Friday, August 29, 2008

என்னைச் சமைத்தாய்


சமைக்கத் தெரியுமா?
ஆவலாய் நீ கேட்டாய்...
தெரியுமே!
பொய்யாய் நானும் சொல்லி வைத்தேன்....
பசியென்று முதன் முதலாய்
சமையலறை நுழைந்தாய்...
நானும் சமைப்பதாய்
கையைச் சுட்டுக் கொண்டே
விழிப் பிதுங்க...
'அடிப்பாவி நிஜமாகவே உனக்குச் சமைக்கத் தெரியாதா?
நீ முறைத்தாய்...
விழி நீரால் தெரியாதென்று நானும் இதழ் பிரிக்க
எனக்குத் தெரியுமே என்று
என் இதழ் சமைத்தாய் பாவி...!

Tuesday, August 26, 2008

தோளில் சாயவா!


கண்ணீர்
துடைக்கும் கைகளாய்
துயரங்கள்
தாங்கும் நெஞ்சமாய்
வலிகள்
சுமக்கும் தோள்களாய்
பிரிவை
ஏற்கும் இதயமாய்
மாறிடவா!
புன்னகை மட்டும்
அர்ச்சனையாய்
இன்பங்கள் மட்டும்
வரங்களாய்
அன்பு மட்டும்
பூங்கொத்துகளாய்
யாசிக்கவா!

Thursday, August 21, 2008

சுதந்திர பூமிபுத்திரர்கள்


சுவாசிக்கும்
காற்றுக்குக்கூட
சுதந்திரம்
கேட்கும்
அகதிகள் இவர்கள்...!

உதிரத்தைப் பரிசளித்த
ஆலத்தின் விழுதுகள்
இன்று (சு)தந்திர
பூமியின்
கோரப்பிடியில்...!

சஞ்சிக் கூலிகள்
வளர்த்த நாட்டில்
கஞ்சிக்கும்
கையேந்தும் அவலம்
ஏனோ?

இவர்கள் வானத்தின்
எல்லைக் கோடுகள்
இன்று இசா என்ற
அரக்கத் தீயில்...!

வெந்துத் தணிந்த
சுதந்திரத் தாகம்...
மழைக்கு ஏங்கும்
கரிசல் காடாய்...!

இவர்களும் இந்த
சுதந்திர பூமியின்
புத்திரர்கள்தான் என்று
பிரகடனமாகும்
ஆகஸ்டு 31இல்
பறக்க விடுவோம்
இத்தேசக் கொடியை...!

பி.கு: நேற்றைய தமிழ்ச்செய்தியின் எதிரொலி இது.... :-(

Sunday, August 10, 2008

விழித்திருத்தல்...


துடிக்க மறுக்கும்
இருதயம் கூட
நட்பு என்றவுடன்
விழித்துக் கொள்கிறதே?

நட்புக்கு பொருள்
தேடி நீயென்று
கண்டுக் கொண்டேன்

உன்னைக் காணும்
போது நாய்க்குட்டியாய்
துள்ளும் இந்த
மனது உன்னைப்
பிரிகையில்
தற்கொலைச் செய்துக்
கொள்ளுதடி

உன்னுடைய தவிர்ப்பில்
தொடங்கியது
என் முதல்
தவிப்பு!

என் நுரையீரல்
தீண்டும்
காற்றுக்குக் கூட
தெரியாது
என் இருதயம்
துலங்குவதே
உனக்காக என்று

மௌனத்திற்கும்
அழகுண்டு! உன்னைப்
பார்த்தப் பின்பு
புரிந்துக் கொண்டேன்

புரிதலில் தொடங்கிய
உறவு இன்று
பிரிதலில்
நிறைவுக் கொண்டது!

உன் வீட்டுக்
கண்ணாடியை உடைத்திட
ஏனோ கைகள்
பரபரக்கின்றன!
எனக்கு மட்டும்
சொந்தமான அழகை
அது திருடிக் கொள்கிறதே!

நாலு வார்த்தை

உன்னைப் பற்றி
நாலு வார்த்தை
சொல்லச் சொன்னாய்
எனக்குத் தெரிந்த
ஒற்றைச் சொல்
'நட்பு'

Friday, August 08, 2008

விரும்பி வந்தாய்...


ஊனை உருக்கி
உயிரில் பாயும்
ஓவியம் வரைந்தேன்
உனக்காய்...
அலட்சிய விழியில்
விசும்பித் திரும்பியது
என் இதயம்...!
அயர்ந்த மொழியில்
கவிதை கோர்த்தேன்
எனக்காய்...
சிரித்துக் கொண்டே
விரும்பி வந்தாய்
வெகு இயல்பாய்..!

Thursday, August 07, 2008உன்னை எழுத

மட்டும் என் பேனாக்கள்

அழுது அடம்பிடிக்கின்றன

கூரிய முனைகள்

உனைக் காயப்படுத்திவிடக்கூடுமே!


இன்று மலர்களின்
மௌன விரதமாம்
வண்ணத்துப் பூச்சிகள்
உன்னை மட்டும்
மலர்ரென்று
சுற்றி வருவதாலா?

கொஞ்சும் தமிழே
உன்னிடம் கெஞ்சும்...
மிஞ்சும் உன் அழகை - நல்லவேளை
கண்ணதாசன் பார்க்கவில்லை
இல்லை
உன் தாசனாகிப்
போயிருப்பார்!

நிலவுக்குக்கூட
உன்னைக் கண்டால்
வெட்கம் வந்து விடுகிறது...
களங்கமில்லா
பெண்ணிலவு
நீயென்பதாலா?

Tuesday, August 05, 2008

வார்த்தைகளுக்கு அப்பால்......


உனக்கான வார்த்தைகளைக்
கோர்க்க நெஞ்சம்
தேடியலைந்து நொந்த
நொடியில்தான்
உறைத்தது
வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டவளா நீ?
வார்த்தைகளைக்கும்
அப்பால்
காவியமாய்
வாழ்கிறாய் நீ!
சமுத்திரத்தை
கையடக்கும் நாளில்தான்
உன்னை
வார்க்கவும்...
உருக்கவும்...
கோர்க்கவும்...
முடியும்?
அது வரை
முற்றுப்பெறாத
வாக்கியமாய் என்னுள்
வாழ்ந்துவிட்டுப் போ...!

Sunday, August 03, 2008

சொல்லிவிடு தோழி...


தவறுகள் செய்யாமலே
தண்டிக்கப்படுதல்
மரணத்தைக் காட்டிலும்
கொடுமையென்று...
நீ அறிவாயோ?
நான் அறிவேன்!
தப்பித்தல்களுக்கான
காரணமில்லாமல்
நீண்டுக் கொண்டேயிருக்கும்
உன் மௌனம்
என்ன
மரண தண்டனையா?
சொல்லிவிடு தோழி...
மரணத்தைக்கூட
மகிழ்வாய் தாங்கிக்
கொள்வேன் ஆனால்
உன் மௌனத்தையல்ல...