Wednesday, January 30, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 2

“என்கிட்ட மறைக்காம சொல்லு அருணா… யாரது?”

“யாரதுன்னா…?”


“நிஜமாகவே உனக்குத் தெரியலயா…இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா” என்று சீறினாள் அனு.


“முதலில் புரியர மாதிரி சொல்லு”


“சரி, புரியர மாதிரியே கேட்கிறேன்… இன்னிக்கு வேலை முடிஞ்சு வரும்போது யாரோட காரில் வந்து இறங்கின”


“ஓ அதுவா கூட வேலை செய்யுற”


“பொய் சொல்லாதே அருணா…. கேட்கவே பிடிக்கல…உன்ன அந்த ஆளோட பல தடவை வெளியில பார்த்ததா என்கூட படிக்கிற கவிதாகூட சொல்லியிருக்கா… இன்னிக்கு என் கண்ணாலேயே பார்த்துட்டேன், இதுக்கு மேலேயும் பொய் சொல்லாதே”


“சரி என்னோட ஃப்ரண்டு போதுமா?”


“ஃப்ரண்டுன்னா என்ன அர்த்தம்”


“உனக்கு இப்ப என்ன பிரச்சினை? எதுக்கு இந்த குறுக்கு விசாரணை?"


“ஃபிரண்டா… லவரா?”


“ஏய் என்ன திமிரா? நான் உனக்கு அக்காவா…நீ எனக்கு அக்காவா?"


“இது இப்ப பிரச்சினை கிடையாது… உனக்கு என்ன அந்த ஆளோட பேச்சு, இரு அம்மாகிட்ட...”அனு எதிர்பாராத பொழுது சட்டென்று கன்னத்தில் அறைந்துவிட்டாள் அருணா.


இதை சற்றும் எதிர்பார்த்திராத அனு தடுமாறிவிட்டாள்.


“பாரு அனு…இது என்னோட சொந்த விசயம்…இதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது..புரிஞ்சதா…உன் வேலை என்னவோ அதை மட்டும் நீ பாரு”என்று கோபமாய் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் அருணா.


அருணா கொடுத்த அறையைவிட அவளுடைய வார்த்தைகள் அனுவை வெகுவாய் காயப்படுத்திவிட்டது. தன்னிடம் எப்பொழுதும் தோழியைப் போல் பழகும் தன் தமக்கை இப்பொழுது அடித்தது மட்டுமில்லாமல் தன்னை வேறுப்படுத்தி பார்த்தது மிகவும் வலிக்கவே இனி இவள் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.


“என்னாச்சு ரெண்டு பேருக்கும்” என்ற வளர்மதியின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாய் கிடைக்க பொறுமையிழந்து அனுவிடம் கேட்க அருணாவை காட்டிக் கொடுக்க மனமில்லாமல்


"ஒன்னுமில்லம்மா" என்று சாதித்தாள் அனு.


"ரெண்டு பேருக்கும் இதே வேலையாகிவிட்டது" என்று அப்போதைக்கு விட்டுவிட்டார் வளர்மதி. ஆனால் அருணாவின் காதல் விவகாரம் அனு சொல்லாமலேயே வளர்மதியின் காதுக்கெட்ட, வீட்டில் பூகம்பம் ஆரம்பமானது.


முதலில் அருணாவின் காதல் விவகாரம் அனுவிற்கு பிடிக்கவில்லையென்றாலும், அன்றாட நடைமுறையை கருத்தில் கொண்டு அவளுக்காக வளர்மதியிடம் பேசிப் பார்த்தாள் அனு,


“ஏன் நீ அவளுக்காக பரிந்துப் பேசுற... அவள போல நீயும் எவன் பின்னாலயாவது சுத்துறீயா”


“ஐயோ அம்மா, நான் சத்தியமா அப்படியேதும் செய்யல நம்புங்க, ஆனா அருணாவுக்கும் வயசாகுதில்லையா?”


“அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு எனக்குத் தெரியும், நீ உன் படிப்பை மட்டும் பார்த்தால் போதும். தேவையில்லாம இந்த விஷயத்தில் தலையிடாத”


“அம்மா, நான்..!”


“போதும், பரிட்சைன்னுத்தானே சொன்ன...போய் படி” என்று வளர்மதி அனுவிடம் எரிந்து விழ, இப்போதைக்கு இது பற்றி பேசி எந்தவித பயனுமில்லையென்று விட்டு விட்டாள்.


(தொடரும்)

2 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

பகுதி 1 மாதிரி இல்ல.. இன்னும் கொஞ்சம் தூக்கலா எழுதுங்க. ஆனாலும்,, அடுத்து என்ன என்னன்னு யோசிக்க வைக்குது...

மூனு கேரக்டாருக்குள்ளேயே கதை நகர்த்துவது ரொம்ப விருவிருப்பா இருக்கு. :-)

கோபிநாத் said...

நல்லா போயிக்கிட்டு இருக்கு..அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ஆவல் :)