Tuesday, February 26, 2008

எனக்கு மட்டும் ஏன்தான்???

இந்த மாசத்துல மொத்தமா 10 நாள்கூட வேலைக்கு போகல...காரணம் மாசம் தொடங்கியதுமே..முதல் 10 நாள் சொந்த விடுமுறை...விழா காலம் ஆரம்பிச்சாலே என் மாதிரி ஊரை விட்டு வந்து வெளியூரில் படிக்கற ... வேலை செய்யுற வர்க்கத்துக்கு கொண்டாட்டம்தான்...இதுக்காகவே annual leave-ஐ சேர்த்து வச்சிருந்தேன்...விடுமுறை என்னவோ ஜாலியாத்தான் இருந்தது... ஆனா விடுமுறை முடிந்து வந்ததும் வராதுமா ஜொகூரில் 10 நாள் பயிற்சி... பெயர் பட்டியலை பார்த்ததும் எரிச்சல் வந்துடுச்சு... நான் மட்டும்தான் தமிழ் ... மத்தவங்க எல்லாமே மலாய்க்காரர்கள்... :((( போய்த்தான் ஆகனும் வேறு வழியில்ல... அதுவும் சொந்த போக்குவரத்தை பயன்படுத்தனும்... நாளைக்கு பயிற்சின்னா... இன்றைக்குத்தான் கடிதமே கிடைச்சது... அவ்வளவு சுறுசுறுப்பு :)... நானும் என்னோட வேலை செய்யுற மலாய்க்கார பொண்ணும் மட்டுமே என்னோட கார்ல பயணமானோம்.. 360 கிலோ மீட்டர் .... தலைநகரிலிருந்து ஜொகூருக்கு... அவ்வளவு தூரம் பயணம் இதுவரைக்கும் சென்ஞ்சதில்ல... மலாக்காவை நெருங்கும்போதே பசியெடுத்துறுச்சு... 'ஆயேர் குரோ' R&Rல்ல சாப்பிடும் வரைக்கும் இனி அடுத்து எங்களுக்கு ஏழரை ஆரம்பமாயிடுச்சுன்னு தெரியல... சரி சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்புபோது என்னோட 'க்ளிக்' டிரைவ் பண்ணுறேன்னு சொன்னா.. சரின்னு நானும் அவ வர வரைக்கும் காருக்கு வெளியே காத்திருக்காம ...காருக்குள்ளே வெயிட் பண்ணலாமுன்னு காருக்குள்ள உட்கார்ந்து சென்டர் லாக் பண்ணதுதான்... கார் அலாரம் அலர ஆரம்பிச்சிடுச்சு... நான் காரை விட்டு வெளியே வந்து கதவ சாத்தி திறக்க முயலும்போது... கார் சொந்தமாவே லாக் ஆயிடுச்சு... கார் சாவி காருக்குள்ளேயே மாட்டிகிச்சு...இதுவே தனியா இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பேனோ தெரியல... கிட்டதட்ட அழாத குறைதான்..

அப்புறம் வேறு வழியில்லாம அங்கு வேலை செய்துகிட்டிருந்த ஒரு மலாய்காரரிடம் விசயத்தை சொல்லி அவர உதவிக்கு அழைச்சோம்.... அவருக்கு இது கை வந்த கலையோ என்னமோ.. ஆனா என்னோட காருக்கிட்ட மட்டும் பலிக்கல... என்னோட கார் புது வித மாடல் என்பதால் ரொம்ப கஷ்ட்டமாயிடுச்சு.. ஆனா அவர் கொஞ்சம்கூட தளராம முயற்சி செஞ்சு ...ஒரு மணி நேர போரட்டதுக்குப் பிறகு திறந்தார்.... அது வரைக்கும் நான் எல்லா சாமியையும் உதவிக்கு அழச்சிட்டேன்... அல்லாஹ்..ஜீசஸ்..முருகனுன்னு.. ஒருத்தரை விடல... :(

அதுக்கப்புறம் ஜொகூருக்கு கிளம்பினோம்... இந்த சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம்... குறிப்பா பெண்கள் தனியா நெடுந்தூரம் காரில் பயணம் செய்யுறது சரியான்னு என்ன தோணுது... நல்ல வேலை நாங்க பகல்ல பயணம் செஞ்சோம்... இதுவே இரவு நேரமா இருந்திருந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா... கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்...

ஆனா எனக்குத்தான் நிறைய செலவு... போக்குவரத்து செலவு போதாதுன்னு... கார் சர்வீஸ்...ரிப்பேர்ன்னு...பயங்கர தலைவலி...


Monday, February 11, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 7

அருணாவை மணப்பதற்காக கௌதமன் அவனுடைய தாயை பிரிந்திருந்தான். அந்த வேதனையிலேயே துடித்துக் கொண்டிருந்தவனுக்கு அருணாவின் காதல் ஆறுதலாக இருக்கும் என்று மிகவும் நம்பினான். முதன் முறையாக அவளை கோவிலில் பார்த்த பொழுதே, மணந்தால் இவளைதான் மணக்க வேண்டும் என்று உறுதிக் கொண்டான். அதன்படியே தன் எண்ணத்தை செயலாக்குவதிலும் வெற்றியும் கண்டான். ஆனால் கௌதமனுக்கு தன்னைப் போலவே அருணா அதே எண்ணத்தோடு மணக்கவில்லையோ என்ற ஐயப்பாடு இப்பொழுதெல்லாம் எழுவது உண்டு.

“கவனிங்க மிஸ்டர் கௌதமன், இது ரொம்பவும் ரிஸ்க்கான வி~யம் என்றுகூட சொல்லலாம். ஆனால் எனகென்னவோ நீங்க உங்க மனைவியின் நிலைமையை சீரியசாக்குவதா எனக்கு தோன்றுகிறது.

“புரியல டாக்டர்”

“ஐ மீன் நீங்க, உங்க மனைவி இந்த குழந்தையை சுமக்கிறதை வேண்டா வெறுப்பாக நினைக்கிறீங்களோ என்கிற சந்தேகம் எனக்கு. அதுக்கு காரணமும் இருக்கு. பாருங்க மிஸ்டர், அந்த காலத்துப் போல பிரசவம் இப்பொழுது பெரிய வி~யம் கிடையாது. அந்த அளவுக்கு நவின வசதிகள் எல்லாம் வந்துடுச்சு. அதே சமயம் இதனால் நன்மையும் உண்டு கெடுதலும் உண்டு.” என்று அடுத்த குண்டை து}க்கி போடுவதற்கு ஏதுவாக தொண்டையைச் சரி செய்துக் கொண்டார்.
டாக்டர் என்ன சொல்ல வருகிறார் புரியாமல் விழித்தான் அவன்.

“உங்ககிட்ட ஏற்கனவே டாக்டர் பிரசன்னா சொல்லாமல் விட்ட வி~யத்தை நான் இப்பொழுது சொல்ல வேண்டியுள்ளது. இதுக்கு மேல் என்ன முடிவு செய்வது என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.”

ஏதோ விக்ரமாதித்தன் கதையை போல சஸ்பென்சாக அவர் ஆரம்பிக்கவும், கௌதமன் அமைதியாக அவர் முகத்தையே கவனித்தான்.

“வந்து உங்க மனைவி ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்காங்க. டாக்டர் பிரசன்னாவிடம் சரியான நேரத்தில் உங்க நண்பர் டாக்டர் இளங்கோ கொண்டு செல்லாமலிருந்தால் நிச்சயம் பிழைத்திருக்க மாட்டாங்க… அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை? காதலித்துதானே மணந்தீங்க”

“டாக்டர்”

“முதலில் முழுவதையும் சொல்லிவிடுகிறேன் பிறகு நீங்கள் என்ன செய்வது என்று முடிவெடுத்து கொள்ளுங்கள்”

“உங்கள் மனைவி முதன்முறையாக என்னிடம் ‘செக்கப்’ வந்த போது அவருடைய மெடிக்கல் ‘டெஸ்ட்’ ரொம்பவும் திருப்தியாக இல்லை. டாக்டர் பிரசன்னா கொடுத்த ரிப்போட்டும் அதைத்தான் குறிப்பிட்டது. அதனால் நானே நேரில் அவரிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசியபொழுது இந்த தற்கொலை முயற்சி பற்றி தெரிய வந்தது. இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல வந்தபோது டாக்டர் இளங்கோ தடுத்து விட்டார் போலிருக்கிறது. நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம். அவர் உங்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து பெரிய தவற்றை செய்துவிட்டார்.” தொடர்ச்சியாக பேசி வந்தவர் மேலே தொடருமுன் கௌதமன் முகத்தை ஒருமுறை பார்த்தார். அந்த முகத்தில் ஏமாற்றத்தின் அறிகுறிகள் நன்றாகவே வெளிப்பட்டது.

