Tuesday, March 03, 2009

இந்தப் பயணத்தில்...........

சாலைகளும் அதன் மீது பயணிக்கும் தருணங்களும்  நமக்கு எவ்வித தொடர்பில்லாமலேயே கரைந்துப் போகின்றன. பரபரப்பும் இயந்திரத்தனமான வாழ்வியல் சூழலும் சாலையை வெறும் போக்குவரத்து தடமாக மட்டுமே யோசிக்க வைக்கின்றன. அதிலும் நம்மில் பெரும்பான்மையோர் சாலையை வெறுக்கவும் செய்கின்றனர் காரணம் அது ஏற்படுத்தும் நெரிசல். சாலைகள் எப்போதுமே நெரிசலை ஏற்படுத்தியதில்லை அதில் பயணிக்கும் நாம்தான் நெரிசலை உண்டாக்குகிறோம் என்பதை அறிவோமா?

கடந்த மாதம் முழுவதும் காலை நேரத்தை சாலைக்கு இரையாக்கி வந்துள்ளேன். சமிக்ஞை விளக்கிலும் போக்குவரத்து நெரிசலிலும் மாட்டிக் கொண்ட அவஸ்தைகள் இனி மீளாதா என்று ஏங்கிய தருணங்கள்தான் எத்தனை...எத்தனை? ஆனாலும் வெறுக்கத் தோன்றியதில்லை. காலையில் எரிச்சலூட்டும் அதே சாலை மாலை வேளையில் சுவாரசியத்திற்கு உரியதாய் மாறிவிடும் விந்தை இதுவரையிலும் விளங்கவில்லை. மாலை வேளையில் நெரிசலில் சிக்கிக் கொண்டாலும், இசையிலும்....கையில் கொண்டு வந்த புத்தகத்தின் ஏதாவது பக்கத்திலும் நிலைத்து விடுவதால் அன்றைய மாலைப் பயணம் இலகுவாகி விடுகிறது. அதுவும் சுவைக்காத நாட்களில் சாலையின் இருபுறமுள்ள வாகனங்களிலும்....சுற்றுப்புறத்திலும் பார்வை அலைபாயத் தொடங்கிவிடுகிறது.

இதுவரை கண்ணில் படாத பதாகைகளோ... வாசகங்களோ... வீடுகளோ... அலுவலகங்களோ அப்போதுதான் கண்ணில் படுகின்றன. அதில் சிலது என்னையும் மீறிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. சாலையென்றும் பாராமல் காரில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் இளம் ஜோடிகள்.....காரின் பின்புற சீட்டில் பள்ளிச் சீருடையில் இருக்கும் சிறுமி அவளுக்குப் பின்னால் வந்துக் கொண்டிருக்கும் காரோட்டியிடம் அழகுக் காட்டுவது... இன்னும் நிறைய சுவையான சம்பவங்கள் உண்டு....!!!!

பொதுவாகவே விரைவுச் சாலையில் பயணிப்பதைவிட சாதாரண சாலையில் பயணிக்கவே மனது ஏங்குகிறது.விரைவுச்சாலையில் வாகனங்களைத் தவிர காண வேறொன்றும் கிடைப்பதில்லை. பசுமை போர்த்திய மலைகள்கூட காரோட்டியாய் சாதாரண நாட்களில் காண இரசிப்பதில்லை.

வழக்கமாக நான் மலாயாப் பல்கலைக்கழக சாலையில் பயணிப்பதால், வேலை முடிந்து வரும் நேரங்களில் கல்லூரி முடிந்து பேருந்துக்காகக் காத்திருக்கும் மாணவிகளைக் காண நேரிடும். அருகிலேயே தனியார் மருத்துவக் கல்லூரி. களைத்துப் போய்த் திரும்பும் அவர்களை தன் நிழலில் தாங்கிக் கொள்ள சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள். களைப்பையும் மீறி மகிழ்ச்சியின் இரேகைகள் இந்த மாணவர்களின் கண்களில் பளிச்சிடுவதைப் பார்க்கச் சுவாரசியமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் எப்பொழுதுமே என் நேசத்துக்குரியவர்கள்தான். நான் கடந்து வந்த இனிய ராகத்தின் ஆதார சுருதிகள் இவர்கள் அல்லவா?

தனியார் கல்லூரியை அடுத்து வரும் 750 ஏக்கரை தனதாக்கிக் கொண்டு நிற்கிறது மலாயாப் பல்கலைக்கழகம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, சிங்கப்பூரில் ஏப்ரல் 1949-இல் இப்பல்கலைக்கழகம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் 1962-இல் ஜனவரி முதலாம் நாள் அன்றைய மலாயாவில் தேசியப் பல்கலைக்கழகமாக அமைக்கப்பட்டதாக வரலாறுகள் பகர்கின்றன.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்பது அநேக மாணவர்களில் கனவாகும். மலாயப் பல்கலைக்கழகம் என்னிலும் இன்னமும் கனவாய்தான் உள்ளது. இந்திய ஆய்வியல் துறையைக் கொண்டுள்ள ஒரே மலேசிய பல்கலைக்கழகமும் இதுவேயாகும். முதன் முறையாக நான் காலடி வைத்ததும் இந்திய ஆய்வியல் துறையில்தான். கனவுகளில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருந்ததை நேரில் கண்டப் போது மனதிற்கும் நெருங்கிய சினேகமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்தச் சாலையில் செல்கையில் என்னையுமறியாமல் முகத்தில் மென்முறுவல் மலர்ந்து மறைகின்றது. பிரமாண்டங்கள் எதுவுமில்லாது பழமையை மட்டும் மௌனமாய் போர்த்திக் கொண்டுள்ளது இப்பல்கலைக்கழகம். நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும், கல்விமான்களையும் செதுக்கிய சிற்பியென்ற கர்வம் சிறிதுமின்றி எளிமையாய் தோற்றமளிக்கிறது மலாயாப் பல்கலைக்கழகம்.

என்னுடன் படித்த சில நண்பர்கள் எங்களின் பல்கலைக்கழகத்தோடு மலாயா பல்கலைக்கழகத்தை ஒப்பிட்டு நம் பல்கலைக்கழகம்போல் வராது என்று பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. உண்மைத்தான்...அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வது 100 ஆண்டுகளைக்கூட தாண்டாத கட்டிடங்களை மட்டும்தான். புதுமையை பாராட்டிப் பெருமைக் கொள்ளும் நாம் பழமையையும் அது சுமந்துக் கொண்டிருக்கும் வரலாற்றின் சுவடுகளையும் ஏனோ அறிய மறந்துவிடுகின்றோம். அதை விட இப்பொழுதெல்லாம் பல்கலைக்கழகமும் கல்வியும் வெறும் வணிகமாக மாறி வருவது வருத்தமளிக்கும் விசயமாகும்.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. பொதுவாகவே மலேசிய கார்கள் அனைத்தும் நான்கு இலக்க எண்களைக் கொண்டிருப்பதால் சாலையில் காணும் கார்களின் எண்களை மனதுக்குள்ளேயே கூட்டிக் கொள்ளும் பழக்கம். எவ்வளவோ முயன்றும் இது வரையிலும் இந்தப் பழக்கம் மாறவேயில்லை. உதாரணத்திற்கு 2910 = 2+9+1+0(1+2)=3. எல்லாம் இந்த நியுமராலஜியில் ஏற்பட்ட ஈர்ப்பாகக்கூட இருக்குமோ?

நான் சாலையில் கண்ட முதல் சாலை மரணம் இன்னமும் நினைவில் உள்ளது. பல நாட்கள் அந்தச் சாலை வழியே செல்லும் போது அந்தச் சம்பவம் மனதுக்குள் குளிர் பரப்பி திகிலூட்டியிருக்கிறது. மறுநாள் அவ்வழியே வரும்போது சிலர் ஏதோ காகிதத்தை எரித்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது. மரணமுற்றவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறார் என்பது அப்போது புரிந்தது. சாலை சில சமயம் உயிரைக் குடிக்கும் அரக்கனாய் மாறிவிடுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.

பொதுவாகவே மலேசியர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும் ஆவிகள், அமானுட சக்திகள், மாந்ரீகம் மீது அதீத நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கின்றனர். வட மலேசியப் பல்கலைக்கழகம் கட்டமைக்கும்போது காடுகளையும் மலைகளையும் அழிக்க வேண்டிய நிலையென்பதால் அங்கு பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த அமானுடவாசிகளை இடம்பெயர்க்க வேண்டியிருந்தது. அவர்களையெல்லாம் பேருந்தில் ஏற்றி வந்து காராக் காட்டில் விட்டதாக இன்று வரை வதந்தியுள்ளது. அதனால் காராக் நெடுஞ்சாலையில் பின்னிரவில் பயணிக்கும்போது இந்த அமானுட சக்திகளின் சேட்டைகள் அதிகமாயிருப்பதாக கூறுகின்றனர். அதிலும் சுவாரசியமானது இந்த அமானுட சக்திகளை பிடிக்க தாய்லாந்திலிருந்து போமோக்களும் மாந்ரீகர்களும் வரவழைக்கப்பட்டதாக சொல்கின்றனர். இதில் நகைச்சுவையான விசயம்..கண்ணுக்கு புலப்படாதவர்களை பேருந்தில் கூட்டி வந்தது :-))) இதுப் பற்றி மேலும் விபரங்களை அங்குப் படித்த மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் மறுபதற்கில்லை....புதிதாகக் கட்டப்பட்ட எங்களுடைய மொழிப்புலத்திலும் இதே கதையுண்டு. பக்கத்திலேயே சீனர்களின் இடுகாடு இருப்பதால் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்தப் பக்கம் தனியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. என்னுடைய பேராசிரியர்கூட அந்தப் பக்கம் வாண்டுகள் அலைந்துக் கொண்டிருக்கும் என்று கூறுவார். அவருடைய அறை இடுகாட்டுக்குப் பக்கத்திலேயே இருப்பதால் அடிக்கடி இந்த அமானுட சேட்டையைப் பற்றி கூறுவதுண்டு. அடுக்கி வைத்த புத்தகங்களைக் கலைத்துப் போடுவதும்..பூகம்பமே வந்ததுப்போல் அறை நடுக்கம் காண்பதும்...!! ஒரு சமயம் அவர் கண் முன்பே அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் வீசியெறியப் பட்டதைப் பார்த்து அரண்டுவிட்டதாக கூறியிருக்கிறார். சில சமயம் இரவு வகுப்பு முடிந்து நாங்கள் வேப்பமரத்தின் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்திருப்போம்.வேப்பம் பூவின் நறுமணம் நாசியைத் துளைத்தெடுக்கும் ஆனாலும் எந்த ஆவியையும் இது வரைக் கண்டதில்லை. மாணவர் தங்கும் விடுதியில் இந்த ஆவிக் கதைகள் நிறைய உண்டு. ஹிஸ்டீரியா மலாய் மாணவிகளிடேயே வெகு சகஜமான விசயம்.

தற்போது நான் பணிபுரியும் அலுவலகம் புக்கிட் கியாரா என்ற மலையில்தான் உள்ளது. இங்கே அலுவலகம் கட்டியிருப்பது வேற்று உலகத்தில் அத்துமீறி நாம் நுழைந்து விட்டதாக என்னுடன் வேலைப் பார்க்கும் மலாய்க்காரர்கள் கருதுகின்றனர். ஓரிருவர் இளம்பெண்ணை கண்டதாக கூறுகின்றனர். யாருமில்லாத நேரத்தில் பக்கத்து அறையில் நாற்காலி சுழலும் சத்தம் கேட்டு அந்த அறையையே காலிச் செய்தவர்களும் உண்டு. நான் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக குறிப்பிட்ட அந்த அறைக்குப் பக்கத்திலேயே இருந்துள்ளேன். அதிகாலையிலும் இரவிலும்கூட சில சமயம் பணி நிமித்தமாக தனியாக இருக்க வேண்டியிருந்திருக்கிறது ஆனால் எந்தவித சத்தமும் கேட்டதேயில்லை. அதிலும் எங்கள் அலுவலகத்தில் பலர் ஆடிட்டேரியம் பக்கம் தனியே செல்லப் பயப்படுவர். ஆனால் நான் பலமுறை தனியாக போய் வந்துள்ளேன். பயமில்லையென்று சொல்ல முடியாது...நாங்கத்தான் நடக்க மாட்டோமே ஓடிடுவோமே :-))அம்மாவிடம் இதுப்பற்றிக் கூறினால் "நீயே பெரிய பிசாசு உன்னைக் கண்டு அதுதானே பயப்படனுமுன்னு கிண்டல் செய்வார்". :-(( . ஆனால் ஏதோ அமானுட சக்தி இங்கு இருப்பது மட்டும் உண்மையென்று புரிகிறது.


தீபகற்ப மலேசியாவில் வடக்கிலிருந்து தெற்கு வரையிலுமுள்ள மாநிலங்களை இணைக்கும் பாலமாக வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை விளங்குகின்றது. மலேசியாவின் சிறந்த சாலை நிர்மாணிப்புக்கு இந்த நெடுஞ்சாலை சிகரமாய் விளங்குகிறது. மலைகளை குடைந்து எப்படிதான் நிர்மாணித்திருப்பார்களோ..!!! எனக்கு இதில் மிக விருப்பமான இடம் தாப்பா-செண்டிரியாங் நெடுஞ்சாலை. லத்தா கிஞ்சாங் அருவியை நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே காணலாம். இந்த நெடுஞ்சாலை சொல்லும் கதைகள் ஆயிரம். அதில் சுவையான கதையொன்று நினைவுக்கு வருகின்றது. ஈப்போவிலிருந்து தைப்பிங் வரை பெரிய வளைவுகளையும் பள்ளங்களையும் மலைகளையும் இந்த நெடுஞ்சாலை கொண்டுள்ளது. அதிலும் ஈப்போ-ஜெலப்பாங் டோல் சாவடி மரண வாசலாக கருதப்பட்ட காலமும் உண்டு. தற்போது டோல் சாவடியை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

பின்னிரவில் இந்த நெடுஞ்சாலையில் தனியாக பயணம் செய்யும் கார்களை ஒரு மஞ்சள் நிற சொகுசு கார் தொடர்ந்து வருவதாகவும்..அந்த காரை முந்திச் செல்லும் ஆவலில் கட்டுப்பாட்டை இழந்து கார்கள் விபத்துக்குள்ளாவதாக கூறுகின்றனர். இது எந்தளவு உண்மையென்று தெரியாவிட்டாலும் பின்னிரவில் தனியே பிரயாணம் செய்வது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு சமமாகும்.

சாலைப் பயணத்தில் மிகவும் கொடூரமானதாக நான் கருதுவது பூனையும் நாய்களும் சாலையில் அடிப்பட்டு இறப்பது. பெரும்பாலும் கண்களைக் மூடிக் கொள்வேன். இன்று காலையில்கூட ஒரு பூனை சாலையின் நடுவே அடிப்பட்டு இறந்துக் கிடந்தது. மனிதர்களைக் கூட கண்டுக் கொள்ளாமல் காரில் பறக்கும் இந்த வாகனமோட்டிகள் வாயில்லா பிராணிகளைப் பற்றியா கவலைப் படப் போகிறார்கள். குறைந்தப் பட்சமாய் சாலையில் ஆதரவின்றித் திரியும் பிராணிகளை எஸ்.பி.சி.ஏவில் கொண்டு விடலாம். அல்லது ஆம்புலன்சுக்கு கூப்பிட்டால் அவர்கள் வந்துக் கொண்டுப் போகப் போகிறார்கள். ஒரு முறை நானும் தம்பியும் காரில் வந்துக் கொண்டிருந்தப் போது ஒரு நாய்க்குட்டி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது. உடனே தம்பி நாய்க்குட்டியைப் பிடித்துக் வர தெரிந்தவர் வீட்டில் கொண்டுப் போய் விட்டோம். நாம் வளர்க்காவிட்டாலும் அதற்கென்று உள்ள மையத்திலோ நண்பர்களிடத்திலோ கொண்டுப் போய்ச் சேர்க்கலாமே. :-)

சாலைகள் எனக்கு பல சமயங்களில் ஞானம் தருகின்ற போதி மரங்களாய்த்தான் தெரிகிறது.

26 comments:

Subha said...

மிகவும் அருமையா யோசிச்சு எழுதியிருக்கீங்க புனிதா..வடமலேசிய பல்கலைக்கழகத்தைப் பற்றி நீங்க எழுதினது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கேன். நான் அங்கு படிக்கும்போது பேராசிரியர்களும் இதுப்பற்றி சொன்னதுண்டு.

Anonymous said...

அன்பின் இனிய புனிதா,

தாங்கள் எழுதியிருப்பது ஏதோ நான் தினமும் காண்பதையும், அனுபவிப்பதையும் திருடியது போல நேரடி அனுபவத்திற்குள் அழைத்துச் செல்கிறது.

(நெருக்கடிக்கு நாமும் காரணம்..முதல் முறையாக என் சிந்தனையைத் தட்டுகிறது.)

சலிப்புத் தட்டாமல் வாசித்து மகிழ்ந்தேன்.

அருமை...தொடருங்கள்.

மிக்க அன்புடன்

மு.வேலன் said...

சாலையில் நீண்ட பயணம் செய்த உணர்வு; களைப்பு இல்லை. அருமை. வாழ்த்துக்கள்!

Maddy said...

முதல் பத்தி சாலைக்கு மட்டும் அல்ல நம் வாழ்க்கைக்கும் பொருந்தமான விஷயம்!!!

இங்கும் 15 நிமிடத்தில் கடக்கும் தூரம் காலையும் மாலையும் 1 1/2 மணி பொழுது கழிகிறது. அந்த நேரங்களில் நான் செய்யும் வேலைகள்....... நண்பர்களுக்கு போன்-ல அழைத்து பேச்சு, இருக்கும் எல்லா ரேடியோ சேனல் களிலும் பாட்டும் RJ's களோட sense and non-sense(sometime) பேச்சுக்களும் கேட்பதிலும், ஒரு வகையில் மலையாளம் புரிந்து கொண்டது,பேச கற்று கொண்டதும் இங்குள்ள ரேடியோவினால்.

என் கல்லூரி நாட்களை இந்த பதிவு மீண்டும் கொண்டு வந்தது. மகிழ்வான அந்த நாட்களை நினைவு படித்தியதற்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அழகான கட்டுரை..

விபத்துக்களை தவிர்த்து சாலைப்பயணம் இனிமையானதே.. என்ன ஓட்டுவது நானில்லை என்பதால் வேடிக்கைப்பார்ப்பது இனிமை தானே..
மீண்டும் ஒன்று நினைவுபடுத்த விரும்புகிறேன்..தயவு செய்து பிண்ணனி நிறத்தை மாற்றவும்.. கண் படாத பாடு படுகிறது.

gayathri said...

பின்னிரவில் தனியே பிரயாணம் செய்வது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு சமமாகும்.


sariya sonega akka

VIKNESHWARAN ADAKKALAM said...

அழகான வரைவு... வாழ்த்துகள்...

சாலையில் இறந்துக் கிடப்பதைக் காணும் சமயம் நமது மூலையில் எத்தனையோ செல்கள் இறந்து போகுமாம். நமது ஞாபக திறனும் குன்றிப் போகும் என ஆய்வுகள் சொல்கின்றன.

நான் பேய்களை பார்த்ததில்லை... எண்ணம் போலவே வாழ்க்கை அமையும் என்பார்கள். இருக்கும் என்றால் இருக்கும் போல...

வடுவூர் குமார் said...

பொதுவாக மலேசிய சாலைகள் அருமையாக இருக்கும்.நான் இருந்த வரை வடக்கு தெற்கு விரைவு சாலையை பயண்படுத்தியதில்லை.மலையை குடைவதெல்லாம் இப்போது வெகு சுலபமாகிவிட்டது.
பேய் கதைகளை நானும் அதிகமாக கேட்டிருக்கேன்.

Poornima Saravana kumar said...

இனிமையான பயணம்:)அதை சொல்லி இருப்பது அழகு:))

Unknown said...

முதல்ல பதிவோட நீளத்த பார்த்துட்டு அப்பறம் படிச்சிக்கலாம்ன்னு நினைச்சேன்... இப்போ தான் நேரம் கிடைச்சு படிச்சேன்... ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க அக்கா.. :)) உங்களிடமிருந்து வித்தியாசமான, இனிமையான பதிவு.. எழுத்து நடை மாறியிருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு :)))

Anonymous said...

மலேசிய பல்கலைகழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு அவசர வேண்டுகோள்....

எதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி, பட்டவொர்த்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் நிதி சேகரிப்பு மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு மலேசிய மண்ணில் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

இம்மாபெரும் பொதுக்கூட்டதிற்கு வரும் மாணவ அன்பர்கள், ஈழப்பிரச்சனையில் தங்களது மன ஓட்டத்தை வெளிபடுத்தும் வண்ணம் பதாகைகளை (banners) கொண்டு வரலாம்.

குறிப்பிட்ட தினத்தன்று, எம்மோடு இணைந்து பணியாற்ற தொண்டூழியர்களும் (volunteers) தேவைப்படுகின்றனர். தமிழ் மாணவ நெஞ்சங்கள் தங்களது சேவையை இந்நிகழ்வன்று வழங்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் தொண்டூழிய பணியாற்றாவிடினும், தங்களது ஆதரவை ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்று மிக பணிவோடு வேண்டுகிறேன்.

தமிழகத்தில் எழுச்சி கண்டுள்ள மாணவர்களைப் போல், மலேசிய தமிழ் மாணவர்களும் எழுச்சியோடு இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எமது ஆவல்.

மலாயா பல்கலைக்கழக (UM) தமிழ் மாணவர்களே.....
மலேசிய தேசிய பல்கலைக்கழக (UKM) தமிழ் மாணவர்களே.....
மலேசிய புத்ரா பல்கலைக்கழக (UPM) தமிழ் மாண்வர்களே.....
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக(USM) தமிழ் மாணவர்களே.....
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) தமிழ் மாணவர்களே.....
துன் ராசாக் பல்கலக்கழக (UNITAR)தமிழ் மாணவர்களே.....

மற்றும் நாடாளவிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் உறவுகளே,

மார்ச் 7, 2009 பினாங்கு, பட்ட்வொர்த்தில் எம்மோடு வந்திணைந்து ஈழத்தமிழர் படுகொலையை கண்டியுங்கள்.

மேல் விவரங்க்களுக்கு 016 - 438 4767 அல்லது 016 - 454 4355 என்ற எண்களில் எம்மை தொடர்பு கொள்க.

நன்றி,
மு.சத்தீஸ்,
ஏற்பாட்டுக்குழு செயலர்.

நான் said...

பதிவு நன்று
மலேசியாவை அழகாக வர்ணித்து எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

Anonymous said...

//சுபாஷினி கூறியது...
மிகவும் அருமையா யோசிச்சு எழுதியிருக்கீங்க புனிதா..வடமலேசிய பல்கலைக்கழகத்தைப் பற்றி நீங்க எழுதினது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கேன். நான் அங்கு படிக்கும்போது பேராசிரியர்களும் இதுப்பற்றி சொன்னதுண்டு.//

ம்ம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுபா..ஆனால் இன்னமும் அது நம்ப இயலாதவொன்றாய்தான் தோன்றுகிறது :-))

Anonymous said...

//சூர்யா ஜிஜி கூறியது...
அன்பின் இனிய புனிதா,

தாங்கள் எழுதியிருப்பது ஏதோ நான் தினமும் காண்பதையும், அனுபவிப்பதையும் திருடியது போல நேரடி அனுபவத்திற்குள் அழைத்துச் செல்கிறது.

(நெருக்கடிக்கு நாமும் காரணம்..முதல் முறையாக என் சிந்தனையைத் தட்டுகிறது.)

சலிப்புத் தட்டாமல் வாசித்து மகிழ்ந்தேன்.

அருமை...தொடருங்கள்.

மிக்க அன்புடன்//

நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களுடைய பின்னூட்டமும் உற்சாகமூட்டுகிறது சூர்யா நன்றி!!!ஆனாலும் இது எனது தினசரி அனுபவம் :-))

Anonymous said...

//மு.வேலன் கூறியது...
சாலையில் நீண்ட பயணம் செய்த உணர்வு; களைப்பு இல்லை. அருமை. வாழ்த்துக்கள்!//

நன்றிங்க...எங்கே நான் போரடிச்சிருப்பேனோ என்ற உதைப்பு பதிவிட்டதும் இருந்தது என்னவோ உண்மை :-)

Anonymous said...

// Maddy கூறியது...
முதல் பத்தி சாலைக்கு மட்டும் அல்ல நம் வாழ்க்கைக்கும் பொருந்தமான விஷயம்!!!

இங்கும் 15 நிமிடத்தில் கடக்கும் தூரம் காலையும் மாலையும் 1 1/2 மணி பொழுது கழிகிறது. அந்த நேரங்களில் நான் செய்யும் வேலைகள்....... நண்பர்களுக்கு போன்-ல அழைத்து பேச்சு, இருக்கும் எல்லா ரேடியோ சேனல் களிலும் பாட்டும் RJ's களோட sense and non-sense(sometime) பேச்சுக்களும் கேட்பதிலும், ஒரு வகையில் மலையாளம் புரிந்து கொண்டது,பேச கற்று கொண்டதும் இங்குள்ள ரேடியோவினால்.

என் கல்லூரி நாட்களை இந்த பதிவு மீண்டும் கொண்டு வந்தது. மகிழ்வான அந்த நாட்களை நினைவு படித்தியதற்கு நன்றி.//

ம்ம்ம் உண்மைத்தான் அண்ணா..அதனாலேயே நான் நிறைய பாடல் தொகுப்பு வைத்திருக்கேன்...வானொலி அறிவிப்பு போரடித்தால் சிடியிலுள்ள பாடலைக் கேட்கலாமே

Anonymous said...

//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
மிக அழகான கட்டுரை..

விபத்துக்களை தவிர்த்து சாலைப்பயணம் இனிமையானதே.. என்ன ஓட்டுவது நானில்லை என்பதால் வேடிக்கைப்பார்ப்பது இனிமை தானே..
மீண்டும் ஒன்று நினைவுபடுத்த விரும்புகிறேன்..தயவு செய்து பிண்ணனி நிறத்தை மாற்றவும்.. கண் படாத பாடு படுகிறது.//

நன்றி அக்கா!! பயணியாய் இரசிக்கத்தானே தோன்றும்..
அப்புறம் இந்த டெம்ப்ளட் வண்ணம் பற்றி சாரிக்கா...எனக்குப் பிடிச்சிருக்கே :-( முடிந்தமட்டிலும் வேறு மாற்ற முயற்சிக்கிறேன்!!!!

Anonymous said...

//gayathri கூறியது...
பின்னிரவில் தனியே பிரயாணம் செய்வது ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு சமமாகும்.
sariya sonega akka//

எல்லாம் அனுபவம்தான்..பின்னிரவில் தனியாய் காரோட்டுவது சுகமாய்தான் இருக்கும் ஆனாலும் ஆபத்து நிறைந்தது :-)

Anonymous said...

//VIKNESHWARAN கூறியது...
அழகான வரைவு... வாழ்த்துகள்...

சாலையில் இறந்துக் கிடப்பதைக் காணும் சமயம் நமது மூலையில் எத்தனையோ செல்கள் இறந்து போகுமாம். நமது ஞாபக திறனும் குன்றிப் போகும் என ஆய்வுகள் சொல்கின்றன.

நான் பேய்களை பார்த்ததில்லை... எண்ணம் போலவே வாழ்க்கை அமையும் என்பார்கள். இருக்கும் என்றால் இருக்கும் போல...//

நிஜமாகவா விக்கி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..ஆனால் இதயம் பதறிவிடுவதென்னவோ உண்மை. அப்புறம் நான்கூட பேய்களை பார்த்ததில்லையே :-))

Anonymous said...

//வடுவூர் குமார் கூறியது...
பொதுவாக மலேசிய சாலைகள் அருமையாக இருக்கும்.நான் இருந்த வரை வடக்கு தெற்கு விரைவு சாலையை பயண்படுத்தியதில்லை.மலையை குடைவதெல்லாம் இப்போது வெகு சுலபமாகிவிட்டது.
பேய் கதைகளை நானும் அதிகமாக கேட்டிருக்கேன்.//

நெடுஞ்சாலைகள் உண்மையிலேயே அழகாய் இருக்கும்..எனக்கு நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்யத்தான் அதிகம் பிடிக்கும் :-)பசுமையாய் மலைகளும் குளிர்ச்சியாய் அருவியும் வாவ்!!!அவ்வளவு சுவாரசியம் :-)

Anonymous said...

//Poornima Saravana kumar கூறியது...
இனிமையான பயணம்:)அதை சொல்லி இருப்பது அழகு:))//

நன்றி பூர்ணி :-)

Anonymous said...

//ஸ்ரீமதி கூறியது...
முதல்ல பதிவோட நீளத்த பார்த்துட்டு அப்பறம் படிச்சிக்கலாம்ன்னு நினைச்சேன்... இப்போ தான் நேரம் கிடைச்சு படிச்சேன்... ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க அக்கா.. :)) உங்களிடமிருந்து வித்தியாசமான, இனிமையான பதிவு.. எழுத்து நடை மாறியிருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு :)))//

நீண்ட நாட்களாக எழுத நினைத்ததுடா..வார விடுமுறை போரடிக்கவும் இதை எழுதினேன் :-)

Anonymous said...

//நான் கூறியது...
பதிவு நன்று
மலேசியாவை அழகாக வர்ணித்து எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்//

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நான் :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையான பதிவு இனியவள் புனிதா!

Anonymous said...

//ஜோதிபாரதி கூறியது...
அருமையான பதிவு இனியவள் புனிதா!//

நன்றிங்க வருகைக்கும்..கருத்துக்கும் :-))

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.