அன்புள்ள அப்பாவிற்கு...
வெகு சில காலமாய் உங்களுக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது போல் உணர்கிறேன். ஏதோ இரும்புத் திரைக்கொண்டு உங்கள் அன்பை பூட்டி வைத்துக் கொண்டது போல் தோன்றுகிறது... காரணம் உங்களுடைய வயதின் முதிர்ச்சியா...அல்லது நான் பெரியவளாய் வளர்ந்து விட்டதாய் தோன்றும் எண்ணமா...தெரியவில்லை ஆனால் மனதளவில் இன்னமும் நான் முதிர்ச்சியடையவில்லையோ?
அப்பா... நீங்கள் எங்களோடு சிரித்துப் பேசி நீண்ட நாளாகிறது... இப்போதெல்லாம் கோபம் மட்டுமே உங்களுக்கு உறவாகிவிட்டது... என்ன காரணமென்று புரிந்துக் கொள்ள நானும் முயன்றதில்லை... நீங்களும் சொல்லியதில்லை. அப்பா... ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்திருந்தப் பொழுது எப்போழுதோ நான் தெரியாமல் செய்த சின்னத் தவறுக்காக நீங்கள் திட்டியது இன்னமும் மறக்கவில்லை. அந்த கோபத்தில் வீட்டிலிருந்த அந்த இரண்டு நாட்களும் பிடிவாதமாய் சாப்பிட மறுத்தது... இப்போது நினைத்தால் இன்னும் நான் சிறுப்பிள்ளையாகவே இருப்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் கோபத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்கள் கோபத்தில் காணாமல் போய் விடுகிறது.
உங்களிடம் கோபப்பட எனக்கு உரிமையிருக்கிறதா என்று யோசிக்கையில் எல்லா கோபங்களும் இருந்த இடம் தெரியாமலே ஓடி விடுகிறது. உங்களுக்கும் எனக்கும் நிச்சயமாய் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்கு. நம் உறவு ரொம்பவும் வித்தியாசமானது புரியாதவர்களுக்கு... புரிந்தவர்களுக்கு மிகவும் புனிதமானது...
எனக்கு அப்படித்தான் அப்பா தோன்றுகிறது. அப்பா நீங்கள்தான் எவ்வளவு புனிதர். எவ்வித இரத்த உறவுமில்லாத என்னை இவ்வளவு காலமும் எந்த வித பிரதி பலனும் பாராமல் மகளாய் வளர்த்து ஆளாக்கிவிட்டிருக்கிறீர்கள். என் வரையில் நீங்கள் one in a million. ம்ம்ம் இப்போது கூட நினைவு வருகிறது 19.03.2008 என்னுடைய பெயரில் பின் பாதியை உரிமையாய் கொண்டவர் இவ்வுலகத்தை விட்டு நிரந்தரமாய் விடைப்பெற்ற நாள். ஆனாலும் எனக்கு அழத் தோன்றவில்லை.... காரணம் நான் மனசாட்சியற்றவள் என்பதால் அல்ல மனது முழுவதுமே வெறுப்பு மட்டுமே மண்டிவிட்டதால். ஆனால் உயிரோடு இல்லாத ஒருவர் மீது வெறுப்பு பாராட்டுவது மூடத்தனமாய்தான் தோன்றுகிறது.
மூன்று மாதம் கூட நிரம்பியிராத கைக்குழந்தையை உங்களிடமும் அம்மாவிடமும் கொடுத்து விட்டுச் சென்றவர் மீது எப்படி பாசம் வரும்.? அவருக்காக பரிந்து பேசும் அம்மாவிடமும் எத்தனை முறை சண்டையிட்டு இருக்கிறேன்... காரணம் உங்களைத் தவிர வேறு யாரையும் இந்தப் பிறவியில் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே. அப்பா இதற்காக நான் எப்போதுமே வருத்தப்பட்டதே கிடையாது... காரணம் நான் எப்போதுமே உங்கள் மகள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனாலும் கடவுளுக்கு சின்னதாய் வேண்டுகோள் அடுத்தப் பிறவியிலாவது உங்கள் மகளாய் பிறக்க வேண்டும் என்று.

சின்ன வயதிலிருந்தே மற்றவர்களைவிட எனக்கு அதிகமான சுதந்திரம் தந்தே வளர்த்துவிட்டீர்கள்... அதுவே இப்போது உங்களுக்கு தொல்லையாகவும் மாறிவிட்டது.. அப்பா உங்கள் வீட்டுப் பறவைக்கு சிறகு முளைத்து விட்டது... அது இப்போது தனியே பறக்கத் துடிக்குது...
அன்றைக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்போது அம்மாவிடம் இனி வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று உங்கள் மீதுள்ள கோபத்தில் அம்மாவை காயப்படுத்தி வந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அப்பா இன்று ஒரு படம் பார்த்தேன்.. வாரணம் ஆயிரம்.. அப்பா மகன் பாச உணர்வை மிகவும் அழகாய் வெளிப்படுத்தியிருந்த படம். அந்தப் படம் முடிவடையும் வரை உங்கள் நினைவிலேயே நிறைந்திருந்தேன். உண்மையில் உங்கள் அன்பும் அந்த ஆயிரம் யானைகளைப் போல வலிமையானதுதான். இப்போது உங்கள் மீது இருந்த எல்லா கோபமும் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சாரிப்பா எனக்குள் இருக்கும் மன உளைச்சலில் உங்களிடம் அந்த இரண்டு நாளாய் பாராமுகமாய் இருந்ததை நினைத்தால் வலிக்கிறது. என்னையும் காயப்படுத்திக்கொண்டு உங்களையும் காயப்படுத்தியதை நினைத்தால் என் மீதே கோபம் வருகிறது. அப்பா நாம் இதுவரை மனம் விட்டு பேசியதில்லையென்றாலும் உங்களை புரிந்துக் கொண்டதாய்தான் இது வரை நினைத்திருந்தேன் ஆனால் இல்லையென்று இப்போது நிச்சயமாய் தெரிகிறது. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க சுய மரியாதை தடைப்போட்டாலும் மானசீகமா இந்த திறந்த மடல் வழி தங்களின் மன்னிப்பைக் கோருகிறேன். அப்பா தூரம் நம்மை பிரித்தாலும் உங்கள் இருவரின் ஆயுளுக்காக எப்போதும் பிராத்தித்துக் கொண்டிருப்பேன்...
அப்பா எவ்வளவோ சொல்ல நினைத்தாலும் எதுவுமே சொல்ல முடியாமல் உணர்வுகள் தடுமாறினாலும் நான் எப்போதுமே உங்கள் மகளாய் வாழவே விரும்புகிறேன்...
கடவுள் பூமிக்கு வருவதில்லை
ஏன் தெரியுமா?
அவருக்குப் பதில்தான்
உங்களை அனுப்பியுள்ளாரே
அப்பா நீங்கள் அந்தக்
கடவுளுக்கும் அப்பாற்பட்டவர் :-)
18 comments:
படித்து முடித்து பின்னரும் எதுவுமே எழுத தோன்றவில்லை. கண்டிப்பாய் இந்த பதிவை தங்கள் தந்தையிடம் பிரதி எடுத்து தரவும்.
பிரிவுகள் என்றுமே தற்காலிகமானது. கவலை வேண்டாம். கோபம் வேண்டாம். வருத்தம் வேண்டாம்.
இனியவள் புனிதா!! பெயரை நீங்களே இனிமையாக்கிட்டீங்க...
அப்பா ப்திவு ரொம்ப நல்லா இருக்குங்க.. எனக்கு கூட அப்பான்னா ரொம்ப பிடிக்கும். என் அப்பா தாயுமானவர்.. :))))
உங்களோட பாசத்தையும் நேசத்தையும் புரிஞ்சிக்க முடியுது.. ஆனா ஏன் கோபமா இருக்கீங்கன்னு தெரியல.. :)))
//அப்பா எவ்வளவோ சொல்ல நினைத்தாலும் எதுவுமே சொல்ல முடியாமல் உணர்வுகள் தடுமாறினாலும் நான் எப்போதுமே உங்கள் மகளாய் வாழவே விரும்புகிறேன்...//
மனதைத் தொடும் பதிவு......எனக்கும் வார்த்தைகள் வரவில்லை...எல்லை மீறிய உணர்வுகள்......
அன்புடன் அருணா
//அன்புள்ள அப்பாவிற்கு//
இந்த கடிதம் உங்கள் அப்பா படிக்க வேண்டியது.............!அவரிடம் சேர்த்துவிடவும்.....
இனிய சினேகிதிக்கு....
ஒரு சில விசயங்கள் தெளிவாய் புரியவில்லை என்றாலும்...
நீங்கள் உங்கள் தந்தையின் மிது வைத்துள்ள மரியாதையும் பாசமும் தெளிவாய் தெரிகிறது...
நீங்கள் துளிர் விட்டு வளர்ந்தது அவர் நிழலில்... உங்கள் மனதின் சுமை அவர் அறிவார்.
இந்த கடிதத்தை படித்த பின்பு என்னையும் எதோ இனமா புரியாத சோகம் ஒன்று வருடிச் செல்கிறது.
இதை படிக்க படிக்க... பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும் என் தந்தையின் முகம் என் கண்முன்னே விருச்சகமாய் வந்து நின்றது.
நானும் உச்சரித்துப் பார்த்தேன்.. "அப்பா"
நன்றி புனிதா...
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குங்க..
இந்த பதிவை அப்படியே உங்கள் அப்பாவிடம் காட்டவும்.. அல்லது இந்த பதிவின் உள்ளடக்கத்தை அப்பாவிடம் பகிரவும்.. வெளிக்காட்டப்படும் அன்பு, உறவை லுப்படுத்தும்..மனசுக்குலேயே வச்சிகாதீங்க..
//அழத் தோன்றவில்லை.... காரணம் நான் மனசாட்சியற்றவள் என்பதால் அல்ல மனது முழுவதுமே வெறுப்பு மட்டுமே மண்டிவிட்டதால்//
அழகான வரிகள்..
நன்றாக எழுதி உள்ளீர்..
"வாரணம் ஆயிரம் பார்த்த எப்பெக்டோ?"
அக்கா என்னதிது?? நீங்க ரொம்ப சோகத்துல இருக்கீங்களா?? சீக்கிரமே சரியாக நான் ஏதாவது பண்ணட்டுமா??
கண்ணீர் கசியும் உருக்கம்.
உருக வைத்துவிட்டீர்கள் புனிதா.
புனிதா எப்படி இருக்கிறீர்கள்?
தந்தையுடன் பேசிவிட்டீர்களா?
அனைவரும் நல்ம்தானே?
Dear friend!
If time permits see
www.lathanathpakkam.blogspot.com
My cell Number is 94424 17 689
Pl. contact
Lathananth
என் அப்பாவின் நினைவுகளுடன்....உங்கள் பதிவை படித்தேன்.
அருமை:)
உண்மையா ...
ஹும்ம்ம் ... நல்லா இருக்கு
\\இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க சுய மரியாதை தடைப்போட்டாலும் \\
இந்த சுய மரியாதை என்பது, மண்ணிப்பு கேட்பதில் வரவேக்கூடாது. விமர்சணம் பன்னவோ advice பன்னவோ இதை சொல்லவில்லை இந்த சுய மரியாதையென்னும் விடயத்தால் மிகவும் பாதிக்கபட்டுள்ளேன்.
\\மானசீகமா இந்த திறந்த மடல் வழி தங்களின் மன்னிப்பைக் கோருகிறேன்.\\
செய்தது தவறு உணர்தலே மிக அருமையானது.
இந்த பதிவை வாசித்தப்பின் உணர்ச்சிப்பூர்வமான வாழ்க்கை பாதைகளை கடந்து வந்த உணர்வு! மனம் நிசப்தத்தில் ஆழ்ந்திருக்கிறது.
அன்புள்ள இனியவளே நன்றி! நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசிக்கும் உயிரோட்டமான ஒரு படைப்பு; இல்லை வாழ்க்கை! அருமை, அருமை!
இதுவும் கடந்து போகும்...
The affection with father is really nice.
வாரணம் ஆயிரம் திரைபடத்தின் பாதிப்பில் இருந்து நான் மீளா இருக்கையிலே, இன்னும் ஒரு உருக்கமான பாசத்தின் பரிமாணம்... அங்கு 'டாடி'.. இங்கு 'அப்பா'... வருத்தத்தில் எழுதி இருந்தாலும் அன்பு என்பதோ ஒன்று தான்.....
உங்கள் உணர்வை உடனே நேராக தெரிவிக்கலாமே
Post a Comment