இந்த துக்கம் எனக்குப் பிடித்ததுகாரணம் இது நீ தந்தது!!!காதல் .... இந்த மூன்றெழுத்தின் மாயம்தான் என்ன? எந்த மொழியானாலும், இனமானாலும் காதல் என்றும் இனிமைதான், அழகானதுதான். காதல் கவிதை போன்றது. எங்கு எப்படி உருவானது என்று தெரியாமலேயே வெளிப்படும் தன்மை இந்த காதலுக்கு மட்டும்தான் உண்டு என்று சொன்னால் மிகையாகாது. மிகவும் இயல்பாக யாருக்கும் தெரியாமல் மலரும் இந்த காதல் கட்டாயத்தால் மலர்வதில்லை. காதலர்கள் மறைந்தாலும் காதல்கள் மரிப்பதில்லை. நூற்றாண்டுகள் தாண்டி வாழும் இந்த காதல் எல்லோருக்கும் வருவதுண்டு. ஆனால் எப்பொழுது யார் மீது காதல் வரும் என்பது மட்டும் சொல்லிவிட முடியவில்லை.
காதல் இதய சத்திரத்தில் தங்கும் வழிப்போக்கன்என்று ஒரு கவிஞர் காதலின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். காதலை அழகின் தாகம் என்று கூறும் கவிஞர்கள்தான் இங்கு அதிகம். அண்மையில் காதலை பற்றிய அழகிய காதல் கவிதையை படிக்க நேர்ந்தது.
"நானோ அவளுக்கு தினந்தோறும் கடிதம் எழுதுகிறேன்" என்று சாதாரணமாகத்தான் கவிஞர் தொடங்குகிறார். அட இதில் அப்படி என்ன அதிசயமிருக்கப் போகிறது என்று முதலில் நினைக்க தோன்றியது. பூமிக்கு வியர்க்கும் போதெல்லாம் காதல் கடிதங்கள்தான் விசிறிகளாகின்றன... பழனிபாரதி சொன்னது நினைவுக்கு வர அக்கவிதையை மேலே வாசிக்கத் தொடங்கினேன்.
"பேனா இல்லை காகிதம் இல்லைமை இல்லை "இப்படியும் கவிதையெழுத முடியுமா? என்ற ஆராய்ச்சியை என்னுள் ஒளித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்.
"உன் கண்கள் என் கண்கள் இல்லையா?உன் கண்ணால் கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்."அட எவ்வளவு அழகாக கவிஞர் கேட்கிறார்.
"கனவுகள் உறங்கும் பூக்கள்" என்று காதலை ஆராதிக்கும் மற்றுமொரு கவிதை
"இரவு அழகானது நிலவு அழகானது எல்லாவற்றையும் விடநீ அழகானவள் ஆனால் உன்னை விடவும்அழகானது உன் காதல்"காதலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் தேவதையாகிறாள் என்பது கவிஞர்களின் வாதம்.
வானத்திலிருந்துதான் தேவதைகள் வருமாமே...நீ மட்டும் எப்படி எதிர்வீட்டிலிருந்து வருகிறாய்...என்று கேட்கும் தபு சங்கர், மேலும்
தேவதைகளுக்கு சிறகுகள்இருக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன்...பொய் சொல்வோர் நிறைய இருந்திருக்கிறார்கள் போலும்நீ இங்கே சிறகில்லாமல் இருப்பதை யாரும் பார்க்கவில்லையோ என்று காதல் ஆய்வில் இறங்கி விட்டார். கவிஞர்கள் காதல், கண்களை உதடுகளாக்கி பேசும் இதயத்தின் மொழி என்று கூறுகின்றனர்.
ஆனால் வேறொரு கவிஞர் காதலை இப்படி வர்ணிக்கிறார்? இல்லை போர் செய்கிறார்.