“அவர்கள் அப்போதே உங்களிடம் சொல்லியிருந்தால் பிரச்சினை இவ்வளவு ஆகியிருக்காது.” கௌதமனுக்கு பேச பிடிக்கவில்லை. அமைதியாக இருந்தான்.

“தனக்குத் தெரிந்த தோழிகளிடம் தூக்க மாத்திரைகளை பற்றி விசாரித்து வாங்கியிருக்கிறாள்.”

“என்ன மிஸ்டர் கௌதம் இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கிறீர்கள்? எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று யோசிக்கிறீர்களா! அருணாவே என்னிடம் ஒப்புக் கொண்டாள்”

இந்த டாக்டர் அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார், ஆனால் தனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியவில்லையே. மற்றவர் சொல்லி தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறோமே, என்று தன்னையே நொந்துக் கொண்டவனுக்கு அருணாவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஆனால் அதையும் மீறிய பச்சாதாபம். இவளுடைய தற்கொலை முயற்சிக்கு தான் காரணமாகியிருக்க கூடுமோ என்றெண்ணமே அவன் நெஞ்சினில் திகில் பரப்பியது.

“முதல் முயற்சியோடு நிறுத்திவிட்டார் போலிருக்கிறது”.

“டாக்டர் குழந்தைக்கு இதனால் ஏதாவது” குரல் தழுக்க தழுக்க பேசினான் கௌதமன்.

“குழந்தைக்கு ஏதும் பாதிப்பு உண்டா என்று சொல்ல முடியாத நிலை கௌதமன், ஆனால் உங்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்ககூடிய ஒரு விஷயம் மட்டும் சொல்ல முடியும்” விடுகதை போல் அவர் புதிர் போடவும் சற்று நிமிர்ந்து அமர்ந்து நேருக்கு நேராக டாக்டரின் பார்வையை நோக்கினான் கௌதமன். தான் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டதை அவனுடைய நேர் பார்வை உணர்த்தியது.

“சந்தோஷமான விஷயம்தான், அருணாவை ‘டெஸ்ட்’ செய்தோம் இல்லையா? அப்போது குழந்தையோட ‘பொசிஷன்’ என்ன என்பதை தெரிந்துக் கொள்ள ‘ஸ்கேன்’ எடுத்தோம், அதனுடைய முடிவில் இது வரையில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று தெரிய வந்தது” என்றார் மகிழ்ச்சியோடு.

ஆனால் கௌதமனால் இந்த மகிழ்ச்சியில் சேர்ந்துக் கொள்ள முடியவில்லை. அருணா ஏன் தற்கொலைக்கு முயல வேண்டும். பழைய விக்ரமாதித்தன் கதையில் வருவதைப்போல் பதில் தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடுவதைப் போல் தன் தலையும் வெடித்துவிடுவதைப் போல் உணரவும் சட்டென்று தன்நிலைக்கு வந்தான்.

“பாருங்க மிஸ்டர் கௌதமன், இதெல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால்”, ஒரு சில விளாடிகள் தாமதித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.” இந்த பத்து வருடத்தில் என்னோட கேரியரில் எந்தவொரு ‘பிளாக் மார்க்’கும் கிடையாது, ஆனால் உங்களுடைய மனைவியோட விஷயத்தில், சாரி நீங்க தப்பாக புரிந்து கொள்ளாதீங்க....இரண்டு கெட்டான் நிலைமைதான் எங்களுக்கு. இப்போதைக்கு எங்களால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அருணாவிற்கு ‘பிரஷர்’ அதிகமாக இருக்கிறது காரணம் ‘ஹைப்பர் டென்ஷன்’ டாக்டர் இளங்கோ உங்களுக்கு நு}ற்றுக்கு நூறு மார்க் கொடுத்தாலும் உங்க ரெண்டு பேரோட தாம்பத்ய வாழ்கையைப் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன்னு நினைக்காதீங்க, உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை? "

“எனக்குத் தெரியல டாக்டர் இந்த நிமிடம் வரைக்கும் அருணாவை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவள் கேட்டு நான் இல்லையென்று சொன்னது கிடையாது”

“சரி இதுப் பற்றி நீங்க உங்க மனைவியிடம் மனம் விட்டு பேசிப்பாருங்க, தீர்வு கிடைக்கலாம். இதை இப்படியே விட்டுவிட்டால் குழந்தையையே பாதிக்கலாம். அத்தோடு நிச்சயமாக ‘நார்மல் டெலிவரிக்கு’ வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. இந்த விஷயத்தில் நாங்க உதவ நினைத்தால் மட்டும் போதாது, அருணாவும் ‘கோப்பரேட்’ பண்ண வேண்டும்"

அவருடைய குரலில் கோபத்தைவிட அக்கறை அதிகமாக தெரிந்தது. அவருடைய அந்த அக்கறை கௌதமனை ஏதோ செய்தது. அவமானமாகக்கூட தோன்றியது. இதற்கெல்லாம் காரணமானவள் தன்னை இந்தளவுக்கு முட்டாளாக்கியிருக்கிறாள்.
டாக்டரிடம் விடைப்பெற்றுக் கொண்டு காரில் வந்து அமர்ந்த பின்னும் டாக்டர் கூறிய செய்தி அவன் மனதில் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது. அருணா மட்டும் அப்பொழுது அவன் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் அவளை ஒரு வழி பண்ணியிருப்பான். நேராக வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் அருகில் இருந்த கோவிலுக்கு தன் காரை செலுத்தினான். ஒவ்வொரு தடவையும் கோவிலுக்குச் செல்லும்போது அவனுக்கு ஓர் இனம் காண முடியாத உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் இம்முறை அப்படி தோன்றவில்லை மாறாக மிகவும் வலித்தது. அமைதியாக அங்கேயே வெகு நேரம் அமர்ந்திருந்தான். கோவிலிலிருந்து நேராக வீட்டிற்கு திரும்பினாலும் அப்போதைக்கு அவன் இருந்த மனநிலையில் அருணாவை சந்திப்பதையே தவிர்த்தான்.

அன்றைக்கே உள்மனது சந்தேகப்பட்டது, ஆனால் அப்பொழுது சந்தேகப் பிசாசு தன்னையும் அதனுடைய மாயையில் சிக்க வைக்க துடிக்கிறது என்று எண்ணியது எவ்வளவு தவறாகிவிட்டது என்று நினைத்தான். ஆனாலும் அவனுக்கு மேலும் விபரம் தேவைப்பட்டது. ஏன் இந்த அருணா தன்னை மணக்க வேண்டும், தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு வேளை அவளுக்கு தன்னைப் போல் காதல் இல்லையோ. பிறகு எதற்காக? அவனுக்கு மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. இவனுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவள் அவள் ஒருவள் மட்டுமே. இத்தனை நாட்களாக தன்னை முட்டாள் என்றல்லவா எண்ணியிருக்கிறாள். இதற்கெல்லாம் அவள் நிச்சயம் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.
சிறிது யோசனைக்கு பிறகு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனுடைய கார் நேராக ஒரு வீட்டின் முற்றத்தில் போய் நின்றது. கார் என்ஜினின் உறுமலைத் தவிர சலனமற்ற நீரோடையை போல் ஒரே நிசப்த்தமாக இருந்தது பெரிய மதில் சுவரைக் கொண்ட அந்த வீடு. கிட்டதட்ட கௌதமனுடைய நிலைமையும் அப்படித்தான். பார்வைக்கு அவன் முகம் அமைதியாக தோன்றினாலும், அந்த அமைதியை சீர்குலைக்கும் திணவுடன் அவனுடைய உள்மனது சீறிக் கொண்டிருந்தது. அப்படியே வெகுநேரம் காரிலேயே அமர்ந்திருந்தான். அந்நேரம் பார்த்து எங்கோ வெளியே போவதற்காக வீட்டின் உள்ளேயிருந்து பாய்ந்தபடி வந்த கார் கௌதமனுடைய காரைக் கண்டதும் நின்றுவிட்டது.

காரிலிருந்து இறங்கிய பெண் ஒருத்தி அவனது காரை நோக்கி வருவதைக் கண்டதும், கௌதமன் தன் காரை விட்டு இறங்கி அந்தப் பெண்ணை எதிர்க் கொண்டான்.

“வாங்கண்ணா ஏன் வெளியிலேயே ‘வெயிட்’ பண்ணுறீங்க” என்று குழந்தையை போல் மிளற்றியவள்,
“இளங்கோ அண்ணா முக்கியமான ‘கான்பிரன்ஸ்’காக ‘மொரிஷியஸ்’ போயிருக்காங்க அடுத்த வாரம்தான் வருவாங்க. அருணாவை கூடவே கூட்டி வந்திருக்கலாமே” என்ற பொழுது அவளுடைய குரலில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படவில்லை. ஒரு வேளை தனக்கு சொல்லாது விட்டதைப் போல் இவர்களுக்கும் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

“பரவாயில்ல கவிதா நான் பிறகு வரேன்” என்று கிளம்பியவனை அவள் அந்த கவியின் குரல் தேக்கியது.
“ஏன் அண்ணா...ஏதாவது அவசரமாக சொல்ல வேண்டுமா”
கேள்வியோடு நோக்கியவனை, “இல்லை அன்றாடம் அண்ணா போன் செய்வார்... அதான் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டேன்?”

“இல்லை வேண்டாம் கவிதா. இளங்கோ வந்ததும் பார்த்துக் கொள்கிறேன். சரி நான் கிளம்புறேன்ம்மா” என்று அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு காரில் வந்து அமர்ந்தவன் காரை நேரே தன்னுடைய அலுவலகத்திற்கு செலுத்தினான்.
ஆனால் பாதி வழியிலேயே ஏதோ மனதில் உறுத்த டாக்டர் பிரசன்னாவை நாடிச் சென்றான். அவர் அவசர வேலையாக வெளியே சென்றிருந்ததால் வெகு நேரம் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. நீண்ட நேரம் கழித்து வந்த டாக்டர் பிரசன்னா அங்கே கௌதமனை காணவும் மெல்லிய தலையசைப்புடன் அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.
“அப்புறம் மிஸ்டர் கௌதம் ‘பிசினஸ்” எல்லாம் எப்படி போகுது” வழக்கமான முகமன்களுக்கு பிறகு நேரிடையாக விஷயத்திற்கு வந்தார்.

“என்ன கௌதம் ஏதாவது முக்கிய விஷயமா?” தெரிந்தும் தெரியாததை போல் வினவினார்.

“அருணா”

“ம்ம்ம்......டாக்டர் கௌசல்யா எல்லாம் சொல்லிவிட்டார்! இல்லையா?”

“ஏன் டாக்டர் என்னிடம் சொல்லவில்லை” என்ற போது கௌதமனுடைய குரல் தடுமாறியது. முடிந்த வரை தன் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசினான். இவர் மட்டும் ஆரம்பத்திலேயே தன்னிடம் சொல்லியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கௌதமன் ஒன்றும் சுயநலவாதியல்ல தன் சுகத்தை மட்டும் பெரிதாக நினைப்பதற்கு. உண்மையிலேயே அருணாவிற்கு இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லையென்றால் நிச்சயம் அவளை வற்புறுத்தியிருக்க மாட்டான். என்ன கொஞ்ச நாள் வருத்தப் பட்டிருப்பான் அவ்வளவுதான். அதிலும் அருணாவை உள்ளங்கையில் வைத்து தாங்குபவன். கொஞ்ச நாள் போகட்டும் என்று அவள் போக்கிற்கே விட்டுப் பிடித்திருப்பான். அதிலும் கௌதமன் ஒரு வியாபாரி. விருப்பமில்லையென்று விலகிச் செல்பவரையும் விரும்பும்படி செய்துவிடுவான். அருணாவிடம் மட்டும் தோற்றுவிடவா போகிறான். ஆனால் இவையெல்லாம் அவனுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், ஆனால் இப்பொழுது காலம் கடந்துவிட்டது.

“சாரி கௌதம் ..... நான் சொல்ல வந்த போது டாக்டர் இளங்கோ தடுத்துவிட்டார்.
இனி இவரிடம் பேசுவதற்கும் ஒன்றுமில்லை என்றெண்ணியவனுக்கு அங்கு நிற்பதே கஷடமாக இருந்தது.

“சில சமயங்களில் உண்மை மறைக்கப்படுவதில் தவறில்லை கௌதம், அதனால் பிறருக்கு நன்மை ஏற்படும் என்றால்”

விடைபெறும் போது இறுதியாக டாக்டர் கூறியது, இன்னமும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் யாருக்கு நன்மையென்றுதான் கௌதமனுக்கு புரியவில்லை. உண்மையாக சொல்ல போனால் இதனால் விபரீதமான விளைவுகளே தவிர நன்மை கிடையாது. நடக்க போகும் விபரீதம் பற்றிய நினைவில் கௌதமன் வெல வெலத்துப் போனான். அலுவலகத்திற்கு சென்று தன் அறையில் அமர்ந்த பின்னும் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அருணாவையே சுற்றி சுற்றி வந்தது. என்ன மாதிரியான பெண் இவள். தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ள எண்ணும் அளவிற்கு என்ன வந்துவிட்டது. அவள் மேல் எவ்வளவு காதல் கொண்டிருந்தேன். அனைத்தையும் ஒரே நொடியில் கொன்று விட்டாளே என்று தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தான் கௌதமன். ஆனால் உண்மையில் அவனுடைய அன்பை கொன்றுத்தான் விட்டாளா? என்பது கேள்விக்குறியே!

யாதுமாகி நின்றாய்... பகுதி 6

“பாருங்கள் மிஸ்டர் கௌதம், உங்க மனைவி ரொம்பவும் ‘அனிமிக்’கா இருக்கிறார். நான் எழுதித் தந்த மருந்து மாத்திரைகளை சரியான முறையில் கடைப்பிடித்து வந்தாலே போதுமானது. ஆனால் நீங்களும் கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும். என்னால் மருந்து மட்டும்தான் தர முடியும், அதை சரியான முறையில் கடைப்பிடிப்பது உங்களுடைய கடமை” என்று அருணாவின் மருத்துவ அறிக்கையை கொடுத்துவிட்டு அடுத்த நோயாளியை கவனிக்க சென்று விட்டார் டாக்டர். அவர் எதையோ சொல்ல வந்து சொல்லாமலே விட்டு விட்டார்.


“என்ன இளங்கோ டாக்டர் என்னென்னவோ சொல்கிறார்”


“நத்திங் கௌதம், அவர் பொதுபடையாகத்தான் கூறினார். பொதுவாவே உடம்பு சரியாக வேண்டுமென்று டாக்டரிடம் சென்றால் மட்டும் போதுமா? கொடுத்த மருந்தையும் ஒழுங்காக சாப்பிட வேண்டாமா? அதைத்தான் அவரும் சொன்னார்” சமாளித்தான் இளங்கோ.


நாம் சொல்லும் ஒரு பொய்யால் மற்றவர் நன்மையடைகிறார் என்றால் அந்த பொய்யை சொல்வதில் தவறில்லை “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின்”, என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார், என்று தனக்குத் தானே சமாதானம் செய்துக் கொண்டான் இளங்கோ. ஆனால் அவன் அன்று மறைத்த உண்மை பின்னாளில் கௌதமனுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


அன்று மாலை சீக்கிரமாகவே கௌதமன் வீடு திரும்பிவிட்டான். ஆனால் அருணாதான் வீட்டில் இல்லை. நெடுநேரம் கழித்து வீடு திரும்பியவள், ஹாலின் சோபாவில் சாய்ந்திருந்த கௌதமனை பார்த்தும் பேசாமல் தன் அறைக்குள் நத்தையாய் சுருண்டுக் கொண்டாள். பொறுத்து பொறுத்து பார்த்த கௌதமன் எரிச்சலோடு அறைக்குள் நுழைந்தான். ஆனால் அங்கு அருணாவின் சீரான மூச்சு நிஜமாகவே அவள் உறங்குகிறாள் என்பதை உணர்த்தியது. அவள் முகத்தையே பார்த்தபடி வெகு நேரம் நின்றுருந்தான் கௌதமன் ஆனால் அவள் முகத்தில் இருந்து எதையும் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இவள் வெகுளியா இல்லை சந்தர்ப்பவாதியா, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எப்படியெல்லாம் முகம் மாறுகிறாள்....எதையோ தன்னிடம் சொல்லாமல் மூடி மறைக்கிறாள் என்று நினைக்கத் தோன்றியது, ஆனால் அவனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அதே சமயம் இவளிடம் ரொம்பவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் எண்ணியபடி அவளுடைய கள்ளங் கபடமற்ற குழந்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அடுத்த சில வினாடிகளில் தன் சந்தேகப் புத்தியை நினைத்து கூனிக் குறுகிப் போனான்.


“ச்சே நான் இவ்வளவு கீழ்த்தரமாகவா போய்விட்டேன். காதலித்து மணந்தவள் மீதே சந்தேகமா?”அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.


அடுத்து வந்த நாட்களில், கௌதமன் முன்பைவிடவும் அதிகமாக அருணாவை நேசிக்க ஆரம்பித்தான். ஆனால் அதன் விளைவுகள்தான் விபரீதமாக இருந்தது. எங்கே தனிமை கிடைத்தால் இவளிடம் பாய்ந்து விடுவானோ என்கிற பயம். ஆனால் தனிமையில் இதுப் பற்றி கேட்காமல் இருந்தது அவளுக்கு ஒருவிதத்தில் நிம்மதியாய் இருந்தது. அருணாவிற்கு தான் சில சமயங்களில் தேவையில்லாததற்கெல்லாம் பயப்படுவதைப் போல் தோன்றியது. அதிலும் குறிப்பாக கௌதமனிடம் அவசியமில்லாமல் பயப்படுவதாகவே அவளுக்குத் எண்ணத் தோன்றியது. அவன் ஏதாவது யோசனையோடு அவளை அழைத்தால்கூட இவள் நடுங்கிக் கொண்டு போய் நிற்பாள். அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினை என்று இவளிடம் சற்று கோபத்தோடு பேசினால் அருணாவிற்கு அழுகையே வந்துவிடும். ஒரு சில சமயங்களில் தான் முட்டாள்தனமாக எதை எதையோ வீணாக கற்பனை செய்துக் கொண்டு இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவள் அச்சப்படுவதிலும் காரணம் இருக்கவே செய்தது. பேசாமல் இவனை கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என்றுகூட சில சமயங்களில் எண்ணியிருக்கிறாள். வழியில் கிடந்த கோடாரியை வலிய எடுத்து காலில் போட்டுக் கொண்டு வலிக்கிறதே என்று புலம்பி என்ன ஆகப் போவது. அதற்காக அவளுக்கு கௌதமனுடன் வாழும் இந்த வாழ்க்கை கசக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அளவுக்கு அதிகமாகவே தன் மீது அன்பை பொழியும் கணவன். மாமியார், நாத்தனார் என்று பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை, அதையும் விட அவள் நினைத்தும் பாராத சொகுசான கார், பங்களா, தேவைக்கு அதிகமாகவே பணம், நகைகள்.....இருந்தும் அவளால் அதில் நிறைவு காண முடியவில்லை. கல்யாணத்திற்கு முன்பிருந்த நிம்மதி அவளைவிட்டு வெகுதூரம் தொலைந்து போயிருந்தது. ஓவ்வொரு கணமும் அவளுடைய தாயையும் தங்கைப் பற்றியும் எண்ணும்போது புழுவாய் துடித்துப் போனாள். அதிலும் கடைசியாக அவளுடைய தாய் தொலைப்Nசியில் பேசிய வார்த்தைகள் அவளை அனலில்லிட்ட புழுவாய் துடிக்க வைத்தது.


கௌதமன் அவளைக் அவள் வழியில் விட்டுக் கொடுத்த பிறகு அருணாவிற்கு வாழ்வு இனிமையாக தோன்றியது போல் இருந்தாலும் அவளுடைய இறந்தகாலம் அவளை வாட வைத்தது. எந்நேரமும் ஏதாவது யோசனையோடு சோபாவில் சாய்ந்து விடுவாள். முன்பென்றால் இது போல் நினைத்த மாதிரியெல்லாம் கிடக்க முடியாதே. கௌதமனுக்கு அனைத்தும் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும். அப்படி ஒரு சில நேரங்களில் அவள் வெறுமனே கிடந்தாள் எப்படியாவது ‘வாக்கிங்’, கோவில், ‘ஷாப்பிங்’, நண்பர்கள் வீடு என்று எங்காவது அழைத்து செல்வான். அருணா வராமல் அடம் பிடித்தால் ஏதாவது சமாதனம் சொல்லி அழைத்துச் செல்வான்.


“இப்படி நீ வராமல் அடம் பிடித்தால், அன்றைக்கு ‘ஆர்டர்’ கொடுத்த வைர நெக்லஸ் வேண்டாமென்று சொல்லி திருப்பிக் கொடுத்து விடுவேன். என்ன பார்க்கிறாய் நீதான் ‘வாக்கிங்’ போக மாட்டேன் என்கிறாயே, நம் வீட்டீன் முன் மாட்டியிருக்கிற பூசணிப் போல் ஆகப் போகும் உனக்கு எதற்கு வீணாக அந்த வைர நெக்லஸ்.” என்று அவன் பயமுறுத்தினால் முகத்தைத் தூக்கி வைத்து கொண்டு இரண்டு நாள் வருவாள் பிறகு மறுபடியும் தலைவலி, கால் வலி, மயக்கம் என்று ஆரம்பித்து விடுவாள். அப்பொழுதும் அவன் ஒரு காரணம் சொல்ல வேண்டும். கௌதமனுக்கு இது பழகி விட்டது, ஆனால் அவனுடைய அம்மா அருணாவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டப்பின் வேறு வழியில்லாமல் அருணாவிற்கு அதிக சுதந்திரம் கொடுக்க வேண்டியதாய் போயிற்று. அவள் தன் பிறந்த வீட்டையும் அங்குச் செல்ல பிடிவாதம் பிடிக்காத வரை அனைத்தும் நன்றாகவே தோன்றியது. ஆக முன்பைப் போல அவளிடம் அதிக கெடுபிடிக்கு வழியில்லாமல் போய்விட்டது. இல்லையென்றால் பழையபடி அம்மா வீட்டு புராணத்தைத் தொடங்கி விடுவாள். அருணா வெளியே உல்லாசமும் சந்தோஷமுமாய் இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஒவ்வொரு கணமும் உடைந்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் தன்னில் வளர்ந்துக் கொண்டிருக்கும் கருவைப் பற்றி கொஞ்சமேனும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக அவள் மறுமுறை சென்ற போது டாக்டரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.“ஏம்மா பார்த்தால் படித்த பெண் மாதிரி தெரிகிறாய், இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பது. போன மாதமே செக்கப்பிற்கு வந்திருக்க வேண்டியது.” என்று கோபப்பட்டார் டாக்டர்.


பொதுவாகவே அந்த டாக்டர் கௌசல்யா மிகவும் மென்மையானவர். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மிகவும் அன்பாகவே நடந்துக் கொள்வார். அதிலேயே அவர்கள் பாதி குணமடைந்து விடுவார்கள். ஆனால் அருணாவின் விஷயத்தில் அப்படி மென்மையாக நடந்துக் கொள்ளாததிற்கு இதற்கு முன்பிருந்த டாக்டர் பிரசன்னா கொடுத்த மருத்துவ அறிக்கையில் எழுதியிருந்த குறிப்பு காரணமாயிருந்தது. அவர் வேலை மாற்றலாகி வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதால் டாக்டர் கௌசல்யாவை அறிமுகப்படுத்தியிருந்தார். டாக்டர் பிரசன்னாவின் மருத்துவ குறிப்பு அவருக்கு அருணாவின் மேல் தவறான அபிப்ராயம் கொள்ள காரணமாகிவிட்டது. அவரின் கூற்றை மெய்பிப்பது போல அருணாவும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் கொடுக்கப்பட்ட தேதிக்கு வராமல் இப்பொழுது வந்து நிற்கவும் அவள் மேல் ஆத்திரம் வந்து விட்டது அவருக்கு.


“பாரும்மா அருணா கொடுக்கப்பட்ட தேதிக்கு நீ வராததால் எங்களுக்கு ஒன்றுமில்லை என்று இருந்து விட முடியாது. அடிக்கடி செக்கப்பிற்கு வந்தால்லொழிய எங்களால் சரியான டிரிட்மென்டை கொடுக்க முடியும். அதிலும் கவனி உடல் எடை ஒவ்வொரு வாரமும் அரை கிலோவிலுருந்து ஒரு கிலோவிற்கு கூடுவது சரியில்லை. இது தேவையில்லாத நோயை நீயே தேடிக் கொள்வதற்கு சமம்.


“இல்ல டாக்டர், வந்து எனக்கு சரியான தேதிக்கு வர வேண்டுமென்றுதான் நினைக்கிறேன் ஆனால் குடும்ப பிரச்சினையால் மற்றது மறந்து போய்விடுகிறது அதான்......” என்று தன் கவலையை டாக்டரிடம் கூற நினைத்தவள் பேசாமல் விட்டுவிட்டாள்


“என்ன பிரச்சினை” என்று அவர் வித்தியாசமான பார்வையுடன் கேட்கவும் அருணாவிற்கு அவமானமாய் இருந்தது.


“பாரும்மா அருணா! எனக்கு உன்னோட ‘ஹெல்த்’துல கொஞ்சமும் திருப்தி இல்லை. அதனால் நான் மேலும் சில ‘டெஸ்ட்’ எடுக்க வேண்டியுள்ளது. உன்னோட குழந்தையோட ‘பொசிஷன்’ என்ன என்பதும் தெரிய வேண்டும். அதனால் டாக்டர் ஷேரன் ‘லெவல் 6சில்’ இருப்பார், அவரிடம் போய் ‘செக்கப்’ செய்துக் கொள்” என்று அனுப்பி வைத்தார்.


“எல்லாம் இந்த கௌதம்மால் வந்தது” என்று தன் இயலாமைக்கு அவனை திட்டினாள். கடைசியாக டாக்டர் கௌசல்யா அருணாவை அழைத்து பேசியது அவளுக்கு மேலும் திகில் மூட்டியது. இனி இவர் இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று அப்பொழுதே உறுதி எடுத்துக் கொண்டாள்.


‘செக்கப்’ முடிந்து வீடு திரும்பியதும், டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை தூர வீசி எரிந்தாள் அருணா. அவளுடைய கோபத்தை அந்த மருந்திடம்தானே காட்ட இயலும்.


“கௌதம் இனிமேல் அந்த டாக்டரிடம் நான் போக மாட்டேன். கொஞ்ச நேரத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டார் என்று கத்திக் கொண்டிருந்தாள் அவள். கௌதமன் என்ன சொல்லியும் அவள் கோபம் அடங்கவில்லை. அதோடு நிற்காமல் அடுத்து வந்த ‘செக்கப்பிற்கு’ செல்ல பிடிவாதமாய் மறுத்து விட்டாள். பொறுமையிழந்த கௌதமன் டாக்டரிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினான். உடனடியாக சந்திப்பது இயலாது என்றும் முடிந்தால் அடுத்த நாள் வர சொல்லியது ஓரளவுக்கு கௌதமனுக்கு ஆறுதலாக இருந்தது.


ஆனால் மறுநாள் காலையிலேயே கௌதமன் அருணாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல அருணாவிடம் வந்து நிற்கவும் அவளுக்கு ஆத்திரம் மேலும் கூடியது.


“என்ன டாக்டர் அதற்குள் டாக்டர் உங்களிடம் ஓதிவிட்டாரா, காலையிலேயே திடீரென்று என்ன செக்கப்?” என்று கணவனிடம் எரிந்து விழுந்தாள்.


கல்யாணமான புதிதில்தான் எரிந்து விழுந்தாலும் கொஞ்சமும் கோபமுமின்றி காலை சுற்றும் பூனைக்குட்டியைப் போல் கணவனையே சுற்றி சுற்றி வருகிறார்கள். ஓரு குழந்தைக்கு தாயாகி விட்டால் பிறகு கணவன் பாடு திண்டாட்டம்தான். இதற்கு ஒரு சில விதி விலக்கும் உண்டுதான். இவ்வாறு யோசித்தப்படியே கௌதமன் அருணாவை தலை முதல் கால் வரை அளவெடுத்தான். முன்பைவிட அருணா அதிகம் பூசினாற் போல இருப்பது இப்பொழுது நன்றாகவே தெரிந்தது. ஆனால் உடனேயே இதுப்பற்றி பேசாமல் வேறு பேசினான் பிறகு அவள் அழகைப் பற்றி பேச ஆரம்பித்ததும் அருணாவிற்கு எரிச்சல் வந்தது. உள்ளம் உற்சாகமாக இருந்தால்தானே தேக அழகைப் பற்றிய உற்சாகம் இருக்கும், அவன் அழகைப் பற்றி பேசியயதும் அவளுக்கு கோபம் மேலும் தலைக்கேறி கத்தியவள் அப்படியே மயங்கிவிட்டாள்.

Saturday, February 09, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 5

“அதனால் என்ன உன் குரல் அந்த விளம்பர நடிகைக்கு பொருந்துமுன்னு நினைக்கிறேன். நீயே அந்த விளம்பரத்திற்கு பிண்ணணி குரல் கொடுத்திடு

“சார் எனக்கு நடிக்க”

“முயற்சித்தான் செய்துப் பார்க்கலாமே”அதற்கு மேல் அஞ்சலியால் மறுக்க முடியவில்லை. எத்தனையோ தடவை மற்ற கலைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து வேலை வாங்கியிருந்தாலும், தானே பிண்ணணி குரல் கொடுக்கும் பொழுது அதன் சிரமம் அவளுக்குப் புரிந்தது. பக்கத்திலிருந்து கௌதமன் உதவியதால் ஒரு சில தவற்றுக்குப் பிறகு மிகவும் சிறப்பாக அஞ்சலி செய்து முடித்தாள்.

“ரொம்பவும் சிறப்பாக செய்திருக்க அஞ்சலி’’ என்று கௌதமன் பாராட்டினான்.

அந்த பாராட்டுதலிலேயே அவள் அந்த விளம்பரத்தின் கடைசி நேர வேலைகளை மிக சிறப்பாக செய்து முடித்து கௌதமனிடம் கொடுத்தாள். அனைத்தும் சரியாய் இருக்க மற்ற தயாரிப்பாளர்களுக்கு அந்த விளம்பரத்தை திரையிட்டு காண்பித்தான். அனைவரும் அந்த விளம்பரத்தை பாராட்டினர். அந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம் வாக்குக் கொடுத்ததை போல் அன்றைக்கே கொடுத்தனுப்பிவிட்டு, வீட்டீற்குத் திரும்பிய கௌதமனுக்கு அவனுடைய மனைவி அருணாவின் ரூபத்தில் மீண்டும் புதிய பிரச்சினை ஒன்று காத்திருந்தது. இதுபோல் அடிக்கடி நடப்பதுதான் ஆனால் அப்பொழுதெல்லாம் ஏதாவது வகையில் தீர்த்து வைத்து விடுவான். இம்முறை அந்த மாதிரி கௌதமனால் இறங்கி வர முடியவில்லை. காரணம் அவனுடைய கர்வமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு முறையும் அவள் கேட்பதையெல்லாம் நிறைவேற்றி வைப்பதால் வந்த வினை இது. அருணாவை காதல் கொண்டு மணந்தவன் கௌதமன். அவள் மேல் உயிரையே வைத்திருந்தான் அவன். அவள் கேட்டு இல்லையென்று சொல்லியதும் இல்லை. அதனால் வந்த திமீர் என்றெண்ணியபடியே அவளை நோக்கினான்.

“இறுதியாக உன் முடிவுதான் என்ன?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.

“நான் முடிவு செய்துவிட்டேன் பிரசவத்திற்கு உங்க அம்மா வீட்டீற்குப் போகப் முடியாது, உங்களால் முடிந்தால் என் அம்மா வீடடில் கொண்டுப் போய் விடுங்கள் இல்லையென்றால் நான் எங்கும் போக முடியாது” என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் அருணா.

“அருணா” அவன் அழைத்தும் காதில் விழாததைப் போல் நடந்துக் கொண்டிருந்தாள் அவனுடைய அருமை மனைவி அருணா. அவள் செல்வதையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், பிறகு அவர்களுடைய அறைக்குள் நுழைந்தான். அங்கே அருணா கண்களை இறுக்கமாய் மூடிய நிலையில் படுத்திருந்தாள்.

“அருணா… அருணா”... மீண்டும் மீண்டும், அழைத்தும், அவளிடமிருந்து எந்தவொரு அசைவும் இல்லாததை உணர்ந்து அப்போதைக்கு பேசாமல் விட்டு விட்டான். ஆனால் காலையில் உணவருந்தும் போது மீண்டும் அப்பேச்சை தொடங்கினான். ஆனால் அருணாவோ அதில்தான் தனக்கு விருப்பமில்லையென்பது போல் நடந்துக் கொண்டாள்.

“எனக்கு ஒரே தலைவலியாய் இருக்கிறது, கொஞ்சம் படுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது” என்றபடி இருக்கையைவிட்டு எழுந்தாள் அருணா.

“என் பொறுமையை அதிகம் சோதிக்காதே அருணா” கடித்த பற்களினிடையே சீறின கௌதமனின் வார்த்தைகள். அவனையே சற்று நேரம் வெறித்தவள்,

“என் முடிவில் எந்தவொரு மாற்றமும் கிடையாது” என்று தன் கணவனின் அபிப்ராயத்தை லட்சியம் செய்யாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

“முட்டாள் மாதிரி உளராதேடி! ஏற்கனவே நீ உன் வீட்டை எதிர்த்துதான் என்னை மணந்து கொண்டாய் ஞாபகமிருக்கிறதா? அதன் பிறகு நீ அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. ஏன் ஒரு போன்கூட கிடையாது. இப்போது உன் பிரசவம் அங்குத்தான் நடக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தால் என்ன அர்த்தம். அதிலும் அங்கு உனக்கு பழைய வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறாயா?” ஆத்திரத்தோடு தொடங்கியவன், ஏதோ யோசனையோடு மேலே தொடர்ந்தான்.

“அதைவிட இது என் கௌரவப் பிரச்சினையும்கூட அருணா”

“ஆண்களுக்கே உரிய கர்வம் இல்லையா?, நீங்கள் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா!” என்று இடைமறித்தவளை வெறித்த பார்வையோடு தொடர்ந்தான் கௌதமன்.

“தொட்டுத் தாலிக் கட்டிய மனைவியின் பிரசவத்தைக்கூட கவனிக்காத கையாளாகாதவன் என்ற பாராட்டு வேறு. இது தேவையா எனக்கு! இதையனைத்தையும்விட முக்கியமான காரணம், உன்னுடைய பிரசவ நேரத்தில் கூடவே நானிருக்க வேண்டும். பிறந்த நம் குழந்தையை நான்தான் முதலில் பார்க்க வேண்டும். அதன் மென்மையான சருமத்தை, பிஞ்சு விரல்களை தொட்டுப் பார்க்க வேண்டும், கையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும். இப்படி எத்தனையோ ஆசை… கனவுகள். இதையெல்லாம் நீ கொஞ்சமும் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாயே…அத்தோடு அம்மாவை சமாதானப் படுத்த வேறு வழியில்லை… அத ப்ளீஸ் கெடுத்திடாதே” என்று வருத்தப்பட்டான் அவன். ஆனாலும் அருணாவின் பிடிவாதம் மட்டும் குறையவே இல்லை.

“எனக்கும் எங்க அம்மாவை பார்க்கணும், அப்புறம்....” அவள் முடிக்கவில்லை.

“புரிந்துக் கொள் அருணா! நீ அங்கு அழையாத விருந்தாளியாக செல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது”

“கவலைபடாதீங்க, நிச்சயம் அம்மா என்னை வெறுத்து ஒதுக்க மாட்டார். பிள்ளைகள் மீது அவருக்கு எப்பொழுதுமே பிரியம் அதிகம்.... என் தங்கை”

“அவ்வளவு அன்பானவர்கள் எப்படி உன் விருப்பத்திற்கு தடையாக இருந்தார் அருணா?மரியாதையாகத்தானே உன்னை மணந்துக் கொள்ள கேட்டேன், எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார், மறந்துட்டீயா”

“அது அது..... ஏன் உங்க அம்மா மட்டும் நம்மல அவமானப் படுத்தலயா?"

“வந்து அம்மா மீதும் தவறில்லை கௌதம்! பொதுவாகவே பணக்காரர்களின் மீது அவர்களுக்கு அதிகம் நம்பிக்கை கிடையாது. அதற்கொரு காரணமும் உண்டு. எங்கே அதைப் போல நானும் மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்வேனோ என்கிற பயம்” என்று சீரியசாக அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரித்தான் கௌதமன். கணவனின் சிரிப்பிற்கான காரணம் புரியாமல் அவள் விழிக்கவும், காரணத்தை அவனே சொன்னான்.

“ஒன்றுமில்லை தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதாக சொன்னாயே, அதான் சிரித்தேன்.”“நான் சொல்லியதற்கும் நீங்கள் சிரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது. நீயாக மண்ணை வேறு அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டுமோ, அதான் உன் தலையில் ஏற்கனவே நிரம்பி வழிகிறதே” என்று கிண்டலடித்தான். அருணா அவனை உற்று முறைக்கவும்,

“தாயே நீ சாதாரணமாக பார்த்தாலே தாங்காது இதில் கண்ணகியைப் போல் பார்த்தால் நான் எரிந்து சாம்பலாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது” என்று பயப்படுவதைப் போல் நடிக்கவும் அருணா சிரித்துவிட்டாள். அப்போதைக்கு அங்கு நிலவிய இறுக்கம் சற்று தளர்ந்தாற் போல் தோன்றியது இருவருக்கும். ஆனால் கௌதமன் அவ்வளவு எளிதாக அவளுடைய வார்த்தைகளில் சமாதானம் அடையவில்லை.

“ஆனாலும் அதெப்படி அருணா இவ்வளவு நல்லவர்களை இந்த ஒரு வருடமாக உனக்கு எண்ணிப் பார்க்ககூடத் தோன்றவில்லை” என்று ஆச்சரியத்தோடு வினவினான் கௌதமன்.“அது... அது வந்து உங்கள் அன்பில் மற்றது மறந்து விட்டது...” என்று திக்கித் திணறினாள் அவள்.

“ஆக இப்பொழுது என் அன்பு குறைந்து விட்டதோ”

“கௌதம், அவ்வளவு எளிதில் பெண்களின் உள்ளுணர்வுகளை விளக்கிவிட முடியாது. அதை உங்களால் எளிதில் புரிந்துக் கொள்ளவும் முடியாது”. என்று மழுப்ப முயன்றாள். இத்தோடு இந்தப் பேச்சை முடிக்க மாட்டானா என்றிருந்தது அவளுக்கு. மனைவியின் முக மாறுதலை கவனித்துக் கொண்டிருந்தவன் அவளை மேலும் நோட்டம் பார்க்க வேண்டுமென்றே சீண்டினான்.

“புரிந்துக் கொள்ளும்படியாகத்தான் விளக்கி சொல்லேன், அது என்ன பெண்களின் உள்ளுணர்வு”

“......................

“லுக்…அருணா, இது நான் உனக்கு முதலும் கடைசியாக சொல்வது... ‘டோன்ட் லெட் மி டு ரிப்பிட் திஸ் இன் ஃப்யுச்சர்’ என்று சாதாரணமாக தொடங்கி கடுமையாய் அவன் பேசுவதை அருணா முகம் வெளுக்க கேட்டுக் கொண்டிருந்தாள்.

அருணாவின் காதலுக்காக தாயையே பிரிந்துவிட்டவன் கௌதமன். தன்னுடைய காதலை அங்கீகரிக்காத தாயை பிரிந்து வந்ததில் ஏகப்பட்ட மன வருத்தங்கள், வேதனைகள். அவையனைத்தையும் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு வெளியே சாதாரணமாய் நடந்துக் கொள்வதே கௌதமனுக்கு பெரும்பாடாய் தோன்றியது. அவனுடைய மன தடுமாற்றத்தை உணர்ந்த கௌதமனின் நெருக்கமான நண்பர்கள், அப்போதைக்கு கௌதமனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில், எல்லாம் ஒரு குழந்தைப் பிறந்தால் சரியாகிவிடும். பெத்தவங்க கோபம் பிள்ளைகளிடம் மட்டும்தான். அதுவே தனக்கு பேரனோ பேத்தியோ பிறந்து விட்டால் போதும், இவ்வளவு நாள் இருந்த கோபம், பிடிவாதம் எல்லாம் இருந்த இடம் காணாமல் போய்விடும். நம்ம சங்கரின் அக்காகூட அவளோடு வேலைப் பார்த்தவரை கல்யாணம் பண்ணிட்டு லண்டன் போயிட்டாள், ஆனால் அவளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கென்று தெரிஞ்ச அடுத்த செகன்ட் அவனோட பேரன்ட்ஸ் ரெண்டுப் பேரும் அடுத்த ஃபிளயிட்டில் லண்டனுக்கு பறந்துட்டாங்க. நீயும் அது மாதிரி செய்ததில் தப்பேதும் கிடையாது. எங்களுக்கு தெரிஞ்சு இதுதான் இப்போதைய “பேரன்ட்ஸ் சைக்கலோஜி” என்று அவனுடைய நண்பர்கள் உசுபேத்திவிட கௌதமனும் இதற்கு சம்மதித்து விட்டான். அவன் மட்டும் அப்பொழுதே அவசரப்படாமல் நிதானமாய் யோசித்து முடிவெடுத்திருந்தால் நிச்சயமாக அடுத்து வரும் இழப்புகளை தவிர்த்திருக்கலாம்.கௌதமன் சொல்ல வந்ததை தெளிவாய் உறுதியாய் கூறிவிட்டப்பின் அருணாவால் ஏதும் பேச முடியாமல் ‘திக்’ பிரம்மை பிடித்தவள்போல் வாளாவிருந்தாள்.

“இதுப்பற்றி பேசுவதற்கு இனியொன்றும் கிடையாது” என்று கூறிவிட்டு தன்னுடைய வார்த்தையை இறுதியாக்கிவிட்டு அலுவகத்திற்கு கிளம்பினான். வேலையின் இடையே அவ்வப்போது ஏற்கனவே தன்னுடைய நண்பர்கள் கூறியதையும் அசைப் போட்டுக் கொண்டிருந்தான் அவன். அம்மாவிடம் சென்றால்…ஆனாலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் போய் நிற்பது. அவரை எதிர்த்துதானே அருணாவை மணந்துக் கொண்டான். இருப்பினும் இந்த மாதிரியான சூழ்நிலையில் அருணாவிற்கு அதிகபடியான அன்பும் பாதுகாப்பும் தேவைப்பட்டது. கௌதமனால் அதனை சரிவர நிறைவேற்ற முடியவில்லை. தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அம்மாதிரியான சமயங்களில் அருணாவை அவனுடைய நண்பன் இளங்கோவின் தாயார் வந்துக் கவனித்துக் கொள்வார். அவரையும் அப்படி அடிக்கடி அழைக்கவும் முடியாதே. அவருடைய பிள்ளைகளையும் அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரே தீர்வு அருணாவை அம்மாவிடம் கொண்டுப் போய் விடுவதுதான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் கௌதமன்.அந்நேரம் கௌதமனின் அலுவலக அறைக்குள் நுழைந்த இளங்கோ,

“என்ன பலத்த யோசனைப் போல் தெரிகிறது” என்றான். அதற்குள் தன்னிலைக்கு வந்தவனாய்

“வா இளங்கோ உன்னைத்தான் பார்க்க வேண்டுமென்றிருந்தேன்.”

“என்ன விஷ்யம்”“கொஞ்சம் பொறு” என்றவாறு இன்டர்காமில் தன்னை அடுத்த அரை மணி நேரத்திற்கு தொந்தரவு செய்ய வேண்டாமென்று தன்னுடைய காரியதரிசியிடம் சொல்லிவிட்டு நண்பனின் பக்கம் திரும்பினான்.

“சரி இப்பொழுதாவது சொல், இவ்வளவு நேரம் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாய்.” ஆவலை தாங்க முடியாது கேட்டான் இளங்கோ.

“அருணா”

“ஏன் அருணாவிற்கென்ன! ஏதாவது பிரச்சினையா? அடிக்கடி செக்கப்பிற்கு கூட்டிப் போய் வருகிறாயா இல்லையா. நான் அறிமுகப்படுத்திய டாக்டர் ரொம்பவும் திறமையானவர். எந்தப் பிரச்சினையென்றாலும் தயங்காமல் அவரிடமே சொல்ல வேண்டியதுதானே”

“அதுவல்ல பிரச்சினை இப்போது”“பிறகு”

“அருணா” என்று மீண்டும் தயங்கியவனை வினோதமாய் நோக்கினான் இளங்கோ, பிறகு

“ஏன் அருணாவிற்கு என்ன? பழையபடி பிடிவாதம் செய்கிறாளா. ரொம்பவும் செல்லமாய் வளர்ந்தப் பெண் இல்லையா? அவள் போக்கிற்கே விட்டுவிடு கௌதம். இம்மாதிரியான சமயங்களில் அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவதில் ஒன்றும் தவறே கிடையாது. முதல் பிரசவம் அவர்களுக்கு மறுப்பிறவி என்றவன் ஏதோ தோன்ற சிரித்தப்படி அதனால் அதிகம் ஏங்க விடாதே! கொஞ்சம் விட்டுத்தான் பிடியேன். பெண்கள் எந்த விஷயத்தில் கொடுத்து வைக்காவிட்டாலும், இந்தவொரு விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள்தான். கர்ப்பிணி பெண் என்றால் புகுந்த வீட்டிலும் சரி பிறந்த வீட்டிலும் சரி தனி மவுசுதான் இல்லையா. தன்னுடைய குடும்ப மரபை, வாரிசை சுமக்கிறவள் என்றால் சும்மாவா!” என்று தன் பங்கிற்கு கூறினான் இளங்கோ.

“வந்து”

“என்ன தயங்காமல் சொல்லு”

“அருணா, அவள் அம்மா வீட்டிற்குப் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். உனக்கே நன்றாக தெரியுமே எங்களின் திருமணம் எப்படி நடந்தது என்று. இந்த நேரத்தில் எப்படி”

“....................”

“ஆனாலும் எனக்கு அவளை அங்கு அனுப்புவதைவிட அம்மாவிடம்...வந்து அவர் எங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், அம்மாவிடம் கொஞ்ச நாட்கள் இருந்தால் அவளுக்கும் பொறுப்பு வரும். தேவையில்லாமல் பிடிவாதம் செய்வதும் கோபப்படுவதும் குறையும். அம்மாவுடைய கண்டிப்பு பற்றித்தான் உனக்கு தெரியுமே… ஆனால் இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன? அதான் உன்னிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று ”

“பிறகென்ன, தாராளமாக அனுப்பி வை கௌதம். அது அருணாவிற்கும் சற்று தெம்பை கொடுக்கும். அம்மாவுடன் இருக்கும்போது வீண் பயம், கவலைகளும் சற்றுக்குறையும் இல்லையா... உனக்கும் கொஞ்ச டென்ஷன் குறையலாம்”

(தொடரும்)

Tuesday, February 05, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 4


காலையிலிருந்தே கௌதமனுக்கு எதுவும் சரியில்லை. காலையில் வேலைக்கு கிளம்பும் நேரம் பார்த்து கார் பழுதாகிவிட்டது. அதை ஒரு வழியாக சரி செய்து அலுவலகம் சென்றால் அங்கே நிலவரம் தலைகீழாகி இருந்தது. அன்று ஒரு நிறுவனத்திற்கு தயார் செய்துக் கொடுக்க வேண்டிய தொலைக்காட்சி விளம்பரம் இன்னும் தயாராகாததால் அந்நிறுவனத்தின் நிர்வாகி நேரில் வந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். கௌதமனைக் கண்டதும் அவனிடம் பாய்ந்து விட்டார்.


