Saturday, February 09, 2008

யாதுமாகி நின்றாய்... பகுதி 5

“அதனால் என்ன உன் குரல் அந்த விளம்பர நடிகைக்கு பொருந்துமுன்னு நினைக்கிறேன். நீயே அந்த விளம்பரத்திற்கு பிண்ணணி குரல் கொடுத்திடு

“சார் எனக்கு நடிக்க”

“முயற்சித்தான் செய்துப் பார்க்கலாமே”அதற்கு மேல் அஞ்சலியால் மறுக்க முடியவில்லை. எத்தனையோ தடவை மற்ற கலைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து வேலை வாங்கியிருந்தாலும், தானே பிண்ணணி குரல் கொடுக்கும் பொழுது அதன் சிரமம் அவளுக்குப் புரிந்தது. பக்கத்திலிருந்து கௌதமன் உதவியதால் ஒரு சில தவற்றுக்குப் பிறகு மிகவும் சிறப்பாக அஞ்சலி செய்து முடித்தாள்.

“ரொம்பவும் சிறப்பாக செய்திருக்க அஞ்சலி’’ என்று கௌதமன் பாராட்டினான்.

அந்த பாராட்டுதலிலேயே அவள் அந்த விளம்பரத்தின் கடைசி நேர வேலைகளை மிக சிறப்பாக செய்து முடித்து கௌதமனிடம் கொடுத்தாள். அனைத்தும் சரியாய் இருக்க மற்ற தயாரிப்பாளர்களுக்கு அந்த விளம்பரத்தை திரையிட்டு காண்பித்தான். அனைவரும் அந்த விளம்பரத்தை பாராட்டினர். அந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம் வாக்குக் கொடுத்ததை போல் அன்றைக்கே கொடுத்தனுப்பிவிட்டு, வீட்டீற்குத் திரும்பிய கௌதமனுக்கு அவனுடைய மனைவி அருணாவின் ரூபத்தில் மீண்டும் புதிய பிரச்சினை ஒன்று காத்திருந்தது. இதுபோல் அடிக்கடி நடப்பதுதான் ஆனால் அப்பொழுதெல்லாம் ஏதாவது வகையில் தீர்த்து வைத்து விடுவான். இம்முறை அந்த மாதிரி கௌதமனால் இறங்கி வர முடியவில்லை. காரணம் அவனுடைய கர்வமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு முறையும் அவள் கேட்பதையெல்லாம் நிறைவேற்றி வைப்பதால் வந்த வினை இது. அருணாவை காதல் கொண்டு மணந்தவன் கௌதமன். அவள் மேல் உயிரையே வைத்திருந்தான் அவன். அவள் கேட்டு இல்லையென்று சொல்லியதும் இல்லை. அதனால் வந்த திமீர் என்றெண்ணியபடியே அவளை நோக்கினான்.

“இறுதியாக உன் முடிவுதான் என்ன?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.

“நான் முடிவு செய்துவிட்டேன் பிரசவத்திற்கு உங்க அம்மா வீட்டீற்குப் போகப் முடியாது, உங்களால் முடிந்தால் என் அம்மா வீடடில் கொண்டுப் போய் விடுங்கள் இல்லையென்றால் நான் எங்கும் போக முடியாது” என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் அருணா.

“அருணா” அவன் அழைத்தும் காதில் விழாததைப் போல் நடந்துக் கொண்டிருந்தாள் அவனுடைய அருமை மனைவி அருணா. அவள் செல்வதையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், பிறகு அவர்களுடைய அறைக்குள் நுழைந்தான். அங்கே அருணா கண்களை இறுக்கமாய் மூடிய நிலையில் படுத்திருந்தாள்.

“அருணா… அருணா”... மீண்டும் மீண்டும், அழைத்தும், அவளிடமிருந்து எந்தவொரு அசைவும் இல்லாததை உணர்ந்து அப்போதைக்கு பேசாமல் விட்டு விட்டான். ஆனால் காலையில் உணவருந்தும் போது மீண்டும் அப்பேச்சை தொடங்கினான். ஆனால் அருணாவோ அதில்தான் தனக்கு விருப்பமில்லையென்பது போல் நடந்துக் கொண்டாள்.

“எனக்கு ஒரே தலைவலியாய் இருக்கிறது, கொஞ்சம் படுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது” என்றபடி இருக்கையைவிட்டு எழுந்தாள் அருணா.

“என் பொறுமையை அதிகம் சோதிக்காதே அருணா” கடித்த பற்களினிடையே சீறின கௌதமனின் வார்த்தைகள். அவனையே சற்று நேரம் வெறித்தவள்,

“என் முடிவில் எந்தவொரு மாற்றமும் கிடையாது” என்று தன் கணவனின் அபிப்ராயத்தை லட்சியம் செய்யாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

“முட்டாள் மாதிரி உளராதேடி! ஏற்கனவே நீ உன் வீட்டை எதிர்த்துதான் என்னை மணந்து கொண்டாய் ஞாபகமிருக்கிறதா? அதன் பிறகு நீ அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. ஏன் ஒரு போன்கூட கிடையாது. இப்போது உன் பிரசவம் அங்குத்தான் நடக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தால் என்ன அர்த்தம். அதிலும் அங்கு உனக்கு பழைய வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறாயா?” ஆத்திரத்தோடு தொடங்கியவன், ஏதோ யோசனையோடு மேலே தொடர்ந்தான்.

“அதைவிட இது என் கௌரவப் பிரச்சினையும்கூட அருணா”

“ஆண்களுக்கே உரிய கர்வம் இல்லையா?, நீங்கள் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா!” என்று இடைமறித்தவளை வெறித்த பார்வையோடு தொடர்ந்தான் கௌதமன்.

“தொட்டுத் தாலிக் கட்டிய மனைவியின் பிரசவத்தைக்கூட கவனிக்காத கையாளாகாதவன் என்ற பாராட்டு வேறு. இது தேவையா எனக்கு! இதையனைத்தையும்விட முக்கியமான காரணம், உன்னுடைய பிரசவ நேரத்தில் கூடவே நானிருக்க வேண்டும். பிறந்த நம் குழந்தையை நான்தான் முதலில் பார்க்க வேண்டும். அதன் மென்மையான சருமத்தை, பிஞ்சு விரல்களை தொட்டுப் பார்க்க வேண்டும், கையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும். இப்படி எத்தனையோ ஆசை… கனவுகள். இதையெல்லாம் நீ கொஞ்சமும் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாயே…அத்தோடு அம்மாவை சமாதானப் படுத்த வேறு வழியில்லை… அத ப்ளீஸ் கெடுத்திடாதே” என்று வருத்தப்பட்டான் அவன். ஆனாலும் அருணாவின் பிடிவாதம் மட்டும் குறையவே இல்லை.

“எனக்கும் எங்க அம்மாவை பார்க்கணும், அப்புறம்....” அவள் முடிக்கவில்லை.

“புரிந்துக் கொள் அருணா! நீ அங்கு அழையாத விருந்தாளியாக செல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது”

“கவலைபடாதீங்க, நிச்சயம் அம்மா என்னை வெறுத்து ஒதுக்க மாட்டார். பிள்ளைகள் மீது அவருக்கு எப்பொழுதுமே பிரியம் அதிகம்.... என் தங்கை”

“அவ்வளவு அன்பானவர்கள் எப்படி உன் விருப்பத்திற்கு தடையாக இருந்தார் அருணா?மரியாதையாகத்தானே உன்னை மணந்துக் கொள்ள கேட்டேன், எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார், மறந்துட்டீயா”

“அது அது..... ஏன் உங்க அம்மா மட்டும் நம்மல அவமானப் படுத்தலயா?"

“வந்து அம்மா மீதும் தவறில்லை கௌதம்! பொதுவாகவே பணக்காரர்களின் மீது அவர்களுக்கு அதிகம் நம்பிக்கை கிடையாது. அதற்கொரு காரணமும் உண்டு. எங்கே அதைப் போல நானும் மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்வேனோ என்கிற பயம்” என்று சீரியசாக அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரித்தான் கௌதமன். கணவனின் சிரிப்பிற்கான காரணம் புரியாமல் அவள் விழிக்கவும், காரணத்தை அவனே சொன்னான்.

“ஒன்றுமில்லை தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதாக சொன்னாயே, அதான் சிரித்தேன்.”“நான் சொல்லியதற்கும் நீங்கள் சிரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது. நீயாக மண்ணை வேறு அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டுமோ, அதான் உன் தலையில் ஏற்கனவே நிரம்பி வழிகிறதே” என்று கிண்டலடித்தான். அருணா அவனை உற்று முறைக்கவும்,

“தாயே நீ சாதாரணமாக பார்த்தாலே தாங்காது இதில் கண்ணகியைப் போல் பார்த்தால் நான் எரிந்து சாம்பலாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது” என்று பயப்படுவதைப் போல் நடிக்கவும் அருணா சிரித்துவிட்டாள். அப்போதைக்கு அங்கு நிலவிய இறுக்கம் சற்று தளர்ந்தாற் போல் தோன்றியது இருவருக்கும். ஆனால் கௌதமன் அவ்வளவு எளிதாக அவளுடைய வார்த்தைகளில் சமாதானம் அடையவில்லை.

“ஆனாலும் அதெப்படி அருணா இவ்வளவு நல்லவர்களை இந்த ஒரு வருடமாக உனக்கு எண்ணிப் பார்க்ககூடத் தோன்றவில்லை” என்று ஆச்சரியத்தோடு வினவினான் கௌதமன்.“அது... அது வந்து உங்கள் அன்பில் மற்றது மறந்து விட்டது...” என்று திக்கித் திணறினாள் அவள்.

“ஆக இப்பொழுது என் அன்பு குறைந்து விட்டதோ”

“கௌதம், அவ்வளவு எளிதில் பெண்களின் உள்ளுணர்வுகளை விளக்கிவிட முடியாது. அதை உங்களால் எளிதில் புரிந்துக் கொள்ளவும் முடியாது”. என்று மழுப்ப முயன்றாள். இத்தோடு இந்தப் பேச்சை முடிக்க மாட்டானா என்றிருந்தது அவளுக்கு. மனைவியின் முக மாறுதலை கவனித்துக் கொண்டிருந்தவன் அவளை மேலும் நோட்டம் பார்க்க வேண்டுமென்றே சீண்டினான்.

“புரிந்துக் கொள்ளும்படியாகத்தான் விளக்கி சொல்லேன், அது என்ன பெண்களின் உள்ளுணர்வு”

“......................

“லுக்…அருணா, இது நான் உனக்கு முதலும் கடைசியாக சொல்வது... ‘டோன்ட் லெட் மி டு ரிப்பிட் திஸ் இன் ஃப்யுச்சர்’ என்று சாதாரணமாக தொடங்கி கடுமையாய் அவன் பேசுவதை அருணா முகம் வெளுக்க கேட்டுக் கொண்டிருந்தாள்.

அருணாவின் காதலுக்காக தாயையே பிரிந்துவிட்டவன் கௌதமன். தன்னுடைய காதலை அங்கீகரிக்காத தாயை பிரிந்து வந்ததில் ஏகப்பட்ட மன வருத்தங்கள், வேதனைகள். அவையனைத்தையும் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு வெளியே சாதாரணமாய் நடந்துக் கொள்வதே கௌதமனுக்கு பெரும்பாடாய் தோன்றியது. அவனுடைய மன தடுமாற்றத்தை உணர்ந்த கௌதமனின் நெருக்கமான நண்பர்கள், அப்போதைக்கு கௌதமனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில், எல்லாம் ஒரு குழந்தைப் பிறந்தால் சரியாகிவிடும். பெத்தவங்க கோபம் பிள்ளைகளிடம் மட்டும்தான். அதுவே தனக்கு பேரனோ பேத்தியோ பிறந்து விட்டால் போதும், இவ்வளவு நாள் இருந்த கோபம், பிடிவாதம் எல்லாம் இருந்த இடம் காணாமல் போய்விடும். நம்ம சங்கரின் அக்காகூட அவளோடு வேலைப் பார்த்தவரை கல்யாணம் பண்ணிட்டு லண்டன் போயிட்டாள், ஆனால் அவளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கென்று தெரிஞ்ச அடுத்த செகன்ட் அவனோட பேரன்ட்ஸ் ரெண்டுப் பேரும் அடுத்த ஃபிளயிட்டில் லண்டனுக்கு பறந்துட்டாங்க. நீயும் அது மாதிரி செய்ததில் தப்பேதும் கிடையாது. எங்களுக்கு தெரிஞ்சு இதுதான் இப்போதைய “பேரன்ட்ஸ் சைக்கலோஜி” என்று அவனுடைய நண்பர்கள் உசுபேத்திவிட கௌதமனும் இதற்கு சம்மதித்து விட்டான். அவன் மட்டும் அப்பொழுதே அவசரப்படாமல் நிதானமாய் யோசித்து முடிவெடுத்திருந்தால் நிச்சயமாக அடுத்து வரும் இழப்புகளை தவிர்த்திருக்கலாம்.கௌதமன் சொல்ல வந்ததை தெளிவாய் உறுதியாய் கூறிவிட்டப்பின் அருணாவால் ஏதும் பேச முடியாமல் ‘திக்’ பிரம்மை பிடித்தவள்போல் வாளாவிருந்தாள்.

“இதுப்பற்றி பேசுவதற்கு இனியொன்றும் கிடையாது” என்று கூறிவிட்டு தன்னுடைய வார்த்தையை இறுதியாக்கிவிட்டு அலுவகத்திற்கு கிளம்பினான். வேலையின் இடையே அவ்வப்போது ஏற்கனவே தன்னுடைய நண்பர்கள் கூறியதையும் அசைப் போட்டுக் கொண்டிருந்தான் அவன். அம்மாவிடம் சென்றால்…ஆனாலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் போய் நிற்பது. அவரை எதிர்த்துதானே அருணாவை மணந்துக் கொண்டான். இருப்பினும் இந்த மாதிரியான சூழ்நிலையில் அருணாவிற்கு அதிகபடியான அன்பும் பாதுகாப்பும் தேவைப்பட்டது. கௌதமனால் அதனை சரிவர நிறைவேற்ற முடியவில்லை. தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அம்மாதிரியான சமயங்களில் அருணாவை அவனுடைய நண்பன் இளங்கோவின் தாயார் வந்துக் கவனித்துக் கொள்வார். அவரையும் அப்படி அடிக்கடி அழைக்கவும் முடியாதே. அவருடைய பிள்ளைகளையும் அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரே தீர்வு அருணாவை அம்மாவிடம் கொண்டுப் போய் விடுவதுதான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் கௌதமன்.அந்நேரம் கௌதமனின் அலுவலக அறைக்குள் நுழைந்த இளங்கோ,

“என்ன பலத்த யோசனைப் போல் தெரிகிறது” என்றான். அதற்குள் தன்னிலைக்கு வந்தவனாய்

“வா இளங்கோ உன்னைத்தான் பார்க்க வேண்டுமென்றிருந்தேன்.”

“என்ன விஷ்யம்”“கொஞ்சம் பொறு” என்றவாறு இன்டர்காமில் தன்னை அடுத்த அரை மணி நேரத்திற்கு தொந்தரவு செய்ய வேண்டாமென்று தன்னுடைய காரியதரிசியிடம் சொல்லிவிட்டு நண்பனின் பக்கம் திரும்பினான்.

“சரி இப்பொழுதாவது சொல், இவ்வளவு நேரம் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாய்.” ஆவலை தாங்க முடியாது கேட்டான் இளங்கோ.

“அருணா”

“ஏன் அருணாவிற்கென்ன! ஏதாவது பிரச்சினையா? அடிக்கடி செக்கப்பிற்கு கூட்டிப் போய் வருகிறாயா இல்லையா. நான் அறிமுகப்படுத்திய டாக்டர் ரொம்பவும் திறமையானவர். எந்தப் பிரச்சினையென்றாலும் தயங்காமல் அவரிடமே சொல்ல வேண்டியதுதானே”

“அதுவல்ல பிரச்சினை இப்போது”“பிறகு”

“அருணா” என்று மீண்டும் தயங்கியவனை வினோதமாய் நோக்கினான் இளங்கோ, பிறகு

“ஏன் அருணாவிற்கு என்ன? பழையபடி பிடிவாதம் செய்கிறாளா. ரொம்பவும் செல்லமாய் வளர்ந்தப் பெண் இல்லையா? அவள் போக்கிற்கே விட்டுவிடு கௌதம். இம்மாதிரியான சமயங்களில் அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவதில் ஒன்றும் தவறே கிடையாது. முதல் பிரசவம் அவர்களுக்கு மறுப்பிறவி என்றவன் ஏதோ தோன்ற சிரித்தப்படி அதனால் அதிகம் ஏங்க விடாதே! கொஞ்சம் விட்டுத்தான் பிடியேன். பெண்கள் எந்த விஷயத்தில் கொடுத்து வைக்காவிட்டாலும், இந்தவொரு விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள்தான். கர்ப்பிணி பெண் என்றால் புகுந்த வீட்டிலும் சரி பிறந்த வீட்டிலும் சரி தனி மவுசுதான் இல்லையா. தன்னுடைய குடும்ப மரபை, வாரிசை சுமக்கிறவள் என்றால் சும்மாவா!” என்று தன் பங்கிற்கு கூறினான் இளங்கோ.

“வந்து”

“என்ன தயங்காமல் சொல்லு”

“அருணா, அவள் அம்மா வீட்டிற்குப் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். உனக்கே நன்றாக தெரியுமே எங்களின் திருமணம் எப்படி நடந்தது என்று. இந்த நேரத்தில் எப்படி”

“....................”

“ஆனாலும் எனக்கு அவளை அங்கு அனுப்புவதைவிட அம்மாவிடம்...வந்து அவர் எங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், அம்மாவிடம் கொஞ்ச நாட்கள் இருந்தால் அவளுக்கும் பொறுப்பு வரும். தேவையில்லாமல் பிடிவாதம் செய்வதும் கோபப்படுவதும் குறையும். அம்மாவுடைய கண்டிப்பு பற்றித்தான் உனக்கு தெரியுமே… ஆனால் இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன? அதான் உன்னிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று ”

“பிறகென்ன, தாராளமாக அனுப்பி வை கௌதம். அது அருணாவிற்கும் சற்று தெம்பை கொடுக்கும். அம்மாவுடன் இருக்கும்போது வீண் பயம், கவலைகளும் சற்றுக்குறையும் இல்லையா... உனக்கும் கொஞ்ச டென்ஷன் குறையலாம்”

(தொடரும்)

No comments: