விடைப்பெறுதலோ ஏதாவது புது பரிமாணத்தின் சாத்திய கூறுகள்தான். விடுபடுவதைவிட விடைபெறுதலின் வலி அதிகமென்று யாரும் சொல்லாமலே அறிந்துக் கொண்ட தருணங்கள் பல... சொல்லி மீள்வதல்ல வாழ்க்கை!!!

இந்த மாதத்துக்கான பதிவுகளை அவசரமாய் பதிவிட்டாலும் நிரம்பவில்லை மனது....!! ஆக கோடிட்ட இடத்தை நிரப்புவதைப்போல நாள்காட்டியின் நாட்களை வட்டமிட்டபடி அடுத்த பிரிவுக்கு தயாராகிக் கொள்கிறேன். பிரிவுகள் வலியல்ல அதுவொரு தேடல்...!!!

தேர்வு...விடுமுறை...பயணம்.... இன்னும் பிற சுயத் தேவைக்காக இந்த விடைபெறுதல் அவசியமென தோன்றுகிறது. நற்செய்தியோடு அனைவரையும் மீண்டும் சந்திக்கும் வரை...

பிரியமுடன் ...!!!

Wednesday, June 24, 2009

ஏதோ ஒன்று!!


தொடுவாள் சிவந்த
அதிகாலை நேரம்
ஓடிக் களைத்த கருமேகமொன்று
இடைவழித் திரும்பி
மழை முகிழ்த்துச் செல்கிறது
முளைத் துளிர்க்கத் துடிக்கும்
அல்லிப் பதியனுக்காய்!!!

Tuesday, June 23, 2009

காதல்...சில குறிப்புகள் III

நீயெழுதிய நினைவுகளின் நிழல்...
நான் தொலைத்த கனவுகளின் நிஜம்...
நம் பிரிவின் நீளத்தை
வானில் வடித்து செல்வதேன்...!!!
நொடிக்கொருமுறை உருவம் மாறும்
மேகங்கள் மழையாய் கரைந்து
நம் நினைவுகளை
ஈரமாக்கி
செல்லத்தானோ??

Monday, June 22, 2009

மீண்டும் அப்பா!


உங்கள் குரல் எட்டாத தூரத்தில்
உங்கள் முகம் காணாத தேசத்தில்
தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய்
என்னுள் வாழ்கிறீர்கள்
இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!!

Friday, June 19, 2009

நான் ஏன் மாறணும்???

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
தெரியல யாரு வச்சதுன்னு.....பிடிக்கும் :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை Kabhi Kushi Kabhi Gham படம் பார்த்து. இனிமேல் இந்தப் படம் பார்க்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணிட்டேன்...:-(

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும் ஆனா இந்தக் கையெழுத்துக்காகவே அடிக்கடி திட்டு வாங்குவதுண்டு இன்று வரையிலும்...மிகவும் சிறியதாக இருப்பதால் ;-)

4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மாவின் சமையல்...பெரும்பாலும் சாம்பார்..சாதம்..வெண்டைக்காய் பொரியல்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

ரொம்ப கஷ்டம். நானாக யாரிடமும் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன். என் அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இந்தியர்கள் நான் ரொம்ப பந்தா பேர்வழின்னு கிண்டல் பண்ணுவாங்க... 1 வருடத்துக்கும் மேலாகி அவர்களே வந்து வலியப் பேசிய பொழுதுதான் அவர்களோடு பேசினேன்..ஆனா என்னோட கூச்சசுபாவம்தான் காரணமுன்னு அவங்களுக்கு தெரிய ரொம்ப நாளாச்சு... சாட்ல்ல மொக்கை போடுறத வச்சு தப்புக்கணக்கு போடாதீங்க :-)

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பார்த்து இரசிக்கத்தான் பிடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்...!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விஷயம் - என்னை எனக்குப் பிடிக்கும்

பிடிக்காத விஷயம் - கோபம்... கூச்சசுபாவம், தொட்டாச்சிணுங்கியாய் இருப்பது...!!

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
இப்ப பிடிச்ச நிறைய விஷயம் க.பி பிடிக்காமலும் போகலாம் இல்லையா..அதனால் எதிர்ப்பார்ப்பில்லாமல் இருக்கவே பிடிச்சிருக்கு :-)

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாருமே இல்லாத தனிமைத்தான் எப்போதுமே பிடிக்கும்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பு & மரூண்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு :-)

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு

14. பிடித்த மணம்?
செண்பகப்பூவின் மணம்(காலையில் அலுவலகத்துக்கு வந்ததும் செண்பக மரத்தில் பூப்பூத்திருக்கான்னு பார்த்திட்டுத்தான் உள்ளேயே நுழைவேன்) குழந்தையின் பால் மணம், பெட்ரோல் அப்புறம் மார்க்கர் பேனாவின் மணம் ரொம்பப் பிடிக்கும்!

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
யாருமில்லைங்க...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
1. கவிதா அக்கா - வெகு அண்மையில் கெளரி ஏன் கோபப்படலை?!!

2. சுபாஷினி - கடல் கன்னிகள் - ஓர் ஆராய்ச்சி (முதல் முறையாக என்னிடம் கோபப்பட காரணமான பதிவு அதனால் ரொம்பவே பிடிக்கும்)

17. பிடித்த விளையாட்டு?

டென்னிஸ்..பூப்பந்து..பள்ளி நாட்களில் வலைப்பந்து

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
Fantasy and Love

20. கடைசியாகப் பார்த்தப் படம்?
முழுமையாக பார்த்த படமென்றால் கன்னத்தில் முத்தமிட்டால் & Kabhi Kushi Kabhi Gham... புதுப்படம் பார்க்க இப்போதைக்குப் பொறுமையில்லை

21. பிடித்த பருவ காலம் எது?

கோடைத்தவிர எல்லா காலமும் பிடிக்கும்.. மார்கழி குளிர் ஸ்பெஷல்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ம்ம்ம் The Kite Runner (57 வது பக்கத்திலேயே - சாரி அண்ணா ) The Da Vinci Code ( 76வது பக்கத்தில்)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

போரடித்தாலோ வேறு ஏதாவது புதிதாக கவர்ந்தாலோ!!!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அ) காலையில் அலுவலக வளாகத்தையொட்டிய காட்டில் கேட்கும் பட்சிகளின் சத்தம் பிடிக்கும்..அப்புறம் ஏதாவதொரு சமயத்தில் மட்டுமே கேட்க முடிந்த தேவாலய மணியோசை (அரிதாக கேட்பதால் ரொம்ப பிடிக்கும்)

ஆ) கார் ஹாரன் சத்தம் பிடிக்காது...வானொலியோ தொலைக்காட்சியோ அலறினால் பிடிக்காது!!

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ம்ம்ம் சரியாக தெரியல... மொத்த தீபகற்ப மலேசியாவை சுற்றியாச்சு.. வெளிநாட்டுக்கு இதுவரையில் சென்றதில்லை

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

வயலின் வாசிப்பது ...(கனவில் மட்டுமே)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

Nagging & நம்பிக்கைத் துரோகம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கேரளா...நேப்பாளம்..... இனிமேல்தான் போகணும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
தொட்டதுக்கெல்லாம் சிணுங்காமல் :-)

31.கணவர்(மனைவி) இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

Pass

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நாம் வாழ்வதற்கு மட்டுமல்ல பிறரை வாழ்விக்கவும்தான் வாழ்க்கை

Monday, June 15, 2009

நினைவு...சில குறிப்புகள் 2


மின்மடல்களும் தொலைப்பேசிகளும்
உறவின் வட்டத்தை
குறுக்கிக் கொண்ட
தனிமைப் பொழுதில்
அஞ்சல் பெட்டியில்
பரிச்சயமில்லாக் கையெழுத்தில்
திருமண அழைப்பிதழொன்று
இதுவரை காணாது
நனைந்துக் கிடக்கிறது
தொலைந்துப் போன
நட்பினைத் தேடி!!!

