Wednesday, February 25, 2009

பார்வையென்னை....EVIL HAS A DESTINY
வித்தியாசமான இசைக் கோர்ப்பு...வசீகரிக்க வைக்கும் குரல்கள் குறிப்பாக சுகன்யாவின் குரல்...

இப்பாடலின் வழி, அட! போட வைக்கிறார்கள் மலேசிய இசைக் கலைஞர்கள். இசை சொன்னதையும் சொல்லும் சொல்லாததையும் சொல்லுமென்பதற்கேற்ப இனிமையான பாடலிசை. அவசியம் நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள்.


உருவம் மலேசிய டெலிமூவி

பாடகர்கள் : சுகன்யா & கே.கே கண்ணாபதிவிறக்கம் செய்ய

Saturday, February 14, 2009

சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!!!


ஜாதியில்லை மதமுமில்லையென்று
யார் சொன்னது?
உன் காதலுக்கு
ஜாதியுமுண்டு மதமுமுண்டு
இதயம் மட்டுமில்லை!!
காரணம் நீ
கண்களைத் தந்து
இதயத்தை
வாங்கிக் கொண்டவன்...!!!


-->>@@@இராஜேஸ் அக்காவுக்காக@@@>>--


என் உளறலையெல்லாம் கவிதையென்று நம்பும் பதிவுலக நண்பர்களுக்கு இனிய அன்பர் தின வாழ்த்துகள் :-)

மௌனமும் காதல்தான்


உன்னைவிட உன் மௌனம்
எனக்குப் பிடிக்கும்...
உன் மௌனங்களில்
உறைந்து வழிவது
என் காதல் அல்லவா?
மௌனங்கூட
காதல்தான்
உன்னில் அறிந்துக் கொண்டேன்
இப்போது!!!

நன்றி: சாகித்யா

Sunday, February 08, 2009

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!!!

தை மாதம் பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருவிழா இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மலேசிய நாட்டின் புகழ்பெற்ற முருகனின் புண்ணிய தலங்களில் மூன்றாவதாக வருவது ஈப்போ கல்லுமலை, அருள்மிகு சுப்ரமணியர் ஆலயம். மலைகளிலையே வாசம் செய்யும் கந்தன் பக்தர்களின் அன்புக்கு மனமிறங்கி மலையடிவாரத்திலே அருள் பாலிக்கிறான். குனோங் செரோ மலை அடிவாரத்தில் இந்த கல்லுமலை அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே பழைய குகைக் கோவில் அமைந்துள்ளது. 1970களில் ஏற்பட்ட மலைச் சரிவுக்குப் பிறகு மலையடிவாரத்தில் புதிய கோவில் கட்டமைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மலேசியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்லுமலை முருகனை தரிசிக்க பக்த கோடிகள் வருடா வருடம் வருகைப் புரிகின்றனர்.

இவ்வருடமும் குடும்பத்தினருடன் கல்லுமலை முருகனை தரிசிக்க சென்றிருந்தேன். முற்பகல் பதினொன்றை நெருங்கி விட்டது கோவிலை அடையும் போது. கார் நிறுத்த இடம் கிடைக்க சிரமமாயிருப்பினும் ஒரு வழியாய் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம். வழக்கமாய் அர்ச்சனை தட்டின் விலை 4 வெள்ளியாகும். இவ்வாண்டு ஆறு வெள்ளி. அர்ச்சனை சீட்டின் விலை மூன்று வெள்ளி. மற்ற மாநில கோவிலோடு ஒப்பிடும் போது இது மலிவாகும்.

கடந்த ஞாயிறு இக்கோவிலுக்கு சஷ்டிக்காக சென்றிருந்தப் போது சிட்டுக் குருவிகளின் சரணாலயமாய் இருந்தது. இன்று ஏனோ காணவில்லை. விரட்டி விட்டார்களோ என்னவோ? பிள்ளையார் மற்றும் அம்மன் பிரகாரத்தைப் புதுபித்துள்ளனர்.

கோவிலில் இவ்வாண்டும் மக்கள் நெரிசல் அதிகமாய் இருந்தது. உடல்நிலை சரியில்லாததால் மயங்கிவிடுவேனோ என்று கோவிலுக்குள் நுழைய கொஞ்சம் அச்சமாய் இருந்தது. ஆனாலும் அவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டோடு வரிசையில் கிட்டதட்ட 1 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவ்வளவு நெரிசலிலும் மயக்கம் வரவில்லை. :-) கால் கடுக்க காத்திருந்தாலும் முருகனை நிம்மதியாய் நீண்ட நேரம் தரிசிக்க முடிந்தது. அர்ச்சனையும் தரிசனமும் முடிந்து கோவிலை சுற்றிக் கொண்டு ஒரு வழியாய் வெளியேறினோம்.

