Thursday, May 08, 2008

யார் அந்த நிலவு?

இன்றைக்கு வந்ததையும் சேர்த்து இது மூன்றாவது வாழ்த்து அட்டை. இதை அனுப்பிய அந்த மாதவி யார் என்று புரியாத புதிராகவே உள்ளது. என்னுடைய பள்ளியிலும் இந்தப் பெயரில் ஆசிரியையோ மாணவியோ கிடையாது. இது நான் வேலை செய்யும் மூன்றாவது பள்ளி. ஆனால் இந்த மூன்று பள்ளியிலும் எனக்குத் தெரிந்து இந்த பெயரில் யாரும் இருந்ததாக நினைவில்லையே...அப்படி இருக்கும் போது, எனக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. காலையில் பள்ளிக்குக் கிளம்பும் போதே கவிதாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்கவே பெரும்பாடுபட வேண்டியிருந்தது. எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. தாமதமாய் திருமணம் செய்ததால்தான் இன்னும் எங்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை என்று அவள் மருகுவது புரியாமல் இல்லை ஆனால் அது பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமாய் தோன்றியது.
அதிலும் "நீங்க பேசாம வேற யாரையாவது கல்யாணம் செய்திருக்கலாம்" என்று ஓரிரு முறை ஆரம்பிக்கும்போது அலட்சியப் படுத்தியது தவறாய் போய்விட்டது. அவளுக்கு என்ன வயதாகி விட்டது முப்பது இரண்டுதான் என்னை விட இரு வயதுதான் இளையவள். ஆனால் இதுவே அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறது. ஆக இந்த வாழ்த்து அட்டை பற்றி சொல்லி அவளை மேலும் வருத்தாமல் விட்டது மேலும் தவறாகி விட்டது.
என்னுடன் வேலை செய்யும் செல்வி கல்லூரியில் கவிதாவின் ஜூனியர் என்பதால் அவ்வப்போது செல்வி வீட்டீற்கு வருவதும் இயல்பானதுதான். அப்படி ஒரு சமயம் வந்திருந்தவள் "அக்கா சாருக்கு நிறைய இரசிகைகள் இருக்கிறது போல் தெரியுது" என்று கிண்டலாய் ஆரம்பித்து இந்த வாழ்த்து அட்டையை பற்றி போட்டு உடைத்து விட்டாள். வழக்கமாய் பள்ளியில் இது மாதிரி கிண்டல் செய்வதுதான் ஆனால் அது பற்றி நான் அலட்சியமாய் இருக்கவே கேலியும் கிண்டலும் குறைந்துவிட்டது. ஆனால் செல்வி வந்து சென்றதிலிருந்து கவிதாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றம். அவள் என்னை விட்டு தூரமாய் விலகிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அவளிடம் இது பற்றி பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது. இந்த நிலையில் இந்த மாதவி பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பது பெரும் தலைவலியாகிவிட்டது.
நான் வேலை செய்யும் பள்ளியில் இன்று ஆசிரியர் தினம் என்பதால் அதன் கொண்டாட்டங்களில் முடிந்து ஸ்டாஃப் ரூமிற்குச் சென்றால் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்றலந்த மலராய் அழகிய பூங்கொத்து என் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் செருக்கப் பட்டிருந்த அட்டையில் மீண்டும் அதே மாதவியின் பெயர் கூடவே ஒரு கவிதை,
"குயவனின் பச்சைமண் பானையாகுகிறது" *
பக்கத்தில் இருந்த கிளார்க்கை கேட்டால் ஏதோ ப்ஃளோரிஸ்ட் கொண்டு வந்து கொடுத்ததாக கூறினாள். இனிமேல் இந்த மாதிரி யாராவது கொண்டு வந்து கொடுத்தால் திருப்பி அனுப்பும்படி எச்சரித்துவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தால் இன்னமும் அந்த பூங்கொத்து என் மேஜையில், ஆத்திரத்தில் தூக்கியெறிய எடுத்ததும், என் எண்ணம் புரிந்த செல்வி வந்து "சார் உங்களுக்கு வேண்டாமென்பதற்காக பூங்கொத்தை தூக்கியெறிவதா...இங்கு ஏதாவது ஓரத்தில் அழகாய் இருந்து விட்டு போகட்டுமே...ப்ளிஸ்" என்று எடுத்துச் சென்று விட்டாள். ஆனால் எனக்கு ஆத்திரமடங்க மட்டும் வெகுநேரம் பிடித்தது.
