Friday, September 26, 2008

மழை நின்ற பின்பும் தூறல் - சில அனுபவங்கள்மாயக்கண்ணாடி...பிரிவோம் சந்திப்போம் தோல்விக்குப் பிறகு சேரன் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டிருக்கும் திரைப்படம் 'ராமன் தேடிய சீதை'.

மழை நின்ற பின்பும் விழும் தூறலாய் இப்படம் என்னில் விட்டுச் சென்ற சில தடயங்களைத் தேடி இங்கு வார்த்தைகளால் கோர்க்கிறேன். பல்வேறு செய்திகளைத் தன்னில் சுமந்துக் கொண்டிருப்பது இத்திரைப்படத்தின் நிறையா இல்லை குறையா என்றுத் தெரியவில்லை. இருந்தும் இதன் மெல்லிய சுவடுகளைத் தேடிப் பயணிக்கின்றன என் காலம்...

அரசு பொதுத் தேர்வுகள் மாணவர்களை தங்களின் இலக்குகளை நோக்கி பயணிக்க வைக்கிறதா இல்லை முடமாக்கி விடுகிறதா என்ற கேள்வி இங்கு எழத்தான் செய்கிறது? இதற்குக் காரணம் பெற்றோர்களா இல்லை மற்றவர்களா? இங்கும் ஒரு மாணவன் அரசு பொதுநிலைத் தேர்வில் மாநில அளவில் இரண்டாவதாக வருகின்றான். பாராட்டப்பட வேண்டிய அவன் தன் தாயின் பொறுப்பற்றப் போக்கினால் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநிலை மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மனநிலைத் தேறி மற்றவர்களை போல வாழ நினைக்கும் அவனைச் சமூகம் பைத்தியக்காரன் என்று முத்திரையிட்டுச் சிரிக்கிறது.... அதிலிருந்து மீண்டு வரும் அவன் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு வெற்றியும் காண்கிறான். ஆனால் சிறு வயதில் அவன் வாழ்வில் நடந்தச் சம்பவம் அவனுடைய மணவாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாகிவிடுகிறது. . . மகிழ்ச்சி நிறைந்த கல்வியை மாணவர்கள் மன உளைச்சலோடு மேற்கொள்வதுதான் நம் கல்வி கொள்கையின் வெற்றியா? மலேசியாவில் அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயங்களில் அங்குமிங்குமாய் தற்கொலை சம்பவங்களும் நிகழ்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 12 வயதில் ஒரு மாணவி தற்கொலையை நாடுகிறாள் என்றால் தேர்வு முடிவு அவள் மனதில் எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்.... ஆனால் அவருடன் படித்தவர்கள் அந்தப் பெண்ணை 'பைத்தியம்' என்று கேலி செய்வதுண்டு. இதுப்பற்றி மற்றவர்களை கேட்டப் பொழுது எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று இருந்ததால் வந்த மன உளைச்சல் என்று கூறினார்கள். நான் கூட அந்தப் பெண்ணிடம் சில சமயங்களில் பேசியிருக்கிறேன்.... அதன் பிறகு அவரைச் சந்திப்பதைப் பல முறை தவிர்த்திருக்கிறேன்.... காரணம் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அல்ல... அவருடையக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதால்...

இத்திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த ஒரே கதாபாத்திரம் பார்வையற்ற வானொலி அறிவிப்பாளராக வரும் பசுபதியை காதலிக்கும் பெண்ணாக வரும் கஜாலா. ஊனம் என்பது உடலுக்கேத் தவிர உணர்வுக்கு அல்ல என்ற நேர்மறை எண்ணங்களை பசுபதியின் கதாபாத்திரத்தின் வழி புகுத்தியிருக்கிறார்கள். ஆனால் பார்வையற்றவராக வரும் பசுபதியின் சண்டைக் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். 'ராஜபார்வை' கமலை காப்பியடித்ததுப் போல் உள்ள பசுபதியின் நடிப்புக் கவரவில்லை.

பொதுவாகவே எனக்கு இந்த வானொலி அறிவிப்பாளர்கள் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. பின்னிரவு நேரங்களில் நமது தனிமையை போக்கும் உற்ற தோழியாய்....தோழனாய் வலம் வரும் இவர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது. 2002 மலேசிய வானொலியான வானொலி ஆறில் (தற்பொழுது மின்னல்FM) பல புதிய இளம் அறிவிப்பாளர்கள் அறிமுகமான காலக்கட்டம். தகவல் தொழில்நுட்பத் துறையில் நான் கல்வியை மேற்கொண்டிருந்தச் சமயத்தில் பின்னிரவில் வெகுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டியச் சூழல். அச்சமயத்தில்தான் அறிமுகமானவர் இராஜேஸ்வரி இராஜமாணிக்கம். கலைத்துறை பட்டதாரியான இவருடைய அறிவிப்பில் எப்பொழுதுமே ஓர் உயிர்ப்பு இருந்துக் கொண்டேயிருக்கும். ஆங்கிலம் கலவாத அழகியத் தமிழில் அற்புதமான அறிவிப்பு.... வணக்கம் மலேசியா... இசைத்தோரணம்...இளமையில் இனிமை...இரவின் மடியில் என்று அவருடைய அறிவிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் பல... ஆரம்பக் காலக்கட்டங்களில் சாதாரணமாய் கேட்டுக் கொண்டிருந்த நான் பின்னாளில் அதீதமாய் ஈர்க்கப்பட்டு வானொலி என் வாழ்வில் ஒன்றென கலந்து விட்டது. எங்கள் இருவருக்கிடையிலும் மெல்லிய நட்புணர்வு மலர்ந்திருந்தாலும் கிட்டதட்ட 1 வருடத்திற்கும் மேலாகப் பார்க்காமலே தொடர்ந்து வந்த நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாய் 01.02.2004 முதன் முதலாக கிள்ளானில் சந்தித்துக் கொண்டோம். அந்த முதன் சந்திப்பில் அவர் தந்த இனிப்பும் பூங்கொத்தும் இன்னமும் நினைவில் இனிக்கிறது. 2006 இல் அவர் மின்னலில் இருந்து தமிழ்ச் செய்திப் பிரிவுக்கு செய்தித் தொகுப்பாளாராக சென்றதில் இருந்து வானொலி கேட்பதையும் விட்டு விட்டேன். தற்சமயம் எப்பொழுதாவது மட்டுமே செய்தி வாசிப்பதால் முன்பு போல் அவர் குரல் கேட்பது அரிதாகிவிட்டது. இன்றைக்கு அவர்தான் காலை செய்தித்தொகுப்பாளராகப் பணியாற்றினார். பள்ளிக்காலங்களில் தமிழின் மீது எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை... நாவல்கள் படிப்பதோடு சரி... அவருடைய நிகழ்ச்சிகளின் வழி தமிழின் மேல் தனியாத தாகம் ஏற்பட்டுவிட்டது. தகவல் தொழில்நுட்பக் கல்வியை பாதியிலேயே விட்டு விட்டுத் தகவல் ஊடகத்தில் பட்டப்படிப்பை முடித்து தற்சமயம் கல்வியமைச்சில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பதற்கு அவரும் முக்கிய காரணம் என்பது அவர் இன்று வரையிலும் அறியாத உண்மை.

