Thursday, October 30, 2008

வால் நட்சத்திரம்


மண்ணில் ஒரு விண்மீன் (Taare Zameen Par) மீண்டும் வால் நட்சத்திரமாய் அவதானித்துள்ளது. டி‌ஸ்லெ‌க்‌சியா குறைபாடு‌ள்ள குழ‌ந்தைக‌ளைப் பற்றிய விழிப்புணர்வற்ற பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வையேற்படுத்தும் வகையில் இப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டி‌ஸ்லெ‌க்‌சியா குறைபாடு‌ கொண்ட குழந்தைகளை ஆசிரியர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்ற நியதி இங்கு மாறியுள்ளது.

Monday, October 27, 2008

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்


அனைத்து உலக வாழ் நண்பர்களுக்கும் இவ்வினிய நாளில் மனம் நிறைந்த தீப ஒளி வாழ்த்துகளை இதய வழி தெரிவிக்கின்றேன்!!!!

Monday, October 20, 2008

நினைவுத் தெரிந்த நாள் முதலா!!!!

பல அலுவலுக்கிடையே நசுங்கிவிடாமல் கரைச்சேர்த்துக் கைக்கோர்த்த கரையோர கனவுகளின் நாயகி ஸ்ரீமதிக்கும் கோபிநாத்துக்கும் நன்றி!!!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

வயது நினைவில்லையென்றாலும்..நிச்சயமாய் ஆரம்பப்பள்ளியின் இறுதி ஆண்டாக இருக்க வேண்டும்..அப்போதுதான் சின்னத்தம்பியும், தளபதியும் அறிமுகமானதாக நினைவு...

2. நினைவுத் தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

திரைப்படம் என்றால் என்ன என்று அறிந்துக் கொண்டச் சமயம் அதில் அவ்வளவாக ஈடுபாட்டை ஏற்படுத்தவில்லை.. ஆனாலும் தோழிகளின் கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஷாருக்கான் பற்றிய ஆர்வத்தின் பேரால் பார்த்தப் படம் Darr... Tuhe Mere Karan..இன்னமும் கேட்கப் பிடித்தப் பாடல்களில் ஒன்று... இடைநிலைப் பள்ளிக் காலங்களில் அதிகமாய் நான் விரும்பிப் பார்த்தது இந்திப் படங்களே... Saajan...Yes Boss..இன்னும் நிறைய படங்கள்...பெயர்கள் அவ்வளவாக நினைவில்லை. ம்ம்ம் என்ன உணர்ந்தேன்!!! அமிர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான்..இவர்களில் ஷாருக்கான் மட்டுமே cute!!! இதுக்காக ஷாருக்கான் என்னுடைய favouriteன்னு நினைக்க வேண்டாம்...

3. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

வேலைக்குப் பாதியிலேயே மட்டம் போட்டுவிட்டு பாசமலரோடு போய் பார்த்தப் படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு... நம்ம ஊருக்காரவுக தயாரிச்ச படமாச்சேன்னு போய்ப் பார்த்து நொந்து நூடல்ஸாகி வந்தப் படம்... வடிவேலு மட்டுமே ஆறுதல்...ஆனாலும் அவருடைய வசனங்களில் அதிக விரசம்...வள்ளல் ரேனாவின் வாரிசுகள் தயாரிக்கும் படத்தின் தரமா இது???

4. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக நான் விமர்சனம் எழுதியிருந்த ராமன் தேடிய சீதை.... இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துப் பார்த்தேன். ம்ம்ம் கொஞ்சம் முன்பாகவே பார்த்திருக்கலாமே என்று வருந்த வைத்தது காரணம்??? மழை நின்றப் பின்பும் தூறலை படிச்சுப் பாருங்க!!!

5. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்கியதென்று சொல்வதற்கில்லையென்றாலும்...இரசிக்க வைத்த படங்களின் பட்டியல் நீளம் வசந்த மாளிகை, இராஜ ராஜ சோழன், ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சில் ஓர் ஆலயம், மௌனராகம், பூவே உனக்காக, அமராவதி, அலைபாயுதே, ரிதம், மொழி...இராமன் தேடிய சீதை...மீண்டும் பார்க்க நினைக்கும் பாக்கியராஜின் ருத்ரா, ஆராரோ ஆரிரரோ, முந்தானை முடிச்சு...

அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இல்லை

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பமென்றவுடன் நினைவுக்கு வருவது முப்பரிமாண (3D)அசைவுகள் மற்றும் விளைவு. முன்பு வெளிவந்த மை டியர் குட்டி சாத்தான் திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் அதே தொழில்நுட்பத்தில் சுல்தான் தி வாரியர் தயாராகி வருவது தமிழ்த்திரையுலகின் ஆரோக்கியமான வளர்ச்சியாய் தோன்றுகிறது. முப்பரிமாண அசைவுகள் (3D Animation) என்றால் கார்டூன்கள் மட்டும்தான் என்றெண்ணிவரும் மக்களுக்கு இது ஒரு மாற்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 200க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியீடு காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சில சமயங்களில்...நாளிதழ்களிலும்...இணையத்திலும் எப்பொழுதாவது Cinefashion மாதிகை வாசிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

இந்த வரிசையில் மிகவும் பிடித்தக் கேள்வி இது மட்டும்தான். உலகத் தரத்தில் தமிழ்த்திரையுலகம் வளர்ந்திருக்காவிட்டாலும் தமிழ்த்திரையிசைப்பாளர்கள் உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்பது மறுக்க மறக்க முடியாத உண்மை. இளையராஜா (இவருடைய இசையமைப்பு உலகத் தரத்தையும் எஞ்சியது) எவ்வளவு புதிய பாடல்கள் வெளிவந்தாலும் 80களில் வெளிவந்த இவருடைய பாடல்கள் என்றும் நீங்காத நெஞ்சின் இராகங்கள்தான்... ஏ.ஆர் ரகுமான்... யுவன், ஹாரிஸ் ஜெயராஜ்... வித்யாசகர் இவர்களும் இரசிக்க வைக்கிறார்கள். ஆனாலும் வருந்த வைக்கும் ஒரே விசயம் பாடகர்களின் தேர்வு... வட இந்திய பாடகர்களின் தமிழ்க்கொலை எரிச்சலூட்டுகிறது... அழகான வரிகள்கூட இவர்களின் குரலில் அர்த்தமிழந்துப் போய்விடுகிறது. அதிலும் உதித் நாராயண் பாடவில்லையென்றால் தமிழ்த்திரையிசையே அழிந்துவிடுமா என்ன? இதில் ஸ்ரேயா கோஷல் மட்டுமே விதிவிலக்கு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

முதல் தடவை Kuch Kuch Hota Hai பார்த்துவிட்டு கண் கலங்கியதுண்டு.. எப்போது பார்த்தாலும் என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்தும் மற்றொரு திரைப்படம் Kabhi Kushi Kabhi Gham முக்கியமாக ஷாருக்கான், ஜெயா பச்சன் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும்...Mujhse Dosti Karogi எனக்குப் பிடிக்காத ரித்திக் ரோஷனையும் இரசிக்க வைத்தப் படம். இதில் ரித்திக் அருமையாக நடித்திருப்பார். இந்தி மொழியைத் தவிர்த்து மலையாள மொழி படங்களை அவ்வப்போது வானவில்லில் பார்க்க நேரிடும்...தெலுங்கு மொழியில் நிறைய படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் தற்போது ‘ஆடாவரி மாத்தலக்கு அர்த்தலு வேறலு’ உலக மொழித் திரைப்படங்களென்றால் அதிகமாய் பார்ப்பது...பார்த்தது ஆங்கில மொழிப் படங்களே...அதில் அதிகமாய் பாதித்தது Forest Gump (Tom Hanks), Sleepless in seatlle (Tom Hanks)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

75 ஆண்டுகளை கடந்து விட்ட தமிழ்த்திரையுலகம் இனி வரும் காலங்களிலாவது உலகத் தரத்திற்கு ஈடாக படங்களைத் தயாரிக்க வேண்டும். இந்திய திரையுலகமென்றால் அது இந்தித்திரையுலகம்தான் என்ற நிலை மாற வேண்டும். எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த நாயக வழிபாடு செய்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. இது வரைக்கும் பாலபிஷேகம் செய்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில் இதற்கும் சமய சாயம் பூசினாலும் பூசுவார்கள்?? தமிழ்த்திரை நாயகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சி திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குள் எந்த மாற்றமும் இருக்காது..... விடுப்பட்டுப்போன பழைய படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கலாம். இன்னும் இருக்கவே இருக்குது இந்தி, ஆங்கில, கொரிய, மலாய் மொழிப்படங்கள். சினிமாத்தான் உலகம் என்ற மாயை மாற இந்த ஒரு வருடம் போதாதே!!!

இந்த தொடர்விளையாட்டை தொடர விரும்பி நான் அழைப்பவர்கள் :
மனோகர் - சூர்ய பார்வை
புனித் - சொல்லத்தான் நினைத்தேன்

Monday, October 06, 2008

இதய வழி வாழ்த்துகிறேன்


பறக்க முடியா
பாட்டாம்பூச்சியாய் அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த் தூதனுப்பினேன்...

கவிதைச் சுமக்கும் மௌனங்கூட

மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்...

விடிகின்ற உன் எல்லாப்

பொழுதும் சுகங்களை
மட்டும் ஆசிவதிக்கட்டும்...

இன்று துடிகிற இதயமும் கூட

உன்னை மட்டுமே
வாழ்த்திப் பாடட்டும்...

காற்றின் இடைவெளியை

அதிகரித்து வான
எல்லையையும் தாண்டி
இதய வழி வாழ்த்துகிறேன்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!

(இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மாவுக்கும் இராஜேஸ் அக்காவுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்)