Monday, February 11, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 7

அருணாவை மணப்பதற்காக கௌதமன் அவனுடைய தாயை பிரிந்திருந்தான். அந்த வேதனையிலேயே துடித்துக் கொண்டிருந்தவனுக்கு அருணாவின் காதல் ஆறுதலாக இருக்கும் என்று மிகவும் நம்பினான். முதன் முறையாக அவளை கோவிலில் பார்த்த பொழுதே, மணந்தால் இவளைதான் மணக்க வேண்டும் என்று உறுதிக் கொண்டான். அதன்படியே தன் எண்ணத்தை செயலாக்குவதிலும் வெற்றியும் கண்டான். ஆனால் கௌதமனுக்கு தன்னைப் போலவே அருணா அதே எண்ணத்தோடு மணக்கவில்லையோ என்ற ஐயப்பாடு இப்பொழுதெல்லாம் எழுவது உண்டு.

“கவனிங்க மிஸ்டர் கௌதமன், இது ரொம்பவும் ரிஸ்க்கான வி~யம் என்றுகூட சொல்லலாம். ஆனால் எனகென்னவோ நீங்க உங்க மனைவியின் நிலைமையை சீரியசாக்குவதா எனக்கு தோன்றுகிறது.

“புரியல டாக்டர்”

“ஐ மீன் நீங்க, உங்க மனைவி இந்த குழந்தையை சுமக்கிறதை வேண்டா வெறுப்பாக நினைக்கிறீங்களோ என்கிற சந்தேகம் எனக்கு. அதுக்கு காரணமும் இருக்கு. பாருங்க மிஸ்டர், அந்த காலத்துப் போல பிரசவம் இப்பொழுது பெரிய வி~யம் கிடையாது. அந்த அளவுக்கு நவின வசதிகள் எல்லாம் வந்துடுச்சு. அதே சமயம் இதனால் நன்மையும் உண்டு கெடுதலும் உண்டு.” என்று அடுத்த குண்டை து}க்கி போடுவதற்கு ஏதுவாக தொண்டையைச் சரி செய்துக் கொண்டார்.
டாக்டர் என்ன சொல்ல வருகிறார் புரியாமல் விழித்தான் அவன்.

“உங்ககிட்ட ஏற்கனவே டாக்டர் பிரசன்னா சொல்லாமல் விட்ட வி~யத்தை நான் இப்பொழுது சொல்ல வேண்டியுள்ளது. இதுக்கு மேல் என்ன முடிவு செய்வது என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.”

ஏதோ விக்ரமாதித்தன் கதையை போல சஸ்பென்சாக அவர் ஆரம்பிக்கவும், கௌதமன் அமைதியாக அவர் முகத்தையே கவனித்தான்.

“வந்து உங்க மனைவி ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்காங்க. டாக்டர் பிரசன்னாவிடம் சரியான நேரத்தில் உங்க நண்பர் டாக்டர் இளங்கோ கொண்டு செல்லாமலிருந்தால் நிச்சயம் பிழைத்திருக்க மாட்டாங்க… அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை? காதலித்துதானே மணந்தீங்க”

“டாக்டர்”

“முதலில் முழுவதையும் சொல்லிவிடுகிறேன் பிறகு நீங்கள் என்ன செய்வது என்று முடிவெடுத்து கொள்ளுங்கள்”

“உங்கள் மனைவி முதன்முறையாக என்னிடம் ‘செக்கப்’ வந்த போது அவருடைய மெடிக்கல் ‘டெஸ்ட்’ ரொம்பவும் திருப்தியாக இல்லை. டாக்டர் பிரசன்னா கொடுத்த ரிப்போட்டும் அதைத்தான் குறிப்பிட்டது. அதனால் நானே நேரில் அவரிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசியபொழுது இந்த தற்கொலை முயற்சி பற்றி தெரிய வந்தது. இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல வந்தபோது டாக்டர் இளங்கோ தடுத்து விட்டார் போலிருக்கிறது. நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம். அவர் உங்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து பெரிய தவற்றை செய்துவிட்டார்.” தொடர்ச்சியாக பேசி வந்தவர் மேலே தொடருமுன் கௌதமன் முகத்தை ஒருமுறை பார்த்தார். அந்த முகத்தில் ஏமாற்றத்தின் அறிகுறிகள் நன்றாகவே வெளிப்பட்டது.

“அவர்கள் அப்போதே உங்களிடம் சொல்லியிருந்தால் பிரச்சினை இவ்வளவு ஆகியிருக்காது.” கௌதமனுக்கு பேச பிடிக்கவில்லை. அமைதியாக இருந்தான்.