காதல்...சில குறிப்புகள் II


நீயில்லா நாட்களை
புகைப்படங்களும்
குறுஞ்செய்திகளும்
நிரப்புகின்றன...
நானில்லா உன் நாட்களை
எவை நிரப்புகின்றன?

நினைவு...சில குறிப்புகள் 1


மூடாத சன்னலில் நுழைந்த
கரப்பான் பூச்சியைக்
கண்டு அலறியடித்தவள்
வழித்தவறி வீட்டில்
நுழைந்த பட்டாம்பூச்சிக்காக கதவு திறக்கிறாள்
அதன் சிறகுகள் விரிய!!!
அவனோடு பேசப் பிடிக்காமல்
ஊடலில் தாய் வீடு சென்றவள்
கோடை முடிந்தும் முடியாமலே
வீடு திரும்புகிறாள் அவன்
வாசமில்லா நாட்களின்
வெறுமையோடு!!!
வீட்டு மாமர கிளையில்
ஏறிய மகளை துரத்தி
உள்ளே அனுப்பியவள்
அவள் யாருடனோ
கொஞ்சுவதை கவனித்து நெருங்குகிறாள்
பால்கனியை நெருக்கி வளைத்து குழைந்திருந்த
மரக்கிளையில் அணிலொன்று
ஓடிப்பதுங்குகிறது அவளைக் கண்டு!!!

Thanks:Carla Sonheim

Saturday, June 06, 2009

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா!

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா...
இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும்!
உடலும் மனமும் உனையேத் தொடர...
உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!

காற்றுவெளி மின்மினியாய் கண்கள் வழி நீ வந்தாய்!
நான் எழுதும் மேஜையிலே எரியும் விளக்காய் ஒளிருகிறாய்!
ம்ம்...எனது விரல் நீ பிடித்து உயிரெழுத்தை எழுதுகிறாய்!
துணையெழுத்து நீயாக உறவின் வயதை உயர்த்துகிறாய்!

உன் வெள்ளி மனம் பொன் மஞ்சள் நிறம்
நான் என்னை வரைந்தேன்!
நான் செய்த தவம் நீ தந்த வரம்
நான் உன்னை அடைந்தேன்!
அந்த சங்கீத சந்திப்பில் சந்தோஷ தித்திப்பில்
ஒரு துளி மழையென மடியினில் விழுந்தேன்!
உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!

தேய்ந்து வரும் வான்மதியாய் நேற்று வரை
வாழ்ந்திருந்தேன் இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளருகிறேன்
பூவில் விழும் பனித்துளியாய்
மனதில் உனை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாங்குகிறேன்

உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவிதழில் உன் புன்னைகையில்
நான் இடறி விழுந்தேன்
இங்கு உன் வாசம் என்னோடு
என் வாசம் உன்னோடு தொலைந்திட
சிறகென காற்றினில் மிதந்தேன்

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா...
இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையேத் தொடர
உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா!

நீண்ட நாட்களாக போட நினைத்த பதிவு....கொஞ்சம் பழைய ஆனால் இனிமையான பாடல்... ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் பனிக்கூழில் நனையும் சுகம்..இப்போதைக்கு ஐஸ்கிரிம் சாப்பிட முடியாவிட்டாலும்...காய்ச்சல்தான் இன்னமும் சரியாகலையே :-( பாடலையாவது கேட்டு இரசிக்கிறேன்... :-)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Monday, June 01, 2009

காதல்...சில குறிப்புகள் I


தவறுகள் நீ
தண்டனைகள் நான்?
அட...
இந்தக் காதல் பிடிச்சிருக்கு!!!

01.06.2009