Friday, December 19, 2008

கடவுள்...காதல்...நாரதர்

இவ்வளவு நாள் சுமந்த வலி... இன்னிக்கு கடைசியா அனுபவிச்சிடுறேன் நாளைக்கு வழக்கம்போல் உன் கூட சண்டை போட ஆரம்பிச்சிடுவேன் கோபப்படுவேன்

ஏதோ முன் ஜென்மத்துல நான் நிறைய புண்ணியம் செஞ்சுட்டேன்னு நினைக்குறேன் அதான் இந்த தடவை உங்கிட்ட மாட்டிக்கிட்டேன்

ஏன்...இனிமே இல்ல

அப்ப இனிமே சண்ட போட மாட்டீயா?

சந்தோஷம்தானே?

இல்ல சோகம் தான் நீ சண்டை போட்டாத்தான் எனக்கு சந்தோஷம் நீ கோவப்படலைன்னா எனக்கு அன்னிக்கு வேலை ஓடாது. ஆக நீ தாராளமா சண்டை போடலாம்.. கோவிசுக்கலாம்...கவிதை எழுதலாம்

தெரியலையே..என்னையே நான் இழந்துக் கொண்டிருக்கேன்

நான் அப்புறம் நிசமாவே உன்னை திட்டிடுவேன். உன்னோட சுயத்தை என்னிக்கும் இழக்க தேவையில்ல எனக்குத் தெரியும் நீ தைரியமான பொண்ணு...ஆனா உண்மைதான் எனக்கும் வலிக்குது என்னோட வலிதானே உனக்கும் இருக்கும்னு யோசிச்சா நீ சொல்றது சரிதான்னு தோணுது

நன்றி இந்த புரிதலுக்கு

அதுக்காக நீ அழுதா எனக்குப் பிடிக்காதே ரொம்ப அசிங்கமா இருக்குமே முகம்

நான் அழவே இல்ல ஒரு வேளை அழுதா மன பாரம் இறங்கிடுமோ என்னவோ

மனசுல பாரம் குறையும்னு நினைச்சு அழுதா ஓக்கே, ஆனா அதையே பாரமா தூக்கி சுமக்குறா மாதிரி இருந்தா கஷ்டம்

ம்ம்ம் வலி இருக்குது..ஆனா அழுகை வரல...ஏன் கவிதைக்கூட வரல

ஒரே ஒரு தடவ உன்னை லூசுன்னு திட்டிக்கட்டா

உண்மை அதானே

அதெல்லாம் இல்ல... நான் சும்மா கலாய்ச்சேன்ஆமாம் நீ மாத்திரம்தான் என்னைய கலாய்ப்பியா நானும் உன்னைக் கலாய்ப்பேன்

ம்ம் சொல்ல மறந்துட்டேன்...சாரி நேத்து தப்பா பேசிட்டேன் இல்லையா

நானே உங்கிட்ட சாரி கேக்கணும்னு நினைச்சேன் ச்சும்மா உன்னைக் கலாய்ச்சுட்டேன்...சாரி! அது ரொம்ப மனசு சரியில்ல...அதான் பீர் அடிக்கலாமுன்னு நெனைச்சு ஆனா அத உங்கிட்ட சொல்வான்னு எனக்குத் தெரியாது. எனக்கு வேற பயம் நீ ஏதாவது கோச்சுப்பீயோன்னு...கோபம்
இல்லியே

ம்ம் கோபம்தான் ஆனா அதுக்கு உரிமையில்லன்னு புரியாம்மா உன்னோட அனுமதியற்ற எல்லையை மீறிட்டேன்.. இனி இல்லை

அப்ப நான் இன்னிக்கு மறுபடி பீர் அடிக்கட்டுமா

அது உன் இஷ்டம்

கோச்சுட்டீயா?

எனக்கு எந்த வித கோபமும் இல்லை

எதுக்கு கோபம் இல்ல

அந்த பயணங்கள் முடிவதில்லை படத்துல்ல மோகன் பாடும் பாட்டு என்ன?

