Wednesday, May 07, 2008

யாதுமாகி நின்றாய் - பகுதி 10

நேரே பேருந்து நிலையத்திற்கு செல்லாமல்…அருகிலிருந்த திடீர் உணவகத்திற்குள் நுழைந்தாள் அனு. குளிர்பானத்தை பெற்றுக் கொண்டு வந்து அமர்ந்தவள் வேக வேகமாக அந்தப் பெட்டியிலிருந்த அனைத்து கடிதங்களையும் அலசி ஆராய்ந்தாள். பெரும்பாலும் தீபாவளி வாழ்த்து அட்டைகள், வங்கி…காப்புறுதி நிறுவனங்களிலிருந்து வந்த கடிதங்களாகவே இருந்தன. அதில் ஒன்று அவளுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட கையெழுத்திலிருந்த கடிதம்...வேகமாய் அதனை பிரித்தாள். அனுவின் இருபதாம் வயது பிறந்தநாளுக்காக அவளுடைய தமக்கையிடமிருந்து வந்திருந்த வாழ்த்து அட்டை அது. கண்களில் நீர்த்துளிர்க்க அவசரமாய் யாருமறியாமல் துடைத்துக்கொண்டாள். அந்த வாழ்த்து அட்டையனுப்பியே ஐந்து வருடமாகிவிட்டது.
“அருணா இப்போ நீ எங்கிருக்க” என்று தனக்குள் கேட்டவாறு அந்த அட்டையிலிருந்த முகவரியை தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டாள். இன்னும் அதிக நேரமிருக்க அந்த முகவரியில் உள்ள தன் அக்காவை இன்று எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்ற வேட்கையில் வாடகைக் காரில் அந்த முகவரிக்குக் கிளம்பினாள் அனு. ஆனால் அங்கு அந்த முகவரியிலுள்ள வீடு பூட்டிக்கிடக்கவே, வேறு வழியில்லாமல் சோர்வுடன் திரும்பியவள், அந்த வீட்டின் உள்புறத்தில் ஒட்டியிருந்த விளம்பரத்தைக் கண்டதும் அதிலிருந்த தொலைப்பேசி எண்ணுக்குத் தன் கைப்பேசியில் தொடர்புக் கொண்டாள். நீண்ட அழைப்புக்குப் பிறகு தொடர்பு கிடைக்க அந்த வீட்டின் உரிமையாளரோடு பேசினாள். அந்த வீட்டின் உரிமையாளர் சீனர் என்றுத் தெரிந்ததும் அனுவிற்கு வெறுத்துவிட்டது. ஆனாலும் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு வகையில் அனுவிற்கு உதவினார். அருணாவைப் பற்றியோ அவளுடைய கணவனைப் பற்றியோ அவருக்குத் தெரியவில்லையென்றாலும் மருத்துவர் ஒருவரின் கைப்பேசி எண்களை கொடுத்துதவினார்.

முதலில் அந்த எண்களைத் தொடர்புக் கொள்ள வேண்டாமென்று நினைத்து நேராக பேருந்து நிலையத்திற்கு வந்தும்விட்டாள் அனு. ஆனால் அவளையுமறியாமல் அவள் கைகள் அந்த எண்களை அழுத்திவிட வேறுவழியில்லாமல் பேசினாள்.

“ஹலோ’’ மறுமுனையில் குரல் கேட்க,

“வணக்கம், டாக்டர் இளங்கோ?” என்று இழுத்தாள் அனு

“வணக்கம்…நான் டாக்டர் இளங்கோத்தான்…நீங்க?”

“நான் அனு உங்கள பார்க்க முடியுமா?”

“அப்போயின்மென்ட் வச்சிருக்கீங்களா?”

“டாக்டர் நான் நோயாளியில்ல…ஆசிரியை…வந்து அருணா விஷயமா!”

“அருணா?”“எந்த அருணா?”

“அருணா என்னோட அக்கா..” சட்டென்று வாழ்த்து அட்டையில் ‘அருணா கௌதமன்’ என்று படித்தது ஞாபகம் வர“அருணா கௌதமன்”என்றாள்.

“நீங்க யாருன்னு”

“நான் அனுராதா அருணாவோட தங்கை…அவள பார்க்க முடியுமா டாக்டர்?”

“நீங்க இப்போ எங்கேயிருந்து பேசுறீங்க அனுராதா?"

பேருந்து நிலையத்தில்…பயிற்சிக்காக வந்தேன் இப்போ பயிற்சி முடிந்து கே.எல்லுக்கு போகனும் அதுக்குள்ள அருணாவை எப்படியாவது”

“எந்த பேருந்து நிலையம்?” அனு விபரத்தைக் கூற…

“நீங்க அங்கேயே இருங்க அரை மணி நேரத்துல்ல வந்துடுவேன்” என்ற அந்த டாக்டர் இளங்கோ அரை மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்டான். இருவருமே மிக எளிதாகவே அடையாளம் கண்டுக் கொண்டனர்.

“அருணாவைப் பார்க்க முடியுமா?” வந்ததும் வராதுமாய் அவனிடம் அனு கேட்க,

“உங்களுக்கு நிஜமாகவே அருணாவைப் பற்றித் தெரியாதா?” என்றான் ஒரு மாதிரி பார்வையுடன். அவள் இல்லையென்று அப்பாவியாய் தலையாட்டவும்,

“அருணா இப்போ இங்கில்லை, பொறுங்க மத்த விபரத்தெல்லாம் இங்கு வைத்து சொல்ல முடியாது..பக்கத்துல்ல உள்ள உணவகத்தில் வைத்துப் பேசிக் கொள்ளலாம் வாங்க” என்று அழைத்தான் அந்த டாக்டர் இளங்கோ.

முதலில் தயங்கினாலும் அருணாவைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் அவனை பின் தொடர்ந்தாள் அனு.அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன், இரண்டு கப் தேநீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவளைப் பற்றியும் அவளுடைய வேலையைப் பற்றியும் விசாரித்தான். அவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அனு பொறுமையாகவே பதிலளித்தாள். ஆர்டர் கொடுத்த தேநீரை அவளை அருந்த சொல்லிவிட்டு அவனும் அருந்தத் தொடங்கினான். இரண்டு மிடறு அருந்தியவள்,

“அருணா இப்போ எங்கேயிருக்கா?” என்று ஆர்வமாய் வினவினாள் அனு.

“அருணா இப்போ உயிரோட இல்ல” மொட்டையாக அவன் கூறவும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள் அனு.

கண்களில் மட்டும் நீர் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுடைய காதுகளையே நம்ப முடியவில்லை. ஆனால் அவள் கேட்டது உண்மை.

“அனுராதா ப்ளீஸ், எல்லோரும் நம்மள பார்க்குறாங்க கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்க”அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டாள் அனு. அவளுக்கு அருணாவைப் பற்றி மேலும் தெரிய வேண்டியிருந்தது.

“எப்படி, ஏதாவது விபத்தா?”

“இதுவும் விபத்து மாதிரிதான்...பிரசவத்துல இறந்துட்டாங்க”

“நம்ப முடியல!”

“எங்களுக்கும்தான் ஆனா விதி ‘ஹைப்பர் டென்ஷன்’... அதிகமாகி மாடிப்படியிலிருந்து விழுந்ததில் வலிப்பு வந்துட்டது. எவ்வளவோ போராடியும் காப்பாத்த முடியல”

“கு..குழந்தை...”

“ம்ம்...சிசரியன் பண்ணி குழந்தையை எடுத்துட்டோம்...குழந்தை பிழைச்சிடுச்சு...அருணா குழந்தைக்கு தன் உயிரைக் கொடுத்துட்டு போயிட்டாங்க”

“ பெண் குழந்தையா?”

“ஆண் குழந்தை...இப்போ அவனுக்கு ஐந்து வயசிருக்கும்”அருணாவைத்தான் பார்க்க முடியவில்லை அவள் குழந்தையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அருணாவின் குழந்தையைப் பற்றி விசாரித்தாள் அனு.

“குழந்தைய நான் பார்க்கலாமா”

“அது இப்போதைக்கு சாத்தியமில்ல”

“ஏன் சாத்தியமில்ல அது என் அக்காவோட குழந்தை, எனக்கும் பார்க்கும் உரிமையிருக்கு”

“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க அனுராதா..நான் இப்போ பார்க்க முடியாதுன்னுத்தான் சொன்னேன்...ஆனா நீங்க நினைச்சா எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம்”

“புரியல”

“அவங்க யாரும் இப்ப பினாங்கில் இல்ல, உங்க அதிர்ஷடமோ என்னவோ அவங்க இப்ப கே.எல்லத்தான் இருக்காங்க...ஒரு நிமிஷம்” என்று அவனுடைய சட்டைப்பையிலிருந்து பணப்பையை எடுத்து கௌதமனின் தலைநகர் முகவரியை தேடி அவளிடம் கொடுத்தான்.

“குழந்தையை இப்போ கௌதமனுடைய அம்மாத்தான் பார்த்துக் கொள்கிறார். கௌதமன் சென்னையிலேயே செட்டிலாகிட்டான் மாசத்துக்கு ஒரு தடவை அம்மாவையும் பிள்ளையையும் பார்க்க மலேசியா வருவான். அவனோட அம்மாவுக்கு வயசாயிடுச்சு..இவனும் வேறு கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேங்கிறான்..பாவம் அந்த குழந்தைதான்...நீங்கத்தான் அந்தக் குழந்தையை பார்த்துக்கனும்” என்று முடித்தான் அந்த டாக்டர் இளங்கோ.அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு அனு தலைநகருக்கு வந்து பல நாட்கள் ஆகியிருந்தும் அனு அருணாவின் குழந்தையைச் சென்றுக் காண மட்டும் தயங்கினாள்.


(தொடரும்)

No comments: