Saturday, March 28, 2009

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!!


நமது முதல் பரிச்சயம்கூட விசித்திரமான அனுபவம்தான் இல்லையா? அந்த விசித்திரம்தான் உன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி எனக்கு காட்டிக் கொடுத்தது...!!

ம்ம்ம்!!! நமக்கான நாட்களில் எவ்வளவு வருடங்களை தவறியிருக்கேன் என்பதை உணருவதே எனக்குள் ஓர் அவமான குன்றல்தான்..!!! வெரி சாரிடா... நீ நெருங்கி வந்த போதெல்லாம் உன்னையும் உன் அன்பையும் புரிந்துக் கொள்ளத் தவறியிருப்பதே இன்றைய பிரிவுக்கான காரணமாய் இருக்குமோ? அதனால் என்ன தூரம் நம்மை பிரித்தாலும் நீ என்றைக்குமே எனக்கு இனிய தோழன்தான்!!

இந்த உணர்வுகளைச் வெளிப்படுத்த நிச்சயமாய் எனக்கு கவிதை தேவையில்லை :-)

Thanks da....for being there for me whenever I need you to be there..!!!

அன்பான தம்பிக்கு பிரியமான அக்காவின் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!! Miss u Bro!!!

Thursday, March 19, 2009

சொல்லாமலே..............


ஒவ்வொரு முறையும்
உடைந்துப் போகிறேன்
உன் நினைவுகளை
சுமக்க முடியாத
வறண்ட நிலமாய்!!!

உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!

வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!

உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!

Sunday, March 15, 2009

மீட்டெடுத்தல்!!!


வரம்பு மீறிய ஓர் இரவில்
வார்த்தைகளை மீட்டெடுக்கும்
முன்பே திரும்பிப் பாராமல்
விலகிச் சென்றாய்!!
மறுபடியும் நீ வருவாயென
தெரியாமல் மனவாசலடைத்தேன்
ஓசையின்றி வந்து
மீண்டும் திரும்பிச்
செல்லத் துடிக்கும்
உன்னிடம்...
இன்றும் என் இதயம் துடிப்பது
உனக்காகவென்று எப்படி
உணர வைப்பேன்!!

Tuesday, March 03, 2009

இந்தப் பயணத்தில்...........

சாலைகளும் அதன் மீது பயணிக்கும் தருணங்களும்  நமக்கு எவ்வித தொடர்பில்லாமலேயே கரைந்துப் போகின்றன. பரபரப்பும் இயந்திரத்தனமான வாழ்வியல் சூழலும் சாலையை வெறும் போக்குவரத்து தடமாக மட்டுமே யோசிக்க வைக்கின்றன. அதிலும் நம்மில் பெரும்பான்மையோர் சாலையை வெறுக்கவும் செய்கின்றனர் காரணம் அது ஏற்படுத்தும் நெரிசல். சாலைகள் எப்போதுமே நெரிசலை ஏற்படுத்தியதில்லை அதில் பயணிக்கும் நாம்தான் நெரிசலை உண்டாக்குகிறோம் என்பதை அறிவோமா?

கடந்த மாதம் முழுவதும் காலை நேரத்தை சாலைக்கு இரையாக்கி வந்துள்ளேன். சமிக்ஞை விளக்கிலும் போக்குவரத்து நெரிசலிலும் மாட்டிக் கொண்ட அவஸ்தைகள் இனி மீளாதா என்று ஏங்கிய தருணங்கள்தான் எத்தனை...எத்தனை? ஆனாலும் வெறுக்கத் தோன்றியதில்லை. காலையில் எரிச்சலூட்டும் அதே சாலை மாலை வேளையில் சுவாரசியத்திற்கு உரியதாய் மாறிவிடும் விந்தை இதுவரையிலும் விளங்கவில்லை. மாலை வேளையில் நெரிசலில் சிக்கிக் கொண்டாலும், இசையிலும்....கையில் கொண்டு வந்த புத்தகத்தின் ஏதாவது பக்கத்திலும் நிலைத்து விடுவதால் அன்றைய மாலைப் பயணம் இலகுவாகி விடுகிறது. அதுவும் சுவைக்காத நாட்களில் சாலையின் இருபுறமுள்ள வாகனங்களிலும்....சுற்றுப்புறத்திலும் பார்வை அலைபாயத் தொடங்கிவிடுகிறது.

இதுவரை கண்ணில் படாத பதாகைகளோ... வாசகங்களோ... வீடுகளோ... அலுவலகங்களோ அப்போதுதான் கண்ணில் படுகின்றன. அதில் சிலது என்னையும் மீறிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. சாலையென்றும் பாராமல் காரில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் இளம் ஜோடிகள்.....காரின் பின்புற சீட்டில் பள்ளிச் சீருடையில் இருக்கும் சிறுமி அவளுக்குப் பின்னால் வந்துக் கொண்டிருக்கும் காரோட்டியிடம் அழகுக் காட்டுவது... இன்னும் நிறைய சுவையான சம்பவங்கள் உண்டு....!!!!

