Tuesday, February 05, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 4


காலையிலிருந்தே கௌதமனுக்கு எதுவும் சரியில்லை. காலையில் வேலைக்கு கிளம்பும் நேரம் பார்த்து கார் பழுதாகிவிட்டது. அதை ஒரு வழியாக சரி செய்து அலுவலகம் சென்றால் அங்கே நிலவரம் தலைகீழாகி இருந்தது. அன்று ஒரு நிறுவனத்திற்கு தயார் செய்துக் கொடுக்க வேண்டிய தொலைக்காட்சி விளம்பரம் இன்னும் தயாராகாததால் அந்நிறுவனத்தின் நிர்வாகி நேரில் வந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். கௌதமனைக் கண்டதும் அவனிடம் பாய்ந்து விட்டார்.


“என்ன மிஸ்டர் கௌதமன், நேற்று நீங்கள் இன்று தயாராகிவிடும் என்று வாக்களித்தீர்கள். ஆனால் உங்கள் காரியதரிசியோ இன்னும் தயார் செய்யவில்லை என்று கையை விரிக்கிறார். உங்களுக்கு எங்களுடன் வியாபாரம் செய்ய விருப்பமில்லையென்றால் பரவாயில்லை, நாங்கள் வேறு கம்பெனியை பார்த்துக் கொள்கிறோம். பழக்கமானவராயிற்றே என்று உங்களிடம் வந்தால் ஏன் இப்படி அலட்சியமாய் நடந்துக் கொள்கிறீர்கள்” என்று கோபமாக ஆரம்பித்து வருத்தத்தோடு முடித்தார்.


“என்ன இன்னும் தயாராகவில்லையா! நீங்கள் முதலில் என் அறைக்கு வாருங்கள் கதிர், நான் விசாரிக்கிறேன்” என்று மிகவும் பணிவான குரலில் அழைத்தவன், தன்னுடைய காரிதரிசியிடம் தேநீர் எடுத்து வரச் சொல்லிவிட்டு தன்னுடைய தனி அறைக்குள் நுழைந்தான்.


“உட்காருங்கள் கதிர்” என்றவன் அவர் அமர்ந்ததும் தானும் அமர்ந்தான்.


“முதலில் நடந்த தவறுக்கு மிகவும் மன்னிக்கவும். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. நான் கூப்பிட்டு விசாரிக்கிறேன். நீங்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.” அதற்குள் தேநீருடன் அறைக்குள் நுழைந்த அவனுடைய காரியதரிசி அஞ்சலியிடம் தேநீரை வாங்கிக் கொண்டவன், ஒன்றை வந்திருந்தவரிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை கையில் ஏந்தியபடியே அஞ்சலியை வெறித்து நோக்கினான். அவனுடைய பார்வையை உணர்ந்தவளாய்..... தடுமாறினாள் அவள்.


“சார் வந்து......வந்து......”அவளுடைய தயக்கம் அவனுக்கு ஓரளவுக்கு உண்மையை உணர்த்த அவளைப் போகச் சொல்லிவிட்டு யாரையோ தொடர்புக் கொண்டான். பிறகு ஏதோ தோன்றியவனாக


“ஒரு நிமிடம் மிஸ்டர் கதிர்” என்றபடி எழுந்துச் சென்றான். நேரே அஞ்சலியின் இடத்தை அடைந்தவன், அவருடைய விளம்பரம் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான்


.“தவறு எங்கள் தரப்பில் இருப்பதால் உங்களுடைய விளம்பரத்திற்காக ஏற்கனவே நிர்ணயித்த விலையைவிட சற்றுக் குறைத்து கொடுக்கிறோம். இதுமாதிரி சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். கண்டிப்பாக இன்றைக்கு மதியமே உங்களுக்கு வாக்குக் கொடுத்ததை போல் கொடுத்து விடுகிறோம், அதனால் நீங்களும் நடந்த தவற்றை மறந்து தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்”.விலையைக் குறைத்த மகிழ்ச்சியில்,


“அதற்கென்ன மிஸ்டர் கௌதம் பரவாயில்லை, நான்கூட சற்றுமுன் கொஞ்சக் கோபமாக நடந்துக் கொண்டேன். நீங்களும் அதை மறந்துவிட வேண்டும்” என்று வாயெல்லாம் பல்லாக கூறி விடைப்பெற்றார் அந்த நிர்வாகி.அவர் சென்ற பிறகு மீண்டும் அஞ்சலியை அழைத்துக் காரணம் கேட்டான் கௌதமன்.


“வந்து கடைசி நிமிடத்தில், அந்த விளம்பரத்திற்கு பிண்ணணி குரல் கொடுக்கும் ஆள் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க..வேறு ஆள் தேடினாலும் குரல் சரியா அந்த விளம்பர நடிகைக்கு பொருந்த மாட்டேங்குது”


“சாரி சார்....நாங்க வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் புதிதாக வேறு ‘vo’ தேடிக் கொண்டிருந்தோம்...அதற்குள் நீங்கள்” என்றாள் தயக்கத்துடன்.


"உங்களுடைய இந்தக் கவனக் குறைவினால் நமக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா! இந்த நஷ்டம் எனக்கொன்றும் பெரிய விஷயம் கிடையாதுதான், ஆனால் நம்பிக்கை அவர் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகலாமா? பிறகு எப்படி அவர் தொடர்ந்து நம்மிடம்...”


கௌதமன் பேசும் வரை ஏதும் பேசாமல் கண்கள் கலங்கியபடி நின்றுக் கொண்டிருந்தாள் அஞ்சலி. அவளுடைய கண்ணீரைக் கண்டதும் சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், ஒருவழியாக அவள் தன் கண்ணீரை அடக்கி கொண்டு கௌதமனை நோக்கவும்,


“இதுவே முதலும் கடைசியாகட்டும்” என்று சாதாரணமாக அவன் கூறினாலும் அதை மீற யாருக்கும் துணிவிருப்பதில்லை.


“ஏன் அஞ்சலி, அந்த விளம்பர நடிகைக்கு உன் வயது இருக்குமா?”


“சார்?”


“அந்தப் பொண்ணுக்கு பதினெட்டுகூட முடியல சார்”(தொடரும்)

1 comment:

MyFriend said...

ஆஹா.. கதை கொஞ்சம் குழப்புதே.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ப்போட்டு விடையளியுங்கள். :-)