Monday, June 30, 2008

எனக்கு பிடித்த பாடல் - அது உங்களுக்கும் பிடிக்குமா?

எங்கேயோ பார்த்த மயக்கம்

எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்

தேவதை இந்தச் சாலை ஓரம்

வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்

ஒரு கோடி பூப்பூக்கும் வெக்கம்

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்

அறிவை மயக்கும் மாய தாகம்

இவளைப் பார்த்த இன்பம் போதும்

வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை

கண் எதிரே பார்க்கிறேன்

கதைகளிலே கேட்ட பெண்ணா

திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

அங்கும் இங்கும் ஓடும் கால்கள்

அசைய மறுத்து வேண்டுதே

இந்த இடத்தில் இன்னும் நிற்க

இதயம் கூட ஏங்குதே....

என்னானதோ! ஏதானதோ!
கண்ணாடி போல் உடைந்திடும் மனது

கவிதை ஒன்று பார்த்துப் போக

கண்கள் கலங்கி நானும் ஏங்க

மழையின் சாரல் என்னைத் தாக்க

விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த மயக்கம்

எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்

தேவதை இந்தச் சாலை ஓரம்

வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

ஆதி அந்தமும் மறந்து

உன் அருகில் கரைந்து நான் போனேன்

ஆண்கள் வெக்கப்படும் தருணம்

உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்

இடி விழுந்த வீட்டில் இன்று

பூச்செடிகள் பூக்கிறதே

இவள் தானே உந்தன் பாதி

கடவுள் பதில் கேட்கிறதே

வியந்து வியந்து உடைந்து உடைந்து

சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு

இந்த நிமிடம் மீண்டும் பிறந்து

உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

Sunday, June 15, 2008

உங்களுக்காக


உங்கள் குரல் எட்டாத
தூரத்தில் நான்
உங்கள் முகம்
காணாத தேசத்தில் நான்
தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
உங்கள் வார்த்தைகள்
தாண்டி வாக்கியமாய்
என்னுள் என்றும்
வாழ்கிறீர்கள் அப்பா
என் இமை முடி
எடுத்து உங்கள்
ஆயுள் கூட வேண்டி
ஊதுகிறேன் உங்களுக்காகவே!!!

Monday, June 09, 2008

நீ என் தேவதை


என் உறவினில் கலந்து
உயிரினில் உருகி
உயிராய் இருக்க வருவாயா
என் தனிமையை சுருக்கி
பொழுதினை பெருக்க
நிழலைபோலத் தொடர்வாயா
என் மடியினில் தவழ்ந்து
ஆயுளை கூட்ட
சீக்கிரம் உடனே வருவாயா?
இல்லை என் கனவாய்
கலைந்து இருளாய்
மறைந்து போவாயோ
சொல் சொல் சொல் சொல்
என் தேவதையே...

Sunday, June 08, 2008

உறவுகள்

என் கவலைகளை தன்

சுமையாய் சுமந்தாள் ஒருத்தி

அவள் சுமையை என்னில் திணித்தாள் இன்னொருத்தி

முன்னவள் என்னோடு வளர்ந்தவள்

பின்னவள் என்னோடு பிறந்தவள்

Saturday, June 07, 2008

காத்திருப்பு


காலைத் தீண்டி முத்தமிட்ட
கடல் அலை
காற்றோடு பேசிய
பூக்களின் வாசம்
காற்று வெளியில்
நீ சொல்லிச் சென்ற வார்த்தைகள்
இன்றும் நின் நினைவாய்
சுற்றுகிறதே என்னை
ஆனால் காலமெல்லாம்
காத்திருப்பேன் என்ற நீ மட்டும்
இன்று என்னைக் கண்டும்
காணாமல் போகிறாயே ஏன்?

Friday, June 06, 2008

அப்பாவுக்காக


என் செல்லமான எதிரியே
உங்கள் பேத்திதான்
எனக்கு மட்டும் சொந்தமான
உங்கள் அன்பையெல்லாம்
அவள் திருடிக் கொண்டாளே
கடவுள் பூமிக்கு வருவதில்லை
ஏன் தெரியுமா?
அவருக்குப் பதில்தான்
உங்களை அனுப்பியுள்ளாரே
நான் வங்கிக்குச்
சென்றதில்லை
என் நடமாடும்
உலக வங்கியே
நீங்கள்தானே :-)
உங்களுக்குப் பிடித்த
அந்த நீல சட்டையை
காணாது அம்மாவை
திட்டினீர்களே
பாவம் அவருக்கே தெரியாதே
அது என் பயணப் பெட்டியில்
ஒளிந்துக் கொண்டது ;-)

அம்மாவுடன் இணைந்து
செல்லும் பொழுதெல்லாம்
நான் அவர் மகளென்று
பெருமைப்படுவார்
நான் உங்களுடன் இணைந்து
செல்லும் பொழுதெல்லாம்
நீங்கள் என் தந்தையென்று
பெருமைப்படுகிறேன்
வேலைக் கிடைத்த போது
இல்லாத மகிழ்ச்சி
முதல் மாத ஊதியத்தை
உங்கள் சட்டைப் பையில்
திணித்தபோது தானாய்
வந்து ஒட்டிக் கொண்டது

உங்களை காயப்படுத்துமென்று
என்னுள் மலர்ந்த முதல்
காதல் மொட்டை
உங்களுக்கே தெரியாமல்
கிள்ளியெறிந்தாலும்
இன்றும் நெஞ்சில்
நெருஞ்சியாய் குத்துகிறதே!

கடவுளிடம் அன்றாடம்
கேட்கிறேன்
ஏன் நான் உங்கள்
மகளாய் பிறக்கவில்லை!
அப்படி பிறந்திருந்தால்
உங்கள் அருமை
உணராமல் போயிருப்பேனோ?
போன ஜென்ம பாவமா
உங்கள் மகளாய் பிறக்காதது
இந்த ஜென்ம புண்ணியமா
உங்கள் மகளாய் வளர்வது
என்னை பெற்றவரை
நான் 'அப்பா'
என்று அழைத்ததில்லை
அது உங்களுக்காக
பதிவு செய்யப்பட்ட
காப்புரிமை அப்பா!

எனக்கு உயிர் தந்தவரின்
உயிர் பிரிந்தபோது
ஏனோ அழத் தோன்றவில்லை
என் கண்ணீர் உங்களையல்லவா
காயப்படுத்திவிடும்!

Thursday, June 05, 2008

உங்கள் கைப்பிடித்து நடக்கவே விரும்புகிறேன்


அம்மா திட்டியது கூட வலிக்கவில்லை
நீங்கள் திட்டாமலே வலிக்கிறது
"என்னையும் கொஞ்சம்
புரிந்துக் கொள்ளுங்களேன் அப்பா"
சொல்ல தெரிந்த
நான் மட்டும் புரிந்துக் கொண்டேனா?
உங்களுக்கு நான் எப்பவுமே
இரண்டாம் பட்சம்
சண்டையிட்டாலும் எனக்கு
என்றும் நீங்கள் முதல்தான்
அம்மாவை நீங்கள் திட்டினால் பிடிக்காது
அம்மாவும் உங்களை கோபித்தால் பிடிக்காது
அம்மாவின் சமையல் அன்போடு
கலந்த ருசியென்றாலும்
உங்கள் சமையலில் ருசியைவிட
பாசம் அதிகம்
"பெரியவளானது உங்களை
நன்றாய் பார்த்துக் கொள்வேன்"
சொன்னதாய் ஞாபகம்
இன்னும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்
வழியில் உங்களைப் போல
பார்க்க நேர்ந்தால்
அப்போதே உங்களிடம் பேச தோன்றும்
ஆனால் பேசியதுதான் இல்லை
ஒவ்வொரு முறையும் நீங்கள்தானே
அப்பா என்னை அழைத்தீர்கள்
நான் அழைத்ததில்லையே ஒருநாளும்
ஏன் நமக்குள் இந்த இடைவெளி
தெரிந்துக் கொள்ளத்தான் முயற்சிக்கிறேன்
நான் செய்த தவறுகளை மட்டுமே
பட்டியல் போடாதீர்கள்
என்னிடம் கொஞ்சம்
நல்லதையும் பாருங்கள்
சொல்லிவிட்ட எனக்கு
நல்லதை மட்டும்தானே
செய்தீர்கள்...
இன்று நான் உள்ளதே
உங்களால்தானே அப்பா
உங்களிடம் மட்டும் எனக்கு
ஏன் இந்த வீண் பிடிவாதம்?
உங்கள் மடியில் தவழ்ந்த நாட்களும்
உங்கள் மீசை குத்திய
தருணமும் மீண்டும் வாய்க்குமா
அம்மா என் கைப்பிடித்து நடந்தாலும்
அப்பா நான் உங்கள் கைப்பிடித்து
நடக்கவே விரும்புகிறேன்!!!

Wednesday, June 04, 2008

மன்னிப்பாயா?


உனக்கு மன்னிக்க இதயம் உண்டு
தெரியும் எனக்கு
ஆனால் பொய் பிடிக்காது
தெரியாதே எனக்கு
செல்லமாய் என் தலை கோதி
மன்னிப்பாயா நேற்றைய பொய்களையும்
இனி வரும் நாளைய பொய்களையும் :)

Tuesday, June 03, 2008

நீ வேண்டும்


நகர மறுத்த நாட்களையெல்லாம்
மூட்டை கட்டி தூர வீசினேன்
இன்று வந்த நாளை மட்டும்
என்னுள் மறைத்து ஒளித்து வைக்கிறேன்
கூடி கழிந்து நின்ற நாட்கள்
உன் வரவை எனக்கு உறுதி செய்தன
அர்த்தமற்ற உலகம்கூட
உன் வரவால் இன்று அர்த்தமாகுது
மரித்து கிடந்த வாழ்வும் இன்று
உயிர்த்தெழுந்து வாழ சொல்லுதே
துடிக்க மறுத்த இதயம்கூட
இரண்டாய் துடிக்க இன்று கேட்கிறேன்
சீக்கிரம் வா எந்தன் உயிரே
என் பெண்மை உன்னால் முழுமை பெறட்டும்....

Monday, June 02, 2008

உன் இசை மீது ஒரு காதல்


காலங்கள் மாறிக்கொண்டேதான் இருக்கிறது
காதல்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது
உன் இசையின் ராகம் மட்டும் மாறவில்லை
உன் இசை மீது நான் கொண்ட காதலும் சாகவில்லை
நான் வாழ்வதே உன் இசையால்தான்
நான் வீழ்வதும் உன் இசையால்தான்
கோயில் கோபுரங்களை காணும் பொழுதெல்லாம்
உனக்காக பிராத்திக்கிறேன் -^-
உன் திருவாசக இசையில்
துயிலெழும் தில்லைக்கூத்தனும்
இமைப்பொழுதும் உன் நெஞ்சில்
நீங்காமல்தான் வாழ்கிறான்
இசைக்கு ஏது வயது
உனக்கு மட்டும் ஏன் வயது
உன் வயதை தூக்கி போட்டு விட்டு வா
இன்னுமொரு சிம்பனி படைக்க
திருவாசகத்தோடு முடிந்துவிடவில்லை
உன் இசை விளையாடல்
இனிமேல்தான் உன் (திரு)இசைவிளையாடலே...

Sunday, June 01, 2008

அன்பின் அர்த்தங்கள்


அன்பின் அர்த்தங்களை வாழ்வின் எல்லை வரைச் சென்று தேடி யாசித்தாலும் ஏனோ அர்த்தமற்ற உறவுகள் மட்டுமே கண்ணில் தெரிகின்றன. ஒவ்வொரு காலை துயிலெழும்போதும் இன்றாவது வாழ வேண்டும் என்றுதான் ஆசை தோன்றுகிறது. ஆனால் அரிதாரம் பூசிய இந்த மானிட கானகத்தில் உண்மை மனிதத்தை எங்கு தேடி காண்பது. சுயநலம் பிடித்த இந்த மானுட தேசத்தில் இருந்து என்று விடைக் கிடைக்குமோ? சுயநல பேய்களின் இரும்பு பிடியில் சிக்கி பொறாமை தீயில் வெந்து அர்த்தமிழந்து போகின்றன அன்பின் அர்த்தங்கள். ஏதோ சில சமயங்களில் மயிலிறகாய் வருட நட்பு கைக்கோர்க்கும் போது அங்கும் நம்பிக்கைகள் நீர்த்துப் போகின்றன. தனிமையில் கொஞ்சம் வாழ்ந்து பார்த்தால் அங்கும் உறவு கைக்கட்டி கேளி செய்கிறது. மரணம் ஒன்றிலாவது என்னை தொந்தரவு செய்யாதீர்கள். அடுத்த ஜென்மம் ஒன்றிலாவது பிறவியேயில்லாத பிறவி கேட்கிறேன்.
அது வரை நிம்மதியாய் கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்.