Sunday, February 08, 2009

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!!!

தை மாதம் பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருவிழா இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மலேசிய நாட்டின் புகழ்பெற்ற முருகனின் புண்ணிய தலங்களில் மூன்றாவதாக வருவது ஈப்போ கல்லுமலை, அருள்மிகு சுப்ரமணியர் ஆலயம். மலைகளிலையே வாசம் செய்யும் கந்தன் பக்தர்களின் அன்புக்கு மனமிறங்கி மலையடிவாரத்திலே அருள் பாலிக்கிறான். குனோங் செரோ மலை அடிவாரத்தில் இந்த கல்லுமலை அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே பழைய குகைக் கோவில் அமைந்துள்ளது. 1970களில் ஏற்பட்ட மலைச் சரிவுக்குப் பிறகு மலையடிவாரத்தில் புதிய கோவில் கட்டமைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மலேசியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்லுமலை முருகனை தரிசிக்க பக்த கோடிகள் வருடா வருடம் வருகைப் புரிகின்றனர்.

இவ்வருடமும் குடும்பத்தினருடன் கல்லுமலை முருகனை தரிசிக்க சென்றிருந்தேன். முற்பகல் பதினொன்றை நெருங்கி விட்டது கோவிலை அடையும் போது. கார் நிறுத்த இடம் கிடைக்க சிரமமாயிருப்பினும் ஒரு வழியாய் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம். வழக்கமாய் அர்ச்சனை தட்டின் விலை 4 வெள்ளியாகும். இவ்வாண்டு ஆறு வெள்ளி. அர்ச்சனை சீட்டின் விலை மூன்று வெள்ளி. மற்ற மாநில கோவிலோடு ஒப்பிடும் போது இது மலிவாகும்.

கடந்த ஞாயிறு இக்கோவிலுக்கு சஷ்டிக்காக சென்றிருந்தப் போது சிட்டுக் குருவிகளின் சரணாலயமாய் இருந்தது. இன்று ஏனோ காணவில்லை. விரட்டி விட்டார்களோ என்னவோ? பிள்ளையார் மற்றும் அம்மன் பிரகாரத்தைப் புதுபித்துள்ளனர்.

கோவிலில் இவ்வாண்டும் மக்கள் நெரிசல் அதிகமாய் இருந்தது. உடல்நிலை சரியில்லாததால் மயங்கிவிடுவேனோ என்று கோவிலுக்குள் நுழைய கொஞ்சம் அச்சமாய் இருந்தது. ஆனாலும் அவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டோடு வரிசையில் கிட்டதட்ட 1 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவ்வளவு நெரிசலிலும் மயக்கம் வரவில்லை. :-) கால் கடுக்க காத்திருந்தாலும் முருகனை நிம்மதியாய் நீண்ட நேரம் தரிசிக்க முடிந்தது. அர்ச்சனையும் தரிசனமும் முடிந்து கோவிலை சுற்றிக் கொண்டு ஒரு வழியாய் வெளியேறினோம்.

ஈப்போ கல்லுமலை தைப்பூசத் திருவிழா நேற்றுத் தொடங்கி நாளை வரை தொடரும். புந்தோங் மாரியம்மன் கோவிலில் இருந்துப் புறப்பட்ட முருகனின் இரதம் கல்லுமலையை அடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குத் தொடங்கிய பாலாபிஷேகம் காலையில் முடிவுற்றது. சில சமயம் முருகனுக்கு அதிகாலையில் இப்படி பால் அபிஷேகம் செய்யும் போது பாவம் அவனுக்கு குளிராதா என்று நினைத்துக் கொள்வேன். குளிர வைக்கத்தானே இந்த அபிஷேகமே :-) இவ்வருடம் நான் பால் குடம் எடுக்கவில்லை. அது நிறைய வருத்தம்தான் ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற முடியவில்லை. அடுத்த வருடம் அவசியம் எடுக்க வேண்டும். கல்லுமலை தைப்பூசத்தின் சிறப்பே பால் குடம் எடுப்பதுதான். கிட்டதட்ட 1இல் இருந்து 2 கிலோ மீட்டர் வரையிலும் பக்தர்கள் வரிசைப் பிடித்து அமைதியாய் காத்திருப்பது பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாய் பால்குடம் எடுக்கின்றனர். முக்கியமாய் பள்ளி மாணவர்கள்.

கோவிலுக்கு வெளியே காவடிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது பயங்கரமான தோற்றத்தோடு நான்கைந்து இளைஞர்கள் சாட்டையோடும் சூலத்தோடும் மருள் வந்து ஆடிக் கொண்டிருந்தனர். தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ள முருகன் இம்மாதிரி கேட்கவில்லையே. ஏன் சமயம் என்ற போர்வையில் இப்படி நடந்துக் கொள்கின்றனரோ புரியவில்லை. அதிலும் கோவில் அருகில் அவர்கள் ஆடிய ஆட்டம். உண்மையில் மருள் வந்து ஆடுகின்றனரா இல்லை சும்மாவே ஆடுகின்றனரா தெரியவில்லை. கோவில் நிர்வாகம் எவ்வளவோ அறிவுறுத்தியும் இப்படி நடந்துக் கொள்கின்றனர்?

நேற்றைய தனியார் தொலைக்காட்சியின் மலாய்ச்செய்தி அறிக்கையில் தற்போதைய தைப்பூசத் திருவிழா அதீதமாய் கொண்டாடப்படுவதாய் குறிப்பிட்டிருந்தது. உண்மைத்தான்... உலக மக்களை அதிகமாய் ஈர்க்கும் இந்தச் சமயப் பெருவிழா மற்ற இனத்தினருக்கு கேலிக் கூத்தாகிவிடக் கூடாதே என்ற ஐயம் எழுகிறது. இனி வரும் காலங்களிலாவது நம்மவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்களா?

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!

10 comments:

கிரி said...

//குனோங் செரோ மலை அடிவாரத்தில் இந்த கல்லுமலை அமைந்துள்ளது//

இங்கே போகாம விட்டுட்டேன், தெரியாம போச்சு!

//உலக மக்களை அதிகமாய் ஈர்க்கும் இந்தச் சமயப் பெருவிழா மற்ற இனத்தினருக்கு கேலிக் கூத்தாகிவிடக் கூடாதே என்ற ஐயம் எழுகிறது//

அப்படி எல்லாம் ஆகாது கவலைப்படாதீங்க

நான் இன்னைக்கு சிங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வந்தேன், விரைவில் ஒரு பதிவு (படங்கள்) போடுகிறேன். கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம்!

சென்ஷி said...

அன்பர்களுக்கு தைப்பூச நல்வாழ்த்துக்கள்!

Vijay said...

மேடம், நேற்று தைப்பூசம். ஆனால், இன்னிக்குத்தான் பௌர்ணமி :-)

Vijay said...

ஆஹா, மலேஷியா கல்லுமலை முருகனை தரிசித்த ஓர் உணர்வு, உங்கள் பதிவைப் படித்தவுடன் ஏற்படுகிறது. அப்படியே கொஞ்சம் புகைப்படங்களும் போட்டிருக்கலாமே.
முடிந்தால், ஒரு முறை மலேஷியா கல்லுமலை கோவிலையும் வாழ்வில் தரிசித்து விட வேண்டும், என்ற ஆவல் ரொம்பவே வலுப்பெற்றுவிட்டது.

Sathis Kumar said...

உங்கள் பதிவைப் படிக்கும்பொழுது எனது கடந்தகால நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தைப்பூசத்தில் புகைப்படங்கள் ஏதேனும் எடுத்தீர்களா?

குமரன் மாரிமுத்து said...

//கோவிலுக்கு வெளியே காவடிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது பயங்கரமான தோற்றத்தோடு நான்கைந்து இளைஞர்கள் சாட்டையோடும் சூலத்தோடும் மருள் வந்து ஆடிக் கொண்டிருந்தனர். தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ள முருகன் இம்மாதிரி கேட்கவில்லையே. ஏன் சமயம் என்ற போர்வையில் இப்படி காட்டுமிராண்டித்தனமாய் //

சமய அறிவை 'அறிவார்ந்த' முறையில் கற்றுக் கொள்ளாததுதான் இதற்கு காரணமாக இருக்கும். கடும் தவத்திற்கும், மகேசன் சேவைக்கும் தங்களை ஆட்படுத்திக் கொண்டு முக்தி அடைந்த நமது நாயன்மார்களுக்கே அந்த பரம்பொருள் ஒளியாகத்தான் காட்சி கொடுத்திருக்கிறார். ஒரு வேளை நீங்கள் பார்த்த 'காட்டுமிராண்டிகள்', நாயன்மார்களைவிட பெருந்தவம் செய்திருப்பார்களோ?

யாமறியேன் பராபரமே....

கோபிநாத் said...

முருகனுக்கு அரோஹரா!

NewsPaanai.com said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Anonymous said...

முருகனின் 7வது படைவீடு, வந்து பார்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. உங்களின் பதிவு அதை மேலும் அதிகப்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை, அவரவரது அவர்களுக்கு. இதில் இது தான் சிறந்தது என்ற போட்டிக்கே இடம் இல்லை என்றது எனது கருத்த்து. பிடித்தால் எடுத்துக்கொள். இல்லை என்றால் விட்டு விட்டு போ, உங்களது விமர்சனங்களுக்கு எல்லாம் அஞ்சுவதாக இல்லை. இது அனேகமாக அனைவரும் சொல்லும் மொழி இன்று.

பனிமலர்.