அடுத்து இந்தத் திரையில் வரும் கதாபாத்திரம் விமலா ராமன். தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவரைத்தான் முதன் முதலாக சேரன் பெண் பார்க்கச் செல்கிறார். சேரனின் இள வயதில் ஏற்பட்ட சம்பவத்தைக் கேட்டப் பிறகு அவரை வேண்டாமென்று நிராகரித்து விடுகிறார். வேறு ஒரு பெண்ணை மறுபடியும் பெண் பார்க்கச் செல்லும் சேரன் அந்தப் பெண் வேறு ஒருவரை விரும்புவதை தெரிந்துக் கொண்டு விலகிக் கொள்கிறார். அப்பொழுது அதே ஊரில் இதற்கு முன்பு திருமணம் தனக்கு நிச்சயம் செய்து திருமண நாளான்று காதலனோடு ஓடிவிடும் பெண்ணை மிகவும் ஏழ்மை நிலையில் சேரன் சந்திக்கிறார். கணவன் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில் அவள் தனிமையில் போராடுவதைக் கண்டு அவளுக்கு உதவி செய்ய முனைகிறார். தன் மகளின் தவறுக்குப் பிராய்சித்தம் தேட முற்படும் அந்தப் பெண்ணின் தந்தையை மகளோடு இணைக்கும் சேரன் அதே ஊரில் மறுபடியும் விமலா ராமனை சந்திக்கிறார். அவர்களுடைய சந்திப்பு நல்ல நட்பாக மலர்கிறது. முன்பு சேரனை வேண்டாமென்று நிராகரித்தவர் இப்பொழுது அவரை நேசிக்கத் தொடங்கி விடுகிறார். "இதே இடத்துல வச்சுதான் அவர் முகத்தை பார்த்து பிடிக்கலைன்னு சொன்னேன் இப்போ போய் பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று அவர் தன் தாயிடம் தவிப்புடன் கூறுவது இரசிக்க வைக்கிறது. அதைவிட நெஞ்சில் காதலை சுமந்துக் கொண்டு சேரனுக்காக வேறொரு பெண்ணைப் பார்க்கச் செல்வது... வேண்டாமென்று நிராகரித்த ஒருவரை மீண்டும் நேசிப்பது சாத்தியமா என்ற கேள்வி இங்கு எழலாம்... நல்ல புரிந்துணர்வு இருந்தால் நிச்சயமாக மறுபடியும் நேசிக்க முடியும். நம்மில் நூறில் ஒருவருக்காவது இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். ஆனால் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் அதை ஏற்றுக் கொள்வாரா என்பது?

வழக்கமான அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் இத்திரைப்படம் வெற்றிப் பெறுமா என்ற கேள்வியை விடுத்து பார்த்தும் வைக்கலாம். ஒரு சில சினிமாத்தனங்களை இந்தப் படத்தில் தவிர்த்திருக்கலாமோ? சேரனை சுற்றியேச் சுழலும் இக்கதையில் சேரன்தான் நடித்திருக்க வேண்டும் என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்...ஆனால் அவர் நடித்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகம் கூடியிருப்பது மறுக்க முடியாத உண்மை...

31 comments:

ஆயில்யன் said...

//பின்னிரவு நேரங்களில் நமது தனிமையை போக்கும் உற்ற தோழியாய்....தோழனாய் வலம் வரும் இவர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது.///

உண்மைதான்!

இசையாலும் தங்களின் குரல் வளத்தாலும் பல ரசிகர்களினை ஈர்த்து வைத்துள்ளனர்!

VIKNESHWARAN said...

வாவ்.... சூப்பரான சுவாரசியமான எழுத்து... நான் இன்னமும் இப்படத்தை பார்க்கவில்லை நேரம் இருப்பின் நிச்சயம் காண்பேன்...

நாணல் said...

இன்னும் படம் பார்க்க வில்லை.. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்...

லக்கிலுக் said...

உங்கள் விமர்சனம் தரமாக இருக்கிறது!

ஆய்தன் said...

கவிதை போலவே திரைத் திறனாய்வும் உங்களுக்கு நன்றாக வருகிறது.

கோபிநாத் said...

ரைட்டு...பார்த்திடுவோம் ;)

ஜீவன் said...

குறைகளை மட்டும் தேடிப்பிடித்து ,விமர்சிப்பவர்களால் குழப்பத்தில் இருந்த என்னை ,படம் பார்க்க தூண்டி விட்டது உங்களது நாகரீகமான, தரமான விமர்சனம் .

Dr.Sintok said...

படத்தை விட உங்கள் பதிவு சிரப்பாக உள்ளது........

Dr.Sintok said...

படத்தை விட உங்கள் பதிவு சிரப்பாக உள்ளது.........

சென்ஷி said...

:)

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
//பின்னிரவு நேரங்களில் நமது தனிமையை போக்கும் உற்ற தோழியாய்....தோழனாய் வலம் வரும் இவர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது.///

உண்மைதான்!

இசையாலும் தங்களின் குரல் வளத்தாலும் பல ரசிகர்களினை ஈர்த்து வைத்துள்ளனர்!//

மறுக்க முடியாத உண்மை... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்!

இனியவள் புனிதா said...

//VIKNESHWARAN said...
வாவ்.... சூப்பரான சுவாரசியமான எழுத்து... நான் இன்னமும் இப்படத்தை பார்க்கவில்லை நேரம் இருப்பின் நிச்சயம் காண்பேன்...//

ம்ம்ம் நன்றி விக்கி! :-)

இனியவள் புனிதா said...

//நாணல் said...
இன்னும் படம் பார்க்க வில்லை.. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்...//

அவசியம் பார்க்கணும்.. :-)வருகைக்கு நன்றி நாணல்!

இனியவள் புனிதா said...

//லக்கிலுக் said...
உங்கள் விமர்சனம் தரமாக இருக்கிறது!//

நன்றி அண்ணா!

இனியவள் புனிதா said...

//ஆய்தன் said...
கவிதை போலவே திரைத் திறனாய்வும் உங்களுக்கு நன்றாக வருகிறது.//

நான் எப்பொழுதும் திரை விமர்சனம் எழுதுவதில்லை... எப்போதாவது என்னைப் பாதிக்கும் பொழுது மட்டுமே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

இனியவள் புனிதா said...

//கோபிநாத் said...
ரைட்டு...பார்த்திடுவோம் ;)//

பார்த்துவிட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க கோபி!

இனியவள் புனிதா said...

//ஜீவன் said...
குறைகளை மட்டும் தேடிப்பிடித்து ,விமர்சிப்பவர்களால் குழப்பத்தில் இருந்த என்னை ,படம் பார்க்க தூண்டி விட்டது உங்களது நாகரீகமான, தரமான விமர்சனம்//

நன்றி ஜீவன்...குறைகளை விடுத்து நிறைகளையும் தேடும் விசாலம் நமக்கு வேண்டும் இல்லையா? :-)கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி ஜீவன்.

இனியவள் புனிதா said...

//Dr.Sintok said...
படத்தை விட உங்கள் பதிவு சிரப்பாக உள்ளது........//

நன்றிங்க முதல் வருகைக்கும் ... கருத்துக்கும் :-)

இனியவள் புனிதா said...

//சென்ஷி said...
:)//

:-)))

Vishnu... said...

நல்ல விமர்சனம் தோழியே ...
தரமாக ...தனித்துவம் தெரிகிறது ..

வாழ்த்துக்கள் ...

இனியவள் புனிதா said...

//Vishnu... said...
நல்ல விமர்சனம் தோழியே ...
தரமாக ...தனித்துவம் தெரிகிறது ..

வாழ்த்துக்கள் ...//

நன்றிங்க :-) அவசியம் படத்தையும் பார்த்து வையுங்கள்!

Vishnu... said...

கண்டிப்பா பாக்கனும்னு நெனைச்சிருக்கேன் ..
உங்க விமர்சனத்த படிச்சு உடனே முடிவு பண்ணிட்டேன்...

பனிமலர் said...

புனிதா இது எல்லாம் அனியாயம், உங்களது பதிவை படித்துவிட்டு விமர்சனம் எழுதியது போல் உள்ளது உங்களது விமர்சனத்தை படிக்கும் போது. என்ன எனக்கு வித்தியாசாகரின் இசையில் இன்னமுன் அருமையான பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன் நீங்களோ பாடல் இனிமை என்று தனிப்பதிவே அமைத்துள்ளீர்.

விகடமாக சொன்னேன் சண்டையாக எண்ண வேண்டாம். படம் நல்ல படம் சந்தேகம் இல்லை. என்ன சேரனது படைப்பாக இருக்கும் என்று நினைத்தேன். முதலில் சுயசரிதையின் பாதையில் படம் பயணிக்கிறதே என்று தான் இருந்தது. பிறகு தென்றலாய் ஒரு புயல் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்.

அன்புடன்,
பனிமலர்.

இனியவள் புனிதா said...

//Vishnu... said...
கண்டிப்பா பாக்கனும்னு நெனைச்சிருக்கேன் ..
உங்க விமர்சனத்த படிச்சு உடனே முடிவு பண்ணிட்டேன்...//

மிக்க நன்றி விஷ்ணு!

இனியவள் புனிதா said...

//பனிமலர் said...
புனிதா இது எல்லாம் அனியாயம், உங்களது பதிவை படித்துவிட்டு விமர்சனம் எழுதியது போல் உள்ளது உங்களது விமர்சனத்தை படிக்கும் போது. என்ன எனக்கு வித்தியாசாகரின் இசையில் இன்னமுன் அருமையான பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன் நீங்களோ பாடல் இனிமை என்று தனிப்பதிவே அமைத்துள்ளீர்.

விகடமாக சொன்னேன் சண்டையாக எண்ண வேண்டாம். படம் நல்ல படம் சந்தேகம் இல்லை. என்ன சேரனது படைப்பாக இருக்கும் என்று நினைத்தேன். முதலில் சுயசரிதையின் பாதையில் படம் பயணிக்கிறதே என்று தான் இருந்தது. பிறகு தென்றலாய் ஒரு புயல் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்.

அன்புடன்,
பனிமலர்.//
அப்படியெல்லாம் இல்லை... பார்வை ஒன்றாக உள்ளது அவ்வளவுதான். தங்களுடைய பதிவும் அருமையாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஸ்ரீமதி said...

நல்லாயிருக்கு அக்கா.. இப்படி தான் சில படங்கள் பார்த்து நெடுநாள் வரைக்கும் அதன் நியாபகங்கள் நெஞ்சைவிட்டு நகராது.. அதை நீங்க கோர்த்திருக்கறது இன்னும் அழகா இருக்கு..!! :))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
நல்லாயிருக்கு அக்கா.. இப்படி தான் சில படங்கள் பார்த்து நெடுநாள் வரைக்கும் அதன் நியாபகங்கள் நெஞ்சைவிட்டு நகராது.. அதை நீங்க கோர்த்திருக்கறது இன்னும் அழகா இருக்கு..!! :))//

நன்றி தங்கையே!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அருமையான எழுத்து வடிவம்.

விமர்சனத்துக்கு விமர்சனமாகவும் நடுவில் சொல்ல வந்த தகவலை நாசுக்காகவும் சொல்லியிருக்கிறீர்.

மின்னல் FM இப்போது முன்னைவிட நிறைய நல்ல மாறுதல்களை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களில் மாற வேண்டி இருக்கின்றது.

இதனாலேயே நான் ரேடியோ கேட்பதை விட என் ஐபோட்+ FM Transmitter-ஐ உபயோகப்படுத்துகிறேன். :-)

இனியவள் புனிதா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அருமையான எழுத்து வடிவம்.

விமர்சனத்துக்கு விமர்சனமாகவும் நடுவில் சொல்ல வந்த தகவலை நாசுக்காகவும் சொல்லியிருக்கிறீர்.

மின்னல் FM இப்போது முன்னைவிட நிறைய நல்ல மாறுதல்களை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களில் மாற வேண்டி இருக்கின்றது.

இதனாலேயே நான் ரேடியோ கேட்பதை விட என் ஐபோட்+ FM Transmitter-ஐ உபயோகப்படுத்துகிறேன். :-)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு!!!

மு.வேலன் said...

வணக்கம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு தரமான விமர்சகரை சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்!

வண்ணத்துபூச்சியார் said...

ரொம்ப சப்பையான படம்..

ஜவ்வு...