அந்த படத்துல எல்லா பாட்டையும் மோகன் தான் பாடுவாரு எந்த பாட்டு முதல் பாட்டா

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காலமே வானமே வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வான வீதியில் வெள்ளி ஊர்வலம் போகும் போதிலே ஆறுதல் தரும் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

போதுமே!!!

எனக்கு இந்த பாட்டு மனப்பாடம் அதான் உடனே பாடிட்டேன்

உங்கிட்ட அந்தப் பாட்டு இருக்கா?

எது இந்த பாட்டா இல்ல ஆனா நெட்ல இருக்கும்ன்னு நினைக்குறேன்...
நான் கவிதை எழுதி இனிமே யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டேன்

ஏன்?

நீயே எழுதாதப்ப நான்லாம் எந்த மூலைக்கு

எனக்கு .....ப்ப்ப்ச்ச்... கண் இமைகள் கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே...உன் செவியில் விழவில்லையா...உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே - இந்த பாட்டுல்ல ரொம்ப பிடிச்ச வரி ஆனா எல்லா வரியும் பிடிக்கும்

உண்மையிலேயே நல்ல பாட்டு எனக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு.. ஒரு கவிதை சொல்லேன்

என்னோடதா

இல்ல நீ படிச்ச உனக்கு ரொம்பவும் பிடிச்ச கவிதை சொல்லு

பிரிவு உன் நினைவுகளை
உருப்பெருக்கிக் காட்டுகையில்
சிறிதிலும் சிறிதாய்
சிறுத்துப் போகின்றன
உன் குற்றங்களும்
என் கோபங்களும்...

காயத்ரியோட கவிதையிது

உச்சரிக்க விரும்பா உதடுகள்
இப்போது மெளனம்
பேசப் பழகுகின்றன.
நினைவுகள் உரசிக் கொண்டதில்
மெதுவாய் வெந்து தணிகிறது காடு.... இதுவும் காயத்ரியோடதுதான்

நான் பெரிய தப்பு பண்ணியிருக்கேன்... உன்னிடம் பேசியது நீ யாருன்னே தெரியாமல் இப்போ என்கிட்ட மாட்டிக்கிட்ட

இப்ப தெரிஞ்சுடுச்சுல்ல இனி பேசாதே

ம்ம்ம்... இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் கூட எழுதலாம்

ஆனா நான் கமெண்ட் பண்ணமாட்டேன்

ஏன்...என்னாச்சு?

ஏன்...நீ கூடத்தான் என்னோட துயர்மிகு வரிகள்ல பங்கெடுத்துக்கல

ரெண்டு ஏனுக்கும் ஏழு வித்தியாசமிருக்கு

ஹா ஹா ஹா

ம்ம்ம்... அது...அப்போ நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்தேன்

ஆமா நாங்க பயங்கர ஸ்டடியா டான்ஸ் ஆடிட்டு சந்தோஷமா இருந்தோம்
நீ உண்மையிலேயே நான் உன்னை காதலிப்பேன்னு எதிர்ப்பார்க்கலையா??

இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன் ஆனா நினைக்கிறது என்னிக்கு நடந்திருக்கு பிடிச்ச பழைய பாட்டு ஒன்னு இருக்கு நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

சரி நம்ம சந்தோஷத்துக்காக என்னால ஒண்ணுதான் செய்ய முடியும் ஒன்னு நீ என்கிட்ட பேசாம இருக்கணும் இல்ல நான் உன் கூட பேசாம இருக்கணும்

ம்ம்ம்ம்

எனக்கும் ரொம்ப கஷ்டம்தான்

முடியுமா???

தெரியல

இந்த ஒரு நாளில் முடிஞ்சதா?

சும்மா மத்தவங்ககிட்ட நீ வந்தியா.. வந்துட்டு போயிட்டீயான்னு கேக்க முடியல... கஷ்டமா இருக்குது... இல்ல முடியல.. எவ்வளவோ டிரை செஞ்சேன் உன் கூட பேசாம இருக்க சத்தியமா முடியல... உனக்கு என்னை பிடிக்கலையா? விரும்பலையா?

நீ கொஞ்சம் நல்லவன்

ஜோக் வேணா சீரியசா சொல்லு

என்ன?

பிரிஞ்சுடலாம்ன்னு சொல்றதுக்கு கூட தப்பா தோணுது

எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்... அம்மாவை உனக்குப் பிடிக்காதா..நீயும் அந்த மாதிரிதான் எனக்கு அதனாலத்தான் சண்டைப் போடுறேன்..வம்பிழுக்கிறேன்..

ஒத்துக்கறேன்...ஆனா நான் உன் கூட வாழ விரும்பறேன்... கல்யாணம் செஞ்சுக்கிட்டு

ப்ளீஸ் இந்த பேச்சு வேண்டாமே

நமக்குள்ள நிறைய வித்தியாசம் இருக்குது!!!
இல்ல பிரிஞ்சுடுவோம்ன்னு சொல்றதுக்கும் முடியல பின்ன ஏன்?

அன்னிக்கு நீ சொன்னப்ப நான் கொஞ்ச நேரம் சைலண்ட்டா ஆகிட்டேன் தெரியுமா..நீ போன பிறகு அழுதேன்..சத்தியமா... நான் உன் கிட்ட ஏதாவது தப்பா பழகிட்டேன்னோன்னு குற்ற உணர்ச்சி

அப்ப என்னை பிடிக்கலைன்னு நான் எடுத்துக்கட்டா

ப்ளீஸ்...

நான் தான் தப்பா நினைச்சுட்டு இருந்தேன்னு நினைச்சுக்கறேன் உண்மையிலேயே என்னால தூங்க முடியல...சாப்பிட பிடிக்கல ஏன் உங்கிட்ட பழகுனேனோன்னு தோண வைக்குது... உன் மேல தப்பில்ல நானா ஏற்படுத்திக்கிட்ட சூழல்தான் இது

எனக்குத் தெரியாமலே இருக்கட்டுமே...

நான் அனுபவிக்கிறேன்... அவ்வளவுதான்

ம்ம்ம் கொஞ்ச நாள் போனா பழகிடும்

கடைசி வரைக்கும் நான் சொல்லக்கூடாதுன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன்
ஆனா முடியல நானே அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கல... சொல்லிட்டேன்
நீ உன் விருப்பத்தை சொல்லிட்ட... விட்டுருக்கலாம்... அத்தோட முடியல இன்னிக்குப்பூரா உங்கிட்ட பேசக்கூடாதுன்னு உட்கார்ந்திருந்தேன்... மத்தவங்க கிட்டத்தான் பேசிட்டு இருந்தேன்

தெரியும்!!! நானும் பேசக்கூடாதுன்னுதான் நினைச்சேன்

ஆனாலும் முடியல...தெரியல என்னோட கோபம், பிடிவாதம் எங்க போச்சுன்னு தெரியல

என்ன சொல்றதுன்னு தெரியல்ல

உண்மையிலேயே என்னை விரும்பலையா.. இல்ல சமூகத்த நினைச்சு மாட்டேன்னு சொல்றீயா.. நான் இந்து, நீ கிறிஸ்டியன்னு..அப்படி பாத்தா உன்னோட பிரண்டு இந்து கிறிஸ்டியனை கல்யாணம் செஞ்சுக்கலையா?

அவளோடது லவ் மேரேஜ்

நான் உன்னை ரொம்ப முன்னாடியே விரும்ப ஆரம்பிச்சுட்டேன். நான் உன்னை காதலிச்சுடக்கூடாதுன்னு கூட கட்டுப்பாடு விதிச்சுட்டு இருந்தேன் ஆனா மனசு கேக்கல நாம ரெண்டு பேரும் கண்டிப்பா சேர முடியாதுன்னா எதுக்கு வேஷம் போடனும் சும்மா...முடியாதா முடியாது ஓக்கே பை அவ்ளோதான்

மனசுக்கு முக்கியம் கொடுத்து வாழ்க்கையை தொலைச்சிடாத அதிலும் நாம்ம கடைசியா சந்திக்கிறோம்... ஏன் அவ்வளவு சீக்கிரமா போகணும் அப்புறம் நீயே விருப்பப் பட்டாலும் இது நேராது

எனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடுச்சு... சொந்த ஊருக்கே போறேன்.. போறத்துக்கு முன்னாடி உன்னை கடைசியா பார்க்கனுமுன்னு தோணிச்சு... அதான் உனக்குப் பிடிச்ச காப்பி ஷாப்புக்கு கூப்பிட்டேன் ஆனா உங்கிட்ட இருந்து எஸ்.எம்.எஸ்ஸையேக் காணோம்

அப்ப நாளையிலிருந்து என்கிட்ட சண்டைப் போடுவேன்னு சொன்னது பொய்தானா? என் மனசு மாறுமான்னு தெரியல.. மாறனுங்கற அவசியமும் இல்ல இப்படியே இருந்துடலாமுன்னு தோணுது இது என்னோட வாழ்க்கைன்னு முடிவானப்பிறகு என்னோட முடிவாத்தான் இருக்கும்

மாறுவது மனம்... உனக்கான ஒருத்தி ஏற்கனவே எங்கேயோ பிறந்து உனக்காக காத்திருக்கா..நீதான் இனி அவளை தேடிக் கண்டுப்பிடிக்கனும்

அவ கிடைக்காம போயிட்டான்னு நினைச்சுக்கறேன்...
அது நீதான்னு என் மனசு சொல்லுது அது தப்பா சொல்லாது

உனக்கும் எனக்கும் நிறைய வேறுபாடு... இன்னிக்கு இல்லாட்டியும் நாளைக்கு யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்.. இன்ஃபாக்ட் என் வீட்லயும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடாங்க... ஆனா நீ மட்டும் இப்படியே இருந்திடக் கூடாது!!!

உனக்கு என் வாழ்த்துக்கள்.. அன்பான அழகான உன் மனசுக்கு பிடிச்ச கணவர் வரணுங்கறது என்னோட சாபம்.. அவருக்கு உன் கவிதைகள் ரொம்ப பிடிச்சுருக்கணும் உன்னை பாராட்டணும். உங்கூட அன்பா இருக்கணும்
அது போதும்... நிறைய்ய குழந்தைங்க பொறந்து நல்லா வளர்த்து நல்லா படிக்க வை...

ஏன் கிழவன் மாதிரி பேசுற

இனிமேல் நாம ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சுக்கப்போறதில்ல
இது என்னோட உனக்கான கல்யாண வாழ்த்தாவும் இருக்கட்டும்

ம்ம் சரி நான் கிளம்பட்டா

நான் நிறைய கவிதை எழுதுவேன் நீ கமெண்ட் போடக்கூடாது... அதை பாராட்டக்கூடாது

ம்ம்ம்... ஆனா நான் கண்டிப்பா படிப்பேன்

ம்ம்ம்... படிக்கணும் ஆனா கமெண்ட்ஸ் வேண்டாம்... நானும் உன்னோடது படிப்பேன்

இனி நான் எழுதப் போறதில்ல

ஏன்??? சரி உன் இஷ்டம்.. ரொம்பவும் கஷ்டமா இருந்தா கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோ... ஆனா எழுதாம்ம இருக்காத

பார்க்கலாம்... கடைசியா ஒன்னு சொல்ல விரும்புறேன்

ம்ம்ம்

எனக்கு நிச்சயிக்கப்பட்ட நண்பன் நீ... என் மனசுக்கும் ரொம்ப பிடிச்ச நண்பனும் நீ!!!

நான் அந்த தகுதிய இழந்துட்டேன்னு தோணுது

சந்தோஷமா இரு... நான் வேண்டிப்பேன்..உனக்காக எப்போதும்... பை

உனக்கான என் நேசம் என்னிலேயே புதைந்து போகட்டும்..
பை... வில் மிஸ் யூ!!! டேக் கேர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இவர்களின் உரையாடலை வெகு தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கடவுள் நாரதரிடம், " காதல் என்ன அவ்வளவு கொடுமையானதா நாரதா?"

"அதை சிருஷ்டித்தவரே கேட்பதுதான் கொடுமை"

"அவள் இதயத்தில் அவனுக்கான காதலை விதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது"

நாரதர் பேசவில்லை புன்னகை மட்டுமே பதிலாய்!!!