“தனக்குத் தெரிந்த தோழிகளிடம் தூக்க மாத்திரைகளை பற்றி விசாரித்து வாங்கியிருக்கிறாள்.”

“என்ன மிஸ்டர் கௌதம் இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கிறீர்கள்? எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று யோசிக்கிறீர்களா! அருணாவே என்னிடம் ஒப்புக் கொண்டாள்”

இந்த டாக்டர் அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார், ஆனால் தனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியவில்லையே. மற்றவர் சொல்லி தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறோமே, என்று தன்னையே நொந்துக் கொண்டவனுக்கு அருணாவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஆனால் அதையும் மீறிய பச்சாதாபம். இவளுடைய தற்கொலை முயற்சிக்கு தான் காரணமாகியிருக்க கூடுமோ என்றெண்ணமே அவன் நெஞ்சினில் திகில் பரப்பியது.

“முதல் முயற்சியோடு நிறுத்திவிட்டார் போலிருக்கிறது”.

“டாக்டர் குழந்தைக்கு இதனால் ஏதாவது” குரல் தழுக்க தழுக்க பேசினான் கௌதமன்.

“குழந்தைக்கு ஏதும் பாதிப்பு உண்டா என்று சொல்ல முடியாத நிலை கௌதமன், ஆனால் உங்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்ககூடிய ஒரு விஷயம் மட்டும் சொல்ல முடியும்” விடுகதை போல் அவர் புதிர் போடவும் சற்று நிமிர்ந்து அமர்ந்து நேருக்கு நேராக டாக்டரின் பார்வையை நோக்கினான் கௌதமன். தான் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டதை அவனுடைய நேர் பார்வை உணர்த்தியது.

“சந்தோஷமான விஷயம்தான், அருணாவை ‘டெஸ்ட்’ செய்தோம் இல்லையா? அப்போது குழந்தையோட ‘பொசிஷன்’ என்ன என்பதை தெரிந்துக் கொள்ள ‘ஸ்கேன்’ எடுத்தோம், அதனுடைய முடிவில் இது வரையில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று தெரிய வந்தது” என்றார் மகிழ்ச்சியோடு.

ஆனால் கௌதமனால் இந்த மகிழ்ச்சியில் சேர்ந்துக் கொள்ள முடியவில்லை. அருணா ஏன் தற்கொலைக்கு முயல வேண்டும். பழைய விக்ரமாதித்தன் கதையில் வருவதைப்போல் பதில் தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடுவதைப் போல் தன் தலையும் வெடித்துவிடுவதைப் போல் உணரவும் சட்டென்று தன்நிலைக்கு வந்தான்.

“பாருங்க மிஸ்டர் கௌதமன், இதெல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால்”, ஒரு சில விளாடிகள் தாமதித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.” இந்த பத்து வருடத்தில் என்னோட கேரியரில் எந்தவொரு ‘பிளாக் மார்க்’கும் கிடையாது, ஆனால் உங்களுடைய மனைவியோட விஷயத்தில், சாரி நீங்க தப்பாக புரிந்து கொள்ளாதீங்க....இரண்டு கெட்டான் நிலைமைதான் எங்களுக்கு. இப்போதைக்கு எங்களால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அருணாவிற்கு ‘பிரஷர்’ அதிகமாக இருக்கிறது காரணம் ‘ஹைப்பர் டென்ஷன்’ டாக்டர் இளங்கோ உங்களுக்கு நு}ற்றுக்கு நூறு மார்க் கொடுத்தாலும் உங்க ரெண்டு பேரோட தாம்பத்ய வாழ்கையைப் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன்னு நினைக்காதீங்க, உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை? "

“எனக்குத் தெரியல டாக்டர் இந்த நிமிடம் வரைக்கும் அருணாவை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவள் கேட்டு நான் இல்லையென்று சொன்னது கிடையாது”

“சரி இதுப் பற்றி நீங்க உங்க மனைவியிடம் மனம் விட்டு பேசிப்பாருங்க, தீர்வு கிடைக்கலாம். இதை இப்படியே விட்டுவிட்டால் குழந்தையையே பாதிக்கலாம். அத்தோடு நிச்சயமாக ‘நார்மல் டெலிவரிக்கு’ வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. இந்த விஷயத்தில் நாங்க உதவ நினைத்தால் மட்டும் போதாது, அருணாவும் ‘கோப்பரேட்’ பண்ண வேண்டும்"

அவருடைய குரலில் கோபத்தைவிட அக்கறை அதிகமாக தெரிந்தது. அவருடைய அந்த அக்கறை கௌதமனை ஏதோ செய்தது. அவமானமாகக்கூட தோன்றியது. இதற்கெல்லாம் காரணமானவள் தன்னை இந்தளவுக்கு முட்டாளாக்கியிருக்கிறாள்.
டாக்டரிடம் விடைப்பெற்றுக் கொண்டு காரில் வந்து அமர்ந்த பின்னும் டாக்டர் கூறிய செய்தி அவன் மனதில் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது. அருணா மட்டும் அப்பொழுது அவன் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் அவளை ஒரு வழி பண்ணியிருப்பான். நேராக வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் அருகில் இருந்த கோவிலுக்கு தன் காரை செலுத்தினான். ஒவ்வொரு தடவையும் கோவிலுக்குச் செல்லும்போது அவனுக்கு ஓர் இனம் காண முடியாத உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் இம்முறை அப்படி தோன்றவில்லை மாறாக மிகவும் வலித்தது. அமைதியாக அங்கேயே வெகு நேரம் அமர்ந்திருந்தான். கோவிலிலிருந்து நேராக வீட்டிற்கு திரும்பினாலும் அப்போதைக்கு அவன் இருந்த மனநிலையில் அருணாவை சந்திப்பதையே தவிர்த்தான்.

அன்றைக்கே உள்மனது சந்தேகப்பட்டது, ஆனால் அப்பொழுது சந்தேகப் பிசாசு தன்னையும் அதனுடைய மாயையில் சிக்க வைக்க துடிக்கிறது என்று எண்ணியது எவ்வளவு தவறாகிவிட்டது என்று நினைத்தான். ஆனாலும் அவனுக்கு மேலும் விபரம் தேவைப்பட்டது. ஏன் இந்த அருணா தன்னை மணக்க வேண்டும், தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு வேளை அவளுக்கு தன்னைப் போல் காதல் இல்லையோ. பிறகு எதற்காக? அவனுக்கு மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. இவனுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவள் அவள் ஒருவள் மட்டுமே. இத்தனை நாட்களாக தன்னை முட்டாள் என்றல்லவா எண்ணியிருக்கிறாள். இதற்கெல்லாம் அவள் நிச்சயம் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.
சிறிது யோசனைக்கு பிறகு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனுடைய கார் நேராக ஒரு வீட்டின் முற்றத்தில் போய் நின்றது. கார் என்ஜினின் உறுமலைத் தவிர சலனமற்ற நீரோடையை போல் ஒரே நிசப்த்தமாக இருந்தது பெரிய மதில் சுவரைக் கொண்ட அந்த வீடு. கிட்டதட்ட கௌதமனுடைய நிலைமையும் அப்படித்தான். பார்வைக்கு அவன் முகம் அமைதியாக தோன்றினாலும், அந்த அமைதியை சீர்குலைக்கும் திணவுடன் அவனுடைய உள்மனது சீறிக் கொண்டிருந்தது. அப்படியே வெகுநேரம் காரிலேயே அமர்ந்திருந்தான். அந்நேரம் பார்த்து எங்கோ வெளியே போவதற்காக வீட்டின் உள்ளேயிருந்து பாய்ந்தபடி வந்த கார் கௌதமனுடைய காரைக் கண்டதும் நின்றுவிட்டது.

காரிலிருந்து இறங்கிய பெண் ஒருத்தி அவனது காரை நோக்கி வருவதைக் கண்டதும், கௌதமன் தன் காரை விட்டு இறங்கி அந்தப் பெண்ணை எதிர்க் கொண்டான்.

“வாங்கண்ணா ஏன் வெளியிலேயே ‘வெயிட்’ பண்ணுறீங்க” என்று குழந்தையை போல் மிளற்றியவள்,
“இளங்கோ அண்ணா முக்கியமான ‘கான்பிரன்ஸ்’காக ‘மொரிஷியஸ்’ போயிருக்காங்க அடுத்த வாரம்தான் வருவாங்க. அருணாவை கூடவே கூட்டி வந்திருக்கலாமே” என்ற பொழுது அவளுடைய குரலில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படவில்லை. ஒரு வேளை தனக்கு சொல்லாது விட்டதைப் போல் இவர்களுக்கும் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

“பரவாயில்ல கவிதா நான் பிறகு வரேன்” என்று கிளம்பியவனை அவள் அந்த கவியின் குரல் தேக்கியது.
“ஏன் அண்ணா...ஏதாவது அவசரமாக சொல்ல வேண்டுமா”
கேள்வியோடு நோக்கியவனை, “இல்லை அன்றாடம் அண்ணா போன் செய்வார்... அதான் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டேன்?”

