Friday, May 09, 2008

எனக்குப் பிடித்த பாடல் - மண்வாசனை

திரைப்பாடல்களையே கேட்டு அலுத்துவிட்டவர்களுக்காக மட்டுமென்று இல்லாமல் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
தமிழ் திரைப்பாடல்களில் மட்டுமே லயித்திருக்கும் மனதை உள்நாட்டு பாடல்களையும் கேட்டு இரசிக்க வைப்பது கொஞ்சம் கடினமான வேலைத்தான்...முயற்சி செய்யலாமே என்று தோன்றியவுடனே குறிப்பாக எனக்குப் பிடித்த பாடல்களை, இங்கு பதிவு செய்துவிட்டேன். எங்கள் மண்வாசனையையும் கொஞ்சம் நுகர்ந்து செல்லுங்களேன்.
90ம் ஆண்டு இறுதிகளில் வெளிவந்த செல்வாவின் 'The Gift' இசைத்தொகுப்பு நம் நாட்டில் பெரும் பரபரப்பையும் உள்நாட்டு பாடல்களின் மீது புதுவித எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அதிலும் "உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன், அன்பே ஏன் தயங்குகிறாய்...உன் காதலை சொல்லிவிடு" என்ற பாடல் அப்போதைய வானோலி 6-ல் ஒலியேறாத நாட்களே இல்லையென்று கூறலாம். அந்தப் பாடலை "Rogkwave" குழுவைச் சேர்ந்த சசி பாடியிருப்பார். இந்த இசைத் தொகுப்பின் மற்றுமொரு சிறப்பு செல்வாவின் சாக்ஸசாபோன் இசை. மிகவும் சிறப்பாக வாசித்திருப்பார் செல்வா.

அதையடுத்து பல இசைத்தொகுப்புகள் வந்த வண்ணமே இருந்தாலும் 'என் மனசே' ஆண்டாள் உள்நாட்டு திரைப்பட பாடல் அனைத்து இளம் உள்ளங்களையும் கவர்ந்தது என்றே கூறவேண்டும்.


"நவம்பர் 24" டெலிமூவியில் இடம்பெற்றுள்ள 'நீ பார்த்திடல் அழகு' இன்று வரையிலும் உள்நாட்டு இரசிகர்களையடுத்து வெளிநாட்டு இரசிகர்களையும் தன் வசம் கவர்ந்துள்ளது மலேசிய நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு கிடைத்த மிக பெரிய அங்கிகாரம் என்று சொல்லவேண்டும். 'நவம்பர் 24' திரைக்கதையில் இயக்குனர் பாணி கோட்டை விட்டிருந்தாலும் அழகான கவிதையை பாடலாக தந்தமைக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இன்னும் இது போன்ற பாடல்களை வரவேற்கிறோம் இயக்குனர் திரு.பாணி அவர்களே.அப்போதைய மலேசிய வானொலியான 'வானொலி 6'ல் நடைப்பெற்ற பாடல் திறன் போட்டியின் வெற்றியாளர் திலிப் வர்மனின் வரவு உள்நாட்டு இசை வரலாற்றின் மகோன்னத உற்சவம் என்று கூறலாம். அதிலும் பிண்ணனி பாடகர் உன்னி கிருஷ்ணனை ஒத்திருக்கும் இவருடைய குரல் இவருக்கு பலம் எனலாம். "காதல் வேண்டும்" டெலிமூவியின் "உயிரைத் தொலைத்தேன்' பாடலைக் கேட்டு உயிரைத் தொலைக்காதவர்களே இல்லை. இன்று வரையிலும் இந்த பாடலுக்கென்றே பெரிய இரசிகர் பட்டாளமே உண்டு. இந்த பாடலில் மற்றுமொரு சிறப்பு அதன் இசை. Jay-ன் வித்தியாசமான இசை உள்நாட்டு இசையமைப்பாளர்களுக்கு என்றிருந்த பாணியை உடைத்து புது சாதனை படைத்தது.
அடுத்து அண்மையில் திலிப் வர்மனின் குரலில் வந்துள்ள "கனவெல்லாம் நீதானே" பாடல் நம் நாட்டு இசை வரலாற்றில் உச்சம் என்றே கூறவேண்டும். சிறந்த பாடல்களை தந்தால் எந்த நாட்டு இரசிகர்களும் கேட்டு இரசிப்பார்கள் என்பதற்கு இந்த பாடல் ஒரு முன்னுதாரணம். இவ்வளவு ஏன் இன்றைய இளையோர்களில் பலர் தங்கள் கைப்பேசியின் 'ரிங்டோன்'னாக இந்த பாடலை தேர்வு செய்திருப்பதே (நான் உள்பட) இப்பாடலுக்குக் கிடைத்த மிக பெரிய வெற்றி.

இன்னும் இதுப்போன்ற பல பாடல்கள் நம் நாட்டு இசைக் கலைஞர்களாலும் தமிழ்திரைப்பாடலுக்கு நிகராக கொடுக்க முடியும் என்பதை நிருப்பித்த வண்ணமே உள்ளன. ஆக உள்நாட்டு தயாரிப்பு என்று இவைகளை ஒதுக்கி விடாமல் நம் மண்ணின் மைந்தர்களுக்கும் ஆதரவு தருவோம்.

4 comments:

ரசிகன் said...

நல்ல தொகுப்பு. ரசித்தேன். நன்றிகள் புனிதா.

இனியவள் புனிதா said...

//ரசிகன் said...
நல்ல தொகுப்பு. ரசித்தேன். நன்றிகள் புனிதா.//

நன்றி ரசிகன். இன்னும் பல இனிமையான பாடல்கள் இருந்தாலும், ஒரு சிலவற்றை மட்டும்தான் இணைக்க முடிந்தது வருத்தமாகவே உள்ளது...

VIKNESHWARAN said...

அப்படியானால் உங்களுக்கு திலகாவை தெரியுமா??? முதல் வீடியோ கிலிப்பில் வருபவர். அவர் என்னுடன் படித்தவர். உங்கள் தொழில் இணை தாயாரிப்பாளர் என இருந்தது. அதனால் கேட்கிறேன்.

இனியவள் புனிதா said...

VIKNESHWARAN said...
அப்படியானால் உங்களுக்கு திலகாவை தெரியுமா??? முதல் வீடியோ கிலிப்பில் வருபவர். அவர் என்னுடன் படித்தவர். உங்கள் தொழில் இணை தாயாரிப்பாளர் என இருந்தது. அதனால் கேட்கிறேன்.//

அவரைப்பற்றித் தெரிய எனக்கு வாய்ப்பில்லை. நான் கல்வியமைச்சின் தொலைக்காட்சியில் பணிபுரிகிறேன்.