Monday, February 11, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 6

“பாருங்கள் மிஸ்டர் கௌதம், உங்க மனைவி ரொம்பவும் ‘அனிமிக்’கா இருக்கிறார். நான் எழுதித் தந்த மருந்து மாத்திரைகளை சரியான முறையில் கடைப்பிடித்து வந்தாலே போதுமானது. ஆனால் நீங்களும் கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும். என்னால் மருந்து மட்டும்தான் தர முடியும், அதை சரியான முறையில் கடைப்பிடிப்பது உங்களுடைய கடமை” என்று அருணாவின் மருத்துவ அறிக்கையை கொடுத்துவிட்டு அடுத்த நோயாளியை கவனிக்க சென்று விட்டார் டாக்டர். அவர் எதையோ சொல்ல வந்து சொல்லாமலே விட்டு விட்டார்.


“என்ன இளங்கோ டாக்டர் என்னென்னவோ சொல்கிறார்”


“நத்திங் கௌதம், அவர் பொதுபடையாகத்தான் கூறினார். பொதுவாவே உடம்பு சரியாக வேண்டுமென்று டாக்டரிடம் சென்றால் மட்டும் போதுமா? கொடுத்த மருந்தையும் ஒழுங்காக சாப்பிட வேண்டாமா? அதைத்தான் அவரும் சொன்னார்” சமாளித்தான் இளங்கோ.


நாம் சொல்லும் ஒரு பொய்யால் மற்றவர் நன்மையடைகிறார் என்றால் அந்த பொய்யை சொல்வதில் தவறில்லை “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின்”, என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார், என்று தனக்குத் தானே சமாதானம் செய்துக் கொண்டான் இளங்கோ. ஆனால் அவன் அன்று மறைத்த உண்மை பின்னாளில் கௌதமனுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


அன்று மாலை சீக்கிரமாகவே கௌதமன் வீடு திரும்பிவிட்டான். ஆனால் அருணாதான் வீட்டில் இல்லை. நெடுநேரம் கழித்து வீடு திரும்பியவள், ஹாலின் சோபாவில் சாய்ந்திருந்த கௌதமனை பார்த்தும் பேசாமல் தன் அறைக்குள் நத்தையாய் சுருண்டுக் கொண்டாள். பொறுத்து பொறுத்து பார்த்த கௌதமன் எரிச்சலோடு அறைக்குள் நுழைந்தான். ஆனால் அங்கு அருணாவின் சீரான மூச்சு நிஜமாகவே அவள் உறங்குகிறாள் என்பதை உணர்த்தியது. அவள் முகத்தையே பார்த்தபடி வெகு நேரம் நின்றுருந்தான் கௌதமன் ஆனால் அவள் முகத்தில் இருந்து எதையும் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இவள் வெகுளியா இல்லை சந்தர்ப்பவாதியா, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எப்படியெல்லாம் முகம் மாறுகிறாள்....எதையோ தன்னிடம் சொல்லாமல் மூடி மறைக்கிறாள் என்று நினைக்கத் தோன்றியது, ஆனால் அவனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அதே சமயம் இவளிடம் ரொம்பவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் எண்ணியபடி அவளுடைய கள்ளங் கபடமற்ற குழந்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அடுத்த சில வினாடிகளில் தன் சந்தேகப் புத்தியை நினைத்து கூனிக் குறுகிப் போனான்.


“ச்சே நான் இவ்வளவு கீழ்த்தரமாகவா போய்விட்டேன். காதலித்து மணந்தவள் மீதே சந்தேகமா?”அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.


அடுத்து வந்த நாட்களில், கௌதமன் முன்பைவிடவும் அதிகமாக அருணாவை நேசிக்க ஆரம்பித்தான். ஆனால் அதன் விளைவுகள்தான் விபரீதமாக இருந்தது. எங்கே தனிமை கிடைத்தால் இவளிடம் பாய்ந்து விடுவானோ என்கிற பயம். ஆனால் தனிமையில் இதுப் பற்றி கேட்காமல் இருந்தது அவளுக்கு ஒருவிதத்தில் நிம்மதியாய் இருந்தது. அருணாவிற்கு தான் சில சமயங்களில் தேவையில்லாததற்கெல்லாம் பயப்படுவதைப் போல் தோன்றியது. அதிலும் குறிப்பாக கௌதமனிடம் அவசியமில்லாமல் பயப்படுவதாகவே அவளுக்குத் எண்ணத் தோன்றியது. அவன் ஏதாவது யோசனையோடு அவளை அழைத்தால்கூட இவள் நடுங்கிக் கொண்டு போய் நிற்பாள். அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினை என்று இவளிடம் சற்று கோபத்தோடு பேசினால் அருணாவிற்கு அழுகையே வந்துவிடும். ஒரு சில சமயங்களில் தான் முட்டாள்தனமாக எதை எதையோ வீணாக கற்பனை செய்துக் கொண்டு இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவள் அச்சப்படுவதிலும் காரணம் இருக்கவே செய்தது. பேசாமல் இவனை கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என்றுகூட சில சமயங்களில் எண்ணியிருக்கிறாள். வழியில் கிடந்த கோடாரியை வலிய எடுத்து காலில் போட்டுக் கொண்டு வலிக்கிறதே என்று புலம்பி என்ன ஆகப் போவது. அதற்காக அவளுக்கு கௌதமனுடன் வாழும் இந்த வாழ்க்கை கசக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அளவுக்கு அதிகமாகவே தன் மீது அன்பை பொழியும் கணவன். மாமியார், நாத்தனார் என்று பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை, அதையும் விட அவள் நினைத்தும் பாராத சொகுசான கார், பங்களா, தேவைக்கு அதிகமாகவே பணம், நகைகள்.....இருந்தும் அவளால் அதில் நிறைவு காண முடியவில்லை. கல்யாணத்திற்கு முன்பிருந்த நிம்மதி அவளைவிட்டு வெகுதூரம் தொலைந்து போயிருந்தது. ஓவ்வொரு கணமும் அவளுடைய தாயையும் தங்கைப் பற்றியும் எண்ணும்போது புழுவாய் துடித்துப் போனாள். அதிலும் கடைசியாக அவளுடைய தாய் தொலைப்Nசியில் பேசிய வார்த்தைகள் அவளை அனலில்லிட்ட புழுவாய் துடிக்க வைத்தது.


கௌதமன் அவளைக் அவள் வழியில் விட்டுக் கொடுத்த பிறகு அருணாவிற்கு வாழ்வு இனிமையாக தோன்றியது போல் இருந்தாலும் அவளுடைய இறந்தகாலம் அவளை வாட வைத்தது. எந்நேரமும் ஏதாவது யோசனையோடு சோபாவில் சாய்ந்து விடுவாள். முன்பென்றால் இது போல் நினைத்த மாதிரியெல்லாம் கிடக்க முடியாதே. கௌதமனுக்கு அனைத்தும் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும். அப்படி ஒரு சில நேரங்களில் அவள் வெறுமனே கிடந்தாள் எப்படியாவது ‘வாக்கிங்’, கோவில், ‘ஷாப்பிங்’, நண்பர்கள் வீடு என்று எங்காவது அழைத்து செல்வான். அருணா வராமல் அடம் பிடித்தால் ஏதாவது சமாதனம் சொல்லி அழைத்துச் செல்வான்.