“இல்லை வேண்டாம் கவிதா. இளங்கோ வந்ததும் பார்த்துக் கொள்கிறேன். சரி நான் கிளம்புறேன்ம்மா” என்று அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு காரில் வந்து அமர்ந்தவன் காரை நேரே தன்னுடைய அலுவலகத்திற்கு செலுத்தினான்.
ஆனால் பாதி வழியிலேயே ஏதோ மனதில் உறுத்த டாக்டர் பிரசன்னாவை நாடிச் சென்றான். அவர் அவசர வேலையாக வெளியே சென்றிருந்ததால் வெகு நேரம் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. நீண்ட நேரம் கழித்து வந்த டாக்டர் பிரசன்னா அங்கே கௌதமனை காணவும் மெல்லிய தலையசைப்புடன் அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.
“அப்புறம் மிஸ்டர் கௌதம் ‘பிசினஸ்” எல்லாம் எப்படி போகுது” வழக்கமான முகமன்களுக்கு பிறகு நேரிடையாக விஷயத்திற்கு வந்தார்.

“என்ன கௌதம் ஏதாவது முக்கிய விஷயமா?” தெரிந்தும் தெரியாததை போல் வினவினார்.

“அருணா”

“ம்ம்ம்......டாக்டர் கௌசல்யா எல்லாம் சொல்லிவிட்டார்! இல்லையா?”

“ஏன் டாக்டர் என்னிடம் சொல்லவில்லை” என்ற போது கௌதமனுடைய குரல் தடுமாறியது. முடிந்த வரை தன் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசினான். இவர் மட்டும் ஆரம்பத்திலேயே தன்னிடம் சொல்லியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கௌதமன் ஒன்றும் சுயநலவாதியல்ல தன் சுகத்தை மட்டும் பெரிதாக நினைப்பதற்கு. உண்மையிலேயே அருணாவிற்கு இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லையென்றால் நிச்சயம் அவளை வற்புறுத்தியிருக்க மாட்டான். என்ன கொஞ்ச நாள் வருத்தப் பட்டிருப்பான் அவ்வளவுதான். அதிலும் அருணாவை உள்ளங்கையில் வைத்து தாங்குபவன். கொஞ்ச நாள் போகட்டும் என்று அவள் போக்கிற்கே விட்டுப் பிடித்திருப்பான். அதிலும் கௌதமன் ஒரு வியாபாரி. விருப்பமில்லையென்று விலகிச் செல்பவரையும் விரும்பும்படி செய்துவிடுவான். அருணாவிடம் மட்டும் தோற்றுவிடவா போகிறான். ஆனால் இவையெல்லாம் அவனுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், ஆனால் இப்பொழுது காலம் கடந்துவிட்டது.

“சாரி கௌதம் ..... நான் சொல்ல வந்த போது டாக்டர் இளங்கோ தடுத்துவிட்டார்.
இனி இவரிடம் பேசுவதற்கும் ஒன்றுமில்லை என்றெண்ணியவனுக்கு அங்கு நிற்பதே கஷடமாக இருந்தது.

“சில சமயங்களில் உண்மை மறைக்கப்படுவதில் தவறில்லை கௌதம், அதனால் பிறருக்கு நன்மை ஏற்படும் என்றால்”

விடைபெறும் போது இறுதியாக டாக்டர் கூறியது, இன்னமும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் யாருக்கு நன்மையென்றுதான் கௌதமனுக்கு புரியவில்லை. உண்மையாக சொல்ல போனால் இதனால் விபரீதமான விளைவுகளே தவிர நன்மை கிடையாது. நடக்க போகும் விபரீதம் பற்றிய நினைவில் கௌதமன் வெல வெலத்துப் போனான். அலுவலகத்திற்கு சென்று தன் அறையில் அமர்ந்த பின்னும் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அருணாவையே சுற்றி சுற்றி வந்தது. என்ன மாதிரியான பெண் இவள். தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ள எண்ணும் அளவிற்கு என்ன வந்துவிட்டது. அவள் மேல் எவ்வளவு காதல் கொண்டிருந்தேன். அனைத்தையும் ஒரே நொடியில் கொன்று விட்டாளே என்று தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தான் கௌதமன். ஆனால் உண்மையில் அவனுடைய அன்பை கொன்றுத்தான் விட்டாளா? என்பது கேள்விக்குறியே!

1 comment:

ரசிகன் said...

z//“சில சமயங்களில் உண்மை மறைக்கப்படுவதில் தவறில்லை கௌதம், அதனால் பிறருக்கு நன்மை ஏற்படும் என்றால்”//

ரிப்பீட்டு..

கதை நல்லாயிருக்குங்க..:)