Sunday, January 20, 2008

திரையிசை கடந்தவர்

என் வானம் தூசு தொட முடியாத தூரத்தில்...
இசை படைத்தவன் சொன்னதையும் சொல்லும்... சொல்லாதையும் சொல்லும். எந்த மொழியாயினும் இசையின் இனிமை ஒன்றுதான். உலகம் தாண்டி வானவெளி போனாலும் ஒன்றுமில்லாத சூன்யநிலையின் இயற்பியலையும் மாற்றிவிடும் தன்மை இந்த இசைக்கு உண்டு என்று தாராளமாக கூறலாம்.
இந்த இசை தமிழ்த்திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. ஜி.இராமநாதன், பாபநாசம் சிவன், சி.ஆர். சுப்பராமன், எஸ்.வி வெங்கட்ராமன், எஸ். எம் சுப்பையா நாயுடு, கே.வி மகாதேவன், விஸ்வநாதன் இராமமூர்த்தி... தொடங்கி... இன்றைய ஏ.ஆர் ரஹ்மான், தேவா, பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.
அந்த வகையில், 'காற்று வெளியிடை கண்ணம்மா' ... தொடங்கி 'சுட்டும் விழி சுடரே' வரை இரசித்துக் கேட்கும் இந்த தமிழ்த்திரைப்பாடல்களின் 'பிதாமகன்' யாரென்று தெரியுமா? அவர் வேறு யாருமல்ல 'என்ன தவம் செய்தனை யசோதா' என்று காபி இராகத்தில் அமைந்த கீர்த்தனைக்கு சொந்தக்காரர் பாபநாசம் சிவன். இவருடைய இசையமைப்பில் மலர்ந்த பெரும்பாலான பாடல்கள் கர்நாடக சங்கீத கீர்த்ததனையை அடிப்படையாக கொண்டதாகும். அது ஒன்றும் தவறேயில்லை என்று கூறும் பாபநாசம் சிவன், 'இசை என்பது இறைக்கொடை, அதனை இறைவன்பால் செலுத்துவதில் எவ்வித குற்றமுமில்லை என்று கூறுகின்றார். அவருடைய இந்த வாதம் ... அவருடைய இசையின் உச்சத்தில் திளைக்கும்போது நமக்கும் புரிகின்றது.
அது 1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கம்... தமிழ் கூறும் நல்லுலகை இந்தித்திரையிசை ஆக்கிரமிப்பு செய்திருந்த காலக்கட்டம். தமிழ்திரையிசையின் மோகம் சற்று தொய்வுக் கண்டு இந்தித்திரையிசையில் திளைத்திருந்த காலக்கட்டம். அதே காலக்கட்டத்தில் 1976-ஆம் ஆண்டு பண்ணையபுர பட்டிக்காட்டு இராசையா 'அன்னக்கிளி' திரைப்படம் வழி தமிழ்த்திரையிசையின் வரலாற்றை மாற்றியமைத்தார்.
அவர் இசைஞானி இளையராஜா.... 'அன்னக்கிளி தொடங்கி அண்மைய 'ஒரு நாள் ஒரு கனவு' வரை தன்னுடைய இசையின் வழி அனைத்து உள்ளங்களிலும் நீக்கமற நிலைத்துவிட்டவர். தமிழ்த்திரையிசையின் சுவடுகளை நாம் கொஞ்சம் பின் நோக்கினால், இவருடைய காலக்கட்டத்திற்கு முன்பு வந்த எந்த இசையமைப்பாளரும் ஒரு படத்தின் இசையின் மூலம் வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர்கள் கிடையாது. அது பல வருட தவம். அந்த வகையில் இளையராஜாவிற்குப் பிறகு அதே அந்தஸ்த்தைப் பெற்றவர் ஏ.ஆர் ரஹ்மான் என்று நிச்சயமாக கூறலாம்.
இளையராஜாவின் வரவிற்குப் பிறகு இந்தித் திரைப்பாடல்கள் கேட்பது நிறுத்தப்பட்டது என்று இசை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாது அவருடைய வரவுக்குப் பிறகு புதிய பாடல்கள் என்றும் பழைய பாடல்கள் என்றும் திரைப்பாடல்கள் தரம் பிரிக்கப்பட்டது.
இளையராஜாவின் இந்த அசாதாரண வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவருடைய நேர்த்தியான இசைக்கோர்ப்பு பாணி. நாட்டுப்புறம், ஹிந்துஸ்தானி என்று கலவையாக குழைத்து திரைப்பாடல்களாக வழங்கும் யுக்தி. மேற்கத்திய மரபு இசையை இந்திய பாதிப்புடன் தரக்கூடிய அவருடைய திறன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பழமை வாய்நத நாட்டுப்புற இசையை எளிமையாகவும் இனிமையாகவும் தன்னுடைய இசையின் வழி உயிர்ப்பித்திருக்கிறார் இளையராஜா என்றால் மிகையில்லை. அதிலும் நாட்டுப்புற இசையில் மிகவும் பிரபலமானது கும்மியடித்து ஆடி பாடுவது. பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் இந்த கலையை தன்னுடைய பாடல்களில் அதிகம் புகுததியுள்ளார் இளையராஜா. இதையடுத்து வில்லுப்பாட்டு, கரகாட்டம் என்று நாட்டுப்புற கலையின் வர்ண மெட்டுகளை அதன் தன்மை குன்றாது தன் இசையில் புகுத்தியுள்ளார் இளையராஜா.அதிலும் குறிப்பாக '16 வயதினிலே' திரையில் ஒலித்த 'செந்தூரப் பூவே' என்றுத் தொடங்கும் பாடலை சான்றாக கூறலாம்.
கிராமிய மண் வாசனையை இழைத்து அந்தப் பாடலில் கொடுத்திருந்தார். அந்த மண்ணில் முளைத்தவருக்கு அந்த வாசனையை குழைத்து கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் அப்பாடலைக் கேட்கும் பொழுதும் நாமும் அந்தப் பாடலோடு இணைந்து வயல், வரப்பு, ஓடை, அருவி என்று சுற்றித் திரிந்துவிட்டு வந்த திருப்தி தோன்றுகிறது.
பிரபல எழுத்தாளர் சுஜாதா, 'பொன் மாலை பொழுது' என்ற 'நிழல்கள்' திரைப்பாடல் 'சிம்பனி' இசைக்கு நிகரானது என்று விமர்சிக்கிறார். அதே திரைக்கொண்டு வந்த மற்றுமொரு பாடல் 'பூங்கதவே தாழ் திறவாய்' மேற்கத்திய வாத்தியங்களால் 'Orchestration' என்று இசைமொழியில் அழைக்கப்படும் பல வாத்தியங்களின் சீரான ஒருங்கிணைப்பு வழி நமக்கு வழங்கியுள்ளார். இப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தெய்வீக தன்மை நம்மை வந்து ஒட்டிக் கொள்வதை உணரலாம்.
வாத்திய இசையில் வார்த்தைகள் களவு போகும் இக்காலக்கட்டத்தில், தரமான ஆனால் வரிகள் இசையில் மூழ்காத வண்ணம் இருந்தது இளையராஜாவின் பாடல்கள்.
இளையராஜா தன் திறமையை வெறும் சினிமா பாடல்களுக்கு என்று வரையறுத்துக் கொள்ளாமல் திரையிசை கடந்து பக்தி பாடல்கள், இசைத்தொகுப்பு என்று இமயம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.
அவருடைய திரையிசை அல்லாத இசைத்தொகுப்பு 'Nothing But Wind' மற்றும் 'How To Name It'. அவருடைய அண்மைய சாதனையான 'சிம்பனியில் திருவாசகம்', இவருடைய இசை வரலாற்றின் உச்சம் என்றால் மிகையில்லை.ஒலியை இசையாகப் பார்ப்பதால் என்னவோ, அவரால் ஒவ்வொரு முறையும் புதிய புதிய யுக்திகளை தன் பாடல்களில் வழங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக திரைவானில் அதே புகழுடன் உலா வர முடிகிறது. அவருக்கு வயதானாலும் அவரின் இசையின் இளமை குன்றாது என்று தாராளமாக கூறலாம். தமிழ்திரையிசையின் பரிணாமத்திற்கு பெரும் பங்காற்றிய இளையராஜா... தமிழ்த்திரையிசையில் பதித்திருக்கின்ற சுவடு காலம் கடந்தும் சொல்லும்.

3 comments:

கோபிநாத் said...

வணக்கம் புனிதா

மை ஃபிரண்ட் உங்களின் அறிமுகம் கொடுத்தாங்க...வந்து பார்த்த நம்ம ராஜாவை பத்தி பதிவு. நன்றாக விவரிச்சி இருக்கிங்க.

\\புதிய புதிய யுக்திகளை தன் பாடல்களில் வழங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக திரைவானில் அதே புகழுடன் உலா வர முடிகிறது. அவருக்கு வயதானாலும் அவரின் இசையின் இளமை குன்றாது என்று தாராளமாக கூறலாம். தமிழ்திரையிசையின் பரிணாமத்திற்கு பெரும் பங்காற்றிய இளையராஜா... தமிழ்திரை

RAHAWAJ said...

இசைராசாவை பறிய பதிவு நன்று

சென்ஷி said...

/அவருக்கு வயதானாலும் அவரின் இசையின் இளமை குன்றாது என்று தாராளமாக கூறலாம்//

ரிப்பீட்டே :)