நான் தான் ஹிரோஷிமாஅவள்தான் நாகாசாகிமுதல் துளி முத்தத்துளிமறுதுளி இரத்தத்துளியாகமூன்றாம் உலகப் போரின்முதல் பலியாவோம்சங்க இலக்கியத்தில் காதலும் வீரமும் தமிழர்தம் வாழ்வின் இரு கண்கள் எனக் கருதப்பட்டன. திருக்குறளில் ஒரு காட்சி
கண்ணோடு கண் இணை நோக்கு ஒக்கின்வாய்ச் சொற்கள் என்ன பயனும் இலஎன்று காதலர்களின் சங்கமத்தை விளக்குவார் வள்ளுவர். கண்கள் சந்தித்து சம்மதம் தெரிவித்து சங்கமமாகிவிட்டப்பின் இனி பேச்சு எதற்கு... கண்களின் வார்த்தைகள் காதல் தேசத்தின் மொழி. கண்கள் தன் இதயத்தின் அந்தரங்கத்தை இரகசியமாய் உணர்த்தக் கூடியது. கண்ணுக்கு மை தீட்டாமல் அமர்ந்திருக்கிறாள் தலைவி, காரணம் கேட்கும் தோழியிடம் மையெழுதும்போது இமைகள் மூடி மைத்தீட்ட வேண்டும், அப்போது அவர் மறைந்து போவாரே... அதை என்னால் தாங்க முடியாது என்று மருகுகிறாள் தலைவி. ஆகவே தலைவனைத் தன் உள்ளத்தில் வைத்து மைத் தீட்டாமல் கண்ணுக்குள்ளேயே போற்றுகிறாள்.
இந்த அழகிய நிகழ்வினை கு.மா பாலசுப்ரமணியம் இப்படி கேட்கிறார்,
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?காத்திருப்பேன் என்று தெரியாதோ?ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோகாத்திருப்பு காதல் நியமனங்களின் முதன்மையானது. இதயம் பேச மறுக்கும் தருணங்களில் கண்கள் பேசிவிடுகின்றன. சொல்லித் தெரிவதுதான் காதலா? சொல்லாமலே காதல் சொல்வதுதான் காதலின் உன்னதம். தபு சங்கரும் இதைதான் இப்படி பகர்கின்றார்...
நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்...இதழ் சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்...காதல் பற்றி பாடுவதில் கவியரசு கண்ணதாசனுக்கு நிகர் அவரேயன்றி வேறொருவரையும் அறிகிலேன் நான். காதலின் எல்லா பரிமாணங்களையும் சொல்லிவிட்டவர் அவர். உலகின் ஏதாவது ஒரு மூலையில் இந்த நிமிடம் வரை அவருடைய காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றது.
ஓராயிரம் பார்வையிலேஉன் பார்வையை நான் அறிவேன்உன் காலடி ஓசையிலேஉன் காதலை நான் அறிவேன்காதலைப் பற்றி எழுத தோன்றியதும், அறிவுமதியின் இந்த கவிதை என் நினைவில் வட்டமடித்து சிரிக்கிறது.
உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தப் பிறகுதான் சாலை ஓர மரங்களிலிருந்துஉதிரும் பூக்களின் மௌனத்திலும்இசை கேட்க ஆரம்பித்தேன் நான்....காமச் சிறகுகள் முளைத்த காதலை காட்டிலும் இதயகுழி வரைச் சென்று மனுஷ வாசனை பூசி மகிழும் நட்பு மேலானவை என்று அறிவுமதியின் 'நட்புக்காலம்' குட்டு வைத்துச் செல்வதை இந்நேரத்தில் தவிர்க்க இயலவில்லை. காதல்.... தோல்வி... துயரம்...பிரிவு... துரோகம்...வலி... என்று எத்தனை பரிமாணங்கள் எடுத்தால் என்ன... வாழும் காலமுள்ளவரை இந்த காதலும் வாழும்.!!!
பி.கு: இது ஒரு மீள் பதிவு