“என்ன மிஸ்டர் கௌதமன், நேற்று நீங்கள் இன்று தயாராகிவிடும் என்று வாக்களித்தீர்கள். ஆனால் உங்கள் காரியதரிசியோ இன்னும் தயார் செய்யவில்லை என்று கையை விரிக்கிறார். உங்களுக்கு எங்களுடன் வியாபாரம் செய்ய விருப்பமில்லையென்றால் பரவாயில்லை, நாங்கள் வேறு கம்பெனியை பார்த்துக் கொள்கிறோம். பழக்கமானவராயிற்றே என்று உங்களிடம் வந்தால் ஏன் இப்படி அலட்சியமாய் நடந்துக் கொள்கிறீர்கள்” என்று கோபமாக ஆரம்பித்து வருத்தத்தோடு முடித்தார்.


“என்ன இன்னும் தயாராகவில்லையா! நீங்கள் முதலில் என் அறைக்கு வாருங்கள் கதிர், நான் விசாரிக்கிறேன்” என்று மிகவும் பணிவான குரலில் அழைத்தவன், தன்னுடைய காரிதரிசியிடம் தேநீர் எடுத்து வரச் சொல்லிவிட்டு தன்னுடைய தனி அறைக்குள் நுழைந்தான்.


“உட்காருங்கள் கதிர்” என்றவன் அவர் அமர்ந்ததும் தானும் அமர்ந்தான்.


“முதலில் நடந்த தவறுக்கு மிகவும் மன்னிக்கவும். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. நான் கூப்பிட்டு விசாரிக்கிறேன். நீங்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.” அதற்குள் தேநீருடன் அறைக்குள் நுழைந்த அவனுடைய காரியதரிசி அஞ்சலியிடம் தேநீரை வாங்கிக் கொண்டவன், ஒன்றை வந்திருந்தவரிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை கையில் ஏந்தியபடியே அஞ்சலியை வெறித்து நோக்கினான். அவனுடைய பார்வையை உணர்ந்தவளாய்..... தடுமாறினாள் அவள்.


“சார் வந்து......வந்து......”அவளுடைய தயக்கம் அவனுக்கு ஓரளவுக்கு உண்மையை உணர்த்த அவளைப் போகச் சொல்லிவிட்டு யாரையோ தொடர்புக் கொண்டான். பிறகு ஏதோ தோன்றியவனாக


“ஒரு நிமிடம் மிஸ்டர் கதிர்” என்றபடி எழுந்துச் சென்றான். நேரே அஞ்சலியின் இடத்தை அடைந்தவன், அவருடைய விளம்பரம் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான்


.“தவறு எங்கள் தரப்பில் இருப்பதால் உங்களுடைய விளம்பரத்திற்காக ஏற்கனவே நிர்ணயித்த விலையைவிட சற்றுக் குறைத்து கொடுக்கிறோம். இதுமாதிரி சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். கண்டிப்பாக இன்றைக்கு மதியமே உங்களுக்கு வாக்குக் கொடுத்ததை போல் கொடுத்து விடுகிறோம், அதனால் நீங்களும் நடந்த தவற்றை மறந்து தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்”.விலையைக் குறைத்த மகிழ்ச்சியில்,


“அதற்கென்ன மிஸ்டர் கௌதம் பரவாயில்லை, நான்கூட சற்றுமுன் கொஞ்சக் கோபமாக நடந்துக் கொண்டேன். நீங்களும் அதை மறந்துவிட வேண்டும்” என்று வாயெல்லாம் பல்லாக கூறி விடைப்பெற்றார் அந்த நிர்வாகி.அவர் சென்ற பிறகு மீண்டும் அஞ்சலியை அழைத்துக் காரணம் கேட்டான் கௌதமன்.


“வந்து கடைசி நிமிடத்தில், அந்த விளம்பரத்திற்கு பிண்ணணி குரல் கொடுக்கும் ஆள் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க..வேறு ஆள் தேடினாலும் குரல் சரியா அந்த விளம்பர நடிகைக்கு பொருந்த மாட்டேங்குது”


“சாரி சார்....நாங்க வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் புதிதாக வேறு ‘vo’ தேடிக் கொண்டிருந்தோம்...அதற்குள் நீங்கள்” என்றாள் தயக்கத்துடன்.


"உங்களுடைய இந்தக் கவனக் குறைவினால் நமக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா! இந்த நஷ்டம் எனக்கொன்றும் பெரிய விஷயம் கிடையாதுதான், ஆனால் நம்பிக்கை அவர் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகலாமா? பிறகு எப்படி அவர் தொடர்ந்து நம்மிடம்...”


கௌதமன் பேசும் வரை ஏதும் பேசாமல் கண்கள் கலங்கியபடி நின்றுக் கொண்டிருந்தாள் அஞ்சலி. அவளுடைய கண்ணீரைக் கண்டதும் சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், ஒருவழியாக அவள் தன் கண்ணீரை அடக்கி கொண்டு கௌதமனை நோக்கவும்,


“இதுவே முதலும் கடைசியாகட்டும்” என்று சாதாரணமாக அவன் கூறினாலும் அதை மீற யாருக்கும் துணிவிருப்பதில்லை.


“ஏன் அஞ்சலி, அந்த விளம்பர நடிகைக்கு உன் வயது இருக்குமா?”


“சார்?”


“அந்தப் பொண்ணுக்கு பதினெட்டுகூட முடியல சார்”(தொடரும்)

யாதுமாகி நின்றாய்... பகுதி 3

“பசியாறவில்லையா அருணா”. உனக்கு பிடித்ததுதான், வா..வந்து சாப்பிடு” என்று அழைத்த தாயின் முகத்தைப் பாராமலேயே,

‘பிடித்ததெல்லாம் நிறைவேறியாவிடுகிறது’ என்று முணுமுணுத்தவள்,


“பஸ்சுக்கு லேட்டாயிட்டது” என்று அவசரமாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேற கிளம்பியவளை வளர்மதியின் குரல் தேக்கியது.


“நீ இன்னிக்கு வேலைக்குப் போக வேண்டாம், நான் அந்த பையனோடு பேசனும், போன் பண்ணி வரச் சொல்” என்றார், கிட்டதட்ட உத்தரவு மாதிரி அதை மீற அருணாவால் முடியவில்லை.


“உனக்கு பள்ளிக்கு நேரமாகலயா அனு? ஏன் நின்னு வாயப் பார்த்துகிட்டு இருக்கே…போய் கிளம்பு”ஏதோ நல்ல விஷயமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவாறு அனு பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்.


“அம்மா நீங்க நிஜமாத்தான்”


“ஆமாம்” என்று மொட்டையாக முடித்துவிட்டார்.அப்போதைக்கு அருணாவிற்கு அதுவே குதூகலத்தை கொடுக்க…துள்ளிக் குதித்தவாறு தன் அறைக்கு ஓடி கௌதமனுக்கு அழைத்தாள்.
------------------------------


"அம்மா.. அம்மா அருணா எங்கே .. அலமாரியில் இருந்த அவளோட துணியெல்லாம் எங்கே?"


“செத்துப்போய் விட்டாள்”


“என்ன?”“என்கிட்ட அவளப்பத்தி பேசுறது இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும்” என்று அருணாவின் அத்தியாயத்திற்கு அப்போதே முற்றுப் புள்ளி வைத்து விட்டார். அதற்குப் பிறகு அவரிடம் பேசி பயனில்லை என்று விட்டுவிட்டாலும் மனதில் அவளுக்காக பிராத்தித்துக் கொண்டாள்.


அன்று முதல் அருணாவைப் பற்றி அவளோ…அவள் தாய் பேசியதோ கிடையாது. அனு பள்ளிப் படிப்பு முடிந்து பல்கலைகழகத்தில் நுழைந்தப் போது வளர்மதியும் பினாங்கிலிருந்து மகளோடு தலைநகரில் குடியேறிவிட்டார். அனுவும் தன் பட்டப்படிப்பை முடித்து ஆசிரியத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டாள், இதற்கிடையில் ஆசிரியப் பயிற்சி தொடர்பாக அனு பினாங்கிற்கு சென்று வந்தவுடன் அருணாவப் பற்றி பேச வாயெடுக்க வளர்மதி தடுத்துவிட்டாள். அன்றைக்குப் பேசிய வார்த்தைகளின் இன்று உண்மையிலேயே பலித்துவிட்டது.


“ஐயோ நான் மட்டும்…” ஒவ்வொரு கணமும் இதை நினைத்தே மருகிக் கொண்டிருந்தார் வளர்மதி.


(தொடரும்)