உன் புன்னகை போதும்


ஓர் அதிகாலையில் அவசரமாய்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...

நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
தொலையாமலே
காலைச் சுற்றும்
பூனைக்குட்டியாய்
வீடும் வந்து
சேர்கிறது...

இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!
Thanks : Pino Daeni

Tuesday, December 16, 2008

கனாக் கண்டேன் தோழி!!!

அதிகாலை சோம்பல்
முறித்து வெளி
வாசலில்
காத்திருக்கிறாய்
நான்
கோலமிட
வருவேன் என்று!!!
நானோ
வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த
வெட்கங்களோடு!!!
முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என்
பெண்மை!!!

சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன்
பார்க்க வேண்டுமென்று!!!
நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!
எனக்கு இந்த
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
என்றாய் வெகு
யோசனையாய்...
தெரியுமே பொங்கலுக்காக
என்றேன் குறும்பாய்
ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட என்றாய்
கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!

Friday, December 12, 2008

திருமண நாள்


இன்று காலை 6.30க்கு கைப்பேசி தன்னுடைய அன்றாட கடமையாய் ‘சஷ்டி கவசத்தை’ ஒலிப்பரப்பவும்... வழக்கம்போலவே கம்ஃபோட்டரை இழுத்துப் போர்த்திக் கொள்ள கைகள் எத்தணித்தது... ஆனாலும் இன்றைக்கு அலுவலகத்துக்கான சுடிதாரை ‘அயர்ன்’ செய்யவில்லையே என்ற நினைவு அநியாயமாய் வந்து துன்புறுத்த... எரிச்சலோடு முன்னறைக்கு எழுந்து வரவும்...பக்கத்து வீட்டில் பேரிரைச்சல்.. இது எனக்குப் பழகிப் போனதுதான் இந்த இரண்டு ஆண்டுகளாய்..ஆனாலும் இந்தக் காலைப் பொழுதில் கொஞ்சம் அலுப்பாகவும் இருந்தது.


எனக்குத் தெரிந்து என் பக்கத்து வீட்டுக்காரர் மெதுவாகவே பேசிக் கேட்டதில்லை.. கத்திக் கொண்டேத்தான் இருப்பார் மனைவியிடமும் சரி பிள்ளைகளிடமும் சரி... என் தம்பிக்கூட இவருக்கு மெதுவாக பேசவே முடியாதா அக்கா என்று என்னிடம் பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறான். சில சமயம் “நான் போய் அவருகிட்ட சொல்லப் போறேன், மெதுவா பேசுய்யான்னு” என்று மிரட்டியும் இருக்கிறான். எனக்கு இது ஏற்கனவே பழகிப் போயிருந்ததால் “விடு..எப்படியோ அவருக்குத்தானே பிரஷர் வரப்போகுது” என்று சமாதானப் படுத்த வேண்டியிருக்கும். ஆனால் இன்று காலையில் அவர் மனைவியிடம் சண்டைப் போட்டதற்கான காரணம் ரொம்பவே அல்பமான விசயம். இது எனக்கு எப்படி தெரியுமுன்னா? அதான் முன்னமே சொன்னேன்னே..அவர் பேச மாட்டார் கத்துவார் என்று...


காலையில் அவர் 6.30க்கு வேலைக்குக் கிளம்பும் போது அவர் மனைவி அவருக்குப் பால் கலந்து கொடுக்கவில்லையாம். பாலூத்தாம்ம... விட்டாங்களே மகராசி அதுக்காகவேணும் அவர் அவங்களுக்கு கோயில் கட்டணும்.நான்கூட அயர்ன் பண்ணி முடிச்சிட்டேன் ஆனா அவர் அந்த பால் பல்லவியை விடவேயில்லை..கிட்டதட்ட 20 நிமிடங்கள். எனக்குத் தெரிந்து அவர் மனைவியும் வெளியில் சென்று வேலை பார்ப்பவர்தான்.. ஏதோ மறதி....அல்லது களைப்பு என்று விட்டிருக்கலாம். ஆனா அவர் மனைவியை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள்தான்... எனக்கும் ரொம்ப நாளாகவே சந்தேகம்தான் இந்த மனுஷன் என்ன ‘சைக்கோ’வா என்று இன்று அது உறுதியாகிடுச்சு. அவர் மகன் வந்து சமாதானப் படுத்தியும் ம்ஹூம் சமாதானமாகவேயில்ல.. எப்படித்தான் அவர் மனைவி அவரோடு ஒத்துப் போறாங்களோ? இத்தனைக்கும் அவங்க அவருக்கு இரண்டாம் தாரம். இவரோட ‘டோச்சர்’ தாங்க முடியாமலே இவருடைய முதல் மனைவி இவரை விட்டு எஸ்ஸாகியிருக்கணும் என்பது என்னுடைய கணிப்பு.


அழகான காலையில் யாராவது மனைவிக்கிட்ட இப்படி சண்டைப் போட்டுட்டு வேலைக்கு கிளம்புவாங்களா? அதுவும் பால் பெறாத விசயத்து..ஆஹா இன்னிக்கு எஸ்கேப்...ன்னு சந்தோஷப்பட்டிருக்க வேண்டாமா? எங்க வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னா அப்பாவே தனக்கு சொந்தமா தேநீர் கலந்துக் கொள்வார். அவருக்கு என் மேல் அவ்வளவு பாசம்....சரி...பயம். :-P சில சமயம் தம்பி அதிகாலையில் 3.00 மணிக்கு வெளியூர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்தால்..அவனுக்கும் அப்பாவே காப்பி கலந்தும் கொடுப்பார். இவ்வளவுக்கு வீட்டில் நான்..அக்கா இருந்தும். :-) சில சமயம் அம்மாவை தள்ளி நிறுத்தி வைத்திட்டு அப்பா சமைப்பார்.. அதுவும் நல்லாயிருக்கும்..


இன்றைக்குக் காலையில் வெகு நேரம் இதுப் பத்தியே யோசனை ஓடிக்கிட்டு இருந்தது. என்னால் அப்படி அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி மாதிரி பொருத்துப் போக முடியுமா என்று... ம்ஹூம் அதுக்குச் சான்ஸே இல்ல.. வேணும்னா சூடான பாலை கொண்டு வந்து அவர் தலையில் கொட்டியிருப்பேன். :-P கற்பனைப் பண்ணிப் பார்த்துச் சிரிச்சுட்டேன். பின்ன என்னங்க தொட்டதுக்கெல்லாம் சண்டைப்பிடிச்சா.. ஊடல்கூட காதல்தான் தாம்பத்யத்தில்.. ஆனா இது ரொம்பவே ஓவரு.. எனக்கெல்லாம் அந்தளவுக்கு சகிப்புத்தன்மை கிடையாது.


சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ எதுக்கு புலம்பறன்னு கேட்டீங்கன்னா... இன்றைக்கு அம்மா.. அப்பாவின் திருமண நாள். இந்தச் சமயத்தில் அவங்களுக்காக பிராத்தித்துக் கொள்கிறேன். வாழ்த்த வயசில்லையே!!!

மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள் அம்மா..அப்பா..!!!

அன்பில்லாத உனக்கு!!!

அப்படித்தான் அழைக்கத்
தோன்றுகிறது உன்னை...

எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...

இன்றோ என்னை
சந்தோஷிக்க விரும்புகிறாய் நட்பாய்...

இருந்தும் உனக்குத்
தெரியாமலே
உனக்கு முன்பே நான்
வாழ ஆரம்பித்து விட்டேன்...

தினமும் மழையில்
நனைகிறேன்...

இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...

தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...

இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...

ம்ம்ம்ம்...

ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...

தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!

அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....

"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"

பிரிவுகள் சாஸ்வதமல்ல... ஏன் நீ...நான்... யாருமே

"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி

பி.கு: அன்பின் பதிவுலக மக்கட்கு, இது கவுஜ, கவிதை என்று நான் வகைப்படுத்தவில்லை :-P அதனால் தைரியமா நீங்க கும்மி அடிக்கலாம் :-)

Wednesday, December 03, 2008

எதிர்பார்க்கவில்லை நான் :-(

நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?


Myspace Graphics