பொதுவாகவே விரைவுச் சாலையில் பயணிப்பதைவிட சாதாரண சாலையில் பயணிக்கவே மனது ஏங்குகிறது.விரைவுச்சாலையில் வாகனங்களைத் தவிர காண வேறொன்றும் கிடைப்பதில்லை. பசுமை போர்த்திய மலைகள்கூட காரோட்டியாய் சாதாரண நாட்களில் காண இரசிப்பதில்லை.

வழக்கமாக நான் மலாயாப் பல்கலைக்கழக சாலையில் பயணிப்பதால், வேலை முடிந்து வரும் நேரங்களில் கல்லூரி முடிந்து பேருந்துக்காகக் காத்திருக்கும் மாணவிகளைக் காண நேரிடும். அருகிலேயே தனியார் மருத்துவக் கல்லூரி. களைத்துப் போய்த் திரும்பும் அவர்களை தன் நிழலில் தாங்கிக் கொள்ள சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள். களைப்பையும் மீறி மகிழ்ச்சியின் இரேகைகள் இந்த மாணவர்களின் கண்களில் பளிச்சிடுவதைப் பார்க்கச் சுவாரசியமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் எப்பொழுதுமே என் நேசத்துக்குரியவர்கள்தான். நான் கடந்து வந்த இனிய ராகத்தின் ஆதார சுருதிகள் இவர்கள் அல்லவா?

தனியார் கல்லூரியை அடுத்து வரும் 750 ஏக்கரை தனதாக்கிக் கொண்டு நிற்கிறது மலாயாப் பல்கலைக்கழகம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, சிங்கப்பூரில் ஏப்ரல் 1949-இல் இப்பல்கலைக்கழகம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் 1962-இல் ஜனவரி முதலாம் நாள் அன்றைய மலாயாவில் தேசியப் பல்கலைக்கழகமாக அமைக்கப்பட்டதாக வரலாறுகள் பகர்கின்றன.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்பது அநேக மாணவர்களில் கனவாகும். மலாயப் பல்கலைக்கழகம் என்னிலும் இன்னமும் கனவாய்தான் உள்ளது. இந்திய ஆய்வியல் துறையைக் கொண்டுள்ள ஒரே மலேசிய பல்கலைக்கழகமும் இதுவேயாகும். முதன் முறையாக நான் காலடி வைத்ததும் இந்திய ஆய்வியல் துறையில்தான். கனவுகளில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருந்ததை நேரில் கண்டப் போது மனதிற்கும் நெருங்கிய சினேகமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்தச் சாலையில் செல்கையில் என்னையுமறியாமல் முகத்தில் மென்முறுவல் மலர்ந்து மறைகின்றது. பிரமாண்டங்கள் எதுவுமில்லாது பழமையை மட்டும் மௌனமாய் போர்த்திக் கொண்டுள்ளது இப்பல்கலைக்கழகம். நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும், கல்விமான்களையும் செதுக்கிய சிற்பியென்ற கர்வம் சிறிதுமின்றி எளிமையாய் தோற்றமளிக்கிறது மலாயாப் பல்கலைக்கழகம்.

என்னுடன் படித்த சில நண்பர்கள் எங்களின் பல்கலைக்கழகத்தோடு மலாயா பல்கலைக்கழகத்தை ஒப்பிட்டு நம் பல்கலைக்கழகம்போல் வராது என்று பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. உண்மைத்தான்...அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வது 100 ஆண்டுகளைக்கூட தாண்டாத கட்டிடங்களை மட்டும்தான். புதுமையை பாராட்டிப் பெருமைக் கொள்ளும் நாம் பழமையையும் அது சுமந்துக் கொண்டிருக்கும் வரலாற்றின் சுவடுகளையும் ஏனோ அறிய மறந்துவிடுகின்றோம். அதை விட இப்பொழுதெல்லாம் பல்கலைக்கழகமும் கல்வியும் வெறும் வணிகமாக மாறி வருவது வருத்தமளிக்கும் விசயமாகும்.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. பொதுவாகவே மலேசிய கார்கள் அனைத்தும் நான்கு இலக்க எண்களைக் கொண்டிருப்பதால் சாலையில் காணும் கார்களின் எண்களை மனதுக்குள்ளேயே கூட்டிக் கொள்ளும் பழக்கம். எவ்வளவோ முயன்றும் இது வரையிலும் இந்தப் பழக்கம் மாறவேயில்லை. உதாரணத்திற்கு 2910 = 2+9+1+0(1+2)=3. எல்லாம் இந்த நியுமராலஜியில் ஏற்பட்ட ஈர்ப்பாகக்கூட இருக்குமோ?

நான் சாலையில் கண்ட முதல் சாலை மரணம் இன்னமும் நினைவில் உள்ளது. பல நாட்கள் அந்தச் சாலை வழியே செல்லும் போது அந்தச் சம்பவம் மனதுக்குள் குளிர் பரப்பி திகிலூட்டியிருக்கிறது. மறுநாள் அவ்வழியே வரும்போது சிலர் ஏதோ காகிதத்தை எரித்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது. மரணமுற்றவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறார் என்பது அப்போது புரிந்தது. சாலை சில சமயம் உயிரைக் குடிக்கும் அரக்கனாய் மாறிவிடுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.

பொதுவாகவே மலேசியர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும் ஆவிகள், அமானுட சக்திகள், மாந்ரீகம் மீது அதீத நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கின்றனர். வட மலேசியப் பல்கலைக்கழகம் கட்டமைக்கும்போது காடுகளையும் மலைகளையும் அழிக்க வேண்டிய நிலையென்பதால் அங்கு பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த அமானுடவாசிகளை இடம்பெயர்க்க வேண்டியிருந்தது. அவர்களையெல்லாம் பேருந்தில் ஏற்றி வந்து காராக் காட்டில் விட்டதாக இன்று வரை வதந்தியுள்ளது. அதனால் காராக் நெடுஞ்சாலையில் பின்னிரவில் பயணிக்கும்போது இந்த அமானுட சக்திகளின் சேட்டைகள் அதிகமாயிருப்பதாக கூறுகின்றனர். அதிலும் சுவாரசியமானது இந்த அமானுட சக்திகளை பிடிக்க தாய்லாந்திலிருந்து போமோக்களும் மாந்ரீகர்களும் வரவழைக்கப்பட்டதாக சொல்கின்றனர். இதில் நகைச்சுவையான விசயம்..கண்ணுக்கு புலப்படாதவர்களை பேருந்தில் கூட்டி வந்தது :-))) இதுப் பற்றி மேலும் விபரங்களை அங்குப் படித்த மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் மறுபதற்கில்லை....புதிதாகக் கட்டப்பட்ட எங்களுடைய மொழிப்புலத்திலும் இதே கதையுண்டு. பக்கத்திலேயே சீனர்களின் இடுகாடு இருப்பதால் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்தப் பக்கம் தனியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. என்னுடைய பேராசிரியர்கூட அந்தப் பக்கம் வாண்டுகள் அலைந்துக் கொண்டிருக்கும் என்று கூறுவார். அவருடைய அறை இடுகாட்டுக்குப் பக்கத்திலேயே இருப்பதால் அடிக்கடி இந்த அமானுட சேட்டையைப் பற்றி கூறுவதுண்டு. அடுக்கி வைத்த புத்தகங்களைக் கலைத்துப் போடுவதும்..பூகம்பமே வந்ததுப்போல் அறை நடுக்கம் காண்பதும்...!! ஒரு சமயம் அவர் கண் முன்பே அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் வீசியெறியப் பட்டதைப் பார்த்து அரண்டுவிட்டதாக கூறியிருக்கிறார். சில சமயம் இரவு வகுப்பு முடிந்து நாங்கள் வேப்பமரத்தின் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்திருப்போம்.வேப்பம் பூவின் நறுமணம் நாசியைத் துளைத்தெடுக்கும் ஆனாலும் எந்த ஆவியையும் இது வரைக் கண்டதில்லை. மாணவர் தங்கும் விடுதியில் இந்த ஆவிக் கதைகள் நிறைய உண்டு. ஹிஸ்டீரியா மலாய் மாணவிகளிடேயே வெகு சகஜமான விசயம்.

தற்போது நான் பணிபுரியும் அலுவலகம் புக்கிட் கியாரா என்ற மலையில்தான் உள்ளது. இங்கே அலுவலகம் கட்டியிருப்பது வேற்று உலகத்தில் அத்துமீறி நாம் நுழைந்து விட்டதாக என்னுடன் வேலைப் பார்க்கும் மலாய்க்காரர்கள் கருதுகின்றனர். ஓரிருவர் இளம்பெண்ணை கண்டதாக கூறுகின்றனர். யாருமில்லாத நேரத்தில் பக்கத்து அறையில் நாற்காலி சுழலும் சத்தம் கேட்டு அந்த அறையையே காலிச் செய்தவர்களும் உண்டு. நான் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக குறிப்பிட்ட அந்த அறைக்குப் பக்கத்திலேயே இருந்துள்ளேன். அதிகாலையிலும் இரவிலும்கூட சில சமயம் பணி நிமித்தமாக தனியாக இருக்க வேண்டியிருந்திருக்கிறது ஆனால் எந்தவித சத்தமும் கேட்டதேயில்லை. அதிலும் எங்கள் அலுவலகத்தில் பலர் ஆடிட்டேரியம் பக்கம் தனியே செல்லப் பயப்படுவர். ஆனால் நான் பலமுறை தனியாக போய் வந்துள்ளேன். பயமில்லையென்று சொல்ல முடியாது...நாங்கத்தான் நடக்க மாட்டோமே ஓடிடுவோமே :-))அம்மாவிடம் இதுப்பற்றிக் கூறினால் "நீயே பெரிய பிசாசு உன்னைக் கண்டு அதுதானே பயப்படனுமுன்னு கிண்டல் செய்வார்". :-(( . ஆனால் ஏதோ அமானுட சக்தி இங்கு இருப்பது மட்டும் உண்மையென்று புரிகிறது.


தீபகற்ப மலேசியாவில் வடக்கிலிருந்து தெற்கு வரையிலுமுள்ள மாநிலங்களை இணைக்கும் பாலமாக வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை விளங்குகின்றது. மலேசியாவின் சிறந்த சாலை நிர்மாணிப்புக்கு இந்த நெடுஞ்சாலை சிகரமாய் விளங்குகிறது. மலைகளை குடைந்து எப்படிதான் நிர்மாணித்திருப்பார்களோ..!!! எனக்கு இதில் மிக விருப்பமான இடம் தாப்பா-செண்டிரியாங் நெடுஞ்சாலை. லத்தா கிஞ்சாங் அருவியை நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே காணலாம். இந்த நெடுஞ்சாலை சொல்லும் கதைகள் ஆயிரம். அதில் சுவையான கதையொன்று நினைவுக்கு வருகின்றது. ஈப்போவிலிருந்து தைப்பிங் வரை பெரிய வளைவுகளையும் பள்ளங்களையும் மலைகளையும் இந்த நெடுஞ்சாலை கொண்டுள்ளது. அதிலும் ஈப்போ-ஜெலப்பாங் டோல் சாவடி மரண வாசலாக கருதப்பட்ட காலமும் உண்டு. தற்போது டோல் சாவடியை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

பின்னிரவில் இந்த நெடுஞ்சாலையில் தனியாக பயணம் செய்யும் கார்களை ஒரு மஞ்சள் நிற சொகுசு கார் தொடர்ந்து வருவதாகவும்..அந்த காரை முந்திச் செல்லும் ஆவலில் கட்டுப்பாட்டை இழந்து கார்கள் விபத்துக்குள்ளாவதாக கூறுகின்றனர். இது எந்தளவு உண்மையென்று தெரியாவிட்டாலும் பின்னிரவில் தனியே பிரயாணம் செய்வது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு சமமாகும்.

சாலைப் பயணத்தில் மிகவும் கொடூரமானதாக நான் கருதுவது பூனையும் நாய்களும் சாலையில் அடிப்பட்டு இறப்பது. பெரும்பாலும் கண்களைக் மூடிக் கொள்வேன். இன்று காலையில்கூட ஒரு பூனை சாலையின் நடுவே அடிப்பட்டு இறந்துக் கிடந்தது. மனிதர்களைக் கூட கண்டுக் கொள்ளாமல் காரில் பறக்கும் இந்த வாகனமோட்டிகள் வாயில்லா பிராணிகளைப் பற்றியா கவலைப் படப் போகிறார்கள். குறைந்தப் பட்சமாய் சாலையில் ஆதரவின்றித் திரியும் பிராணிகளை எஸ்.பி.சி.ஏவில் கொண்டு விடலாம். அல்லது ஆம்புலன்சுக்கு கூப்பிட்டால் அவர்கள் வந்துக் கொண்டுப் போகப் போகிறார்கள். ஒரு முறை நானும் தம்பியும் காரில் வந்துக் கொண்டிருந்தப் போது ஒரு நாய்க்குட்டி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது. உடனே தம்பி நாய்க்குட்டியைப் பிடித்துக் வர தெரிந்தவர் வீட்டில் கொண்டுப் போய் விட்டோம். நாம் வளர்க்காவிட்டாலும் அதற்கென்று உள்ள மையத்திலோ நண்பர்களிடத்திலோ கொண்டுப் போய்ச் சேர்க்கலாமே. :-)

சாலைகள் எனக்கு பல சமயங்களில் ஞானம் தருகின்ற போதி மரங்களாய்த்தான் தெரிகிறது.