காலையிலேயே ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு கணிதம். நேரியல் இயற்கணிதம் (Linear Algebra) பற்றி பாடம் நடத்திவிட்டு அறைக்குத் திரும்பும் வழியில் புதிய முகமொன்று. பார்த்தும் பாராததை போல் வந்து அமர்ந்ததும், பக்கத்தில் இருந்த மோகன் "இன்னிக்கு புதுசா ஒரு லேடி டீச்சர் வந்திருக்காங்க கவனிச்சிங்களா" என்று ஆவலாய் கேட்கவும் இல்லையென்று தலையாட்டிவிட்டு ரெக்கார்டு புக்கை பிரித்து எழுத ஆரம்பித்துவிட்டேன். பாவம் மோகன், இந்த பள்ளிக்கு வந்து ஒரு வருடமாகப் போகிறது, ஆனால் இன்னமும் திருமணமாகவில்லை. "வீட்ல பார்க்குறாங்க சார், ஆனா எதுவும் சரியா வரமாட்டேங்குது, உங்களுக்கு யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.
மோகனை பற்றிய எண்ணத்தை உதறிவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தபோது "வணக்கம் சார்" என்று அருகில் இளம்பெண்ணின் குரல். புத்தகத்திலிருந்து பார்வையை அகற்றி நேரே நோக்கினால், சற்று முன் பார்த்த அதே புதுமுகம். ஒரு வேளை மோகனை கூப்பிட்டுருக்கலாம் என்று நினைத்தால் அவள், அந்த பெண்ணின் முகம் என்னை நோக்கியிருந்தது. பக்கத்தில் அவளையே ஏக்கமாய் பார்த்தபடி மோகன். 'யாரிவள்?" என்ற கேள்விக்கு அவளே விடைத்தந்தாள்.
"நான் மாதவி?"
ஒருவேளை எனக்கு வந்த பூங்கொத்து...வாழ்த்து அட்டைகள் இவள் அனுப்பியிருப்பாளோ? ச்சேசே... பார்த்தா குத்துவிளக்கு மாதிரி இவ்வளவு ஹொம்லியா இருக்காளே" என்று எண்ணமிடும்போதே
"என்னுடைய கார்ட்ஸ்...பூ எல்லாம் பிடிச்சிருந்ததா"என்று அவள் கிள்ளையாய் கொஞ்சவும், எனக்கு ஆத்திரம் தலைக்கேறிவிட்டது.
"ஹலோ மிஸ்...உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க...நீங்க யாரு எனக்கு இதெல்லாம் அனுப்ப? இதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க..எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு...பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது...ஏம்மா உனக்கு இந்த வேலை?"
ஆத்திரத்தில் பொறிந்து தள்ளிவிட்டு அவள் முகத்தை ஏறிட்டால், அவள் முகம் செக்கர் வானமாய் சிவந்திருந்தது. விட்டால் அழுதிடுவாள் போன்ற முகத்தோற்றம்.
"சார் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல! நான் நான் உங்களோட பழைய ஸ்டுடண்ட். இதுக்கு முன்னால நீங்க எம்.ஜி.எஸ்ஸில் வேலை பார்த்திருக்கீங்களா இல்லையா?'அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு அவள் வேகமாய் பேசினாள்.
"எம்.ஜி.எஸ்ஸ்ஸ்.." நான் யோசிக்கும் போதே
"நீங்க அப்போ தற்காலிகமா..."
"ஓ யெஸ்...இது எப்படி மறந்துப் போனது" யோசிப்பதாய் நினைத்து சத்தமாய் சொல்லிவிட
"நீங்க மறந்திருப்பீங்கன்னு தெரியும்" என்று ஆரம்பித்து எல்லாம் சொன்னாள் அந்த மாதவி. அவளுடைய அப்பா சின்ன வயதிலேயே அவர்களை விட்டுச் சென்றதால், அவளுடைய தாய்தான் வேலைக்குப் போய் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழல். நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க இரவு பகல் போராடியும் பணம் போதவில்லை. இடையில் நோயென்று அவர் மருத்துவமனையில் படுத்துக் கொள்ள வீட்டின் மூத்தப்பெண்ணான மாதவிதான் தம்பி தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் இரண்டு வாரமாக பள்ளிக்கு வரவில்லை.
அப்போது ஆறாம் படிவம் முடித்து பல்கலைக்கழக நுழைவுக்காக காத்திருக்கும் சமயத்தில், தற்காலிக வகுப்பாசிரியராய் அப்பள்ளியில் நான் இருந்ததால் தலைமையாசிரியருக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவள் வீட்டில் தொலைப்பேசி வசதியுமில்லை. கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. நேரில் சென்று கண்டு வரும்படி தலைமையாசிரியை உத்தரவிட அவள் வீட்டிற்குச் செல்லும்படியானது. அங்கு சென்ற பின்புதான் எல்லா விபரமும் தெரிந்தது. அந்த கணமே அவளுக்கு எப்படியாவது உதவ வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. அப்போது மாநில உறுப்பினராக இருந்த என் தந்தையிடம் ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டு, அவர் முயற்சியில் அவளுடைய தாயின் மருத்துவ செலவையும் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் மாநில அரசாங்கமே ஏற்றுக் கொண்டது நினைவு வந்தது. அதற்கு பிறகு எனக்கு பல்கலைகழகத்தில் இடம் கிடைக்க, படித்துவிட்டு இங்கேயே தங்கிவிட்டதால் இச்சம்பவமோ நபர்களோ முழுவதும் மறந்து விட்டுருந்தது.
இப்பொழுது நினைவு வந்ததும், மகிழ்ச்சி கரைப்புரண்டோட "சாரிம்மா...நீ யாரோன்னு...நீதான் புதுசா வந்த டீச்சரா? அடயாளமே தெரியல..அம்மா எப்படியிருக்காங்க?தம்பி தங்கைகள் எல்லாம்..." ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.
"தங்கை உக்ரேன்ல மெடிசின் பண்ணுறா சார்...சின்னவன் யு.எம்ல்ல படிக்கிறான், பெரியவன் பேங்கல்ல வேலை செய்யுறான்..." என்றவள் மேலும் தொடர்ந்தாள் "அம்மா எப்பவும் உங்களையும் உங்க அப்பாவை பத்தியும்தான் பேசுவாங்க...உங்க அம்மாதான் நீங்க இங்க வேலை செய்யுறதா சொன்னாங்க"
"இந்த அம்மா எங்கிட்ட எதுவும் சொல்லலயே"
"சார் ரொம்பவும் சாரி முட்டாள்தனமாய் இந்த பூ..கார்ட்ஸ் எல்லாம்" அவள் குற்ற உணர்ச்சியோடு கூறவும்
"இல்லம்மா நான்தான் யோசிக்காம்ம வெரி சாரி...ரொம்பவும் ஹர்ட் பண்ணிடேன்னா" வருத்தத்தோடு நான் கூறவும்,
"இல்ல சார் பரவாயில்ல உங்க நிலையில் யார் இருந்தாலும் இப்படித்தான் கோபப்பட்டிருப்பாங்க" மாதவி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பேசியது மனதிற்கு இதமாய் இருந்தது. அவளை உற்சாகப்படுத்த வேண்டுமென்று உடனிருந்த எல்லா ஆசிரியரிடமும் என் மாணவியென்று பெருமையாய் அறிமுகப்படுத்தவும், அவள் முகம் உற்சாகத்தில் பிரகாசிப்பதைக் காணமுடிந்தது. எனக்கும் நிம்மதியாய் இருந்தது கவிதாவிடம் இனி எவ்வித தடையில்லாமல் பேச முடியுமே.
அன்று வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது அவள் அந்த மாதவியும் என் வீட்டிற்கு வர விரும்புவதாய் கூறவும் மறுக்காமல் சரியென்று விட்டேன். நிச்சயம் கவிதா சந்தோசப்படுவாள். ஆனால் இத்தனை நாள் என்னை ஏங்க வைத்ததற்கு தண்டனைக் கொடுத்தாக வேண்டுமே என்று தோன்றியவுடனே "மாதவியுடன் வருகிறேன் சமைத்து வை" என்று அவள் பேச வாய்ப்புக் கொடுக்காமல் கைப்பேசியை வைத்துவிட்டேன். மனக்கண்ணில் கவிதாவின் கோபமான முகத்தை இரசித்தவாறே வீட்டிற்கு சென்றால், எதிர்ப்பார்த்ததைவிட அதிக கோபமாய் கவிதாவின் முகம். ஆனால் இப்போது ஏதும் அவளிடம் சொல்லக் கூடாது. பொறுமையாய் சாப்பிட்டுவிட்டுக் சிறிது நேரம் பொதுவான விசயங்களை இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். கவிதா பட்டும்படாமல் இந்த உரையாடலில் கலந்துக் கொண்டாள்.
இதற்கு மேலும் கவிதாவை சோதிக்கக் கூடாதென்று உண்மையை நான் சொல்ல முனைந்தப்போது "ஒரு நிமிடம் சார்" என்று அவளுடைய காருக்குச் சென்று ஏதோ பையை எடுத்து வந்தாள் மாதவி. இருவருமே கேள்வியாய் அவளை நோக்க, பையை திறந்து வெற்றிலைப் பாக்கு, வாழையோடு திருமண பத்திரிக்கையை எடுத்து வைத்து இருவரின் கையில் கொடுத்து காலில் விழவும் அதிர்ச்சியில் நான் ஓர் எட்டு பின்னடைந்தேன். கவிதா என்னை புரியாமல் நோக்கவும்,
"சார்தான் மேடம் நான் இந்த நிலையில் இருக்க காரணம்...காலில் விழ வயச விட நல்ல மனசு முக்கியம்..எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு...ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு டாக்டர் மாப்பிள்ளை...ம்ம் இந்த ஆசிரியர் தொழிலையே நானும் தேர்ந்தெடுக்க சார்தான் காரணம்... மனிதனை மனிதனாய் உருவாக்கும் சிற்பி இந்த ஆசிரியர்கள் இல்லையா..இந்த மாதவி மாதிரி எத்தனை மாதவி இருப்பாங்க, அவங்களுக்கு நான் உதவுதான் சாருக்கு நான் செய்யும் நன்றிக்கடன்" கண்கள் கலங்கியப்படி மாதவி கூற
கண்களில் மலர்ச்சியுடன் என் கன்னத்தில் எம்பி முத்தமிட்டு சிரிக்கும் என் மனைவியையும் அதை கண்டு வெட்கமாய் சிரிக்கும் மாதவியையும் பார்க்கிறேன். "காலத்தினால் செய்த நன்றி''யை நினைத்து எனக்குள் பெருமிதம் கொள்கிறேன்.


*- இந்தக் கவிதை இணையத்தில் சுட்டது ;-)


(16.05.2008 தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி வெளியிடும் சிறப்பு கதையிது. இதில் மாதவியின் கதாபாத்திரம் நிஜம். பெயரைக் கூட மாற்றாமல் இணைத்துள்ளேன்.)


"அனைத்து ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்"


No comments: