Monday, May 05, 2008

வெளிப்புறப்படப்பிடிப்பு

கடந்த மாதம் இறுதியில்...வெளிப்புறப்படப்பிடிப்புகாக பகாங் செல்ல வேண்டியிருந்தது. வெளிப்புறப்படப்பிடிப்பு என்றாலே கொஞ்சம் குஷித்தான். வருட முழுவதும் ஸ்டுடியோவில் குளிரில் நடுங்கிக்கொண்டேயிருப்பதைவிட இந்த மாதிரி வெளியூருக்குச் சென்று படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதிலும் சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் காமிரா மற்றும் இத்யாதிகளுடன் ஒரு படையோடு போய் இறங்கும்போது ஒரு தனி வரவேற்பே காத்திருக்கும். அது மேலும் உற்சாகத்தை கூட்டிவிடும். கல்வியமைச்சின் PIPPக்கு ஏற்ப மலாய் பள்ளிகளை வலுப்படுத்தும் ஒரு திட்டமாகவே எங்களுடைய நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும்.

அந்த வகையில் முவாட்சாம் ஷா (Muadzam Shah) என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காட்டுக்குள் கண்ணைக் கட்டி விட்டது போல் தோன்றவே செய்தது. பரப்பான நகர வாழ்வுக்கு பழகிவிட்டவர்களுக்கு நிச்சயம் இந்த இடம் கொஞ்சம் அலுப்பூட்டவே செய்யும். அதிலும் ஓர் இந்திய முகத்தைக்கூட காணாததில் கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு. கைப்பேசி தொடர்பு அடிக்கடி கிடைக்காமல் போனது கொஞ்சம் கஷ்டமான விஷமாகவே தோன்றியது. தொழில்தொடர்பாக யாரையும் அவசரத்தில் தொடர்புக் கொள்ள முடியாதது எரிச்சலோடு கூடிய வருத்தம்தான். ஆனால் விடுமுறை...சுற்றுலா என்று செல்லுவோருக்கு மட்டும் இது பொருந்தும்.

நாங்கள் சென்ற பள்ளியில் மலாய் மாணவர்களையடுத்து ஒரு சில பூர்வக்குடி மாணவர்களும் பயின்று வந்தது சற்று ஆரோக்கியமான விஷயமாகவே தோன்றியது. நம் நாட்டின் அசூர வளர்ச்சியில் இந்த பூர்வக்குடியினரும் பின் தங்கிவிடக்கூடாதே என்ற ஆதங்கம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. கல்வியொன்றினால் மட்டுமே தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதை இவர்களில் ஒரு சிலர் புரிந்துக் கொண்டு, அதற்காக தங்களையும் தயார்படுத்தி வருவது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். அவர்களில் 'செமெலாய்' இனத்து மாணவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஒரு சில மாணவர்களோடு உரையாட வாய்ப்புக் கிட்டிய போது...அவர்களில் ஒரு மாணவியிடம் உன் எதிர்கால ஆசை என்னவென்று வினவியபோது விண்வெளிக்குச் செல்ல வேண்டுமென்றாள். முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூறியதுபோல் அவளும் கனவு காண்கிறாள். அவளின் கனவும் ஒரு நாள் நிஜமாக வேண்டும்.

கிட்டதட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக பயிற்சிக்கு சென்றிருந்து விட்டு தூக்கம் போதாமல் அப்படியே படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதால் காய்ச்சலே வந்துவிட்டது. ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தங்கும் விடுதியில் குளித்துவிட்டு படுத்ததுதான் மறுநாள் காலையில்தான் எழ முடிந்தது. ஆனாலும் இதுவரையில் இல்லாத மகிழ்ச்சி இந்த படப்பிடிப்பில் கிடைத்தது என்றால் மிகையில்லை. சற்று யோசித்துப் பார்க்கையில், வேலையில் ஆழ்ந்திருந்த சமயம் ஒரு சில மாணவிகள் தயங்கி தயங்கி எங்களை அணுகியதை கண்டும் காணாததை போல் இருந்துவிட்டேன். நேரடியாக படப்பிடிப்பை காணும் ஆவல் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர்களில் ஒரு மலாய் மாணவி தயங்கியபடி என்னை அணுகினாள். என்னவென்று கேள்வியோடு நோக்கியபோது "அக்கா நாங்கள் உங்களை 'சலாம்' செய்யலாமா (வாழ்த்தலாமா)" என்றாள் தயக்கத்தோடு. சரியென்று சிரித்தப்படி தலையாட்டாவும், அவர்கள் அனைவரும் என் கையை பிடித்து அவர்கள் கலாச்சாரத்தின் படி முத்தமிட்டு சென்றனர். ஆஹா மலர்கொத்தே என்னை வருடியது போன்ற சிலிர்ப்பை தவிர்க்க முடியவில்லைதான். புறநகர் பகுதியில் வாழும் மனிதர்களுக்கு இருக்கும் சினேக மனப்பான்மைகூட, நாகரிகமாய் வாழ்வதாய் காட்டிக் கொள்ளும் இந்த நகர்புறத்து மக்களுக்கு இல்லாமல் போய்விட்டதே. குறைந்தபட்சமாய் சின்னதாய் சிரிப்பைக்கூட காண்பது அரிதாகிவிட்டது. அவ்வளவு ஏன் நம் பக்கத்துவீட்டுக்காரரைகூட நாம் தெரிந்து வைத்திருப்பதில்லையே.

தலைநகருக்கு கிளம்பி வரும் வழியில் பெரா ஏரிக்குச் Tasik Bera (Bera Lake) சென்று வந்தது மனதிற்கு இதமாகவே இருந்தது.14 comments:

கோபிநாத் said...

ம்ம்..நல்ல அனுபவம்..அழகாக சொல்லியிருக்கிங்க.;)

பிரியமுடன்..... said...

வெயிலின் வேகம்
வெறுப்பாக இருப்பதால்
ஈரமான நினைவுகள் பக்கம்
ஈர்க்கப்பட்டேன்!

உண்மையிலேயே
கண்களுக்கு குளிர்ச்சியான தமிழ்!
தமிழைவிட தாகம் தனிக்கும்
தன்மை இனி எதற்கும் இருக்கபோவதில்லை!
மன்னிக்கவும் உங்கள் பதிவை முழுவதும் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு பிடித்த விஷயங்களை எழுதுகிறேன்....அதுவரை நன்றி. வாழ்த்துக்கள்

பிரியமுடன்
பிரேம்குமார்.

இனியவள் புனிதா said...

//கோபிநாத் said...
ம்ம்..நல்ல அனுபவம்..அழகாக சொல்லியிருக்கிங்க.;)//

வாங்க கோபிநாத்...நன்றி...இன்னும் வேறு சில வெளிப்புறப்படப்பிடிப்புக்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதன் அனுபவத்தையும் கூடிய விரைவில் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இனியவள் புனிதா said...

//பிரியமுடன்..... said...

வெயிலின் வேகம்
வெறுப்பாக இருப்பதால்
ஈரமான நினைவுகள் பக்கம்
ஈர்க்கப்பட்டேன்!

உண்மையிலேயே
கண்களுக்கு குளிர்ச்சியான தமிழ்!
தமிழைவிட தாகம் தனிக்கும்
தன்மை இனி எதற்கும் இருக்கபோவதில்லை!
மன்னிக்கவும் உங்கள் பதிவை முழுவதும் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு பிடித்த விஷயங்களை எழுதுகிறேன்....அதுவரை நன்றி. வாழ்த்துக்கள்

பிரியமுடன்
பிரேம்குமார்.//

உண்மைதான் பிரேம்குமார் தமிழைமொழியைவிட இனிதாவது எங்கும் இருக்கக் கூடுமா என்ன. உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி...முழு பதிவையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க...

SanJai said...

//அவ்வளவு ஏன் நம் பக்கத்துவீட்டுக்காரரைகூட நாம் தெரிந்து வைத்திருப்பதில்லையே.//
சரியா சொன்னிங்க.. நான் இப்போ இருக்கிற இடத்துக்கு குடி வந்து 1 ஆண்டு ஆகிறது. இது வரை என் பக்கத்து வீட்டுக்காரங்க பேர் கூட எனக்கு தெரியாது. :(

இனியவள் புனிதா said...

//சரியா சொன்னிங்க.. நான் இப்போ இருக்கிற இடத்துக்கு குடி வந்து 1 ஆண்டு ஆகிறது. இது வரை என் பக்கத்து வீட்டுக்காரங்க பேர் கூட எனக்கு தெரியாது. :( //


என்ன செய்யலாம் சஞ்சய்? ம்ம்ம் சின்னதாய் ஒரு ஸ்மைல் ?

SanJai said...

//
என்ன செய்யலாம் சஞ்சய்? ம்ம்ம் சின்னதாய் ஒரு ஸ்மைல் ?//
செய்யலாம் தான்.. ஆனால் யாரும் நேருக்கு நேர் பார்ப்பது கூட இல்லையே.. நாம் ஸ்மைல் பண்ணாலும் அவர்களுக்கு தெரியாதே..ஒரு வேளை.. தனியாக இருப்பதால்.. இந்த காளிப்பய்யன் கிட்ட என்ன சகவாசம்னு ஒதுங்கறாங்களோ? :P.. ஹ்ம்ம்ம்.. எனக்கும் கல்யாணம்னு ஒரு விபத்து நடக்காமலா போய்விடும்... அப்போ பேசிக்கலாம் இவர்களிடம்... :P

(why dont u remove the word verification option? )

இனியவள் புனிதா said...

//(why dont u remove the word verification option? )// அவசியம் கவனித்தில் கொள்கிறேன்.

இனியவள் புனிதா said...

//ஹ்ம்ம்ம்.. எனக்கும் கல்யாணம்னு ஒரு விபத்து நடக்காமலா போய்விடும்... அப்போ பேசிக்கலாம் இவர்களிடம்... :P//

நிச்சயமாய் உங்களை கல்யாணம் செய்துக் கொண்டால் விபத்துதான் சஞ்சய் ;)

SanJai said...

////(why dont u remove the word verification option? )// அவசியம் கவனித்தில் கொள்கிறேன்//

கவனத்தில் கொண்டதற்கும் அந்த இம்சையை அகற்றியதற்கும் நன்றி :)
---
//நிச்சயமாய் உங்களை கல்யாணம் செய்துக் கொண்டால் விபத்துதான் சஞ்சய் ;)//
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமே.. ஏற்கனவே ஒரு பொண்ணும் கட்டிக்க மாட்டேன்றாங்க. இதுல நீங்க வேற இப்படி பீதியை கிளப்பி விட்டா எப்படி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

இனியவள் புனிதா said...

SANJAI SAID//எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமே.. ஏற்கனவே ஒரு பொண்ணும் கட்டிக்க மாட்டேன்றாங்க. இதுல நீங்க வேற இப்படி பீதியை கிளப்பி விட்டா எப்படி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((//

NO COMMENTS :)

SanJai said...

/இனியவள் புனிதா said...

SANJAI SAID//எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமே.. ஏற்கனவே ஒரு பொண்ணும் கட்டிக்க மாட்டேன்றாங்க. இதுல நீங்க வேற இப்படி பீதியை கிளப்பி விட்டா எப்படி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((//

NO COMMENTS :)/

ஹ்ம்ம்ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.. :P
.... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்... :))

கோசலன் said...

இன்றுதான் இந்த வலைப்பதிவை வாசிக்கின்றேன். உண்மையில் நல்ல தமிழில் எழுதுகின்றீர்கள். ஏனென்றால் ஒரு ஐந்து மாதம் தமிழ் வாசிக்க கிடைக்கவில்லையென்றவுடனே எனக்கு தமிழில் எழுத்துப் பிழைகள் வர ஆரம்பித்து விட்டது. அதையும் தாண்டி நன்றாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

இனியவள் புனிதா said...

//கோசலன் said...
இன்றுதான் இந்த வலைப்பதிவை வாசிக்கின்றேன். உண்மையில் நல்ல தமிழில் எழுதுகின்றீர்கள். ஏனென்றால் ஒரு ஐந்து மாதம் தமிழ் வாசிக்க கிடைக்கவில்லையென்றவுடனே எனக்கு தமிழில் எழுத்துப் பிழைகள் வர ஆரம்பித்து விட்டது. அதையும் தாண்டி நன்றாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.//


நன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்