ஈப்போ கல்லுமலை தைப்பூசத் திருவிழா நேற்றுத் தொடங்கி நாளை வரை தொடரும். புந்தோங் மாரியம்மன் கோவிலில் இருந்துப் புறப்பட்ட முருகனின் இரதம் கல்லுமலையை அடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குத் தொடங்கிய பாலாபிஷேகம் காலையில் முடிவுற்றது. சில சமயம் முருகனுக்கு அதிகாலையில் இப்படி பால் அபிஷேகம் செய்யும் போது பாவம் அவனுக்கு குளிராதா என்று நினைத்துக் கொள்வேன். குளிர வைக்கத்தானே இந்த அபிஷேகமே :-) இவ்வருடம் நான் பால் குடம் எடுக்கவில்லை. அது நிறைய வருத்தம்தான் ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற முடியவில்லை. அடுத்த வருடம் அவசியம் எடுக்க வேண்டும். கல்லுமலை தைப்பூசத்தின் சிறப்பே பால் குடம் எடுப்பதுதான். கிட்டதட்ட 1இல் இருந்து 2 கிலோ மீட்டர் வரையிலும் பக்தர்கள் வரிசைப் பிடித்து அமைதியாய் காத்திருப்பது பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாய் பால்குடம் எடுக்கின்றனர். முக்கியமாய் பள்ளி மாணவர்கள்.

கோவிலுக்கு வெளியே காவடிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது பயங்கரமான தோற்றத்தோடு நான்கைந்து இளைஞர்கள் சாட்டையோடும் சூலத்தோடும் மருள் வந்து ஆடிக் கொண்டிருந்தனர். தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ள முருகன் இம்மாதிரி கேட்கவில்லையே. ஏன் சமயம் என்ற போர்வையில் இப்படி நடந்துக் கொள்கின்றனரோ புரியவில்லை. அதிலும் கோவில் அருகில் அவர்கள் ஆடிய ஆட்டம். உண்மையில் மருள் வந்து ஆடுகின்றனரா இல்லை சும்மாவே ஆடுகின்றனரா தெரியவில்லை. கோவில் நிர்வாகம் எவ்வளவோ அறிவுறுத்தியும் இப்படி நடந்துக் கொள்கின்றனர்?

நேற்றைய தனியார் தொலைக்காட்சியின் மலாய்ச்செய்தி அறிக்கையில் தற்போதைய தைப்பூசத் திருவிழா அதீதமாய் கொண்டாடப்படுவதாய் குறிப்பிட்டிருந்தது. உண்மைத்தான்... உலக மக்களை அதிகமாய் ஈர்க்கும் இந்தச் சமயப் பெருவிழா மற்ற இனத்தினருக்கு கேலிக் கூத்தாகிவிடக் கூடாதே என்ற ஐயம் எழுகிறது. இனி வரும் காலங்களிலாவது நம்மவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்களா?

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!

Saturday, February 07, 2009

சொல்ல மறந்தவை...

காலம் நமக்குப் பணவியலை அறிவுறுத்தி வாழ்வியலை வசப்படுத்தினாலும் நிமிர்ந்து நின்று திணவுடன் சிரிக்கிறது தாய்மொழி. செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் நமக்கு பழக்கப்பட்டுப் பரிச்சயமானத் தமிழ்ச் சொற்கள் இன்றைய கால ஓட்டத்தில் களவுப் போய் விட்டதோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தில் கவிதாவின் பார்வை நினைவெல்லாம் பக்கம் திரும்பி இருப்பது தாய் வீட்டு ஊஞ்சலில் சுகித்திருப்பதைப் போன்றப் பிரம்மையை ஏற்படுத்திச் செல்கிறது. ஊரோடு ஒன்றி வாழ்வதாய் எண்ணிக் கொண்டு தாய்மொழியை இழந்து வாழ்வியல் கட்டாயத்தை வசப்படுத்தி அதன் முன் கைக்கட்டிச் சேவகதனத்தில் ஆழ்ந்து கிடக்கும் போதெல்லாம்...
அடையாளம் காட்டப் பெற்றோர்களுக்குப் போதாமல் போனது ஞானம்...

தேம்பி அழுது தெய்வங்களைச் சாட்சிக்கு அழைத்தால் சபித்து விடும்போல் தெரிகிறது சமகாலத்து உறவுகள்........

(நன்றி : அக்கினி சுகுமார்)


வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் :-

சுழியம் - பூஜ்யம் (வடச்சொல்)
அகில்மணத்தி - அகர்பத்தி (வடச்சொல்)
கூற்றம் - எமன்
சலம் - தண்ணீர்
புரவி - குதிரை
சவுக்காரம் - Soap
புட்டாமாவு - Talcum Powder
திருநீறு - விபூதி

இந்தப் பதிவைத் தொடர அழைப்பது :-
என் உலகம் சுபாஷினி
அரங்கேற்றம் வேலன்
சென்ஷி - பதிவு போட மறுத்தாலோ மறந்தாலோ தண்டனை உண்டு.