“இப்படி நீ வராமல் அடம் பிடித்தால், அன்றைக்கு ‘ஆர்டர்’ கொடுத்த வைர நெக்லஸ் வேண்டாமென்று சொல்லி திருப்பிக் கொடுத்து விடுவேன். என்ன பார்க்கிறாய் நீதான் ‘வாக்கிங்’ போக மாட்டேன் என்கிறாயே, நம் வீட்டீன் முன் மாட்டியிருக்கிற பூசணிப் போல் ஆகப் போகும் உனக்கு எதற்கு வீணாக அந்த வைர நெக்லஸ்.” என்று அவன் பயமுறுத்தினால் முகத்தைத் தூக்கி வைத்து கொண்டு இரண்டு நாள் வருவாள் பிறகு மறுபடியும் தலைவலி, கால் வலி, மயக்கம் என்று ஆரம்பித்து விடுவாள். அப்பொழுதும் அவன் ஒரு காரணம் சொல்ல வேண்டும். கௌதமனுக்கு இது பழகி விட்டது, ஆனால் அவனுடைய அம்மா அருணாவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டப்பின் வேறு வழியில்லாமல் அருணாவிற்கு அதிக சுதந்திரம் கொடுக்க வேண்டியதாய் போயிற்று. அவள் தன் பிறந்த வீட்டையும் அங்குச் செல்ல பிடிவாதம் பிடிக்காத வரை அனைத்தும் நன்றாகவே தோன்றியது. ஆக முன்பைப் போல அவளிடம் அதிக கெடுபிடிக்கு வழியில்லாமல் போய்விட்டது. இல்லையென்றால் பழையபடி அம்மா வீட்டு புராணத்தைத் தொடங்கி விடுவாள். அருணா வெளியே உல்லாசமும் சந்தோஷமுமாய் இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஒவ்வொரு கணமும் உடைந்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் தன்னில் வளர்ந்துக் கொண்டிருக்கும் கருவைப் பற்றி கொஞ்சமேனும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக அவள் மறுமுறை சென்ற போது டாக்டரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.“ஏம்மா பார்த்தால் படித்த பெண் மாதிரி தெரிகிறாய், இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பது. போன மாதமே செக்கப்பிற்கு வந்திருக்க வேண்டியது.” என்று கோபப்பட்டார் டாக்டர்.


பொதுவாகவே அந்த டாக்டர் கௌசல்யா மிகவும் மென்மையானவர். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மிகவும் அன்பாகவே நடந்துக் கொள்வார். அதிலேயே அவர்கள் பாதி குணமடைந்து விடுவார்கள். ஆனால் அருணாவின் விஷயத்தில் அப்படி மென்மையாக நடந்துக் கொள்ளாததிற்கு இதற்கு முன்பிருந்த டாக்டர் பிரசன்னா கொடுத்த மருத்துவ அறிக்கையில் எழுதியிருந்த குறிப்பு காரணமாயிருந்தது. அவர் வேலை மாற்றலாகி வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதால் டாக்டர் கௌசல்யாவை அறிமுகப்படுத்தியிருந்தார். டாக்டர் பிரசன்னாவின் மருத்துவ குறிப்பு அவருக்கு அருணாவின் மேல் தவறான அபிப்ராயம் கொள்ள காரணமாகிவிட்டது. அவரின் கூற்றை மெய்பிப்பது போல அருணாவும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் கொடுக்கப்பட்ட தேதிக்கு வராமல் இப்பொழுது வந்து நிற்கவும் அவள் மேல் ஆத்திரம் வந்து விட்டது அவருக்கு.


“பாரும்மா அருணா கொடுக்கப்பட்ட தேதிக்கு நீ வராததால் எங்களுக்கு ஒன்றுமில்லை என்று இருந்து விட முடியாது. அடிக்கடி செக்கப்பிற்கு வந்தால்லொழிய எங்களால் சரியான டிரிட்மென்டை கொடுக்க முடியும். அதிலும் கவனி உடல் எடை ஒவ்வொரு வாரமும் அரை கிலோவிலுருந்து ஒரு கிலோவிற்கு கூடுவது சரியில்லை. இது தேவையில்லாத நோயை நீயே தேடிக் கொள்வதற்கு சமம்.


“இல்ல டாக்டர், வந்து எனக்கு சரியான தேதிக்கு வர வேண்டுமென்றுதான் நினைக்கிறேன் ஆனால் குடும்ப பிரச்சினையால் மற்றது மறந்து போய்விடுகிறது அதான்......” என்று தன் கவலையை டாக்டரிடம் கூற நினைத்தவள் பேசாமல் விட்டுவிட்டாள்


“என்ன பிரச்சினை” என்று அவர் வித்தியாசமான பார்வையுடன் கேட்கவும் அருணாவிற்கு அவமானமாய் இருந்தது.


“பாரும்மா அருணா! எனக்கு உன்னோட ‘ஹெல்த்’துல கொஞ்சமும் திருப்தி இல்லை. அதனால் நான் மேலும் சில ‘டெஸ்ட்’ எடுக்க வேண்டியுள்ளது. உன்னோட குழந்தையோட ‘பொசிஷன்’ என்ன என்பதும் தெரிய வேண்டும். அதனால் டாக்டர் ஷேரன் ‘லெவல் 6சில்’ இருப்பார், அவரிடம் போய் ‘செக்கப்’ செய்துக் கொள்” என்று அனுப்பி வைத்தார்.


“எல்லாம் இந்த கௌதம்மால் வந்தது” என்று தன் இயலாமைக்கு அவனை திட்டினாள். கடைசியாக டாக்டர் கௌசல்யா அருணாவை அழைத்து பேசியது அவளுக்கு மேலும் திகில் மூட்டியது. இனி இவர் இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று அப்பொழுதே உறுதி எடுத்துக் கொண்டாள்.


‘செக்கப்’ முடிந்து வீடு திரும்பியதும், டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை தூர வீசி எரிந்தாள் அருணா. அவளுடைய கோபத்தை அந்த மருந்திடம்தானே காட்ட இயலும்.


“கௌதம் இனிமேல் அந்த டாக்டரிடம் நான் போக மாட்டேன். கொஞ்ச நேரத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டார் என்று கத்திக் கொண்டிருந்தாள் அவள். கௌதமன் என்ன சொல்லியும் அவள் கோபம் அடங்கவில்லை. அதோடு நிற்காமல் அடுத்து வந்த ‘செக்கப்பிற்கு’ செல்ல பிடிவாதமாய் மறுத்து விட்டாள். பொறுமையிழந்த கௌதமன் டாக்டரிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினான். உடனடியாக சந்திப்பது இயலாது என்றும் முடிந்தால் அடுத்த நாள் வர சொல்லியது ஓரளவுக்கு கௌதமனுக்கு ஆறுதலாக இருந்தது.


ஆனால் மறுநாள் காலையிலேயே கௌதமன் அருணாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல அருணாவிடம் வந்து நிற்கவும் அவளுக்கு ஆத்திரம் மேலும் கூடியது.


“என்ன டாக்டர் அதற்குள் டாக்டர் உங்களிடம் ஓதிவிட்டாரா, காலையிலேயே திடீரென்று என்ன செக்கப்?” என்று கணவனிடம் எரிந்து விழுந்தாள்.


கல்யாணமான புதிதில்தான் எரிந்து விழுந்தாலும் கொஞ்சமும் கோபமுமின்றி காலை சுற்றும் பூனைக்குட்டியைப் போல் கணவனையே சுற்றி சுற்றி வருகிறார்கள். ஓரு குழந்தைக்கு தாயாகி விட்டால் பிறகு கணவன் பாடு திண்டாட்டம்தான். இதற்கு ஒரு சில விதி விலக்கும் உண்டுதான். இவ்வாறு யோசித்தப்படியே கௌதமன் அருணாவை தலை முதல் கால் வரை அளவெடுத்தான். முன்பைவிட அருணா அதிகம் பூசினாற் போல இருப்பது இப்பொழுது நன்றாகவே தெரிந்தது. ஆனால் உடனேயே இதுப்பற்றி பேசாமல் வேறு பேசினான் பிறகு அவள் அழகைப் பற்றி பேச ஆரம்பித்ததும் அருணாவிற்கு எரிச்சல் வந்தது. உள்ளம் உற்சாகமாக இருந்தால்தானே தேக அழகைப் பற்றிய உற்சாகம் இருக்கும், அவன் அழகைப் பற்றி பேசியயதும் அவளுக்கு கோபம் மேலும் தலைக்கேறி கத்தியவள் அப்படியே மயங்கிவிட்டாள்.

No comments: